பேராசிரியர் முனைவர் இ.மறைமலைக்குத்
திரு.வி.க.விருது
தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும்
திருவிக விருது இவ்வாண்டு பேரா.மறைமலை இலக்குவனார்க்கு வழங்கப்பெறுகிறது. வரும் தை 2, 2048 / சனவரி 15, 2017 காலை 10.00 மணிக்கு (சென்னை) கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும
விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விருதினை வழங்குகிறார்.
இவ்விழாவில் தமிழக அரசு வழங்கும் பிற
அறிஞர்களின் பெயர்களிலான விருதுகளும் அகவை முதிர்ந்ததமிழறிஞர்களுக்கான பொருளுதவி
ஆணைகளும் வழங்கப்பெற உள்ளன.
பேரா.மறைமலைபற்றிப் பேரா.தெய்வ சுந்தரம் நயினார் முன்பு (சூன் 21,
2015) அளித்த
குறிப்பு வருமாறு :
பேராசிரியர்
மறைமலை இலக்குவனார் (1946) … தமிழாய்வுலகில் நன்கு அறிமுகமான ஒரு பேராசிரியர். மிக அமைதியாகவும்
ஆனால் ஆழமாகவும் ஆய்வுகளை மேற்கொண்டுவருபவர். பெரும்பேராசிரியர் இலக்குவனார்
அவர்களின் புதல்வர். திருநெல்வேலியில்
(சிந்துபூந்துறையில்) பிறந்தவர். பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் தனது புதல்வருக்குத் தனித்தமிழ்ப் பேரறிஞர் மறைமலை
(அடிகளார்) அவர்களின் பெயரை இட்டார். தந்தையார் பேராசிரியராக இருந்ததால்,
மறைமலை அவர்கள் தமிழகத்தின் பல பள்ளிகளில் கல்வி மேற்கொண்டார். மதுரைத்
தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (1962-63),
விலங்கியலில் இளங்கலை (1963-66) ஆகிய படிப்புகளை மேற்கொண்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டம் (1969) பெற்றார். சமசுகிருத்திலும் (1979) , எண்மக் காணொளிப்
படைப்பாக்கத்திலும் (2006) பட்டயங்கள் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொற்கோ
அவர்களின் வழிகாட்டுதலில் ‘இக்காலத் தமிழில் சொல்லாக்கம் – ஆட்சித்துறைச்
சொற்களில் ஒரு சிறப்பாய்வு ‘ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம்
(1984) பெற்றார். 1969-இலிருந்து 2005 வரை தமிழகத்தின் பல அரசுக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி,
இறுதி 5 ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றுள்ளார். 1997-98 – இல் அமெரிக்காவில்
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையில் வருகைப்
பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியத் திறனாய்வில் தலைசிறந்தவர். அவருடைய நூல்களில் 10-க்கும் மேற்பட்டவை இலக்கியத் திறனாய்வு தொடர்பானவையே. கவிதை நூல்களும்
வெளியிட்டுள்ளார். பேராசிரியர்கள்
மு.வரதராசனார், இலக்குவனார் ஆகியோரின் வாழ்க்கை
வரலாற்றைச் சிறந்த முறையில் எழுதி
வெளியிட்டுள்ளார். கவிதைகள் மொழிபெயர்ப்பிலும் திறன்வாய்ந்த பேராசிரியர் அதிலும் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். ‘
சொல்லாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு மிகச் சிறந்த மொழியியல்தொடர்பான ஆய்வு நுலை வெளியிட்டுள்ளார். தற்போது இளம்
கிறித்தவர் ஆடவர் (YMCA) ஆணையத்தின் வழியாக வாழும் கவிஞர்கள்பற்றித் தொடர்சொற்பொழிவாற்றி வருகிறார்.
‘குறள்நெறி’ என்ற இதழுக்குப் பொறுப்பாசிரியராகவும் ‘ செம்மொழிச் சுடர் ‘ என்ற மின்னிதழின் ஆசிரியராகவும்
இருந்துவருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, வலைப்பூவில் இட்டிருக்கிறார். 2014-இல் சிட்னி
தமிழ்ச்சங்கம் பேராசிரியருக்குத் தொல்காப்பியர் விருது அளித்துப் பாராட்டியுள்ளது. அமெரிக்கா. ஆத்திரேலியா, சப்பான், மோரிசியசு,
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழி, இலக்கியம்பற்றிப் பல உரைகளை
நிகழ்த்தியுள்ளார். பேராசிரியர் மறைமலையும் நானும் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் ஒரே நேரத்தில்
முனைவர் பட்டம் ஆய்வு செய்தோம் என்பதில்
மகிழ்வடைகிறேன். பெரும்பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டுவிழாவை 2009- ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் கொண்டாட (அப்போதைய
துறைத்தலைவராகிய) நான் ஏற்பாடு
செய்தபோது அனைத்து உதவிகளையும் அவர் அளித்ததையும் நினைவுகூர்கிறேன். அவரது இளவல் திரு. திருவள்ளுவன் இலக்குவனாரும் இன்றும் தொடர்ந்து பல தமிழ்ப்பணிகளை
மேற்கொண்டுவருகிறார். பேராசிரியர் மறைமலை அவர்களின் துணைவியாரும் ஒரு பொருளாதாரப் பேராசிரியர். மேலதிக
விவரங்களுக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக