அகரமுதல
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
21
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:388)
அறமுறை ஆட்சியால் மக்களைக் காப்பாற்றும் நாட்டின் தலைவன் மக்களால் உயர்ந்தோனாக மதிக்கப்பட்டுப் போற்றப்படுவான் என்கிறார் திருவள்ளுவர்.
அரசறிவியல், நீதிமுறைசெய்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது நாட்டை ஆள்வோர் கடமை என்கிறது. இதைத்தான் திருவள்ளுவர் இங்கே குறிப்பிடுகிறார்.
‘இறை’ என்பதைப் பலரும் கடவுள்/ தெய்வம் என்றே குறிப்பிடுகின்றனர். அப்படியானால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது பொருந்துமா? இறை மறுப்பாளர்கள், தாங்கள் இல்லை என்று சொல்லக்கூடிய கடவுளாக எப்படி ஒருவரைக் கருதுவர்? இறை என்றால் உயர்ந்தோன் என்றும் பொருள். எனவே, உயர்ந்தோன் எனக் கூறுவது கடவுள் ஏற்பாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள் ஆகிய இரு தரப்பாருக்கும் பொருந்தும்.
முறை என்பதற்குச் செங்கோல் முறைமை, ஆட்சி முறைமை, நீதி முறைமை, அறமுறைமை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தருகின்றனர். இதை மேலும் தெளிவாக மணக்குடவர், “குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்” என உரை வழங்கியுள்ளார். எனவே, முறைமை என்பது உலக உயிர்களுக்குத் தீங்கிழைப்போரிடம் இருந்து எல்லா உயிர்களையும் காத்தல் என்கிறார். எனவே, மக்களை மட்டுமல்லாமல், பிற உயிர்களையும் காப்பாற்றவேண்டியது ஆள்வோர் கடமை எனச் சிறப்பாகக் கூறுகிறார் எனலாம்.
காலிங்கர் மேலும் சிறப்பாக, “அளித்தலும் செறுத்தலும் ஆகிய செய்தியின் கூறுபாடு அறிந்து, மற்று அவரவர்க்குத் தக்காங்கு செய்யும் முறை வழுவாமல் செய்து, மற்று இங்ஙனம் காத்தலைப் புரியும் மன்னவன்” என்று விளக்குகிறார். அஃதாவது, குற்றவாளிகளைத் தண்டித்தல்(செறுத்தல்) மட்டுமல்ல, மக்களுக்குப் பிறரால் தீங்கு வராவிட்டாலும் வாழ்விற்குத் தேவையானவற்றைப் பெறாமல் துன்புறலாம் அல்லவா? அத்தகையோர்க்குத் தக்கபடி அளித்தலும் முறைமைதான் என்கிறார்.
மணக்குடவரும் பரிப்பெருமாளும் நாயகனென்று எண்ணப்படுவான் எனச் சீர்திருத்த உரையாசிரியர்களுக்கு முன்னோடியாகக் குறிப்பிடுகின்றனர்.
காத்தல் என்பது அரசால், அரசைச் சுற்றியுள்ளோரால், கள்வரால், பகைவரால், விலங்கு முதலியவற்றால் மக்கட்கு எந்தவகையான தீமையும் நேராவண்ணம் பாதுகாத்தல் என அறிஞர்கள் விளக்குவர். எனவே, ஆள்வோரால் மட்டுமல்ல, அவரது சுற்றத்தாராலும் சுற்றியுள்ள அதிகாரிகளாலும் தீமை வராமல் காத்தல் என்னும் நடுநிலை அறத்தை அன்றே திருவள்ளுவர் கூறியுள்ளார்.
அடிமை எண்ணமோ அச்சமோ இன்றி வாழும் சூழலைத் தருவதே உண்மையான முறை செய்யும் ஆட்சியாகும். மேலும், அனைவருக்கும் பொருள் ஈட்டும் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, மருத்துவ வாய்ப்பு, ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்குமாறு ஆள்வதே முறை செய்து காப்பாற்றல் ஆகும்.
திருவள்ளுவர் அக்கால மன்னராட்சி முறைப்படி மன்னன் எனக் குறிப்பிட்டாலும் நாட்டின் ஆட்சியாளன் என்று பொருள் கொள்வது எக்காலத்திற்கும் ஏற்றதாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக