page.pmd

வட அமெரிக்காவில் வைக்கம் வீரர்

தந்தை பெரியார் பிறந்த நாள் பெரு விழா பல்வேறு அமைப்புகள் பங்கு கொண்ட

பயனுறு கருத்தரங்கம்

பிரீமாண்டு, செப்.15 வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரீமாண்டு நகரில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் 137-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சமூக நீதிக் கருத் தரங்கமாக ஆவணி 26, 2046 /செப்டம்பர் 12-ஆம்  நாள் சனிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண் டாடப்பட்டது.
பெரியார் பன்னாட்டமைப்பு,  அறிஞர் அம்பேத்கர் சீக்கியர் அமைப்பு, இந்திய அமெரிக்க முசுலீம் அமைப்பு, அம்பேத்கர் பன்னாட்டமைப்பு, முல்னிவாசிச் சங்கம், பாம்செப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவை நடத்தின.
பெரியார் பிறந்த நாள் விழா, சமூக நீதிக் கருத்தரங்கம், பிரீமாண்டு நகரின்,  இராசு செரிட்டுடோசு சமூக அரங்கில் ஆவணி 26, 2046 / 12.9.2015 அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கியது..
மேடையில் தந்தை பெரியார்,  சோதிராவு பூலே, சாகு மகராசு, அம் பேத்கர், நாராயண குரு ஆகிய தலைவர்களின் படங்களுடன் பெரியார் பிறந்த நாள் விழா – சமூக நீதிக் கருத்தரங்கம் எனும் பதாகையும் மேடையில் அமைக்கப்பட்டிருந்தது.
யுனெசுகோ அமைப்பு 27.6.1970  அன்று தந்தை பெரியாருக்கு அளித்த விருதில் உள்ள பாராட்டு மொழிகளுடன் கூடிய பெரியார் படம், விழா அமைப்பின் சார்பாக  மரு. அம்ரிக்கு சிங்கு அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.
சமூக நீதி – அடுத்த கட்ட நகர்வு
‘இந்தியாவில் சமூக நீதி  – அடுத்த கட்ட நகர்வு’  எனும் தலைப்பில் கருத்தரங்கம்   நடந்தது.
கருத்தரங்கில் பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர்  மரு. சோம.இளங்கோவன்,    அறிஞர் அம்பேத்கர் சீக்கியர் அமைப்பின்  மரு. அம்ரிக்கு சிங்கு, இந்திய அமெரிக்க முசுலீம் அமைப்பின் சார்பில் உமர் மாலிக்கு, பாம்செப்பு அமைப்பின் அசோக்கு புலா, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கோ.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர்.
மரு. சோம இளங்கோவன் தமதுரையில், சமூக அநீதியின் வருண அமைப்பு என்பது வேதக் காலத்தில் இருந்ததையும், கீதையில் குறிப்பிடப்பட்டதையும், பின் புத்தர், திருவள்ளுவர்,  சோதிராவு பூலே, சாகு மகராசு, நாரா யண குரு, அம்பேத்கர், பெரியார் ஆகியோரது பணிகளையும் குறிப்பிட்டுப் பேசினார். சாவித்திரி பூலேயும், அம்பேத்கரும் மனுவை எரித்தவர்கள்.. பெரியாரது உழைப்பு மட்டுமன்றி, அவரது சொத்துகள் மக்களுக்கான திட்டங்களாகக் கல்வி அரங்குகளாக இன்றைக்கும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதையும், அதற்கு முழுக் காரணமாக இன்றைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி விளங்குவதையும் எடுத்துரைத்தார். வீரமணி சமூகநீதி விருது வி.பி.சிங்கு முதல் வழங்கப்படுவதைச் சொன்னார். இனி அடுத்த கட்டமாக, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிடவும், சாதியக் கட்டுமானத்தை உடைத்திட,  சாதி மறுப்புத் திருமணம் செய்த குடும்பத்தினருக்குத் தனி இட ஒதுக்கீடு போன்ற முற்போக்குச் சிந்தனைகளைச் சட்ட வடிவமாக்கப் பாடுபடவும் வலியுறுத்தினார்.
இந்திய அமெரிக்க முசுலீம் அமைப்பின் உமர் மாலிக்கு, சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்த பெரியாரின் சிந்தனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
பி.ஆர்.அம்பேத்கர் சீக்கியர் அமைப்பின்   மரு. அம்ரிக்கு சிங்கு தமதுரையில்  சாதி, மதம், கடவுள் பற்றிய பெரியாரின் கருத்துகளை வரிசைப்படுத்திப் பேசியதுடன், பகத்சிங்கு தூக்கிலிடப்பட்டபோது, இந்தியாவில் மற்ற தலைவர்கள் வாய்மூடி மவுனிகளாக இருந்த நிலையில், பகத்சிங்கு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, ஆங்கிலேயரை எதிர்த்தும், காந்தியைக் கண்டித்தும்  பெரியார் கட்டுரை எழுதியதையும் நினைவு கூர்ந்தார்.
பாம்செப்பு அமைப்பின் பொறுப்பாளர் அசோக் பூலா, தமதுரையில் மனுஃச் மிரிதி தொடங்கி, பார்ப்பனர்கள்  சாதிய அடக்கு முறைகளைக் கையாண்டு வருவதையும், அதனை எதிர்த்துப் பெரியார், அம்பேத்கர், பூலே, நாராயண குரு, அய்யங்காளி, அயோத்தித் தாசப் பண்டிதர் எனப் பலரும் போராடியதையும், இவர்கள் வழியில் நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றும் பேசினார்.
தமிழர் தலைவர் முயற்சியால் தமிழ் நாட்டில்  69  விழுக்காடு இடஒதுக்கீடு
அகில இந்தியப் பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தமதுரையில் இட ஒதுக்கீடு வரலாற்றை, நீதிக் கட்சிக் காலந்தொட்டு இன்று வரை உள்ள நிலையையும், பெரியார் போராட்டத்தால் ஏற்பட்ட முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம், ஆசிரியர் வீரமணி அவர்களின் முனைப்பால் ஏற்பட்ட 69 விழுக்காட்டுக்கான பாதுகாப்புச் சட்டம் பற்றியும், இதன் காரணமாக ஒடுக்கப்பட்டோர், குறிப்பாக, மருத்துவக் கல்லூரியில் பெற்ற அதிக இடங்களின் விவரத்தையும், மத்தியில் இட ஒதுக்கீடு சரிவர நிரப்பப் படாத சூழ்நிலையையும் புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார். தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டு உரிமையின் அவசியத்தையும், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது பற்றியும் கூறினார். அடுத்த கட்டமாக, ஒடுக்கப்பட்டோர் அனைவரும் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை ஏற்று ஒருங்கிணைந்து பாடுபட வேண்டியதன்  இன்றியமையாமையைும் குறிப்பிட்டார்.
அம்பேத்கர் பன்னாட்டமைப்பின் சார்பில்  இராமச்சந்திரா, பெஞ்சமின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உரையாற்றிய அனைவரும் தத்தம் கருத்துகளைக் கணினி மூலம் விளக்கக் காட்சிகளாகத் திரையிட்டு வெளிப்படுத்தியது பார்வையாளர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் சிறப்பாக அமைந்தது.
முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பன்னாட்டுச் சீக்கியர் அமைப்பின்  ஃச்டீவு மசியாசு வரவேற்றுப் பேசினார்.
விழாவில் உரையாற்றிய அனைவருக்கும் கோ.கருணாநிதி, தந்தை பெரியார் படத்தைப் பரிசாக அளித்தார். அதே போல் விழா சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு அளித்த நண்பர்கள் பிந்தர்சிங்கு, நானக்கு சிங்கு ஆகியோரும் பெரியார் படம் அளிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர். மரு. சோம.இளங்கோவன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
விழாவிற்கு அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் மக்கள், வட மாநிலத்தவர்கள் குறிப்பாகச் சீக்கியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
வருகை தந்த அனைவருக்கும் தேநீரும், இரவு உணவும் வழங்கப்பட்டன.
வட அமெரிக்காவின் கலிபோர்னியாவில் முதன் முறையாக நடைபெற்ற தந்தை பெரியார் விழா, அனைவராலும் பாராட்டத்தக்கதாகவும், பயனுள்ள கருத்துப் பரிமாற்ற  மையயமாகவும் அமைந்தது என்பது மட்டுமல்லாமல், வரும் நாட்களில், இந்த அமைப்பினர் ஒருங்கிணைந்து இயங்கிட முடிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
nov-14