திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

 16

 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)
 ஆளும் தலைவருக்குக் காலந்தாழ்த்தாத தன்மையும் கல்வியுடைமையும் துணிவுடைமையும் நீங்காமல் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
தூங்காமை என்றால் உறங்காமை என்னும் பொருள் பின்னர் ஏற்பட்டது. காலந்தாழ்த்தாமை என்றுதான் பொருள். “தூங்காதே தம்பி தூங்காதே” என்றுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னதுபோல், நீண்ட நேரம் ஆள்வோர் உறங்குவதும் தவறுதான். என்றாலும் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இருக்கும் தீப்பண்பு ஆள்வோரிடம் இருக்கக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். பின்னரும் திருவள்ளுவர், “தூங்கற்க தூங்காது செய்யும் வினை”(குறள் 672) என வலியுறுத்துகிறார்.
நாமக்கல் இராமலிங்கம்,  “அரச காரியங்களில் அயர்ந்துவிடாமல் விழிப்பாக இருப்பது, அப்போதைக்கப்போது அறியவேண்டியவற்றைக் கற்றுக் கொள்வது, உடனுக்குடன் ஆலோசனை நடத்திக் காரியங்களை நிச்சயிப்பது ஆகிய மூன்று குணங்களும்” ஆள்வோர்க்குத் தேவை என விளக்குகிறார்.
கற்கவேண்டியவற்றைக் கசடறக் கற்றறியும் கல்வி உடையவனாக இருக்க வேண்டும். அஃதாவது அறவியல், ஆட்சியியல், நீதியியல், குடிமையியல் முதலான நல்லாட்சி நடத்துவதற்குரிய துறைகளில் தேவையான கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்.
எதிர்ப்பு எது வரினும் அஞ்சாது மக்களுக்கு நல்லனவற்றை ஆற்றும் துணிவும் தேவை. ஏனெனில் நல்ல செயல்களையும் அரசை எதிர்ப்பதற்காகவோ தன்னலத்தின் காரணமாகவோ எதிர்ப்போர் இருப்பர். அவர்களை அடக்குவதற்குத் துணிவு தேவை. நாட்டில் பல்வகைக் குழுக்கள் இயங்கி வன்முறைகளில் ஈடுபடலாம். அவற்றில் ஈடுபடுவோர் அல்லது அவற்றிற்கு ஆதரவாக இருப்போர், வேண்டியவராக அல்லது துணை நின்றவராக இருக்கலாம். அதற்காக விட்டுக் கொடுக்காமல் அவற்றை ஒடுக்குவதற்குத் துணிவு தேவை. அயல்நாட்டுச் சிக்கல் வரும்பொழுது அல்லது போர் உருவாகும் பொழுது நாட்டு மக்களின் ஆதரவையும் பெற்று அவற்றை எதிர்நோக்கத் துணிவு தேவை.
துணிவு என்பது அரசு வழி தவறும் பொழுது மக்கள் எதிர்த்தால் அரச வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்குவதோ “இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்”  என்று பாரதியார் சுட்டிக்காட்டிய கொடு நிலையை உருவாக்குவதோ அல்ல. நல்ல செயல்களை நிறைவேற்றுவதற்கான துணிவையும் தீயவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகார மீறலையும் ஒன்றாக எண்ணக் கூடாது.
ஒவ்வொருவருக்குமே காலந்தாழ்த்தாமை, கல்வியறிவு, துணிவுடைமை தேவை என உணர்ந்து நாம் செயல்படுவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 09.08.2019