உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே!
பகைவரால்
எய்யப்படுகின்ற அம்புகளும் எறியப்படுகின்ற ஈட்டிகளும் உடம்பிற் பாயாதவாறு,
உடல் முழுதுந் தழுவிக் கிடந்து காக்கும் கவசத்தை ‘மெய்ம்மறை’ என்று
வழங்குவது தமிழ்மரபு. மெய்யாகிய உடம்பினை மறைத்துக் காப்பதனால் மெய்ம்மறை
எனப் பெயர் பெற்றது. கோட்டைச் சுவர்களாகிய அரண்கள் பகைவர் எய்கின்ற
படைக்கலங்கள் வந்து பாயாதவாறு தடுத்துக் காத்தலால் ‘மறை’ என்ற பெயர்
பெறும். அரண்போல நின்று காத்து உதவும் நூல் ‘ஆரணம்’ என்று கூறப் பெறும்.
மறை, வேதம் என்று பெயர் பெறும் நூல்கள் ‘ஆரணம்’ என்றும் பெயர் பெறும்.
அருமையாகிய அரணம் என்பதே ‘ஆரணம்’ என்றாயிற்று, ஆருயிர் என்பது போல. ஆகவே,
ஆரணம், மறை என்பன ஒரு பொருள் குறித்த காரணச்சொற்களாகும். தீய நினைவுகளும்
தீய சொற்களும், தீய செயல்களுமாகிய படைக்கலங்கள் வந்து பாய்ந்துகொல்லாதவாறு,
தடுத்து நின்று மறைத்து உயிரைக் காக்கும் உயரிய மறையே ஈண்டு ‘ஒரு மறை’
என்று கூறப்பெற்றது. அஃது ஏனைய மெய்ம்மறையாகிய உடல் மறைகளைப் போன்றும்,
ஏனைய மொழிகளில் தோன்றிய பொள்ளல் மறைகளைப் போன்றும் குறைபாடின்றி ஒப்பற்றதாக
ஓங்கிநிற்றலின் ஒரு மறை என்று கூறப்பெற்றது.
உண்மையாகவே, ‘ஒருமறை’
என்று பெயர் பெறுதற்கு உரிய தகுதி உடைய நூல் உலகத்திலேயே ஒன்றுதான் உண்டு.
அதுதான் நமது திருக்குறள். இனி மறை என்பதற்கு அறிவுக்கு எட்டாமல் மறைந்து
நிற்கும் பொருள்களாகிய மறைகளைத் தெளிவாகத் தந்து உதவி நிற்கின்ற காரணத்தால்
மறை என்று பெயர்பெற்றதென்றுங் கொள்ளலாம். இருவர் தம்முள் கசிந்து பேசும்
‘இரகசியங்களை’ மறை என்கின்றோம். அதுபோன்று அறம் முதலிய உண்மைப் பொருளாகிய
இரகசியங்களை” மறைகளை உணர்த்தும் நூலும் ‘மறை’ எனப் பெயர் பெற்றது என்க.
பிறர்க்குக் கூறாது மறைக்கப்படுவது ‘மறை’ என்று பொருள் கொள்ளுவது தவறு.
புலவர் ந.சேதுரகுநாதனார்:
பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள்:
ஒரு மறை: அறம்: பக்கம் 12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக