3
இராசீவு காந்தியை நோக்கித் தணுவைத் தள்ளிவிட்டது யார்?
– பிரியங்காவிடம் நளினி சொன்ன கமுக்கச் செய்தி
‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ என்கிற தலைப்பில் நளினி எழுதியிருக்கும் நூலின் மூன்றாம் பகுதி இது!
19-03-2008 திங்கட்கிழமை. என்னைக்
கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்குப் பக்கத்தில் பெண்
ஒருவர் உட்கார்ந்திருந்தார். அந்தப் பெண் என்னை உற்றுப் பார்த்தார். அவர்
யார் என்று எனக்குத் தெரிந்ததும் எனது நாடி நரம்புகள் தளர்ந்து விட்டன.
“நான் பிரியங்கா காந்தி”
என்று அவர் சொன்னார். உடனே அவரது கையைப் பிடித்து அழ வேண்டும் என்று
தோன்றியது. தன் அருகில் உட்காருமாறு இரண்டு மூன்று தடவை அவர் சொன்ன
பிறகுதான் உட்கார்ந்தேன்.
தலையைக் குனிந்து உட்கார்ந்து இருந்தேன்.
சில நிமையங்கள் (நிமிடங்கள்) கழித்து நிமிர்ந்து பார்த்தேன். அவரது
கன்னங்கள் சிவந்து போயிருந்தன. “ஏன் அப்படிச் செய்தீர்கள்? எங்கள் அப்பா
மிக மென்மையானவர் ஆயிற்றே! நல்லவர் ஆயிற்றே! எதுவானாலும் பேசித் தீர்த்துக்
கொள்ளலாமே? ஏன் அப்படிச் செய்தீர்கள்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டவர்
அழத் தொடங்கினார். நானும் அழத் தொடங்கி விட்டேன்.
“ஐயோ, அம்மணி! எனக்கு எதுவும் தெரியாது.
நான் ஓர் எறும்புக்குக் கூடத் தீங்கு நினைக்க முடியாதவள். என் சுற்றுச்
சூழ்நிலை என்னை இப்படிக் குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது. மனத்தளவில் கூட
நான் யாருக்கும் தீங்கு நினைக்காதவள்” என்று சொல்லி அழுதேன். அவரை அழுகையை
நிறுத்தும்படி சொன்னேன். சில நிமையங்கள் கழித்து இருவரும் ஓரளவு அமைதியாக
ஆனதும் நான் சொல்லத் தொடங்கினேன்.
“எனக்கோ என் கணவருக்கோ இந்தச் சூழ்ச்சி
பற்றி எதுவுமே தெரியாது அம்மணி! என் கணவர் உண்மையில் வெளிநாடு சென்று வேலை
செய்து பிழைத்துக் கொள்ள வேண்டித்தான் சென்னை வந்தார். அதற்குச் சான்றாக
இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று சுவிச்சர்லாந்தில் இருந்து அவர் சித்தி அருள் வசந்தா எழுதிய மடல். மற்றொன்று, கனடாவில் உள்ள அவர் பெரியப்பா மகள் செயம் எழுதிய கடிதம்.
இரண்டில் ஒரு மடலை எங்களிடம் காட்டி
உசாவினார்கள்(விசாரித்தார்கள்). ஆனால், ஆவணப்படுத்தாமல் மறைத்து
விட்டார்கள். அஃது ஆவணமாக்கப்பட்டிருந்தால் என் கணவர் குற்றச் சூழ்ச்சியில்
ஈடுபட இங்கே வரவில்லை என்பது உறுதியாகி இருக்கும். அதனால்தான்
மறைத்தார்கள்.
ஆனால், சித்தி எழுதிய கடிதம் அரசுத்
தரப்பு ஆவணம் 452-ஆக உள்ளது. அதில், அவர் சித்தி விரைவில் சுவிசுக்கு
அழைப்பதாக எழுதியுள்ளார். என் கணவர் ‘ஆங்கிலப் பயிற்சிக் கல்லூரிக்குப்
போவதாகக் காட்டிக் கொண்டு சூழ்ச்சித் திட்ட வேலைகளில்தான் இருந்தார். அவர்
கல்லூரிக்குச் சரியாகவே செல்லவில்லை’ என்று உண்மைக்குப் புறம்பாகக் கூறி,
அதற்கான பொய் ஆவணங்களை மத்திய குற்றப் புலனாய்வுத்துறை காட்டியது.
ஆனால், சான்று அளிக்க வந்த கல்லூரி
மேலாண்மை(நிருவாகம்), ‘முருகன் அன்றாடம் நாள் தவறாமல் வந்து முழு நேரமும்
பங்கேற்றிருந்தார். தொடர்ந்து அடுத்த கட்டப் பயிற்சியிலும் படிக்க அதே
கல்லூரியில் சேர்ந்திருந்தார்’ என்று சொன்னதைக் குற்றப் புலனாய்வுத்துறையினர் மறைத்தனர்.
வெளிநாட்டில் போய்ப் பிழைக்க ஆங்கிலம்
தேவை. அதனால் இரு கல்லூரிகளில் காலையும் மாலையும் படித்தார். இதற்கும்
குற்றப் புலனாய்வுத்துறையின் சான்றுகளும் ஆவணங்களுமே சான்றாக உள்ளன. ஆனால்,
இவர் வெளிநாடு செல்லத்தான் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பது
வெளிப்பட்டுவிடும் என்பதால் எல்லாவற்றையும் மறைத்தார்கள்.
விடுதலைப் புலிகள்
இயக்கத்தில் கடுமையான கட்டுப்பாடு ஒன்று இருக்கிறது. திருமணம் செய்து
கொள்ளும் ஆண்களுக்கு 26 வயதும், பெண்களுக்கு 21 வயதும் நிறைவடைந்திருக்க
வேண்டும் என்பதுதான் அது. ஒப்புதல் (அனுமதி) இன்றி யாரும் திருமணம் செய்ய
முடியாது. அதை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும். பொதுவாக
யாரும் அப்படி மீறுவது இல்லை என்பதே அங்குள்ள செய்தி. அப்படி இருக்க,
விடுதலைப்புலிகள் அமைப்பில் என் கணவர் தீவிரமாகச் செயல்பட்டவர் என்றால்,
எப்படி 21 வயதில் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டிருக்க முடியும்?
திருமணம் செய்துவிட்டு ஊருக்குப்
போவதற்காக வேதாரண்யம் கடற்கரையில், படகுக்காக ஏன் ஒரு வாரம் காத்திருக்க
வேண்டும்? அவர் இயக்கத்தில் இருந்திருந்தால் திருமணம் செய்து கொண்டு
ஊருக்குப் புறப்பட்டிருக்க முடியாது. எங்களுக்குள் திருமணம் நடந்தது என்பதையே குற்றப் புலனாய்வுத்துறை மறைத்தது.
‘கழுத்தில் தாலி, காலில் மெட்டி, இரண்டு
மாதச் சூல்(கரு) கொண்டவள், தாசு என்கிற முருகன்தான் என் கணவர்’ என்ற
பதிவுகள் எல்லாம் நீதிமன்றத்தில் இருந்தபோதும் புலனாய்வுத்துறையினர் என்னை
(ஆவணங்களில்) ‘செல்வி(Miss)’ நளினியாகவே வைத்திருந்தார்கள். காரணம்,
திருமணத்தை ஒப்புக் கொண்டால், முருகன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்
இல்லை என்பது உறுதியாகிவிடும். அவர் குற்றவாளி இல்லை என்றால் நானும்
குற்றமற்றவளாகி விடுவேன். அது நடந்தால் உண்மைக் குற்றவாளிகளைப் போய்த் தேட வேண்டும். அது முடியாது என்பதால், எங்களது கதையை இப்படி முடித்து விட்டார்கள்.
அந்தக் காலக்கட்டத்தில் புலிகளின் பல
படகுகள் வேதாரண்யம் கடற்கரைப் பகுதிக்கு வந்து சென்றபடி இருந்தன என்று
புலனாய்வுத்துறை அலுவலர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். நாள்தோறும்,
நினைத்த நேரத்தில், தமிழ்நாடு வந்து போகும் வசதி அவர்களிடம் இருந்தது
என்றும் சொல்கின்றனர். என் கணவரை இரண்டாம் கட்டத் தலைவர் என்கிறார்கள்
தீர்ப்பில். அப்படி இருக்க, அதன் மூலம் தொடர்பு கொண்டு படகை வரவழைத்துச்
சென்றிருக்கலாம் இல்லையா? குற்றப் புலனாய்வுத்துறை புனைந்துரைத்தபடி
இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர் ஒரு கிழமை (வாரம்) வரை காத்திருந்து
விட்டுப் படகு வரவில்லை என்று திரும்பி வர வேண்டியது ஏன்?
நடைபேசியில்(வாக்கி டாக்கி) ஒரு செய்தி சென்றால் படகுகள் வந்து அழைத்துச்
சென்றிருக்கும் இல்லையா? ஏன் அப்படி நடக்கவில்லை? ஏனென்றால், அவர் விடுதலைப்புலி இல்லை; பொதுமக்களுள் ஒருவர்!
நான் தாய்மையடைந்திருக்கிறேன் என்ற
செய்தியை, என் கணவர் அவர் நண்பர்களுடன் இறையியல்(ஆன்மிகப்) பயணத்தில்
இருந்தபோது தொலைபேசியில் (குண்டு வெடிப்புக்கு முன்பாகவே) சொன்னேன். அவர்
மகிழ்ச்சிப் பரபரப்பில், ‘இதோ விரைவில் திரும்பி வந்து விடுகிறேன்’
என்றார். பெரிய தலைவரைக் கொல்லச் சூழ்ச்சி செய்து விட்டு நண்பர்களுடன்
அவரால் கோயில்களைச் சுற்றிக் கொண்டு இருக்க முடியுமா? நான் சூலுற்று
இருப்பது தெரிந்து கொண்டு இப்படியெல்லாம் மகிழ்ச்சியடைந்திருக்க முடியுமா?
எதிர்காலம் பற்றிச் சிந்தித்திருக்க முடியுமா? 21-5-1991 அன்று என்னை
மட்டும் பொதுக்கூட்ட இடத்துக்கு அனுப்பி விட்டு அவர் வீட்டில் உறங்கிக்
கொண்டிருக்க முடியுமா? எந்தப் பெண்ணாவது ‘தன் வயிற்றிலிருக்கும் முதல்
குழந்தைக்குக் கேடு வரும்’ என்பது தெரிந்தே அந்த இடத்துக்குப்
போயிருப்பாளா?
அப்போது நான் தாய்மைப்பேற்றின் மிகத்
தொடக்க நிலையில் இருந்தேன். சிறிய அதிர்ச்சி, நீண்ட பயணம், நடை எல்லாம்
வயிற்றிலிருக்கும் குழந்தைக்குக் கேடாக முடியும் என்பது எனக்குத் தெரியும்.
என் அம்மா 25 ஆண்டுகளாகத் தாய்மையுற்ற பெண்களைக் கையாள்வதிலும்
பிள்ளைப்பேறு(பிரசவம்) பார்ப்பதிலும் திறமை பெற்ற ஆயாவாக இருந்தவர். அதனால்
நானும் ஓரளவு அப்படியான தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தேன்.
1991 மே மாதம் 7-ஆம் நாள் வி.பி.சிங்கு
கூட்டத்தில் கலந்து கொண்டதை ஒத்திகை என்று புலனாய்வுத்துறைத் தரப்பு
சொல்கிறது. ஆனால் உச்சநீதிமன்றமோ, அந்த நிகழ்ச்சியில் நானும் என் கணவரும்
ஒத்திகைப் பங்காளர்கள்தான் என எடுத்துக் கொள்ள முடியாது என்று ஓர் இடத்தில்
மறுத்துள்ளது.
அது மட்டுமின்றி, அதே மத்திய குற்றப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் காட்டிச் சொன்ன ‘கம்பியில்லா (wireless) ஆவணப்படி
சிவராசன், சுபா, தணு ஆகிய மூவரைத் தவிர வேறு யாருக்கும் இந்தச்
சூழ்ச்சித்திட்டம் பற்றித் தெரியாது’ என்பதை உச்சநீதிமன்றமும்
உறுதிப்படுத்துகிறது. அப்படி இருக்கும்போது எனக்கும் என் கணவருக்கும்
தெரியும் என்பது திரிக்கப்பட்ட கற்பனைக் கதைதானே?
பிரியங்கா: இலங்கையைச் சேர்ந்தவர் என்றால் புலிகளுடன் தொடர்பு கொண்டிருப்பார்கள் என்று உனக்குத் தெரியாதா?
நான்: எனக்கு
அந்தளவுக்கு அப்போது விவரம் இல்லை. அந்த நாட்களில் மத்திய அரசு, மாநில அரசு
உட்பட எல்லா மக்களும் இலங்கைப் போராளிகளை ஆதரித்தார்களே அம்மணி! அங்கு பல
அமைப்புகள் இருந்தன என்றுதான் கேள்விப்பட்டேன். அவர் அண்ணன் போராளி
அமைப்பில் இருந்து மூன்று ஆண்டுகள் முன் இறந்தது தெரியும். அங்கு நடந்த
இனப் போராட்டத்தினால் அவரும் அவர் குடும்பமும்
பாதிக்கப்பட்டிருந்ததைப்பற்றிச் சொல்லி இருக்கிறார். அதனால் எனக்கு அவர்
மீதும் அவர் குடும்பம் மீதும் கரிசனம் ஏற்பட்டிருந்தது. புலிகளைப் பற்றி
என்னிடம் பெரிதாக எதுவும் பேசியது கிடையாது. என் கணவரும் அப்படி என்னிடம்
பழகவில்லை. அவருக்கு எங்கள் வீட்டில் அடைக்கலம் தந்திருந்தோம். அந்த
நன்றிக்காக என்னை என் அம்மாவுடன் மீண்டும் சேர்த்து வைக்க எடுத்துக் கொண்ட
முயற்சியும் அக்கறையும்தாம் அவரை என் கணவராக்கின.
இன்று வரை என்னிடம் உயிராகத்தான்
இருக்கிறார். அவருக்குத் தெரிந்திருந்தால் நான் இப்படி ஒரு சிக்கலில்
மாட்டிக்கொள்ள இடமே கொடுத்திருக்க மாட்டார். அறியாது சிக்கலில்
மாட்டிவிட்டோம் என்று தெரிந்த பின் என்னையும் என் குடும்பத்தினையும்
காப்பாற்ற அவர் ஏன் தன்னையே காணிக்கையாக்கி இருக்க வேண்டும்?
தெரிந்திருந்தால், முன்னாடியே காப்பாற்றி இருப்பாரே! என்னை முதன்மைக்
குற்றவாளி எனக் கூறுகிறார்கள். ஆனால், நான் நிகழ்வு நடந்த நாள் அன்றும்
அதற்கு முன்பும் எப்படி இருந்தேன் என்பதை அவர்கள் கருத்தில் எடுத்துக்
கொள்ளவேயில்லை.
அந்த மே மாதத்தில் ஒரு நாள் கூட நான்
அலுவலகத்துக்குப் போகாமல் இருந்ததில்லை. நிகழ்வு நடந்த நாளான மே 21 அன்று
கூட வழக்கம் போலத்தான் அலுவலகத்துக்குப் போனேன். அரை நாள் விடுப்பு
வேண்டும் என்றேன். அவர்களோ, ‘எதற்கு அரை நாள் விடுப்பு? சிறிது நேரம் வேலை
பார்த்துவிட்டுக் கிளம்புங்கள்’ என்று கூறினார்கள். நான் மிக இயல்பாகத்தான்
இருந்தேன். என்னிடம் எந்தப் பதற்றமும் இல்லை. அரை நாள் வேலை
செய்துவிட்டுப் பிறகுதான் இராயப்பேட்டை வீட்டுக்குப் போனேன். சான்றுகள்,
உசாவல்கள்(விசாரணைகள்) எல்லாம் அதைத்தான் தெளிவுபடுத்தியிருக்கின்றன.
கொலைச் சூழ்ச்சி தெரிந்த ஒருவர் இப்படியெல்லாமா நடந்து கொள்வார் என்று
யாரும் சிந்திக்கவேயில்லை. இப்படியெல்லாம் கூட ஒருவர் கொலைச் சூழ்ச்சிக்
குழுவில் இருக்க முடியுமா?
என் கணவரைச் சந்திக்கலாம், ஏதாவது
சாப்பிடலாம் என்றுதான் அம்மா வீடு போனேன். கணவரைப் பார்த்துப் பல நாட்கள்
ஆயிற்று. எனக்கு ஒரே தவிப்பாக இருந்தது. அங்கு அவர் இல்லை. அந்த நேரத்தில்
அவர் என்னைத் தேடிக் கொண்டு அலுவலகம் சென்று விட்டார். எனக்குப் பெரும்
ஏமாற்றம். சாப்பிட்டு விட்டு வில்லிவாக்கம் புறப்பட்டேன்.
அந்தக் காலக்கட்டத்தில், காவல்துறையினரிடம் சிக்கிய போராளிகள் பலர் உடனடியாக சயனைடு
குப்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதும் நடந்தது. என் கணவர்
குற்றவாளி என்றால் அதைத்தானே செய்திருக்க வேண்டும்? ஏன் அப்படிச்
செய்யவில்லை? காரணம், அவரிடம் சயனைடு குப்பி இருக்கவில்லை என்பதுதான். கதை எழுதிய புலனாய்வுத்துறை அலுவலர்கள் அதைப் பற்றி எழுத மறந்துவிட்டார்கள்.
பிரியங்கா: அவர்கள் தற்கொலையாளிகள் என்பது தெரியாதா?
நான்: இல்லை அம்மணி!
தெரிந்திருந்தால் எப்படிப் போயிருக்க முடியும்? சென்னையில் பிறந்து வளர்ந்த
என்னால், அதனைத் தாங்கிக் கொள்ளத்தான் முடியுமா? எனக்கு என் குழந்தை
முதன்மையில்லையா?
21-ஆம் நாள் மாலை வில்லிவாக்கம் வீட்டில்
வைத்து சுபாவும் தணுவும் அந்தச் சூழ்ச்சியைப் பற்றி என்னிடம் கூறினார்கள்
என்றும், என் தம்பியின் வாக்குமூலத்தில், ‘நிகழ்விடத்துக்குச் சென்ற
பிறகுதான் என் அக்கா நளினியிடம் அவர்கள் சூழ்ச்சி பற்றிக்
கூறியிருக்கிறார்கள்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
பிரியங்கா: உன் கணவர் இது பற்றிச் சொன்னதாகத் தீர்ப்பில் உள்ளதே?
நான்: இல்லையம்மா!
அதற்கான சான்று எதுவுமே இல்லை. இந்த விவரம் என் கணவருக்குத் தெரிந்துவிடக்
கூடாது என்பதில் சிவராசன் உறுதியாக இருந்தார் என்பதற்குத்தான் நிறைய
சான்றுகள் இருக்கின்றன.
என் கணவரின் வாக்குமூலம் முதல் மற்ற
சான்றுகளின் வாக்குமூலம் வரையான எல்லாவற்றிலும் கொலைச் சூழ்ச்சி
தெரிந்ததற்கான சான்றுகள் ஏதுமேயில்லை. கொலை நடந்த இடத்துக்கு நாங்கள்
பாரிமுனையில் இருந்து பேருந்தில் சென்றதாகத்தான் புலனாய்வுத்துறை கூறியது.
சான்று ஆவணங்களும் அதைத்தான் சொல்கின்றன.
அத்தோடு, வெடிகுண்டை முதுகில் கட்டிக்
கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். ஓடும் பேருந்தில் நின்றபடி
பயணிக்கும் வெடிகுண்டுப் பெண்ணால் யார் மீதும் மோதி விடாமல் நின்று கொண்டே
போக முடியுமா? அப்படியே உட்கார நினைத்தாலும் முதுகில் வெடிகுண்டைக் கட்டிக்
கொண்டு உட்கார முடியுமா? வழியிலேயே வெடித்திருக்க வாய்ப்பில்லை எனக் கூற
முடியாதே! திட்டமிடுபவர்கள் அப்படியா திட்டமிடுவார்கள்?
இன்னொரு முதன்மையான தகவல் அம்மணி!
அரிபாபு எடுத்த கடைசி ஒளிப்படத்தில், அந்தப் பெண் தணுவின் வலப்புறத் தோள்
முதுகுப் பக்கம் கை வைத்து யாரோ ஒருவர் உங்கள் தந்தையை நோக்கித் தள்ளுகிற
காட்சி பதிவாகி இருக்கிறது. அந்தக் கை யாருக்கு உரியது என்று இதுவரை
கண்டுபிடிக்க முயற்சி செய்யப்படவே இல்லை அம்மணி! இதற்குப் பதிலும் இதுவரை
குற்றப் புலனாய்வுத்துறை சொல்லவில்லை.
பிரியங்கா: அப்படியானால் எப்படி அந்த இடத்துக்குப் போனீர்கள்?
நான்: பேருந்தில்தான்
போனோம் அம்மா! குறிப்பாக எனக்கு ஐயம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த
இக்கட்டான முடிவை மேற்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
அத்தோடு, அந்தப் பொதுக்கூட்ட இடத்தில்,
மாலை 6.30 மணிக்கெல்லாம் சிவராசன், தணு ஆகிய இருவரும் என்னை விட்டுப்
பிரிந்து போய்விட்டார்கள். அதிலிருந்து ஏறக்குறைய மூன்றரை மணி நேரம்
கழித்தே அங்கு குண்டு வெடிக்கும் ஓசை கேட்டது. தொடக்கத்தில் தணுவைக் கொண்டு
போய் முதன்மைப் புள்ளிகளின் பகுதியில் நிற்க வைத்த சிவராசன் அங்கிருந்த
அமைப்பாளர்கள் சிலரோடு இயல்பாகச் சிரித்துப் பேசியபடி இருந்ததைப்
பார்த்ததோடு சரி.
தணு அங்கு வந்திருந்த காங்கிரசு புள்ளி
கோகிலாவுடனும் அவர் மகளுடனும் நெருக்கமாகப் பழகியதைப் பார்க்க முடிந்தது.
இதுவும் அரிபாபுவின் ஒளிப்படத்தில் பதிவாகி உள்ளது.
பிறகு, தலைவர் வரும் நேரத்தில், சுபா
என்னைப் பிடித்திழுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார். ஆனால், நீதிமன்றத்
தீர்ப்பில் நான் அவர்களுக்கு மறைத்துப் பாதுகாப்புக் கொடுத்ததாகவும்
அன்றிலிருந்தே நான் தலைமறைவாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
இப்படி எல்லாவற்றையும் ஆழமாகப் பார்த்தால்,
உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு எங்களைச் சிக்க வைக்க வேண்டும் என்ற
ஒரு நோக்கம் மட்டுமே இதில் இருந்திருக்கிறது.
நிகழ்விடத்தில் இறந்து போன ஒளிப்பதிவாளர்
அரிபாபு, இலதா கண்ணன், அவர் மகள் கோகிலா ஆகியோர்களது நிலைதான் என்னுடைய
நிலையும். சூழ்ச்சித் திட்டம் தெரிந்திருந்தால் அரிபாபு அருகில் இருந்து
ஒளிப்படம் எடுத்திருக்க மாட்டார். கூடவே சுபா, தணு, சிவராசன், இலதா கண்ணன்
அவர் மகள் கோகிலா, நான் ஆகியோரையும் படம் எடுத்திருக்க மாட்டாரே! அதே
நிலைதான் எனக்கும்.
மே 21-ஆம் நாளுக்குப் பிறகு நாங்கள்
சிவராசனுடன் 25-ஆம் நாள் அன்று திருப்பதி போய் வந்தோம். அந்தச் சூழ்ச்சி
பற்றித் தெரிந்திருந்தால் அவருடன் சேர்ந்து நாங்கள் திருப்பதி
போயிருப்போமா? எனக்கு இங்கு குடும்பம் இருக்கிறது, வாழ்வு இருக்கிறது.
அப்படி இருக்க, இந்த முட்டாள்தனத்தினை யாராவது செய்திருப்பார்களா? அதுவும்
என் தம்பி பெயரிலேயே வாடகை மகிழுந்து(கார்) பதிவு செய்திருந்தோம். அப்படிச்
செய்திருப்போமா?
குற்றம் நடந்த பிறகும் நாங்கள் எப்படி
அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நினைத்திருப்போம்? 26-ஆம் நாள்
இதழ்கள் மூலம்தான் கொலைச் சூழ்ச்சியில் தணு தொடர்பு கொண்டிருந்தார் என்று
உறுதியாகத் தெரிந்தது. அன்றுதான் அதுவரை நடந்ததை என் கணவரிடம் சிவராசன்
சொன்னார்.
திருப்பதியில் இருந்து திரும்பிய மறுநாளே
27-5-91 அன்று எங்களின் வில்லிவாக்கம் வீட்டைக் காலி செய்து விட்டோம்.
காரணம், சிவராசன் அங்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். அவையெல்லாம்
மத்திய குற்றப் புலனாய்வுத்துறை ஆவணங்களிலேயே இருக்கின்றன. இந்தப் பின்னணியை எல்லாம் பார்த்தால், கொலைச் சூழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பிருக்கவில்லை என்பது தெரிய வரும் அம்மணி!
பிரியங்கா: அதன் பிறகு சிவராசனைப் பார்க்கவில்லையா?
நான்: இல்லை.
பிரியங்கா: ஏன் உடனே காவல்துறைக்குத் தகவல் சொல்லவில்லை?
நான்: அந்த நேரத்தில் என்
கணவரின் பாதுகாப்புக் கருதி அப்படி இருந்து விட்டேன். அவருக்கு ஏதும்
கண்டம் (ஆபத்து) வந்துவிடக் கூடாது; எப்படியாவது நல்லபடியாக வெளிநாடு
போய்விட வேண்டும்; அதற்கான ஏற்பாட்டைச் செய்யும் முகவர் பொறுப்பே
சிவராசனிடம்தான் இருந்தது, அது கெட்டுவிடக்கூடாது; கூடவே எங்களை வேறு
ஏதேனும் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து விடுவாரோ என்ற அச்சம் எல்லாம்
சேர்ந்து அப்படி இருந்து விட்டேன். சிவராசனைப் பிடிக்க வேண்டும் என்று
நினைத்திருந்தால் தாராளமாக எப்போதோ பிடித்திருக்கலாம்!
– இப்படி நான் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் பிரியங்கா!
'இராசீவு கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்
பிரியங்கா நளினி சந்திப்பும்'
கருத்தாளர் : நளினி முருகன்
தொகுப்பாளர் : பா.ஏகலைவன்
கருத்தாளர் : நளினி முருகன்
தொகுப்பாளர் : பா.ஏகலைவன்
– நன்றி: இளைய (சூனியர்) விகடன், திசம்பர் 04, 2016
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக