(தோழர் தியாகு எழுதுகிறார் 180 : வேலிக்கு வேலி! தொடர்ச்சி)
பாவலரேறு தொட்ட உயரம்
இனிய அன்பர்களே!
“என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!”
அவர் இப்படித்தான் வாழ்ந்தார்! இப்படித்தான் இயங்கினார்! அவர்தாம் பாவலரேறு பெருஞ்சித்திரனார்!
பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றால் அவர்தம் எழுத்தைப் படித்தோர்க்கும் உரையைக் கேட்டோர்க்கும் உடனே நினைவுக்கு வருவது அவரது தூய தமிழ் நடைதான். தனித்தமிழ் சொல்லாட்சியில் அவரைப் போல் யாருமிருக்க முடியாது. கலைஞர் கருணாநிதியை அருட்செல்வர் என்றும் தலைவர் பிராபகரனை கதிர்க்கையன் என்றும் தனித் தமிழ்ப் பெயரிட்டிட்டழைக்க அவரால் மட்டுமே கூடும்.
ஆனால் பாவலரேறுவை நினைவில் ஏந்த இன்னுங்கூட முகன்மைக் காரணங்கள் உண்டு என நம்புகிறேன். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களைப் பற்றி மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் கூறுவார்:
“தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித் தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர். செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார்! நான் மரமாக வளர்த்து வருகிறேன்.”
சுருங்கச் சொல்லின் இதுதான் தனித் தமிழியக்கத்தின் அக வரலாறு. கால்டுவெல், பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், பாவாணர் – தனித்தமிழ் மலைத் தொடரின் உயர்முகடுகள் என்ற இந்த வரிசையில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கால்டுவெல் தமிழின் தனித்தியங்கும் ஆற்றலை மொழியியல் நோக்கில் நிறுவினார். முதலாவதாக அது வடமொழியைச் சாராமல் தற்சார்பாக இயங்க வல்லது என்பதையும், இரண்டாவதாக வடமொழி சாராத திராவிட மொழிக் குடும்பத்துக்குத் தமிழே தலைமகள் என்பதையும் ஆழ்ந்து தெளிந்து உறுதி செய்தவர் அவரே. பரிதிமாற் கலைஞர் தமிழின் செம்மொழித் தகைமையைப் போற்றி நின்றவர். தனித் தமிழுக்கு இயக்கம் கண்டவர் மறைமலை அடிகள். பாவாணர் ஒரு தூய தமிழ்ச் சிந்தனை மரபுக்கே வித்திட்டவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த வரிசையில் பாவலரேறு கண்ட புதிய உயரம் என்ன? என்பதுதான் நம்முன்னுள்ள வினா. மொழியும் நிலமும் இனத்தின் உயிரும் மெய்யுமானவை. மொழி விடுதலையும், இன விடுதலையும் ஒன்றையொன்று சார்ந்தவை. நிலம் அடிமைபட்டுக் கிடக்கும் போது மொழியும் இனமும் விடுதலை பெற்று விட முடியாது. தனித் தமிழ் இயக்கம் வெறும் மொழி விடுதலை இயக்கமாக மட்டும் இருந்தால் நிறைவாக வெல்ல முடியாது. மொழியை ஒதுக்கி விட்டு இனமும் இனத்தை ஒதுக்கி விட்டு நாடும் விடுதலை பெற முடியாது. கூடில்லாத பறவை எளிதில் பகைக்கு இரையாகி விடும். நாடில்லாத மொழியும் இனமும் அப்படித்தான் நீடித்து வாழ முடியாது. மொழிக்கும் இனத்துக்கும் நாட்டுக்குமான இயங்கியல் இடையுறவை உறுதியாகப் பற்றி நின்றவர் பாவலரேறு.
விடுதலை என்பது அவரைப் பொறுத்த வரை முழுமையானது. இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று அவர் பிய்த்துப் பார்த்தரில்லை. தமிழ் விடுதலை, தமிழர் விடுதலை, தமிழ்நாடு விடுதலை என்பவற்றில் எந்த ஒன்றையும் விட்டுக் கொடுத்தாரில்லை. தமிழர்கள் இல்லாத நாடில்லை, தமிழர்களுக்குத் தான் ஒரு நாடு இல்லை என்று எண்ணமும் ஏக்கமும் அவர்க்கிருந்தன. எனவேதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு துணைநின்றார். அதனால் எது வரினும் இன்முகத்துடனே ஏற்றார்.
பாவலரேறு செம்மாந்த சொற்களுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. வீறார்ந்த செயல் பலவும் இயற்றியவர். போராளி என்ற சொல்லை வடித்த அவரே ஓர் அறப் போராளியாக வாழ்ந்தார். சிறையச்சம் சிறிதுமில்லாத அறப் போராளி. பாவலரேறு முகங்கொடுக்காத அடக்குமுறைச் சட்டம் எதுவுமில்லை. அடக்குமுறைச் சட்டத்தை ஏவி அவரைச் சிறையிலடைக்காத ஆட்சி எதுவுமில்லை.
பாவலரேறு நம்மை விட்டுப் போய் 28 ஆண்டுக் காலமாயிற்று என்பதை நம்புவதே கடினமாய் உள்ளது. அவர் கொளுத்திய தமிழ்ச் சுடர் அணையாது காப்போம்! அவரது எழுச்சிப் பாக்களால் வீறு கொண்டெழுவோம்! அவர் தொடங்கிய பணி முடித்து என்றென்றும் அவர் புகழ் போற்றுவோம்! நன்றி! வணக்கம்!
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 214
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக