அகரமுதல
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
39
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 405)
கல்லாத ஒருவனின் பெருமை அவன் கற்றவர்முன் பேசும்பொழுது மறைந்து விடும் என்கிறார் திருவள்ளுவர்.
‘தகைமை’ என்பதற்கு மதிப்பு, பெருமை, தன்னைப் பெருமையாக எண்ணிக் கொள்ளும் மனப்பான்மை எனப் பல பொருள்கள் உள்ளன. மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் ‘கல்லாதவனது பெருமை’ என்று உரை கூறுகின்றனர். ஆனால், காலிங்கர் ‘கல்லாதவனது செல்வப் பெருமையும் பிறவும்’ என்று கூறுகிறார். அஃதவாது கல்லாதவனிடம் செலவப்பெருமை, பதவிப்பெருமை, குடிப்பெருமை முதலான பிற பெருமைகள் இருப்பினும் கற்றவர்கள் அதனை மதிக்கமாட்டார் என்று சரியாகச் சொல்கிறார்.(எனினும் இன்றைய உலகம் செல்வர்பின்னே செல்கின்றது.) பரிமேலழகர் ‘கல்லாதவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு’ என்கிறார்.
‘தலைப்பெய்து’ என்பது காணலை – அஃதாவது சந்திப்பதைக் குறிக்கும். அணுகுதல், ஒன்று கூடுதல், அல்லது கிட்டுதல் நெருங்கி யிருத்தல் எனவும் பொருள்படும். கல்லாதவர் கற்றவரிடம் நெருங்கி இருக்கும் பொழுது உள்ளதான உண்மை அறிவு வெளிப்படும்.
‘சொல்லாடல்’ என்பது கற்றவருடன் உரையாடுவதையும் கற்றவர் முன் உரையாற்றுவதையும் குறிக்கும். சோர்வு என்பது இக்குறளில் இழுக்கு என்னும் பொருளில் வந்துள்ளது. கற்றவருடனான உரையாடலால், அதுவரை பெருமையாகக் கருதிக் கொண்டிருந்த நிலைமைக்கு இழுக்கு நேரும் .
கற்றவர்களுடன் உரையாடும் பொழுது அறியாமை வெளிப்படும், கற்றவர் முன் மேடையில் பேசும் பொழுது அவர்கள் விடுக்கும் வினாக்களுக்கு விடையிறுக்க இயலாமல் அறியாமை தெரிய வரும். இதனை உணர்ந்து கல்லாதவர் கற்றவர் முன் சொல்லாடக் கூடாது.
கல்லாதவர் தம் அறியாமையை வெளிப்படுத்த வேண்டும் எனில் கற்றவர் முன் பேசுக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக