thalaippu_inidheilakkiyam02
பண்ணினை இயற்கை  வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி
வண்மையை உயிரில் வைத்த
வள்ளலே போற்றி போற்றி
உண்மையில் இருக்கை வைத்த
உறவனே போற்றி போற்றி
இறைவனைப் பொதுவான பண்புகள் அடிப்படையில் போற்றும் தமிழ்ப்பாடல்கள் எச்சமயத்தவரும் எக்கடவுளை வணங்குவோரும் ஏற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. எனப்படும் திரு.வி.கல்ணயாண சுந்தரனாரால்  எழுதப்பெற்ற ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில்  இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது.
  இயற்கையோடு இயைந்ததாக இசையை அமைத்த பண்பாளரே போற்றி! பெண்மையின் சிறப்பாகத் தாய்மையை வைத்த பெரியோய் போற்றி!  வள்ளல் தன்மையை உயிரினங்களிடம் வைத்த வள்ளலே போற்றி! உண்மையை உள்ளத்தில் தங்க வைத்த  உறவாளரே போற்றி! உன்னை வணங்குகின்றேன்.
இயற்கையில் இருந்து இசை உருவான உண்மையையும் தாய்மையின் சிறப்பையும் எல்லா உயிரினங்களிடமும் வள்ளல் தன்மை என்பது இருக்கும் என்பதால் நாம் கொடைச்சிறப்புடன் வாழ வேண்டும் என்ற வலியுறுத்தலையும் உள்ளத்தில் உண்மை உடையவர்களுடன் இறைவன் உறவாக இருப்பான் என்பதால் நாம் உண்மையுடனே எப்பொழுதும் வாழ வேண்டும் என்ற இலக்கினையும்  தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்  நமக்குத் தெளிவாக்குகிறார்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar_thiruvalluvan_kuralkuuttam03