(தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! – தொடர்ச்சி)

பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!

இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களை சேர்த்து புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டி கைது செய்திருக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.)குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வழக்குகளுக்கு வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்துச் சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன?

இதைக் கண்டித்து மதுரை வழக்காளர் மன்றம் (‘பார் அசோசியேசன்’) தீர்மானம் நிறைவேற்றி,, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரியது. முகமது அப்பாசையும் முகமது யூசுப்பையும் பொய் வழக்குகளில் கைது செய்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் துறைமுறையிலான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்காளர் சங்கக் கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

வழக்கறிஞர்களுக்கு எதிரான இதுபோன்ற பயங்கர அச்சுறுத்தல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று மே 30 அன்று சென்னையில் நடந்த ஊடக சந்திப்பில் மேனாள் உச்சநீதிமன்ற நீதியர் மார்கண்டேய கட்சு முழங்கினார்.

இசுலாமியர்களைக் குதறும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.):
திறந்த வீட்டில் நுழைந்த நாய் போல் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்களை வேட்டையாடி வருகிறது. அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சோதனை நடத்துவதன் மூலம் இசுலாமிய மக்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைப்பதும் பொது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதும் நடந்து வருகிறது.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பின் மீதான தடையைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடத்தப்படுகின்றன.

நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.) –பாசகவின் இந்துராட்டிர நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இசுலாமியர்கள் அமைப்பாவதையும் போராடுவதையும் பயங்கரவாதமென முத்திரைக் குத்தி அச்சுறுத்த நினைக்கிறது பாசிச பாசக அரசு.

கடந்த செட்டம்பரில் போடப்பட்ட வழக்குக்கான குற்றப் பத்திரிகையை அணியமாக்க மார்ச்சு 27 வரை இழுத்தடித்தது தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! அதையும்கூட நீதிமன்றத்தில் முன் வைக்காமல் காலந்தாழ்த்தியது;குற்றஞ்சாட்டப்பட்டோர் உயர்நீதிமன்றத்தை அணுகித்தான் குற்றப் பத்திரிகையை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வெளியிட்டாக வேண்டும் என்ற ஆணையைப் பெற்றனர். இந்நிலையில்தான் மேற்படி ஐவரையும் இவ்வழக்கில் இணைத்துக் கூடுதல் குற்றப் பத்திரிகையை அணியமாக்கியுள்ளது என்.ஐ.ஏ.

கோவையில் நடந்த எரிவாயு உருளை வெடிப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஏதோ தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது போல் கதைக்கட்ட துடிக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.) கேட்பார் யாரும் இல்லை என்பது போல் தமிழ்நாட்டில் சோதனைகளும் கைதுகளும் தொடர் கதையாகி இருக்கிறது.

பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!
ஊபா வந்த பாதை:
திமுக திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருந்த பின்புலத்தில், தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவை தேசிய ஒருமைப்பாடு மற்றும் வட்டாரவியம் குறித்த குழுவொன்றை அமைத்தது. அக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையும் பாதுகாப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்குப் போதுமான அதிகாரங்களை உரித்தாகும் வகையில் கருத்தை வெளியிடுவதையும் கூட்டம் கூடுவதையும் அமைப்பாவதையும் அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்பு சட்ட உறுப்பு 19 ஐ திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்த பரிந்துரைக்கு இணங்க 1963 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 16 ஆவது சட்டத் திருத்தம் உறுப்பு 19ஐ இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் நலனின் பெயரால் கட்டுப்படுத்தக் கூடிய திருத்தத்தைப் புகுத்தியது. மேலும் பிரிவினைக் கோரிக்கையைக் கொண்டிருக்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவல்ல திருத்தங்களும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் போது, ’நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் காத்து நிற்பேன்’ என்று உறுதிமொழி ஏற்கும் திருத்தமும் அப்போது செய்யப்பட்டது.

16ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் செயல்படுத்தும் நோக்கில் சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) 1967ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அது வரை மக்கள் அமைப்பாவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் அமைப்புகளைத் தடைசெய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டது. நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்படுவதாகக் காரணம் சொல்லப்பட்டது.

மிசா, தடா, பொடா என அடுத்தடுத்து வந்த அடக்குமுறைச் சட்டங்கள் சனநாயக ஆற்றல்களின் போராட்டத்தால் முடிவு கட்டப்பட்டன. ஆனால் ஒரு கருப்புச்சட்டத்தை கைவிடும்போது அதன் கூறுகளைக் கொண்ட இன்னொரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதை ஆளும்வர்க்கம் வாடிக்கையாக கொண்டிருந்தது.

2001 ஆம் ஆண்டு செட்டம்பரில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றது அமெரிக்கா. புதுத்தாராளியப் பொருளியல் கொள்கையை எதிர்க்கும் மேற்காசியாவில் உள்ள அரபு நாடுகளை ஒடுக்குவதற்கு அவர்களின் எதிர்ப்பைப் ’பயங்கரவாதம்’ என்று முத்திரைக் குத்தியது அமெரிக்கா. அந்தக் பயங்கரவாதத்திற்கு எதிரானப் போரையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் புதுத்தாராளியம் என்னும் அரசியல்பொருளியல் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான படையியல் கோட்பாடாக வடிவமைத்தது அமெரிக்கா.
உலகில் உள்ள எல்லா அரசுகளும் தன்னாட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அமெரிக்க வல்லரசியம்(ஏகாதிபத்தியம்) உருட்டிவிட்ட ’பயங்கரவாதத் தடுப்பு’ என்ற பகடைக் காயைப் பயன்படுத்திக் கொண்டன.

2002ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலை சாக்காகக் கொண்டு பொடா சட்டத்தைப் பாசக அரசு அறிமுகப்படுத்தியது. அந்தக் கறுப்புச் சட்டத்தின் பேயாட்டம் கிளப்பிவிட்ட போராட்டப் புழுதியால் சட்டத்தை திரும்பப் பெறும் கட்டாயம் ஏற்பட்டது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 216