(தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் – தொடர்ச்சி)
அனல் கீழ் பனித் திரள்
காலநிலை மாற்றம் தொடர்பான தரப்புகளின் மாநாடு –27 (கொப்27) எகித்தில் நடந்து முடிந்துள்ளது. கொப்27 (COP27) மாநாட்டில் ஐநா பொதுச் செயலர் அந்தோணியோ குத்தரசு ஆற்றிய உரையை — நரகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையை — சென்ற மடலில் மேற்கோளாகக் கொடுத்திருந்தேன். மாநாட்டின் உருப்படியான விளைவு என்பது காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வின் வளர்ச்சிதான்.
காலநிலை மாற்றம் என்பது கற்பிதமன்று, அறிவியல் புனைகதையன்று. அஃது அறிவியல் அடிப்படையிலானது. அறிவியலின் துணைகொண்டுதான் அதை வெல்லவும் கூடும். இந்த அறிவியல் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது இம்மாநாட்டில் வெள்ளிடை மலையாக ஒளிர்ந்தது.
இஃது அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மை: ஏடேறிய வரலாற்றில் கடந்த ஏழாண்டுக் காலம் போல் ஒரு வெப்பக் காலம் கண்டதே இல்லை.
ஐரோப்பாக் கண்டத்தின் கொடுங்குளிர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
1998ஆம் ஆண்டு ஐரோப்பியப் பயணம் முடித்து விட்டு வந்து “உறைபனிக் காட்டில் ஈழ நெருப்புடன்” என்ற தலைப்பில் எழுதினேன். அஃது உறைபனிக் காடேதான்! குருதியுறையும் குளிர்! அதே ஐரோப்பாவில் இப்போது ஆண்டுதோறும் வெப்ப அலை வீசுகிறது! பிரான்சிலும் இத்தாலியிலும் பெரிய ஓடைகளும் ஆறுகளும் வற்றிப் போய், வரலாறு காணாத கடும் வறட்சி! மறுபுறம் பருவம் தவறிப் பேய் மழை கொட்டி, வெள்ளப் பெருக்கு!
செருமனியைத் தாக்கிய மழை வெள்ளத்துக்குக் காலநிலை மாற்றம்தான் காரணம் என்று அப்போதைய அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஏஞ்சலா மெர்கெல் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் தொடர்பான பல்லரசுக் குழு கடைசியாகக் கொடுத்துள்ள அறிக்கை அறிவியல் அடிப்படையில் தந்துள்ள முகன்மையான எச்சரிக்கைகள்: நிரலளவு (சராசரி) புவி வெப்பநிலை 1.5 முதல் 3 பாகை செல்சியசு உயருமானால், நிலம்வாழ் உயிரினங்கள் அழியும் வேகம் கிட்டத்தட்ட இரு மடங்காகும். கடுமையான வெள்ளப் பெருக்கின் இடர் நான்கு மடங்காகும்.
இதை விடவும் ஆபத்தான செய்தி; புவிக் கோளத்தின் இரு துருவப் பகுதிகளிலும் பனி உருகி வருவதாகும். இது குறித்து நாசா திரட்டியுள்ள தரவுகள் இவை: 1970களின் பிற்பகுதி தொடக்கம் ஆர்க்டிக் கடலில் பத்தாண்டுக்கு 13 விழுக்காடு என்ற வேகத்தில் பனி உருகி வருகிறது. அன்டார்ட்டிகா கடலை மூடியுள்ள பனித் தகடுகள் ஆண்டுதோறும் நிரலளவாக 150 பில்லியன் டன் பனியை இழந்து வருகின்றன. இதையெல்லாம் அறிவியலின் துணைகொண்டு கணித்துச் சொல்லும் நாசா இருக்கும் அமெரிக்காவில்தான் காலநிலை மாற்றத்துக்குக் காரணமான காரியங்களும் ஆகப் பெருமளவில் நடக்கின்றன. இது முரண்பாடுதான்! இந்த முரண்பாடுதான் முதலாண்மையத்தின் அச்சாணி! உழைக்கும் மக்களைச் சுரண்டினால் போதாது! இயற்கையையும் சுரண்ட வேண்டும்! ஒடுக்குண்ட தேசங்களைக் கொள்ளையிட்டால் போதாது! புவிக் கோளத்தையும் பேரண்டத்தையுமே கொள்ளையிட வேண்டும்! இப்படிச் செய்தால்தான் அமெரிக்கா தலைசிறந்த நாடாக முடியும். அமெரிக்காவைத் தலைசிறந்த நாடாக்குவோம் (MAKE AMERICA GREAT) என்ற முழக்கத்தோடு இதோ வந்து விட்டார் சூப்பர்மேன் டொனால்டு துரும்ப்பு! காலநிலை மாற்றம் என்பதெல்லாம் அமெரிக்காவைத் தாழ்த்தும் சூழ்ச்சி என்று சொல்லி, பாரிசு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாரே, அதே துரும்ப்பு!
துவாலுவும் மாலத் தீவுகளும் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியும், எந்த நாடும் காலநிலை மாற்றத்தின் சூறைத் தாக்கிலிருந்து தப்ப முடியாது. இது அறிவியல் தரவுகள் சொல்லும் உண்மை. உலகம் அழியப் போகிறது என்பது மதம் பரப்புவோரின் கட்டுக் கதையன்று! அறிவியல் பேருண்மை! முடிந்தால் பிழைத்துக் கொள் என்னும் கடைசி எச்சரிக்கை!
அப்படியானால் புரட்சி? குடியாட்சிய அல்லது குமுகியப் புரட்சி (சனநாயகப் புரட்சி அல்லது சோசலிசப் புரட்சி)? தேசிய விடுதலைப் புரட்சி? எல்லாம் அவ்வளவுதானா? அன்பர் சத்திய நாராயணன் எழுப்பும் வினாவுக்கு என்ன விடை? பார்ப்போம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக