திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்
13
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (திருவள்ளுவர்திருக்குறள் 340)
“உடம்பினுள் ஒதுங்கி யிருக்கும் உயிருக்கு நிலையான  இருப்பிடம் அமையவில்லையோ?” என வனவுகிறார் திருவள்ளுவர்.
தங்குமிடம் நிலையற்றது என்பதன் மூலம் உயிரும் நிலையற்றது என்கிறார் திருவள்ளுவர். “துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதற்கு நோய்கள்/நோயுயுரிகள் குடிகொண்டுள்ள உடலில் ஓரமாக உள்ள உயிர் என்றே உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். உடலில் உயிர் உறைந்து – தங்கியிருந்து, இயக்கும் அறிவியல் குறிப்பையும் அதன்மூலம் உயிரின் நிலைத்த தன்மையின்மையையும் உடலில் நோயுயிரிகள் உள்ள அறிவியல் உண்மையையும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார் எனலாம்.
புகு+ இல் = புக்கில்; அஃதாவது புகுந்தபின் நிலையாக அமையும் இருப்பிடம். ‘புக்கில்’ என்பதற்குக் காலிங்கர் ‘புக்கில் என்பது புக்குப்போதுகின்ற இல்லம்’ என்றும் பரிமேலழகர் ‘எஞ்ஞான்றும் இருப்பதோர் இல்’ என்றும் விளக்குகின்றனர். எனவே, நிலையான இருப்பிடத்தைப் ‘புக்கில்’ என்கின்றனர். இறையன்பர்கள், நிலையான இடம் என்பது தூய இடமாகிய இறைவன் திருவடி என்பர். ஆனால், இது பொருத்தமாக இல்லை. அவரவர் கட்டி வாழும் இல்லம் ‘புக்கில்’ எனவும் அண்டி வாழும் ஒட்டுக் குடியைத் துச்சில் எனவும்  சொல்வர்.
துஞ்சு+ இல் = துச்சில்; அஃதாவது ஒதுக்கிடம்/ஒண்டக்கிடைத்த இடம் / உறங்கக்கிடைத்த இடம் / தங்குமிடம்/ அழியுந் தன்மையான வீடு எனவும் பொருள் கூறுவர். ‘துஞ்சு’ என்னும் சொல் உறக்கத்தைக் குறிக்கும். இங்கே நிலையான இடத்தைக் குறிக்கிறது.
ஒவ்வொருவருக்குமே சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது கனவாகவும் அத்தகைய வாய்ப்பு வரும் பொழுது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. (திருக்குறள்1107 இல் இதனை உணரலாம்.)
இத்தகைய சொந்த வீட்டு இன்பம் உயிருக்கு இல்லையோ என்கிறார் திருவள்ளுவர்.
இன்பம் தரும் சொந்த வீடு அமையாதவர்கள், வாடகைக்கும் குடிக்கூலிக்கும்(குடக்கூலிக்கும்) மாறி மாறி வீடுவீடாகத் தேடி அலைகிறார்கள். இதைப்போல் உயிருக்கும் தங்குவதற்கு நிலையான இடம் இல்லை எனக்கூறி உயிரை நிலையற்றது என்கிறார் திருவள்ளுவர்.
நிலையற்ற உயிரை அது போகும் முன்னரே போர்க்கொடுமைகளாலும் இனப்படுகொலைகளாலும் போக்குவோர் உள்ளனரே!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 05 .08.2019