ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

வரலாற்றுக் கல்விக்கான கையேடாக ‘வடகரை’ புதினம்


nighazvu_uyirezhuthu

வரலாற்றுக் கல்விக்கான கையேடாக

  ‘வடகரை’ புதினம் வெளிவந்துள்ளது

– நூல் அறிமுகவிழாவில் எழுத்தாளர் இமையம் பேச்சு

     திருச்சி.செப்.07. ’உயிர் எழுத்து’ பதிப்பகத்தின் சார்பில் திருச்சியில் தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் மு. இராசேந்திரன் இ.ஆ.ப.,எழுதிய ‘வடகரை- ஒரு வம்சத்தின் வரலாறு’ புதினம் அறிமுக விழா திருச்சி கலையரங்கில் நடைபெற்றது.
     இவ்விழாவிற்குத் தலைமையேற்ற எழுத்தாளர் இமையம் பேசும்போது, “ஒரு நல்ல நூல் என்பது அதனைப் படிக்கும் வாசகருக்கு, நாமும் இப்படி எழுத வேண்டுமென்கிற ஆசையைத் தூண்ட வேண்டும். இந்த ‘வடகரை’ நூலைப் படித்ததும் எனக்கும்கூட அப்படியொரு ஆசை வந்தது. எழுத்தாளர்களுக்கே எழுத ஆசையைத் தூண்டும் நூலாக இந்நூல் உள்ளது கூடுதல் சிறப்பாகும். முனைவர் மு.இராசேந்திரன் எழுதியிருக்கும் ‘வடகரை’ புதினத்தில் வரும் அனைத்துக் கதைமாந்தர்களும் உண்மையின் ஒளியோடு நம் மனத்தில் இடம் பிடிக்கிறார்கள். இப்புதினம் வரலாற்றை அறிய விரும்பும் இளைய தலைமுறைக்கான கல்விக் கையேடு போல் வெளிவந்துள்ளது” என்று பேசினார்.
   நூலைத்திறனாய்வு செய்து நீண்ட கட்டுரையை வாசித்த எழுத்தாளர் கீரனூர் சாகீர்சா, “தன்வரலாறு என்பதையும் கடந்து, வாசகனை தன்னுள் இழுத்துக்கொள்ளும் சுவை இப்புதினத்தில் உள்ளது” என்றார்.
   கவிஞர் நந்தலாலா, “ ‘வடகரை’யைப்போல் நாம் ஒவ்வொருவரும் நம் குடும்ப வரலாற்றை எழுதினால், தமிழகத்தின் வரலாற்றை நம்மால் பதிவு செய்ய முடியும் என்கிற எண்ணத்தை இப்புதினம் எனக்குள் விதைத்துள்ளது” என்று கூறினார்.
   “எங்கள் ஊரை, எங்கள் ஊர் உறவுகளை அப்படியே பார்ப்பதுபோல் இந்தப்புதினம் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது” என்று புகழ்ந்தார் கவிஞர் தேவேந்திர பூபதி.
   நிறைவாக, ஏற்புரையாற்றிய நூலாசிரியர் முனைவர் மு.இராசேந்திரன் பேசும்போது, “எந்தவிதத் திட்டமிடலுமின்றி, எங்கள் குடும்ப வரலாற்றை அப்படியே பதிவு செய்தேன். எதையும் மறைத்தோ, மாற்றியோ எழுதவில்லை. இந்த நூலுக்கு தமிழின் மூத்த எழுத்தாளர்கள் கி. இராசநாராயணன், நாஞ்சில் நாடன், கவிஞர்கள் புவியரசு, கலாப்பிரியா போன்றவர்கள் பாராட்டிய பிறகுதான் என் எழுத்தின் மீது எனக்கேயொரு நம்பிக்கை பிறந்தது,” என்றார்.
   தொடக்தக்தில் கவிஞர் சுதீர் செந்தில் அனைவரையும் வரவேற்க, நிறைவில் கவிஞர் அ.வெண்ணிலா நன்றி கூறினார்.
கவிஞர் இரத்திகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
     விழாவில், கவிஞர்கள் எச்.சி.இரசூல், ஆத்மார்த்தி, இரத்தின.கரிகாலன், மு.முருகேசு, இதழாளர்கள் ‘இனிய நந்தவனம்’சந்திரசேகரன், ‘புதுவைக்கவிதை வானில்’ கலாவிசு முதலானோர் கலந்து கொண்டனர்.
attai-vadakarai
– முதுவை இதாயத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக