அகரமுதல
ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை!
ஒப்பிலக்கியம் அல்லது ஒப்பியல் இலக்கியம் என்பது இலக்கிய ஆராய்ச்சிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.எச்.இரீமாக்கு ((H.H.Remack), “ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுவது; இலக்கியங்களுக் கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், குமுகாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ; இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது” என்கிறார்.
பொதுவாக ஒரு நாட்டு அல்லது ஒரு மொழி இலக்கியத்துடன் அடுத்த நாட்டு அல்லது அடுத்த மொழி இலக்கியத்தை ஒப்பிடுவதைத்தான் ஒப்பிலக்கியம் வலியுறுத்துகிறது. ஆனால், பின்னர் ஒரே மொழியில உள்ள இலக்கியங்களை அதே மொழியிலுள்ள இலக்கியங்களுடன் ஒப்பிடுவதும் ஒப்பிலக்கியத்திற்குள் அடங்கலாயிற்று. ஒப்பீடு இரண்டுக்கு மேற்பட்ட இலக்கியங்களுடனும் அமையலாம்.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் பக்கம் எண் 142-இல் மொழிகளின் தொன்மை வரலாற்றைக் குறித்து விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சமசுகிருதம் கி.மு.2000 ஆண்டுகள் பழமையானது என்றும் தமிழ் கி.மு.300 ஆண்டுகள்தான் பழமையானது என்றும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல உலக மொழிகள் அனைத்திலும்தொன்மையானது சமசுகிருதம் என்று வேண்டுமென்றே தவறாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்ததும் கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் கொதித்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். உடன் பள்ளிக்கல்வி யமைச்சர் செங்கோட்டையன் தமிழ்மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கப்படும் என்றும் தவறான தகவலைச் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். உடன் நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
ஆனால் மதிப்பிற்குரிய மற்றோர் அமைச்சர் “பா.ச.க.வின் தாள் பணிதலேமுதன்மை. தமிழைத் தாழ்த்தினால் நமக்கென்ன” என்று கருதுகிறாரோ என மக்கள் எண்ணும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளார். “தமிழ், சமற்கிருதம் இவற்றில் எது மூத்தது எது சிறந்தது என்ற அருததமற்ற ஆய்வை விட்டுவிடுங்கள்” என அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார். எல்லாக் கட்சிகளிலும் ஆதரவாளர்கள் உள்ளவர் என்றும் வினைத்திறம் மிக்கவர் என்றும் கருதப்படும் அவர், தெரிவித்த கருத்துகள் ஒப்பிலக்கியத்திற்கு முரணானவை.
இலக்கியமோ மொழியோ எதுவாயினும் கால முதன்மை குறித்த ஆராய்ச்சி அவற்றை முழுமையாக ஆராய்வதற்கு அடிப்படையாக அமைகிறது. காலஆராய்ச்சியைத் தவிர்க்கும் மொழி ஆராய்ச்சி முழுமை யற்ற்தாக மட்டுமல்லதவறானதாகவும் இருக்கும். சான்றுக்கு நாம் இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம்.
இராமாயணக் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் – கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என்பதே சரியான முடிவாகும். புத்தர், புத்த சமயத்தவர், புத்த பீடங்கள் முதலானவை பற்றிய குறிப்புகளின் அடிப்டையில் வரலாற்று நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும் இது.
ஆனால், இராமாயணம் திரேதாயுகத்தில் நடந்ததாக ஆரியப்புனை கதை கூறுகிறது. இக்கற்பனையின்படி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன. கால ஆராய்ச்சியின் மூலம்தான் இது தவறு என்று மெய்ப்பிக்கப்படுகிறது.
‘இராமாயணம் ஓர் ஆய்வு’ நூலாசிரியர் கே. முத்தையா குறிப்பிடுவதுபோல் ஆராய்ச்சியாளர்கள் பலர், இராமாயணம் குறிப்பிடும் இலங்கா என்பது இலங்கை அல்ல என்றும் இராமன் முதலான எவரும் விந்திய மலைக்குத் தெற்கே வரவில்லை என்றும் கூறுகின்றனர்.
கி.பி.1010-1050 ஆண்டுகளில் உருவான சம்பூர்ண இராமாயணம் வரையிலும் இன்றைய இலங்கை பற்றிய எக்குறிப்பும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
அதுபோல் திரேதாயுகததின் கடைசி ஆண்டில் பிறந்திருந்தாலும் இராமன் 8,69,110 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிறந்தவன் ஆகிறான். ஆனால் அவன் பிறந்ததாகக் கூறப்படும் அயோத்தி கி.மு.700இல்தான் உருவானது. இதனை மத்திய அரசின் தொல்பொருள் துறை 1976-77 இல் ஆய்வு செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இக்குறிப்பை அம்சத்து வலைப்பூவில் (amjat.blogspot.com)காணலாம். தவறான இராமாயணக் கால அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலங்களைத் தவறாக மதிப்பிடும் போக்கு வந்ததல்லவா? ஆகச் சரியான ஆய்விற்குச் சரியான கால ஆய்வும் தேவை அல்லவா?
பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரியநாராயண(சாத்திரியா)ர் ஆரியர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகும் முன்னரே மேலை நாட்டு ஆரியர்களுடன் தமிழர் கடல்வழி வாணிகம் மேற்கொண்டு இருந்தனர் என்கிறார். இந்த முடிவிற்கு அவர் கால ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டார்.
இத்தகைய கருத்துகளைத் திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாசக தகவல் தொழில்நுட்பம்-சமூகஊடகப்பிரிவும் முகநூலில் குறிப்பிட்டுள்ளது(08.06.2018). எனவே, பா.ச.க.என்பதால் வரலாற்றுத் திரிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றல்ல. நடுநிலையாகவும் செயல்படலாம் என்பதற்கு இது சான்றகும்.
பரிதிமாற் கலைஞர் ஆரியர்கள் தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து அவ்வோலைகளைப் பழமையானவைபோல் காட்டி அவ்றறிலிருந்து தமிழில் இலக்கியங்கள் எழுதப்பட்டன என்று தவறாக நிறுவுவதை மெய்ப்பித்துள்ளார். வேண்டுமென்றே தமிழ் இலக்கியக்காலங்களைப்பின்னுக்குத் தள்ளுவதையே ஆரியர்கள் கடமையாகக் கொண்டுள்ளதால், தமிழ்–சமற்கிருத ஒப்பாய்வில் கால ஒப்பீடு இன்றியமையாதுவேண்டப்படுகிறது.
இப்பொழுது கூறுங்கள். தமிழின் காலத்தை வேண்டுமன்றே ஒரு மொழியினர் பின்னுக்குத் தள்ளுவதையே வாணாள் கடமையாகக் கொண்டு வாழும் பொழுது மொழிகளின் காலங்களைச் சரியாகக் குறிப்பிட்டுத்தானே ஆக வேண்டும்! இலக்கியக் கருத்துகள் சொல்லப்பட்ட காலங்கள் அடிப்படையில் பெருமைஉறுகின்றன என்னும் பொழுது கால ஆராய்ச்சியும் கால ஒப்பீடும்தேவைதானே! இலக்கிய ஆராய்ச்சியின் முழுமைக்குக் காலஆராய்ச்சி தேவை என்பது மறுக்க முடியாத உண்மைதானே!
ஒரு மொழி எழுத்திலக்கியம் பெற்றிருக்க வில்லை என்றால் முழுமையடைந்த மொழியாகாது. சமற்கிருத மொழியினர் இன்றைய இந்தியா என்று சொல்லப்படும் தமிழ்நிலத்திற்கு வந்த பின்னர்தான் தமிழ் எழுத்து வரிவடிவத்தைப் பார்த்துத் தங்கள் நெடுங்கணக்கு – எழுத்து – வடிவங்களை அமைத்துக் கொண்டனர். அவ்வாறு தமிழுக்குப் பிற்தைய சமற்கிருத மொழியைத் தமிழுக்குமுந்தையதாகத் தவறான காலக்குறிப்பை அளித்தால் அது தமிழுக்குச்செய்யும் கொடுமை அல்லவா?
எனவே இதுபோன்ற தவறுகளைத் தவறல்ல என்று சொல்லி ஊக்கப்படுத்தாமல் பள்ளிக் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்துக் குறைகளைக் களைய வேண்டும். மொழிகளின் உண்மையான காலத்தையும் தமிழின் தொன்மையையும் குறிப்பிடும் பாடங்கள் எல்லா மொழிப் பாடங்களிலும் இடம் பெற வேண்டும்.
மொழியின் சிறப்புக்கும் சிறுமைக்கும் அவ்வம்மொழிகளின் இலக்கியப்படைப்புகளே உரைகல்லாக அமையும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.(திருவள்ளுவர், திருக்குறள் 505)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக