திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

17

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)

அறநெறியில் தவறாமல், அறம் அல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாமல், மானம் உடையவனே சிறந்த அரசன் என்கிறார் திருவள்ளுவர்.
ஆட்சியாளர்கள், அதிகாரம் குவிந்துள்ளதால் அறநெறியில் இருந்து விலகி வாழக்கூடாது என்கிறார்.
தமிழ்நெறி என்பது அரசும் அறநெறியில் நடக்க வேண்டும் என்பதே. சங்கப்புலவர்களும் இதையே வலியுறுத்துகின்றனர்.
அறம் நனி சிறக்கஅல்லது கெடுக!
எனப் புலவர் ஓரம்போகியார் (ஐங்குறுநூறு 7) கூறுகிறார்.
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
என மதுரை மருதன் இளநாகனார் (புறநானூறு 55) கூறுகிறார்.
பரிமேலழகர், “அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல்” என விளக்குகிறார்.
பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார், இக்குறளுக்கான விளக்கத்தில் “அரசியல் என்பது அறநெறி இல்லாதது என்ற கருத்து மேலாங்கியுள்ளது. அறநெறி தவறிச் சென்றால்தான் அரசியலை வெற்றியாக நடத்த முடியும் என்று நினைப்போர் பலர். ஆனால் குறள்நெறி, அறநெறியொடு பொருந்தியதே அரசியல் என்று கூறுகின்றது. ஆதலின் அரசுபுரி பணியினை மேற்கொண்டுள்ளோர் அறநெறிகளிலிருந்து தவறுதலே கூடாது. அறநெறிக்குப் புறம்பானவற்றைத் தாமும் செய்யாது பிறரும் செய்யாமல் பாதுகாத்தல் வேண்டும்” என வலியுறுத்துகிறார்.
கருநாடகச் சட்டமன்றத்திலும் பிற சட்ட மன்றங்களிலும் நடைபெறும் ஆட்சி மாற்றம் அறநெறியில் இருந்து விலகும் அரசியலாளர்களால்தான் நிகழ்கிறது என்பது கண்கூடு. பண ஆசை, பதவி ஆசை ஆகியவற்றுக்காக அறநெறியில் இருந்து விலகி அறமல்லாதவற்றையே புரிந்து சிக்கலை எதிர்கொள்ளும் வீரமின்றி மானமிழந்து நடந்துகொள்வதால்தான் மக்களாட்சிக்கு எதிரானவை சட்டத்தின் ஆட்சி என்ற போர்வையில் அரங்கேறுகின்றன. எனவே, நாட்டை ஆளும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களும் பிற மக்கள் சார்பாளர்களும் இத்திருக்குறளைப் பின்பற்றி அறநெறியில் வாழ வேண்டும். இத்தகைய அறவாணர்களையே மக்கள் தங்கள் சார்பாளர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நாமும் அறநெறி தவறாமல் அல்லனவற்றை நீக்கி மானத்துடன் வாழ வேண்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 10.08.2019