(தோழர் தியாகு எழுதுகிறார் 179 : தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும்- தொடர்ச்சி)

வேலிக்கு வேலி!

இனிய அன்பர்களே!

போலீசு (POLICE) என்பதைத் தமிழில் காவல்துறை என்று மொழிபெயர்க்கிறோம். காவல்துறையின் பணி “மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிதலை உறுதிசெய்தல், குற்றத் தடுப்பு, குற்றத் தீர்வு” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. POLICE என்ற சொல்லைச் சிலநேரம் வினைச் சொல்லாகவும் பயன்படுத்துவதுண்டு. அப்போது அதன் பொருளைச் சுருக்கி ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமானால் ‘கண்காணித்தல்’ என்று வரும். யாரும் சட்டத்தை மீறாமல், குற்றம் செய்யாமல் கண்காணித்தல், குற்றம் நடந்து விட்டால் அதனைத் துப்புத் துலக்கிக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் குற்றத் தீர்வைக் கண்காணித்தல்… இவ்வாறான பல்வகைக் கண்காணித்தலும் காவல்துறையின் பொறுப்பாகும்.

இப்போது நாம் அடிக்கடிக் காண்பது என்ன? காவல்துறையாரே சட்டத்தை மீறுகின்றனர்! குற்றம் செய்கின்றனர்! உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் கடமையிலிருந்து பிறழ்ந்து பொய் வழக்குப் புனைகின்றனர். சுருங்கச் சொல்லின் வேலியே பயிரை மேய்கிறது. இந்நிலையில் பொதுக் குமுகம் என்ன செய்ய வேண்டும்? கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையைக் கண்காணிக்க வேண்டும், காவல்துறை சட்டத்தை மீறாமல் கண்காணிக்க வேண்டும். குற்றம் செய்யாமல் கண்காணிக்க வேண்டும், காவல் துறையாரின் குற்றத்தைக் கண்டறிந்து குற்றத்தீர்வு காண்பதற்காகக் கண்காணிக்க வேண்டும். சுருங்கச் சொல்லின், கண்காணிப்பாளர்களைக் கண்காணிக்க வேண்டும். இதைத்தான் உச்சநீதிமன்ற நீதியர் வி.ஆர். கிருட்டிணய்யர் “POLICING THE POLICE” என்றார். வேலிக்கு வேலி அமைப்பது போன்ற இந்தப் பணியைத்தான் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் செய்கிறது.

இது மிகக் கடினமான பணி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பணியில் சட்டமும் நீதியும் நம் பக்கம் உள்ளன. சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை சட்டத்தை மீறும் போது சட்டம் காக்கும் பணியை நாம் செய்கிறோம் என்பது நமக்குள்ள வலிமையாகும். இது அற வலிமைதான். இந்த அற வலிமையை மெய் வலிமை ஆக்க வேண்டுமானால் மக்கள் ஆற்றலை திரட்ட வேண்டும். ஒன்றுதிரட்டுவதோடு முறையாக அணி திரட்ட வேண்டும்.

நாம் தமிழக அளவிலான ஒரு தலைமைக் குழுவிலிருந்து தொடங்கினோம். பிறகு பல்வேறு இயக்கங்களின் பேராளர்கள் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கினோம். மாவட்ட ஒருங்கிணைப்ப்புக் குழுக்கள் அமைத்து ஒருங்கினைப்பாளர்களைத் தேர்வு செய்தோம். ஆனால் இது போதாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு கண்காணிப்புக் குழு வேண்டும். அது தொடர்ச்சியாக இயங்கி வர வேண்டும்.

காவல் சித்திரதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் இந்த இலக்கைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மே 27, 28 இரு நாளும் ஏற்காட்டில் கூடிய போது இதற்கான சில அமைப்புமுறைகளை உருவாக்கினோம். தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஓர் அமைப்பாளரைத் தேர்வு செய்து, மண்டல அளவிலான கூட்டங்களைக் கூட்டி, மாவட்ட அளவில் கூட்டியக்கத்தைச் சீரமைப்பது என்று முடிவு செய்தோம். இதிலிருந்து காவல்நிலைய அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்கும் திசையில் முன்னேற இயலும் என்று நம்புகிறோம். சூன் 10ஆம் நாள் திண்டிவனத்தில் வடக்கு மண்டலமும் திருச்சிராப்பள்ளியில் மத்திய மண்டலமும் கூடுகின்றன. 11ஆம் நாள் ஈரோட்டில் மேற்கு மண்டலமும் மதுரையில் தெற்கு மண்டலமும் கூடுகின்றன. இந்தக் கூட்டங்களில் அடுத்தடுத்த பணிகள் குறித்த பயிற்சி வகுப்பும் நடக்கவுள்ளது.

காவல் நீதியை உறுதி செய்யும் படியான இரு முகன்மைத் தீர்ப்புகளைக் கையிலெடுத்து அவற்றைச் செயலாக்கும் படி வலியுறுத்த வேண்டியுள்ளது:

1) சந்தோசு – எதிர் – மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை 2020 திசம்பரில் வழங்கிய தீர்ப்பு… காவல் சாவுகளின் போது சடலக் கூறாய்வில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியது. இந்தத் தீர்ப்பின் மீது 28.02.2023இல் நீதிமன்றம் சில கூடுதல் விளக்கங்களை அளித்துள்ளது. காவல் சித்திரவதையை இல்லாமற்செய்வதில் இந்தத் தீர்ப்பு பெரும்பங்காற்ற முடியும் என நம்பலாம்.

இந்தத் தீர்ப்பை மிகப் பரவலாகக் கொண்டுசேர்ப்பதன் வாயிலாகக் காவல் சித்திரவதைகளைத் தடைப்படுத்த இயலும். காவல்துறையிலும், நீதித்துறையிலும், மருத்துவத்துறையிலும் தொடர்புடைய அனைவரும் இத்தீர்ப்பைத் தெளிவாக அறிந்திருக்கும் படிச் செய்ய வேண்டும்.

2) பரம்வீர்சிங்கு சைனி – எதிர் – பல்சித்து சிங்கு முதலானோர் என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் (நீதியர் ஆர்.எஃப். நாரிமன்) 2020 திசம்பரில் அளித்த தீர்ப்பு அனைத்துக் காவல் நிலையங்களிலும் கட்டாயமாகக் கண்காணிப்புப் படக் கருவி (CC TV) பொருத்த வேண்டுமென ஆணையிட்டது. இந்தப் பணியை மேற்பார்வையிட மாநிலப் மேற்பார்வைக் குழு (SLOC), மாவட்ட மேற்பார்வைக் குழுக்கள் அமைக்க வேண்டும், இந்தக் குழுக்கள் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதையும் நீதிமன்றம் தெளிவாக்கியது.

கண்காணிப்புப் படக் கருவிகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு செயலாக்கம் பெற்றுள்ளதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மாந்த உரிமைகளிலும், காவல் நீதியிலும் அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

இந்த இரு தீர்ப்புகளையும் கையிலேந்திக் காவல் சித்திரவதைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கக் காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் தீர்மானித்துள்ளது. கண்காணிப்புப் படக் கருவி பற்றிய தீர்ப்பு எளிய காவல் நிலையங்களுக்கு மட்டுமல்லாமல் தேசியப் புலனாய்வு முகமை (NIA), செயலாக்க இயக்ககம் (ED) போன்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதால் இது குடியாட்சிய ஆற்றல்களின் பொதுவான போராட்டத்துக்கும் உதவக் கூடியதாகும்.

நமக்கு அறைகூவலான இந்தப் பணிகளைத் திறம்படச் செய்து முடிக்கப் பொறுமையும் உழைப்பும் தன்னளிப்பும் தேவை. அனைத்துக்கும் மேலாக அமைப்பாக்கம் தேவை. 10, 11 நாட்களில் நடைபெறும் மண்டலக் கூட்டங்கள் இந்த வகையில் ஒரு பாய்ச்சலாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பின்குறிப்பு: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் என்பது அரசியல் இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் ஆனது மட்டுமன்று. அமைப்புசாரா மாந்தவுரிமை ஆர்வலர்களும் இந்தக் கூட்டியக்கத்திலும், அதன் முயற்கிகளிலும் பங்கேற்கலாம். தாழி அன்பர்கள் இது குறித்துக் கருதிப் பார்க்க அன்புரிமையுடன் அழைக்கிறேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 213