71paddy-damage

தேவதானப்பட்டிப் பகுதியில்

சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை

அறுவடைக்குத்தயாரான நெற்பயிர்கள் சேதம்

 தேவதானப்பட்டிப் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்தன. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, மஞ்சளாறு அணைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது.
  இப்பகுதியில் முதல்நாள் மதியம் வரை சுட்டெரிக்கும் வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே தலை காட்டமுடியாதநிலை இருந்தது. அதன்பின்னர் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. இதனால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் சாய்ந்தன. சில பகுதிகளில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.
  இந்நிலையில் செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் நெல்களை அறுவடை செய்து சாலைகளிலும், கோயில்கள் முன்பாகவும் குவித்து வைத்திருந்தனர். அந்நெல்கள் அனைத்தும் மழையில் நனைந்தன. தேவதானப்பட்டிப் பகுதியில் அறுவடைக்குத்தயாரான நெல்கள், வாழைகள், தென்னைமரங்கள், கரும்புகள் அனைத்தும் இவ்வாறாக இயற்கை இடர்ப்பாடுகளினால் அவ்வப்பொழுது சாய்ந்து உழவர்களுக்குப் பெருத்த பாதிப்பு ஏற்படுகிறது. இதன் தொடர்பாக உழவர்கள், இழப்பீடு பெறவேண்டி மனுக்கள் கொடுப்பதும், தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பதும் வாடிக்கை. ஆனால் இதுவரை இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை.
  எனவே மாவட்ட நிருவாகம் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி உழவர்கள்.
71vaigainaneesu