தலைப்பு.இராணுவ நிலையங்களைப் புறக்கணியுங்கள் :thalaippu_raanuvathinarin_nilaiyangalai_purakkaniyungal முத்திரை-இலங்கை இராணுவக் கடைகள் : srilanka_militaryshoppingmahal

இராணுவத்தினரது உணவகங்கள், வணிக நிலையங்களைப்

புறக்கணியுங்கள்!

– வவுனியா  மக்கள் குழு

  தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் வணிக நிலையங்களில், பொதுமக்களும் பொருள்களைக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் அவர்களது  வணிக நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டு வசதிப்படுத்தப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் தங்கள் உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைத்த பணம், தமிழர் தாயகத்தில் பெரும் அச்சுறுத்தலாகவும் – குடைச்சலாகவும் உள்ள இராணுவத்தினரது பயன்பாட்டுக்குச் சென்றடையும் நிலைமைகள் தொடர்பில் ஒவ்வொரு  குடிமகனும் தெளிவுற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள வவுனியா மாவட்டக்  குடிமக்கள் குழு,
 தமிழர் தாயகத்தில் இராணுவக்கைப்பற்றலுக்கு(ஆக்கிரமிப்புக்கு) எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும்,  குடியமைப்பு நிருவாக வெளியை வலியுறுத்தும் வகையிலும், இராணுவத்தினரது வணிக நிலையங்களில் பொருள்களைக் கொள்வனவு செய்வதை முற்றாகத்தவிர்த்துப் புறக்கணிக்குமாறும் அனைத்து உறவுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
 இதுதொடர்பில் வவுனியா மாவட்ட  மக்கள் குழுவின் தலைவர் கோ. இராசுகுமார், செயலாளர் தி.நவராசு, ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் ஒப்பமிட்டு  அலுவல்முறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடக அறிக்கை:
15.06.2016
இராணுவத்தினரது உணவகங்கள்,  வணிக நிலையங்களைப் புறக்கணியுங்கள்!
 தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் பலதரப்பட்ட படைப்பிரிவுகளும் உணவகங்கள், சிற்றுண்டி தேநீர்ச்சாலைகள், மரக்கறி – பழக்கடைகள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் (Multi shop), நலன்புரி நிலையங்கள் (Army Welfare Centers) இவற்றை நிறுவி, பரந்த அளவில்  வணிகம் செய்து வருவதை எம்மால் அறிய முடிகின்றது.
  இந்த வணிக நிலையங்களில் தத்தமது படைப்பிரிவுகளின் வீரர்கள் மட்டுமல்லாமல், அண்மைக்காலமாகப் பொதுமக்களும் பொருள்களைக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் அவர்களது  வணிக நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டு வசதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் இராணுவத்தினரின் வணிக நிலையங்களில் பெருமளவில் பொருள்கள் கொள்வனவில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
தமிழர் தாயகத்தின் உறவுகளே!
  அறிந்தோ அறியாமலோ இராணுவத்தினரது இத்தகைய வணிக நிலையங்களில் நீங்கள் பொருள்களைக் கொள்வனவு செய்வதால், அவர்களுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால், ‘உங்களது பணம்’ சுழற்சி முறையில் இராணுவத்தினரின்  பேணுகை – பாதுகாப்பு  முதலான இன்னபிற அலுவல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 உங்கள் உடலை வருத்தி, வியர்வை சிந்தி, உழைத்துச்சேமித்த உங்கள் பணம், இவ்வாறு தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நிலைகொண்டு உங்கள் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாகவும் – குடைச்சலாகவும் உள்ள இராணுவத்தினரது பயன்பாட்டுக்குச் சென்றடையும் அறியாமை நிலை கண்டு நீங்கள் தெளிவுறுதல் வேண்டும்.
  2016 ஆம் வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் 30 ஆயிரத்து 670 கோடி உரூபாய்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக (காவல்துறை, முப்படைகளினதும் பயிற்சி –  பேணுகை – ஊதியத்துக்காக) ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னாள்  அதிபர் மகிந்தஇராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டதை விடவும், பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்து 670 கோடி உரூபாய்கள் இலங்கை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அதிகபட்ச ஒதுக்கீடாகும். மேலும் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 23 ஆயிரத்து790 கோடி உரூபாய்கள் நிதியை விடவும் பாதுகாப்பிற்காக 67 விழுக்காடு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதை கணக்கிட முடிகின்றது.
  இவ்வாறு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும்கூட, இராணுவத்தினர் உணவகங்கள், சிற்றுண்டி தேநீர்ச்சாலைகள், மரக்கறி – பழக்கடைகள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் (Multi shop), நலன்புரி நிலையங்கள் (Army Welfare Centers) போன்றவற்றைத் தொடர்ந்தும் நிருவகித்து வருகின்றார்கள் எனில், அதன்  பொருள்தான் என்ன?
 இவற்றால்  ஆதாயமாகக் கிடைக்கப்பெறும் தொகை நிதி, இராணுவத்தினரின்  பேணுகை – பாதுகாப்பு  முதலான இன்னபிற அலுவல்களுக்குத் தேவைப்படுகின்றது அன்றி பயன்படுகின்றது என்று தானே பொருள்படும்.
 ஆதலால், தமிழர் தாயகத்தில் இராணுவக்கைப்பற்றலுக்கு(ஆக்கிரமிப்புக்கு) எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும்,  குடிமைப்பணி நிருவாகவெளியை வலியுறுத்தும் வகையிலும், இதன் ஒரு அங்கமாக இராணுவத்தினரது வணிக நிலையங்களில் பொருள்களைக் கொள்வனவு செய்வதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு தமிழர் தாயகத்தில்  வாழும் அனைத்து உறவுகளையும் அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆம், நம்மால் முடியும்.
ஆயிரம்  கற்கள்கொண்ட பயணம், நீங்கள் எடுத்து வைக்கும் முதல்  ஓர்அடியில் இருந்துதானே  தொடங்குகின்றது. இந்த  நடைமுறைக்கு ஒப்ப நீங்கள் இப்போது நம்பிக்கையோடு சிறுகச்சிறுக காட்டும் எதிர்ப்புக்கூட நாளை  பேருருவமாகித் ‘தமிழர் தாயகத்தில் இராணுவ வெளியேற்றம்’ எனும் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க உதவும். கடும் தாக்கம் செலுத்தக்கூடும்.
இதேவேளை தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் உள்ள தமிழ் முசுலிம் சிங்கள இனப்பொதுமக்களின் வணிக நிலையங்களில் பொருள்களைத் தவறாது கொள்வனவு செய்யுமாறு தமிழர் தாயகத்தில் வாழும் அனைத்து உறவுகளையும்  பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம்.
நிச்சயம் உங்கள் பணம்  அன்றாட  வாழ்க்கைசெலவைக்கொண்டு  அவர்களின் குடும்பங்களை நடத்துவதற்கும், அந்தக் குடும்பங்களின் கல்வி,  நலவாழ்வு,  பேணுகை முதலான இன்றியமையாத அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பெரிதும் உதவியாக அமையும்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட  மக்கள் குழுவினர்.