குல தெய்வக்கோயில்களுக்கு விற்பனை ஆகும் கரும்புகள்
தேவதானப்பட்டிப் பகுதியில்
குலதெய்வக்கோயில்களுக்கு கொண்டு செல்வதற்குக் கரும்புகள் விற்பனை
செய்யப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை,
காமாட்சியம்மன்கோயில் பகுதிகளில் கரும்பு வேளாண்மை நடைபெற்று வருகிறது.
மற்ற பகுதிகளில் விளையும் கரும்புகளைக் காட்டிலும் இக்கரும்பு அதிகமான
சுவையுடன் இருக்கும். மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி என்பதாலும் முதல்
கரும்பைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை இப்பகுதி உழவர்கள்
வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தெய்வ பக்தியுடன், இறைச்சிக்கழிவுகள்,
பன்றிச்சாணம் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேனி,
திண்டுக்கல் மாவட்டம், பிற மாவட்டங்களில் தங்களது குலதெய்வக்கோயில்களுக்கு
தேவதானப்பட்டி கரும்பையே வாங்கிச்செல்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய
மழையின்மையால் கரும்பு சிறுத்தும், நீர்ச்சத்து குறைவாகவும் இருந்தது.
தற்பொழுது நல்ல மழை பொழிந்துள்ளதால் கரும்பு சுவையுடனும், அதிகமான
நீர்ச்சத்துடனும் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுமையுந்து,
சுமையுந்தாகக் கரும்பு ஏற்றுமதி ஆகிறது.
தேவதானப்பட்டி பகுதியில் பொங்கலுக்கு ஆயத்தமான கரும்புகள்
தமிழர்கள் மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு
முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்ட திருவிழா அறுவடைத் திருவிழாவான பொங்கல்
பண்டிகை என்பதற்குப் பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
சங்கக்காலத்தில் பொங்கல் திருவிழா
கொண்டாடியதற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. கி.மு. நூற்றாண்டுக்கு முன்னரே
இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
மூதாதையர் திருவிழா
பொங்கலை ‘மூதாதையர் விழா’ என அழைப்பது
வழக்கம். பண்டைய காலத்தில் தை மாதம் விடியற்காலையில் ஆற்று நீரும், குளத்து
நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலைவேளையில் குளுமையாக இருக்கும்.
சங்கக் கால மகளிர் காலையில் நீராடி மகிழ்வர். இதனை இலக்கியங்கள்
தைந்நீராடல் என்று அழைக்கிறது. தை நீர் தண்மை உடையது. தண்மை என்பதற்கு
வெதுவெதுப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.
கி.பி.எட்டாம் நூற்றாண்டில்
திருப்பாவையிலும், மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை யிலும் மார்கழி
தைநீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்.
1.தைப்பொங்கல்:
தைப்பொங்கல்: நெல்லை விளைவிக்க
எவையெல்லாம் உதவினவோ அவற்றிற்கெல்லாம் நன்றி கூறி வழிபடுவது. புதிதாக
விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கிப் பொங்கலிட்டு இயற்கை
தெய்வத்துக்கும் சூரியன், கால்நடை முதலான அனைத்திற்கும் நன்றி செலுத்துவதே
பொங்கல் திருநாள். இப்பண்டிகை, மூன்று நாள் விழா எடுத்து
கொண்டாடப்படுகிறது.
போகி: பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள்
போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் பழைய ஆடைகளைத் தீயிட்டு
கொளுத்துவது அல்லது எறிந்து விடுவது வழக்கம். விளைச்சல் முடிந்து பிறக்கும்
ஆண்டு புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் என்பதே இதன்
பொருள்.
2.சூரியப்பொங்கல்:
சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல்
3.மாட்டுப்பொங்கல்:
கால்நடைகளுக்கும் மற்றும் பறவைகளுக்கும் பொங்கல் படைக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பொங்கல்:
சனவரி மாதம் 13,14,15 ஆகிய நாள்களில்
இந்தியா, இலங்கையில் பொங்கல் என்றும், அண்டை மாநிலமான கருநாடகா,
ஆந்திராவில் மகாசங்கராந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. கீழ்த்திசை நாடுகளான
மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்சு, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள்
ஆகியவற்றில் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இலஃகரி:
தமிழ்நாட்டில் நெல் விளைவது போல பஞ்சாப்
மற்றும் அரியானாவில் கோதுமை விளைகிறது. கோதுமையை அறுவடை செய்து இலஃகரி என்ற
பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மஃக்பிகு:
அசாமில் நெல்லை அறுவடை செய்து மஃக்பிகு என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையும் நிலங்கள் வாங்கும் முறையும்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிலங்களை
வாங்குவதும், புதிய இல்லங்களைத் திறப்பதும், பத்திரப்பதிவும் இன்றளவும்
நடைபெற்று வருகிறது. பத்திரப்பதிவில் வழக்கமான தமிழ்ச்சொற்களை தவிர்த்து
மாறுபட்ட தமிழில் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
எடுத்துக்காட்டாகச் சிவன்கோவிலுக்குரிய
சொத்துக்களை வாங்கும்போதும், விற்கும்போதும், கோவிலில் இருந்து பொற்காசுகளை
கடனாகப் பெறும்போதும், கோவிலுக்குத் தானம் வழங்கும்போதும் சண்டேசுவர் என்ற
பரிவாரத் தெய்வத்தின் பெயராலேயே நிகழ்த்துவது வழக்கம். இதை ‘சண்டேசுவரப்
பிரமாணம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளாக
இன்றளவும் காட்சியளிக்கின்றன.
எனவே பொங்கல் பண்டிகை மதத்தை
ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டு, சங்கக் காலத்திலிருந்து
பரம்பரை விழாவாகவே கொண்டாடப்படுகிறது.
– வைகை அனிசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக