செவ்வாய், 22 செப்டம்பர், 2015

இனிக்கும் கரும்பு … கசக்கும் உழவு! – வைகை அனிசு

vaikaianeesu_name

இனிமைக் கரும்பைப் பயிரிடுவோர்

வாழ்வில் இனி்மை இல்லை!

  ‘காமாட்சியம்மன் கோயில் பூமியிலே கரும்பு இனிக்கும். வேம்பு கசக்கும்’ என்ற பழமொழி உண்டு. தேனி மாவட்டத்தில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காமாட்சியம்மன் கரும்பைக் கையில் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இப்பகுதியில் கரும்பு விளைந்தவுடன் எம்மதத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள மயிலீசுவரன் கோயிலிலும், அருள்மிகு காமாட்சியம்மன்கோயிலிலும் முதல் கரும்பை வைத்துச் சாமி கும்பிட்ட பின்புதான் விற்பனையைத் தொடங்குவார்கள். நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாதவர்கள் இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டிக் குழந்தை பிறந்தால் அந்தக்குழந்தையைக் கரும்புத்தொட்டில் கட்டிஅதல்இட்டுத் தங்கள் நேர்ச்சையை முடித்துக்கொள்வர்.
  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் கரும்புப் பயிரிடல்   தொடங்கியது. மேலும் இப்பகுதியில் விளையும் கரும்பு அதிகச் சுவையுடனும், வேப்பங்காய் வழக்கத்திற்கு மாறாக அதிகக் கசக்கும் தன்மையும் கொண்டன. கரும்புகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று முளரிக்கரும்பு(rose sugar cane) மற்றொன்று பீய்ச்சிக் கரும்பு என வகைப்படும். இதனை அடுத்து தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், விருதுநகர், இராசபாளையம், தூத்துக்குடி, திருச்சிப்பகுதியில் கரும்புப்பயிரிடல் நடைபெறுகிறது. அதன்பின்னர் கரும்பிலிருந்து சருக்கரை உற்பத்தித் தொழிற்சாலை தொடங்கியது. அறிவிக்கப்படாத மின்வெட்டு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, விலை உயர்வு, நிலத்தடிநீர் மட்டம் குறைவு, வரையறுக்கப்படா விலை ஆகியவற்றால் கரும்பு வேளாய்மை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.
  இந்தியாவிலேயே சருக்கரை உற்பத்தியில் நான்காவது இடத்திலிருந்த தமிழகம் மற்பொழுது அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளின் காரணமாக கரும்பு வேளாண்மையே தமிழகத்தில் அழிந்து போகிற நிலை ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலில் கரும்பு அறுவடை செய்யும்போது சாறு பிழிந்து மீண்டும் பெரிய அடுப்புகளின் அருகே நின்று சாற்றினைக் கிண்டி சருக்கரை ஆக்கும் போதும் மிகவும் வெப்பமான சூழலில்தான் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டியிருந்தது. பெரும்பாலும் இத்தொழிலில் அடிமைகளும் போர்க்கைதிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். 1807 ஆம் ஆண்டு அடிமை வணிகம் தடை செய்யப்பட்டது. அதற்கு முன்பு ஏறத்தாழ 110இலட்சம் ஆப்பிரிக்க நாடுகளின் அடிமைகள் அமெரிக்கக் கண்டத்திற்கு அனுப்பபட்டனர். அவர்களில் ஐம்பது விழுக்காடு கரும்பு சாகுபடி, சருக்கரை உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 தமிழகம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகள் மொரிசியசு, பிசித்தீவுகள்,  தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு கரும்பு உற்பத்தியைத் தொடர்ந்தனர். பெரும்பாலான தொழிலாளிகள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டனர். சில சீர்திருத்தவாதிகள் சருக்கரையைப் புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். பலர் சருக்கரையைப் பயன்படுத்துவதில்லை என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தற்பொழுது மேற்கத்திய தீவுகளில் சருக்கரை உற்பத்தி குறைந்துவிட்டது. பிரேசில் நாட்டில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி ஆகும் சர்க்கரை இங்கேயே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
  கடந்த 2011-2012 ஆம் ஆண்டு 3.35இலட்சம் புதுக்காணி(எக்குடேர்)நிலத்தில் கரும்பு சாகுபடி செய்த நிலையிலிருந்து, 2014-2015 இல் 2.55இலட்சம் புதுக்காணி(எக்குடேர்) நிலமாகக் குறைந்துள்ளது. அதே போலச் சருக்கரை உற்பத்தி 24.43இலட்சம் பாரத்திலிருந்து(டன்னிலிருந்து) 13இலட்சம் பாரமாக(டன்னாக) நலிவடைந்தது.
  ஐந்து இலட்சம் உழவர்கள் கரும்பு வேளாண்மையில் ஈடுபட்டனர். ஆனால் தற்பொழுது 3இலட்சம் பேர்தான் உழவில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் சருக்கரை உற்பத்தி 250இலட்சம் பாரமாக(டன்னாக) இருந்தது. 320இலட்சம் பாரமாக உயர்ந்துள்ளது. தேவையை விட உற்பத்தி அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், பன்னாட்டுச் சந்தையிலும் உற்பத்தி அதிகமாக இருப்பதால், விலை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
  2013-2014 ஆம் ஆண்டு கரும்புக்கு மத்திய அரசின் விலை பாரம் – உரூ.2,100 ; மாநில அரசு, கூடுதலாக உரூ.450 சேர்த்து, உரூ.2,550 ஆக விலை வரையறுத்தது. ஆனால், 2014-2015 ஆம் ஆண்டு மத்திய அரசின் விலை ரூ.2,200 ஆகவும், மாநில அரசின் விலை கடந்த ஆண்டைவிட ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.350 ஆகவும், ஆக மொத்தம் ரூ.2550 என விலை வரையறுக்கப்பட்டது.
 இந்த விலை குறைப்பு ஏன் செய்யப்பட்டது என்பது குறித்து, எந்த விளக்கமும் இல்லை. இந்நிலையில் உரவிலை, விதை, வெட்டுக் கூலி, போக்குவரத்துச் செலவு, தொடர்ந்து வறட்சி, மின்வெட்டு போன்ற காரணங்களால் செலவுகள் கூடி, ஒரு பாரம் கரும்பு உற்பத்திக்குக் குறைந்த அளவு செலவு உரூ.2,500 ஆகிறது.
  கரும்பு உழவர்கள் உரிய விலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது 2013-2014 ஆம் ஆண்டு தனியார் கரும்பு ஆலைகள் வழங்கவேண்டிய உரூ.525 கோடியும், 2014-2015 க்கு வழங்கவேண்டிய உரூ.300 கோடியும் ஆக மொத்தம் உரூ.825 கோடி நிலுவைத்தொகையாக உள்ளன. இந்தத் தொகையைப் பெறுவதற்குக் கரும்பு உழவர்கள் ஆலை நிருவாகத்திற்கும், அரசுகளுக்கும் இடையே போராடிக்கொண்டு வருகிறார்கள்.
  தமிழகத்தில் சருக்கரை மீது 5 % மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இதனால் கரும்பு ஆலைகள் கூடுதல் சுமையாக ஒரு டன் சருக்கரையில் உரூ.1,200 சுமையைத் தாங்க வேண்டியுள்ளது என்றார்.
  இதன் தொடர்பாகத் தேனிப் பகுதியில் இயங்கிவரும் சருக்கரை ஆலை நிருவாகிகளிடம் பேசியபோது, தமிழ்நாட்டில் விற்பனைக்காகச் சருக்கரையும் எரிசாராயமும் அண்டை மாநிலங்களிலிருந்து வந்துகொண்டு இருப்பதால் தமிழக ஆலைகள் உற்பத்தி செய்த சர்க்கரை, எரிசாராயத்தை முழுவதும் விற்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் தமிழகத்தில் கரும்பு ஆலைகள் உற்பத்தி செய்கிற ஒர் அலகு மின்சாரத்திற்கு உரூ.3.15 தான் வழங்கப்படுகிறது. ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து தனியார் துறையின் மூலம் உரூ.12க்கு வாங்கப்படுகிறது. மேலும் கரும்பு உழவர்களுக்கும், ஆலை நிருவாகத்திற்கும் கட்டுப்படியாகிற விலை கிடைக்கப் பெற ஊ2+50 என்கிற சூத்திரப்படி விலைவரையறுப்பதோடு கரும்பிலிருந்து நேரடியாக எத்தனால் உற்பத்தி செய்து பெட்ரோலில் கலந்து விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையெனில் சருக்கரை ஆலைகள் மூடவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றனர்.
கரும்பு உழவர் பாண்டி கூறுகையில், ” கரும்பு 1 வருடப் பயிராகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கரும்பு நடவு செய்து 30 நாட்கள் கழித்துக் களையெடுப்பார்கள். அதன்பின்னர் 6 மாதம் கழித்துத் சோகையை உரிக்கும் பணி நடைபெறும்வரை களையெடுப்புப் பணி நடைபெறும். பொங்கல் பண்டிகையின்போது உழவர்கள் அறுவடை செய்த நெல்மணி, சருக்கரைப் பொங்கல், மஞ்சள் கிழங்கு ஆகியவற்வை வைத்துச் சூரியனுக்குப் படையல் செய்யும் போது செங்கரும்பு முதன்மை இடத்தைப் பிடிக்கிறது. மஞ்சளாறு அணைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் கரும்பு 1000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட கரும்பு தற்பொழுது 300 ஏக்கராகச் சுருங்கியுள்ளது” என்றார்.
  மருகால்பட்டி பகுதியைச்சேர்ந்த உழவர் சையது என்பவர் கூறியபோது, “ஏக்கர் கரும்பிற்கு 1.25 இலட்சம் வரை செலவாகிறது. ஆனால் செலவு செய்த தொகையை விட  ஏக்கருக்கு 40 ஆயிரம் உரூபாய்தான் கிடைக்கிறது. இவை தவிர செங்கரும்பு சாகுபடிக்கு, உழவு, பார்போடுவது, உரம், சோகை உரிப்பு என்று  ஏக்கருக்குக் கணக்கு பார்த்தால்  இலட்சத்திற்கும் மேல் ஆகிறது. ஆனால் வருவாய், செலவு செய்ததை விடப் பாதியாகத்தான் கிடைக்கிறது” என்றார். மேலும் தொடர்ந்தார்: “ஒவ்வோர் ஆண்டும் கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைகிறது. காரணம் உரம் விலை உயர்வு, கூலி ஆட்கள் சம்பளம், போக்குவரத்து போன்றவை கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. 15 கரும்புகளைக் கொண்டது ஒரு கட்டு எனவும், 20 கட்டுகள் கொண்டது ஒரு வண்டி எனவும் பிரித்துள்ளனர். ஒரு சுமையூர்திக்கு 15 வண்டிக் கரும்புகள் வரை ஏற்றுகிறோம். தற்பொழுது கரும்புக் கட்டு ஒன்று உரூ.300 வரை விற்பனை ஆகிறது. வண்டிக்கு உரூ.500 வெட்டுக் கூலியாக உள்ளது. இதுவே பொங்கல் நேரம் நெருங்கும்போது உரூ.1000 ஆகக் கூலி உயர்ந்துவிடும். ஏக்கருக்கு உரூ.50,000 ஆயிரம் வரை உழவர்கள் செலவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட வேளாண்மை கூடுதலாக இருந்தாலும் தற்பொழுது வண்டிக்கு உரூ.4,000 வரை விலை உயர்ந்துள்ளது” என்றார்.
மாற்றத்தை விரும்பிய கரும்பு உழவர்கள்
  தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, குள்ளப்புரம் முதலான பகுதிகளில் கரும்பு உழவர்களில் சிலர் நவீன நுட்பத்துடன் கரும்புப் பயிர்த்தொழிலைப் பாதுகாத்து வருகின்றனர்.
  உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் முதுன்மையான பயிர்களில் கரும்பும் ஒன்றாகும். கரும்பு சாகுபடி செய்யும் உத்திகளில் ஒன்று ஊடுபயிர் சாகுபடி ஆகும். கரும்பில் ஊடுபயிர் செய்யும்போது முதன்மையாக கவனிக்கக் வேண்டியவை:
  ஊடுபயிர் கரும்பின் வளர்ச்சியையும், விளைச்சலையும் பாதிக்கக் கூடாது. ஊடுபயிர் மிகக் குறுகிய காலப் பயிராக இருத்தல்வேண்டும். ஊடுபயிர் கரும்பிற்கு இடக்கூடிய சத்துக்களைப் போட்டிபோட்டு எடுத்துக் கொள்ளக்கூடாது.
பருவம்
  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரும்பு நடவு செய்யும் பருவங்களில் எல்லாம் நெட்டவரை(சோயா)விதை ஊடுபயிராகப் பயிரிட்டனர். பயிரானதால் மிக அதிகமாக மழை பொழியும் காலங்களில் நடவு மற்றும் அறுவடை தவிர்க்கப்படவேண்டும். இதனால் நெட்டவரை(சோயா) விதைகளின் முளைப்புத்திறன் குறைவதோடு அறுவடைக் காலங்களில் நெட்டவரை(சோயா அவரை) தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கரும்பில் நெட்டவரை நடவு முறை
  கரும்பு நடவு செய்த முடித்தவுடன் கரும்பு வரிசையிலிருந்து 1 அடி தூரம் தள்ளி இரு பக்கங்களிலும் மேற்குறிப்பிட்ட இடைவெளியில் நெட்டவரைவிதைகளை நடுகின்றனர். கரும்பிற்குப் பாய்ச்சப்படும் நீரே நெட்டவரைப்பயிருக்கு பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் சொட்டுநீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நீரையும் பயன்படுத்துகின்றனர்.
  இதன் இதாடர்பாக உழவர் பக்கீர் கூறுகையில், “கரும்புப் பயிர் வளர்ச்சியின் தொடக்கக் கட்டத்தில் நெட்டவரைச் செடிகள் வளர்ப்பதால், நிழல் கட்டுவதால் களை கட்டுப்படுத்தப்படுகிறது. சோயாச் செடிகளில் வேர் முடிச்சுகள் மூலமாகவும் அறுவடைக்கு முன்கொட்டும் இலைகள் மூலமாகவும் நிலத்தின் வளம் அதிகரிக்கின்றது. கரும்புப்பயிரை தாக்கும் இளங்குருத்துப்புழு கட்டுப்படுத்தப்படுகின்றது. சோயா செடிகள் வளர்ந்து நிழல் கட்டுவதால் நீர் ஆவியாவது குறைக்கப்பட்டு, கரும்புப் பயிருக்கு நீர்த்தேவை குறைகிறது. மேலும், தேவதானப்பட்டிப் பகுதியில் கரும்பு சாகுபடி வேளாண்மைச் செலவு அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கரும்பு பயிர் நடவு செய்த நாளில் இருந்து மாதந்தோறும் களை எடுக்கவேண்டும். 5 முறை தோகை உரிக்கவேண்டும். இந்த ஆண்டு ஏக்கருக்கு 1 இலட்சம் செலவாகியுள்ளது. கடந்த 3 வருடங்களாக பருவமழை பொய்த்துப்போனதால் கரும்பு வேளாண்மை செய்கின்ற நிலப்பரப்பு சுருங்கி வருகிறது” என்றார்.
காட்சிப்பொருளான கொப்பரைகள்
  தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் கம்பம், கூடலூர், போடி, தேவாரம் பகுதிகளில் விளைகின்ற கரும்புகளை உழவர்கள் தங்கள் வேளாண் நிலத்தில் ஒரு பகுதியில் கரும்பைப் பிழிந்து ஆட்டுகின்ற கொப்பரைகள் வைத்திருப்பார்கள். அதில் பெரிய சட்டிகளை வைத்து வெல்லம் ஆக்குவார்கள். இவ்வாறாக உருவாக்கப்படும் வெல்லத்தை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்துவந்தனர். தற்பொழுது அனைவரும் சருக்கரைக்கு மாறிவிட்டதால் வெல்ல உற்பத்தித்தொழில் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
கரும்புச்சாறு
  கோடைக் காலம் வந்தால் உடலிலிருந்து அதிகமான அளவில் நீர்ச்சத்து வெளியேற்றப்படும். இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் கரும்பிலிருந்து சாறுபிழிந்து கரும்புச்சாற்றுடன் இஞ்சி, எலுமிச்சம் பழம் போன்றவற்றைக் கலந்து பானமாக அருந்துவார்கள். தற்பொழுது வெளிநாட்டிலிருந்து ஏராளமான பானங்கள் குப்பிகளில் அடைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் கரும்புச்சாறு பிழியும் இயந்திரங்களும் பழைய இரும்புக்கடைகளுக்கு வழியனுப்ப பட்டுவருகின்றன.
தை பிறந்தால் வழிபிறக்கும்
  தமிழனின் திருநாளாகப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது கரும்புதான். சூரியன் ஒவ்வொரு ஓரை(இராசி)யிலும் ஒவ்வொரு மாதம் உலவுகிறார். அதில் மகர ஓரை(இராசி)க்குள் அவர் நுழையும் நாளை தைப்பொங்கல் என்று குறிப்பிடுவர். வடநாட்டில் இதை மகர சங்கராந்தி என்பர். இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் இட்டும், மாவிலை தோரணம் இட்டும் அழகு செய்வர். மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்று பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்திப், புதுமையை வரவேற்கும் விதமாக பொங்கல் அமைந்துள்ளது. அதனால் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிவகை உண்டாவது இயற்கை. இதனால்தான் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற சொல்வழக்கு ஏற்பட்டது. ஆனால் ஆண்டுதோறும் தை மாதம் வந்தாலும் கரும்பு வேளாண்மைக்கு வழி பிறக்காமல் மூடுகின்ற வழிதான் நாளுக்கு நாள் இறுக்கமடைந்து வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக