தமிழர் திருநாடே தாரணியில் முதல் தோற்றம்
அமுதமொழி கண்டார் அருந்தமிழர் அந்நாளில்
இயற்கையோ டியைந்தமொழி இன்பம் நிறைந்ததமிழ்
நயங்கள் நிறைந்தமொழி நல்லறிஞர் கண்டதமிழ்
எப்போ பிறந்ததென்று எவரும் அறிந்ததில்லை
ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே!
குமரியின் தென்திசையில் குளிர்ந்த வளநாடு
தமிழர்திருநாடு தழைத்தோங்கி இருந்ததையோ!
அந்நாட்டில் தென்மதுரை அழகான நன்னகரில்
தென்னன் தமிழ்ச்சங்கம் திறம்பெறவே அமைத்திட்டான்!
கன்னித்தமிழ்மொழியைக் கருத்தாய் வளர்த்திட்டான்
பன்னூறு புலவரதில் பழந்தமிழை ஆய்ந்திட்டார்
பின்னர்க் கபாடபுரம் பெரியதொரு தமிழ்நகரம்
மன்னு தமிழ்ச்சங்கம்மறுபடியும் அமைத்திட்டான்
அதிலும் பலபுலவர் அருந்தமிழை ஆய்ந்திட்டார்
மதிநுட்ப நிறைபுலவர் பலநூல்கள் வரைந்திட்டார்
இருசங்க நூல்களையும் பெருங்கடல் விழுங்கியதே
அரிய பல நூல்கள் அழிந்ததற்குக் கணக்கில்லை
தொல்காப்பியம் ஒன்றே நின்று துலங்கியது!
– திருக்குறள்மணி அ.க.நவநீதக்கிருட்டிணன்,
தமிழ் வளர்ந்த கதை(வில்லுப்பாட்டு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக