3
சோனகர்
சோனகர் என்பாரை ஆங்கிலத்தில் மூர்சு / moors
என்று அழைக்கின்றனர். இசுபெயினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்தது
இசுலாமியம்(கி.பி.711-1492). இக்காலக் கட்டத்தில் ஐரோப்பா முதலான மேற்கு
நாடுகளில் இசுலாம் முதன்மை பெறுவதற்குக் காரணம் இசுலாமியர்களுடைய கல்வி
தொடர்பான நாட்டமும் கலை ஈடுபாடுமே! அரேபியரும் வேறு சில இனத்தவரும் சோனகர்/ moors
என அழைக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கர்கள், பேபர்சு இன மக்கள்
ஆகியோரையும் இவ்வாறே அழைக்கிறார்கள். ‘இசுபெயினி்ல் சோனகர்’ (The moors
in Spain) என்ற நூலை எழுதிய வரலாற்று ஆய்வாளர் எம்.புளோரியன் இவ்வாறு
எழுதியுள்ளார். மொரிடோனியாவின் மொழிகளில் ஒன்றான ‘சோனின்கே’ அல்லது
‘சொனின்’ அல்லது சோனின் மொழியை ஒரு பேராயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்
தேசிய மொழியாகக் கொண்டுள்ளனர். மாலி, செனகல் போன்ற நாடுகளிலும் இம்மொழியை
பேசியுள்ளனர். இந்த மொழியுடன் இன்னொரு தொடர்புடைய இனக்குழுக்கள் ‘மராகர்’
என்றும் ‘மரக்கர்கள்’ எனவும் அழைக்கபடுகிறார்கள். மரக்கர்கள் என
அழைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முசுலிம்களாக இருந்திருக்கிறார்கள்.
சோனின் மக்கள் 11 ஆம் நூற்றாண்டில் ஓரிறைக்கொள்கையை பின்பற்றி
வாழ்ந்துள்ளனர். இவர்களின் திருமண வழிபாடுகள், விருத்தேசனம்(மார்க்க
திருமணம்) முதலான பழக்க வழக்கங்களும் சோனகர்களின் பழக்க வழக்கங்களும்
ஒன்றுபட்டே இருந்தன. இலங்கையில் அரசு ஆவணங்களில் முசுலிம்கள் ‘மூர்’ என்றே
பதிவு செய்யப்படுகின்றனர். சென்னையில் உள்ள மண்ணடி பகுதியில் மூர் தெரு
என்ற தெருவே உள்ளது. இங்குதான் முதன்முதலில் (1670) பள்ளிவாசல்
கட்டப்பட்டது. (அப் பள்ளிவாசல் இப்பொழுது இல்லை.) (மத்திய தொடரி நிலையம்
அருகே இருந்த மூர் அங்காடி சென்னை மாநகராட்சித்தலைவர் வயவர். சியார்சு
மூர் என்பவரால் அமைக்கப்பட்டது.)
மரக்காயர்கள்
பாலைநிலப்பகுதியான கீழக்கரை,
இராமநாதபுரம், நாகப்பட்டினம், திட்டச்சேரி, புறாக்கிராமம், கடலூர்
மாவட்டப்பகுதிகளில் மரைக்காயர்கள் என்ற அடைமொழியை தன்னுடைய பெயரின்
பின்னால் இணைத்துக்கொள்கின்றனர். இவை தவிர மூர்சு, சோனகர், யவனர்,
அஞ்சுவண்ணத்தார், முதலியார் எனவும் அழைக்கப்பட்டுள்னர்.
இவர்கள் கடற்கரைப் பகுதியில் மரக்கலம்,
மரக்கப்பல் போன்ற தொழிலை செய்து வந்ததால் ‘மரைக்காயர்’ என
அழைக்கப்பட்டனர்(மரக்கலம்-ஆயர்). இவை தவிர மொராக்கோ நாட்டிலிருந்து
தென்இந்தியா வந்து குடியேறியவர்கள் ‘மொராக்காயர்’ என்று அழைக்கப்பட்டனர்.
இதுவே பிற்காலத்தில் மரைக்காயர் என் மருவியிருக்கலாம். மரக்காயர்,
மரக்கலராயர், மரக்கார் ஆகிய சொற்கள் காலப்போக்கில் மருவி மரைக்காயராக
ஆகியிருக்கலாம். அண்டை மாநிலமான கேரளாவில் முசுலிம்கள் கப்பல் தொழிலில்
ஈடுபட்டதால் மரக்கான் என அழைக்கப்பட்டனர்.
சங்கக் காலத்திலிருந்தே அரேபியர்
தென்னிந்தியத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்து வணிகத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை யவனர், சோனகர் என்னும் பெயர்களால் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
சோனகர்
தஞ்சைக் கல்வெட்டுகளில் சோனகன்சாவூர்
பரஞ்சோதியான இராசேந்திர சோழத் திருவப்பேர் அரையன் என்பவன் (முகமதியன்)
‘புரவுவரித் திணைக்களத்து’ கண்காணியாக அலுவல் செய்ததை எசாலம் செப்பேடு
அறிவிக்கிறது. இவனே தஞ்சைக்கோயிலுக்கு திருவிளக்கு கொடைகள் பல தந்துள்ளான்
என வித்துவான் வே.மகாதேவன் (சிவபாதசேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள் நூல்:
பக்கம்-21) குறிப்பிட்டுள்ளார். கடலோர நகர் பட்டினம் என அழைக்கப் பெறும்.
அத்தகைய மரைக்காயர்களின் குடியிருப்பு, மரக்காயர்பட்டினம் என இன்றளவும்
உள்ளது. சோனகர் பட்டினம், சோனகன் விளை என்று ஊர்களும் உள்ளது. நாகை
மாவட்டம் திட்டச்சேரி அருகே மரைக்கான்சாவடி உள்ளது. காயல்பட்டினத்தின் பழைய
பெயர்தான் சோனகர்பட்டினம். மரக்கார் என்ற சொல்லை முதன்முதலில்
பயன்படுத்தியவர்கள் போர்த்துக்கீசியரே.
(இ)லெப்பை
மார்க்கப்பணியில் ஈடுபட்டவர்கள் (இ)லெப்பைகள் என்று அழைக்கப்பட்டனர். (இ)லப்பைக்
என்ற அரபிச் சொல்லிருந்து (இ)லெப்பை என மருவியுள்ளது. இராவுத்தர்,
மரைக்காயர், மாப்பிள்ள, தக்கினி, பட்டானி என எந்த உட்பிரிவாக இருந்தாலும்
தமிழகத்தில் (இ)லெப்பை எனச் சாதிச்சான்றிதழ் வாங்கினால் ;அரசுப்பணி,
கல்வியில் முன்னுரிமை தருகிறார்கள். ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில்
உட்பிரிவுகள் பிளவுபடுத்திச் சான்றிதழ் வழங்குவது கிடையாது. அங்கு இசுலாம்
என்று மதம்சார்ந்தசாதிச்சான்றிதழ் தான் வழங்கப்படுகிறது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக