இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.
இருந்த இடத்திலிருந்தே எதையும் எளிதில், விரைவாக, கூர்மையாகச் செய்து
முடிக்க முடிகிறது. கல்வி, தொழில், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு… என
எண்ணற்ற துறைகளில், வகைகளில் இதன் விரிவையும் ஆழத்தையும் நாம் கண்டு
வருகிறோம். கூகுள், யாஃகூ போன்ற பெரு நிறுவனத்தினர் முதல் தனியர்கள் வரை,
புதிய புதிய பயனுள்ள இணையவழிச் சேவைகளை வழங்கி வருகின்றனர். இவற்றைப் பற்றி
முழுதும் அறிந்தோர் சிலரே. இன்னும் ஏராளமானோருக்கு இப்படி ஒரு சேவை
இருக்கிறது என்பதே தெரிவதில்லை. சேவையைப் பற்றிச் சிறிதளவு தெரிந்தாலும்
அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. எனவே, இத்தகைய பயன்மிகு
இணையவழிச் சேவைகளைப் பலரும் அறியும் வகையில் புதிய போட்டியை
முன்னெடுக்கிறோம்.
வாசகர்கள், தங்களுக்கு நன்கு தெரிந்த,
பயன் மிகுந்த, நம்பகமான இணையவழிச் சேவைகளை எளிய முறையில்
அறிமுகப்படுத்தலாம். ஒரு கட்டுரையில், ஒரு நிறுவனத்தின் ஒரு சேவையையோ
அல்லது பல சேவைகளையோ அல்லது பல நிறுவனங்களின் பற்பல சேவைகளையோ
குறிப்பிடலாம். ஆனால், எந்தச் சேவையைக் குறிப்பிட்டாலும் அதுகுறித்த
முழுமையான செய்திகளையும் அதன் பல்வகைப் பயன்களையும் பயனர் கண்ணோட்டத்தில்
அளிக்க வேண்டும்.
இதன்படி, இந்தப் போட்டி, மார்ச்சு 2015
முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும்
போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு உரூ.100 (நூறு
உரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12
கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு உரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு
வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி
பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் படி,
கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
எழுத்தாளர் வையவன் அவர்கள்,
இந்தப் போட்டியை முன்மொழிந்ததோடு மட்டுமில்லாமல், இதற்கான பரிசுத்
தொகையையும் வழங்க முன்வந்துள்ளார். அவருக்கு வல்லமையின் சார்பில் நன்றிகள்.
எழுத்தாளரும் இணையத்தில் தோய்ந்தவருமான ஐயப்பன் கிருட்டிணன், மாதப் போட்டிக்கான நடுவராக இருந்து, சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கும் எங்கள் நன்றிகள்.
விதிமுறைகள்
- கட்டுரைகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்பது கருப்பொருளே. வேறு உகந்த தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம். ஆனால், பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரை என்பதை மடலில் குறிப்பிட வேண்டும்.
- மாதத்தின் முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை வரப்பெறும் கட்டுரைகள், அந்த மாதத்துக்கான போட்டிக்கு ஏற்கப்பெறும். அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பெறும்.
- போட்டிக்கு அனுப்பப்பெறும் கட்டுரைகள், வேறு எங்கும் வெளிவராத புதிய படைப்புகளாக இருக்க வேண்டும்.
- தேவையான இடங்களில் படங்களையும் சுட்டிகளையும் இணைக்கலாம். காப்புரிமை உள்ள படங்களை இணைக்க வேண்டா.
- கட்டுரைகள், 1500 சொற்களுக்குள் இருப்பது நல்லது.
- போட்டியில் வெற்றி பெறும் கட்டுரையாளர், இந்தியாவுக்கு வெளியே இருந்தால், தமது இந்திய முகவரியை அளிக்க வேண்டும். யார் பெயருக்குக் காசோலை அனுப்பலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
உங்கள் கட்டுரையின் மூலம், உலகின் ஏதோ ஒரு
மூலையில் இருப்பவரும் பயன்பெறக் கூடும். எனவே, நீங்கள் அறிந்த நல்லதொரு
புதிய சேவையை அனைவரும் அறியும் வகையில் எழுதுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக