unmai - Mar 16-31 - 2010

  பாராளுமன்றில் அறிஞர் அண்ணா

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரும்பெருந் தலைவரான அறிஞர் அண்ணா அவர்கள் தமது பாராளுமன்ற முதற் சொற்பொழிவை வெறுப்பிற்கும், பகைமைக்கும், சினத்திற்கும் நடுவண் நிகழ்த்தினார்கள். அன்னார் முதற்பேச்சு இந்திய மேலவையின் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தமிழ்ப் பெருங்குடி மக்களால் ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகின்ற அரிய தலைவர் இவர். பிரிவினையாளர், இந்தித் திணிப்பின் இணையற்ற எதிர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்னும் புகழோடு இந்திய மேலவைக்கு வந்தார்.
  அறிஞர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய முதற் பேச்சு ‘சொற்பெருமழை’ என்று பாராளுமன்ற உறுப்பினர்களால் வியந்து பாராட்டப்பட்டது. பிரிவினைக் கொள்கையை எதிர்ப்போர் உள்ளத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும், தமது பொருள் மிகு பேச்சுத்திறனால், தனி நாட்டுக் கொள்கைக்கு அவர் காட்டிய விளக்கங்கள் பெரும் பாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளத்தை ஈர்த்தனவெனில் அது மிகையாகாது. அண்ணாவின் பேச்சில் தனிப்பட்டோரைத் தாக்குகின்ற தன்மை சிறிதளவும் இன்று இப்பண்பு பல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்டது.
  இந்தியாவின் ஒரு பகுதியினரின் மொழியை ஏனைய பகுதி மக்களின் மேல் திணிப்பதாலும், தொழில் வளர்ச்சியிலும், முன்னேற்றத் துறைகளிலும் வேறுபாடு காட்டுவதாலும், இந்திய நாட்டு ஒற்றுமையை உருவாக்க முடியாது என்ற உண்மையை தெள்ளத் தெளிவாக வடபுலமக்களுக்கு உணர்த்திவிட்டார்.
  அறிஞர் அண்ணா அவர்கள் 1910ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியிலும், கல்லூரியிலும் கல்வி பயின்று பட்டம் எய்தினார். ஆசிரியராகப் பணியாற்ற வேண்டுமென்பதே அவருடைய இளமை விழைவாகும். சிலகாலம் அப் பணியிலும் ஈடுபட்டிருந்தார். அன்னாரிடத்திலே பொதிந்து கிடந்த அறிவுத் திறனும், இயற்கையான தலைமைத் தன்மையும், அவரை அரசியலில் ஈடுபடச் செய்து விட்டன. கல்லூரி நாட்களிலேயே தலைசிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். அரசியலில் நுழைந்தும் அண்ணாவின் தமிழ்ப் பேச்சு, ஆயிரக் கணக்கான இளைஞர்களையும் தமிழிலக்கியத்தில் தலை சிறந்து விளங்கிய அறிஞர்களையும் ஈர்த்து விட்டது. அவருடைய மொழியாற்றல்கண்டு தமிழறிஞர்களே வியப்புற்றனர். ‘அண்ணாவின் நடை’ என்ற ஒரு நிலையைத் தமிழிலக்கிய வரலாற்றில் அவர் ஏற்படுத்தி விட்டார். அண்ணா ஒரு மாபெரும் பேச்சாளர், ஆற்றல் மிகு எழுத்தாளர்; அரியதொரு இதழாசிரியர், கவின்மிகு தமிழில் கதையும், வசனமும் திரைப்படத்திற்கு எழுதும் இப்பேரறிஞர் திறன் வாய்ந்த ஒரு நடிகர் என்பதைச் சிலரே அறிவர்.
  ‘அறிவாண்மை என்பது பெரும்பான்மை உழைப்பும், மிகச் சிறுபான்மை உள்ளொளியும் கொண்ட ஒரு கூட்டு’ என்ற மூதுரையில், இப்பேராற்றல் மிகு பெருந்தலைவர் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகிய இவர், இராசாசியிடத்தில், மிகுந்த ஈடுபாடும், பற்றுள்ளமும் காட்டுகிறார். இராசாசியின் சமயக் கொள்கைகளும் மெய்யறிவு நெறிகளும் ‘பகுத்தறிவாளர்’ என்றறியப்பட்ட அறிஞர் அண்ணாவினிடத்தில், ஏதேனும் மாற்றத்தை உண்டாக்கும் என்றும் கருதுவது ஓர் எதிர்பார்ப்பேயாகும்! முடிவுயாதோ?
muthirai-thehindu-logo
  • இந்து இதழ்
  • நன்றி –  குறள்நெறி
  • kuralneri02