(தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது! தொடர்ச்சி)
புவித்தாய்க்குக் காய்ச்சல்!
சூழலரண் அறிக்கையில் தோழர் சமந்தா இப்படி எழுதுகிறார்:
“காலப்போக்கில் மனித இனம் இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாலும், நஞ்சையே விதைத்ததாலும் நம் புவித்தாய் காய்ச்சல் கொண்டிருக்கிறாள், இரண்டு நாளில் சரியாகும் சாதாரணக் காய்ச்சல் அல்ல இது. உயிரைப் போக்கும் நச்சுக் காய்ச்சலால் உயிர்க்கோளம் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.”
புவித் தாய்க்கு அவள் பெற்ற மக்களின் செயலாலேயே காய்ச்சல் கண்டுள்ளது! அதே மக்கள்தாம் அந்தக் காய்ச்சலைத் தணிக்கவும் கடமைப்பட்டவர்கள்.
அரசியல் நெருக்கடியையும் பொருளியல் நெருக்கடியையும் விஞ்சக் கூடியவாறு காலநிலை மாற்ற நெருக்கடி முற்றி வருகிறது.
இந்த உண்மையை அறிந்தேற்காமல் அதற்கு முகங்கொடுத்துத் தீர்வு காண முடியாது. துவாலு உள்ளிட்ட பசிபிக்கு தீவுகள் வலிக்க வலிக்க இந்த நெருக்கடியோடு போராடி வருகின்றன.
ஆனால் பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது எப்படி? புவி வெப்பமாதலைத் தணிப்பது எப்படி? தனியாட்கள் முயன்று மட்டும் இதனைச் செய்ய முடியாது என்னும் நிலையில் அரசுகள் முன்முயற்சி எடுத்தால்தான் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால்தான் உலக நாடுகள் 2015 திசம்பரில் பாரிசு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டன. ஏட்டளவில் அது பெருஞ்சாதனை! பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெப்பமாதலை 1.5 பாகை (டிகிரி) என்னுமளவுக்குள் நிறுத்த வேண்டும் என்பது உடன்பாடு.
தொழிற்புரட்சி என்பது மாந்தக் குல வரலாற்றில் பெரியதொரு பாய்ச்சல்தான். ஆனால் அதே தொழிற்புரட்சிதான் புவியின் தட்ப வெப்ப நிலையில் முன்காணாத மாற்றத்தையும் தொடங்கி வைத்தது. தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலைக்கு புவி வெப்பத்தை மீட்க முடியுமா? முடியாது. ஆனால் அந்த முந்தைய நிலைக்கு மேல் 2 பாகைக்குள் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்த முடிந்தாலே பெரிய நன்மை விளையும்.
பாரிசு ஒப்பந்தத்தை அடுத்தடுத்துப் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு விட்டன. ஆனால் எல்லாம் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காய்தான்! புதைபடிவ எரிபொருள் ஆக்கம் குறையவில்லை என்பதோடு கூடிக் கொண்டே போகிறது. தானாகக் கூடவில்லை, அரசுகள் திட்டம் போட்டுக் கூட்டுகின்றன என்பதே மெய். கடந்த பத்தாண்டு காலத்தில் மட்டும் கரியமில வாயு(கார்பன்-டை-ஆக்சைடு) உமிழ்வுகளில் 86 விழுக்காடு… பெற்றோல், எரிவாயு, நிலக்கரி காரணமாக ஏற்பட்டுள்ளது என்று காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா குழு தெரிவிக்கிறது.
நிலத்தடிக் கனிமங்களில் கறுப்புத் தங்கமாக மதிக்கப்படும் நிலக்கரி, எரிநெய் (பெற்றோல்) போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்தவே கூடாதா? என்ற கேள்வி எழும். மாந்தக் குலம் அப்படி ஒரு கூட்டு முடிவு எடுத்தாலும் தவறில்லை என்பேன். தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்வோமா? வயிரம் என்பதால் வாய்க்குள் போட்டுக் கொள்வோமா?
புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை இன்று முடிவெடுத்து நாளை முதல் கைவிட முடியாது என்பதே மெய். அப்படியானால் முதற்கட்டமாகக் கட்டுப்படுத்தலாமே? இந்தப் பயன்பாடு மேலும் பரவாமல் தடுக்கலாமே?
புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தாமல் பாரிசு ஒப்பந்தம் போல் எத்தனை ஒப்பந்தம் போட்டாலும் புவிக் காய்ச்சலைத் தணிக்க முடியாது.
புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் போதே பொருளியல் கட்டமைப்பைப் பன்மயப்படுத்தும் முயற்சிகளும் தேவைப்படுகின்றன. இந்த முயற்சிகளுக்கு முதலாண்மை (முதலாளித்துவ) வளர்ச்சிப் பாதையும், அதனைக் கைப்பிடித்துள்ள அரசுகளும் பெருந்தடைகள் என்பதால் மக்கள்-போராட்டங்கள் வழியாகவே முன்னேற்றம் காண முடியும்.
மூன்றாம் உலகப் போர் பற்றி அடிக்கடிப் பேசுகிறோம். இந்த மூன்றாம் உலகப் போர் காலநிலை மாற்றத்தின் மீதான போராக அமைய வேண்டும். ஒரு வகையில் ஏற்கெனவே அந்தப் போர் தொடங்கி விட்டது. அந்தப் போரின் முனைமுகத்தே துவாலுவும் அதையொத்த பசிபிக் தீவுகளும் நிற்கின்றன.
நாம் எங்கே நிற்கிறோம்?
இன்று (15/11/2022) தி இந்து ஆங்கில நாளேட்டின் 7ஆம் பக்கத்தில் “Climate change debates while the Earth heats up” (புவி வெப்பமாதல் கூடும் போதே காலநிலை மாற்ற விவாதங்கள்) என்ற தலைப்பில் வந்துள்ள எழுத்துரையை வாய்ப்புள்ளவர்கள் படித்துப் பாருங்கள்.
இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி இந்தோனேசியாவில் பாலி சென்றுள்ளார். இருபது நாடுகள் குழு (G-20) சந்திப்புக்காகச் சென்றுள்ளார். உலகத்தின் கவலைக்குரிய சிக்கல்களைப் பற்றி விவாதிக்கப் போகின்றார்களாம். அவற்றுள் ஒன்று சுற்றுச்சூழல். காலநிலை மாற்ற நெருக்கடி குறித்தும் பேசுவார்கள். ஆமாம், பேசுவா…ர்…க…ள்! பார்ப்போம்.
தரவு: தியாகுவின் தாழி மடல் 9
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக