பெரியார் ஆண்டு 135 தொ. ஆ. 2880 தி.ஆ. 2046
ஆடவை ( ஆனி ) 13 28–06–2015
அன்பு மதுமலர்க்கு வணக்கம். நலம். நாடலும் அதுவே.
கடந்த 22ஆம் நாள் உங்கள்
புகழுரையை மின்னஞ்சல் மூலம் படித்தேன். அதனை அப்படியே
ஏற்றுக்கொள்கிறேன். நான் இளைஞர்களிடம் பேசும்போது ” உன்னை அறிவாளி
யாரேனும் பாராட்டும்போது உடனே ” ஆம் நான் அறிவாளிதான் ” என்று
ஒப்புக் கொள். காரணம் அந்தப் பாராட்டு மேலும் நீ அறிவாளியாக ஆவதற்கு
ஒரு தூண்டுகோல் ஆகும் ,எரியும் அகல் விளக்குத்திரியை தூண்டுவது
போல்.– ஒளி மேலும் பரவும் அல்லவா? ( Stimulation goes to spread ) ”
தூண்டல் அதுவே துலங்களுக்கு வழி வகுக்கும். அந்த அடிப்படையில் உங்கள்
புகழுரையை ஏற்கிறேன் .
மேலும் என் எழுத்துகளை எல்லாம்
உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுப்புகிறேன் என்றால் எதற்கு? தங்கம்
பத்தரைமாற்றுதானா? (22 “கேரட்”தானா) என்பதை தரம் பார்க்கும்
விற்பன்னரிடம் கொடுத்தால் தரமா -தரம் குறைந்ததா என்பதை கல்லில்
உரசிப் பார்த்துச் சொலுவார். அந்தக் கல் ” கட்டளைக் கல்”
என்பதாகும்.அப்படி உரசிப் பார்க்கத்தான் அனுப்புகிறேன்.
தார்வின்பற்றியும்
அறிவியல் பற்றியும் கேட்டுள்ளீர்கள் .என் இளமைக் காலத்திலேயே ”
DOCTRINE OF DARWIN ” படிப்படி (பரிணாம) வளர்ச்சி புத்தகத்தை
படித்து முடித்தவன். அது மட்டுமல்ல! INDIAN HISTORY – AMERICAN
HISTORY—WORLD GEOGRAPHY படித்தவன் .
மேலும் இதெல்லாம் எப்படி முடிகிறது
என்றும் கேட்டுள்ளீர்கள். ஆண்டவன் கொடுத்த அருள் அல்ல! என்உள்ளத்தை
ஆண்டவர்கள் கொடுத்த ஆர்வ உணர்வுக் கொடை! அந்த உணர்வுதான்
எதையும் ஏன்? எதற்காக ? எப்படி ? என்ற வினாவுக்குக் கிடைத்த
விடைகள்தான் நான் எழுதுவது. இப்படி வினாக்களைக் கேட்டதால்தான் ஒரு
கலையழகு மிளிரும் சிலை வடிக்கும் சிற்பிதான் உலகம் போற்றும் ”
சிந்தனைச் சிற்பியாக ” மாறினான். கிரேக்க மண்ணில் பிறந்த சாக்ரட்டிசு !
அவன் பேச்சு இளைஞர்களின் இதயத்தை ஈர்த்தது. அவன் பின்னால்
அணிவகுத்தது ஆயிரமாயிரம் இதயங்கள் .–கண்டான் கிரேக்க நாட்டுப்
பெருமன்னன் . கடுஞ்சினம் கொண்டான்.பழமைச் சகதியிலே மக்களைப் புதைத்து
வளமை வாழ்வு வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவன்
” வில்லேருழுவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை “
எனும் குறள் பொருளை மறந்தான். அரசுக்கு
எதிராக அணிதிரட்டும் சாக்ரட்டிசைக் கைதுசெய்ய ஆணையிட்டான். புரட்சி விதைகளை
விதைத்துவிட்ட சிந்தனைச் செல்வனைச் சிறைப் பிடித்து கிரேக்க நீதி
மன்றத்தில் நிறுத்தினர். நிலைகுலையவில்லை சாக்ரட்டிசு. தன் நிலையைத் தகுந்த
சான்றுகாட்டி நிலை நிறுத்தினான். தன்னிலை அறியா மன்னன் தீர்ப்பளித்தான்.
மக்களையும்- இளைஞர்களையும் சிந்திக்கத் தூண்டி அரசைச் சீர்குலைக்க
நெஞ்சத்தில் நினைத்த “நீ நஞ்சினைக் குடித்துச் சாகவேண்டும்” எனத் தீர்ப்பு
வழங்கினான், மன்னன். தலைவணங்கித் தீர்ப்பை ஏற்றத் தலைமகன் சிறையில்
அடைக்கப்பட்டான். தவறான நீதிதான் என்றாலும் தயங்காது ஏற்றான்! ஆனால் இன்று இங்கோ நீதியை நிதிகொடுத்து விலைக்கு வாங்கிவிடும் விந்தை மாந்தர்கள் வாழுகிறார்கள் என்பதும் உங்களுக்கும் புரியும்.
தண்டனை நிறைவேற்றும் நாள். அன்று அவன்
உறவுகள் அனைவரும் சிறையில் சாக்கிரட்டிசைப் பார்த்து அழுதனர். உங்கள்
கண்ணீரெல்லாம் என் கருத்து மழையாய் நாட்டில் பொழியட்டும்! எனக்கு
விடைகொடுங்கள் என்றான்! சென்றனர் அனைவரும். இறுதியாக இணைபிரியா நண்பன்
விரைந்தோடி வந்தான். அப்போது மணி 12 ஆவதற்கு 10 நிமிடம் உள்ளது. காவலர்கள்
வந்து நஞ்சுக் குவளையைக் சாக்கிரட்டிசு கையில் கொடுத்தனர். மலர்ந்த
முகத்துடன் வாங்கிக் கொண்டான்.அப்போது வந்திருந்த நண்பன் ” நண்பா உன்
இறுதியான இன்மொழிப் பேச்சைக் கேட்க விரும்புகிறேன்.உன்போன்றவர்களுக்கு
சிறையில் அரை மணி நேரம் சலுகையாகக் கொடுப்பார்கள். அதனால் இன்னும் கொஞ்ச
நேரம் பேசலாமே” என்றான். உடனே சாக்கிரட்டிசு கூறுகிறான்: “என் இனிய நண்பா
உனக்கு மிகமிக அற்ப ஆசை. சரி உன் ஆசைப்படியே அரை மணிநேரம் கழித்து நஞ்சை
அருந்துகிறேன் என்று வைத்துக்கொள். அதற்குள் என் நெஞ்சு வெடித்து நான்
இறந்து விட்டால், ‘கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் நீதியை சாக்கிரட்டிசு
நிறைவேற்றவில்லை என்ற பழிச்சொல் வரலாற்று ஏடுகளில் எழுதப் பட்டுவிடுமே! அது
கூடாது நண்பா” எனக்கூறி முடிப்பதற்கும் மணி 12 ஆவதற்கும் சரியாக இருந்தது.
குடித்தான் குவளை நஞ்சை! முடித்தான் உயிரை.!
அழுதான் நண்பன். உயிர்மூச்சு போகும்
நிலையிலும் தழுதழுத்த குரலில், “அழாதே நண்பா! நான் விதைத்த
விதைகள் இளைஞர்களின் உள்ளத்தில் ஆழப் பதிந்து ஆல்போல் தழைத்து விட்டது.
அதனை அழிக்க எவராலும் முடியாது. நான் விடைபெறுகிறேன் ” எனக்கூறி மண்
பஞ்சணையில் வீழ்ந்தான் வீர மகன் சாக்கிரட்டிசு!
மேற்கூறிய வரலாற்றை நீங்களும்
படித்திருப்பீர்கள். மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரத்தான் எழுதினேன்.
இன்னும் எழுதுவேன் .படிப்பதில் சலிப்பு (bore) ) அடையக்கூடாது என்றே
முடிக்கிறேன்.எப்படி எழுதுகிறீர்கள் என்று கேட்டதால்தான் இப்படி எழுத
நேர்ந்தது .
மேலும் பஃறுளி ஆறு பற்றி
கேட்டுள்ளீர்கள். அதனைத் தேடிக் கண்டிபிடித்து அதன் வரைபடத்தை இதன்
அடியில் சேர்த்து அனுப்பியுள்ளேன் .
(இதுவரை பகுதி 05 முடிய
அனுப்பியுள்ளேன். பகுதி 06 தொடர்ந்து எழுதிக் கொண்டுள்ளேன். அதற்குள்
பல வேலைகள் ஓய்வு என்பது கிடைக்கவில்லை. இடையில்
சோறு-குழம்பு மட்டுமன்றி தொடுகறியாக இருக்கட்டும் என இதனை எழுதினேன்).
உரசிப் பார்த்துவிட்டு ” தங்கமா? முலாம் பூசிய தகரமா?” எனக் கூறுங்கள். நன்றி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக