திங்கள், 20 ஜூன், 2016

பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய முன்னோடி சேப்பியார் காலமானார்!


அகரமுதல 139, ஆனி 05, 2047 / சூன் 19, 2016

பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய முன்னோடி சேப்பியார் காலமானார்!

சேப்பியார் : sappiyaar_jappiyaar

பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய

முன்னோடி சேப்பியார் காலமானார்!

 சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தரும் பல கல்வி நிறுவனங்களின்  நிறுவனரும் வணிக நிறுவனங்களின் உரிமையாளருமான  சேப்பியார் என அறியப்பெறும் ஏசுஅடிமைபங்கிஇராசு உடல் நலக்குறைவால் ஆனி 04, 2047 / சூன் 18, 2016 சனி இரவு காலமானார்.
  கல்விநிலையங்கள் வணிக நிறுவனங்களாக மாறிய அவலத் தொடக்தக்திற்குக் காரணமாக இருந்தாலும் ஏழை எளிய குடும்பங்களிலிருந்தும் பொறியாளர்கள்  உருவாவதற்கு  இவரே முதற் காரணம்.
 புனிதர் சோசப்பு பொறியியல் கல்லூரி,  சேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி,  புனித மேரி மேலாண்மைப் பயிலகம், பனிமலர்  மேலாண்மைப்பள்ளி, எசு..ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன்  தொழில்நுட்பப்பயிலகம், பனிமலர் பல்தொழில்பயிலகம்  முதலான பல்வேறு  கல்விநிறுவனங்களை உருவாக்கியவர். கல்வி நிலையங்களில்  கண்டிப்பை நடைமுறைப்படுத்தியவர். எனினும் கல்வியகங்களில் தரமான உணவு அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர். பல தனியார் நிறுவனங்கள்,  ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் குறைவான ஊதியம் வழங்கினாலும், அரசு விதிகளுக்கிணங்க ஊதியம் கொடுப்பதை  நடைமுறையாக்கியவர்.
 சேப்பியார் குடிநீர், சேப்பியார் பால், சேப்பியார் இரும்பு, சேப்பியார் திண்காரை(சிமெண்டு), சேப்பியார் உப்பு, தொழில்நுட்பப்பூங்கா, சேப்பியார் பயணம், சேப்பியார் மீன்பிடி துறைமுகம், சேப்பியார் எஃகு, சேப்பியார் உலைக்களக் கோட்டம்(Jeppiaar Furnace Division)  முதலான பிற நிறுவனங்களையும் தொடங்கித் தொழில்தலைவராக விளங்கியவர். இதழியல் துறையில் கால் பதித்து ஊடகத்திலும் முத்திரை பதித்தவர். திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல், நல்ல திரைப்படங்களை உருவாக்கியும் வெளியிட்டவர்.
  வைகாசி 28,  1962   – சூன் 11, 1931 அன்று குமரி மாவட்டம் முட்டம் என்ற   சிற்றூரில் மீனவக் குடும்பத்தில் பிறந்து,  காவல்துறையில் பணியாற்றியவர். பொன்மனச்செம்மல் மக்கள்திலகம் எம்ஞ்சியார் அன்பிற்குரியவராகி வாழ்க்கையில் பல உயர்நிலைகளை அடைந்தவர். அவரது காலத்தில்  சென்னை மாவட்ட அதிமுக செயலராகவும் (1972-1987), சட்ட மன்ற மேலவை உறுப்பினராகவும் கொறடாவாகும் திகழ்ந்தவர்.
  சென்னைப் பெருநகர் குடிநீர்வடிகால்வாரியத்தின் இ.ஆ.ப. அதிகாரிஅல்லாத ஒரே தலைவராகத் திகழ்ந்து, 1986 இல்  சென்னையில் ஏற்பட்டக் கடும் குடிநீர்ப்பஞ்சத்தைப் போக்கியவர்.
  தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
  இந்தியத் தொழில்நுட்பக்கல்லூரிகள்சங்கத்தின் துணைத்தலைரவாகவும்  தமிழ்நாடு தன் – நிதிப்பொயறியியில் கல்லூரிகள் சங்கத்தலைரவாகவும் இருந்து பொறியியல்கல்லூரி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். கல்வியார்வத்தால், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்பும் அண்ணா பல்ககைலக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றவர்.
  எம்ஞ்சியார் மறைவிற்குப்பின்னர் பிறரைத் தலைவராக ஏற்க மனமின்றி அரசியலை விட்டு ஒதுங்கிக்கல்விநிறுவனங்களிலும்  தொழில் நிறுவனங்களிலும் கருத்து செலுத்தி வந்தார்.
  உழைப்பின்மூலம் உயர்வு கண்ட சேப்பியாரைப்பிரிந்து வாடும், மனைவி இரமாபாய், 2 பிள்ளைகள், சுற்றத்தார், நிறுவனத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக