தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராக

ஆகத்து 3 முதல் 7 வரை

தொடர் மறியல் போராட்டம்!

சென்னை தலைமைச் செயலகம் திருச்சி மாவட்ட ஆட்சியரகம்
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு

  தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், (ஆனி 17, 2046 / சூலை 02, 2015 அன்று) சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.மணியரசன் தலைமையேற்றார்.
  காந்தியப் பேரவைத் தலைவர் திரு. குமரி அனந்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கச் செயற்குழு உறுப்பினர்  திரு. தியாகு, ‘தென்மொழி’ ஆசிரியர் திரு. மா. பூங்குன்றன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிழ்நேயன், மக்கள் கல்வி இயக்கப் பேராசிரியர் பிரபா கல்விமணி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில் குமார், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.ஆ. பிரவீன் குமார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் திரு. பிரின்சு கசேந்திர பாபு, மார்க்சிய இலெனினிய மக்கள் விடுதலை தலைமைக்குழு உறுப்பினர் திரு. அருண்சோரி, மொழியுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. மா. சேகர், உலகத் தமிழ்க் கழகப் பொதுச் செயலாளர் திரு. தா. அன்புவாணன்,  உ.த.க. சென்னை மாவட்டத் தலைவர் திரு. பா. இறையெழிலன், தலைநகர் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் புலவர் கணபதி, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் திரு.செயப்பிரகாசு நாராயணன், தந்தை பெரியார் தி.க. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் திரு. பா. நாகராசன், கல்வியாளர் பேராசிரியர் பி. இயோகீசுவரன், திரு. முகில்வண்ணன் முதலான பல்வேறு அமைப்புப் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
  கூட்டத்தில், தமிழக அரசின் தமிழ்வழிக் கல்விக்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கும், இந்தக் கல்வி ஆண்டில் ஆங்கிலவழிப் பிரிவுகள் செயல்படுத்தப்படாத அரசுப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் கட்டாயம் அப்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டுமெனப் பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டிருப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  தமிழக அரசின் ஆங்கிலவழிக் கல்வித் திணிப்புக்கு எதிராக, வரும் ஆகத்து மாதம் 3ஆம் நாள் தொடங்கி 7ஆம் நாள் வரை, சென்னை தமிழக அரசுத் தலைமைச் செயலகத்திலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பல்வேறு அமைப்புகளின் பங்கேற்புடன் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
  தமிழ்வழிக் கல்வி தொடர்பான குறுநூல் வெளியிடவும், சென்னையிலும் திருச்சியிலும் கருத்தரங்குகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
 சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில், ஆனி 24 – சூலை 9 ஆம் நாள் வியாழன் காலை 10 மணிக்கு,  அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும் செய்தியாளர் கூட்டம் நடத்திப், போராட்ட அறிவிப்பையும், போராட்டத்திற்கான பரப்புரைத் திட்டத்தையும் வெளியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
தங்களன்புள்ள,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்.
kaviri-melaanmai-poaraattam-pe.maniyarasan16