புதன், 27 ஆகஸ்ட், 2014

மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா (கி.பி. 1014-2014)


மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா (கி.பி. 1014-2014)

ஆடித் திருவாதிரையில்

இராசேந்திர சோழன் பிறந்த நாள் விழா

மாமன்னன் இராசேந்திர சோழன் 1000ஆவது முடிசூட்டு விழா, கங்கை கொண்ட சோழபுரத்தில் மக்கள் வெள்ளத்தோடு சீரோடும்சிறப்போடும் ஆடி 8, ஆடி9, 2045 / 24, 25-சூலை, 2014 நாள்களில் நடைபெற்றது. விழாவில் மாமன்னன் இராசேந்திரன் பற்றிய நூலும் குறுந்தகடும் வெளியிடப்பெற்றன. கருத்தரங்கமும் நடைபெற்றது.
 vizhaa-kanniyam-gangaikondaan02
  கங்கை கொண்ட சோழபுரம் காட்சிகள்
  சூலை ‘கண்ணியம்’ இதழில் மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை, இந்திய அரசும் தமிழக அரசும் இணைந்து நடத்த வேண்டும் என்று இந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் தலையங்கம் தீட்டி அதன் படியை இந்தியத் தலைமையாளருக்கும். தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அனுப்பியுள்ளோம்.இராசராச சோழனுக்கு இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் எடுத்ததுபோல்தலைமையாளரும் முதல்வரும் இராசேந்திர சோழனுக்கு 1000ஆவது ஆண்டு விழாவை மீண்டும் எடுக்க வேண்டும் என்பதை இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக வைப்பதோடு நம்பிக்கையோடும் இருக்கிறோம்.
  இவ்விழாவிற்கு வருகைதந்த பாரதிய சனதா முன்னாள் தலைவர்இல, கணேசன் அவர்களிடம் இம்மண்ணின் மக்கள் சார்பில் செம்மொழி முன்னாள் பொறுப்பு இயக்குநர் செம்மொழி க. இராமசாமி, முன்னாள் கிறித்துவக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் கு, அரசேந்திரன். பொறிஞர் கோமகன். ‘கண்ணியம்’ குலோத்துங்கன் முதலான பலர், தலைமையாளரை அழைத்துவந்து மாமன்னன் இராசேந்திரன் 1000 ஆவது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தோம், ஆவன செய்வதாகவும் கலைபண்பாட்டுத்துறை அமைச்சரிடம் கூறி விழா நடத்த ஏற்பாடு செய்வதாகவும் மகிழ்ச்சியோடு கூறினார். கேட்ட நாங்களும் மகிழ்ச்சியோடு நம்புகிறோம்.
vizhaa-kanniyam-gangaikondaan01
  தமிழன் என்றால் உலகத்தில் மூத்த குடிமகன், தமிழ் மூத்த மொழி என்பது வரலாற்று உண்மைகள் ஆகும்..
  இன்றைய அறிவியல் முன்னேற்றம் காணாத அக் காலத்திலேயே 1000 ஆண்டுகளுக்கு முன்பே. கங்கைவரை படையெடுத்துக் கங்கையை வென்றான், அதன் வெற்றிச்சின்னமாக கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவினான். ஈடு இணையற்ற கடற்படையைக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் சிரீவிசயம், பண்ணை, மலையூர், மாயிருபிங்கம், இலங்கா சோகம், பப்பாளம், தலைக்கோலம், தருமலிங்கம், இலாமுரிதேசம், நக்கவாரம் (நிக்கோபார் தீவுகள்) போன்ற பல நாடுகளை வெற்றிகொண்டான், முதல் வெற்றியின் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் கடாரம் கொண்டான் என்ற ஊரை அமைத்தான், வெற்றியின் நினைவாக வெற்றி கொண்ட சோழபுரம் என்ற ஊரையும் நிறுவினான்.
  இவ்விழாவினை இந்திய அரசும். தமிழக அரசும் கொண்டாடும் என்ற நம்பிக்கையின் முன்னோட்டமாகக் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுவின் சார்பில் மாமன்னன் இராசேந்திர சோழன் குல மரபினராகத் திகழும் பொறிஞர் கோமகன் அவர்களின் பெருமுயற்சியோடுஇப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஊர்ப் பொதுமக்கள் இணைந்து மாமன்னன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழாவைச் சீரோடும் சிறப்போடும் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை நாளான சூலை 24. 25 இம் நாளன்று கொண்டாடினார்கள்.
வாருங்கள் கடல்கடந்தும்
தமிழனின்
இட்சியை நிறுவிய தமிழனைக் கொண்டாடுவோம்,
ஆழைப்பின் மகிழ்வில் விழாக்குழுவினர்
பொதுமக்கள்
‘கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்’
என அச்சிட்ட அழகான அழைப்பிதழ் மூலம் அழைத்திருந்தார்கள்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ள குருகை காவலப்பர் கோவில் ‘மீரா அரங்கில்’ காலை 9.30 மணிக்கு விழா தொடங்கியது.
விழாவின் ஓருங்கிணைப்பாளர் பொறிஞர் இரா.கோமகன் வரவேற்புரை வழங்க. முன்னாள் செம்மொழிப் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் தலைமையில் விழா தொடங்கிக் களை கட்டியது.
பிரெஞ்சு இந்தியவியல் தலைவர் முனைவர் ஏ.சுப்பராயலு அவர்கள் கருத்தரங்க நோக்க உரை ஆற்றினார்.
கங்கை கொண்ட சோழபுரம்
தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் சந்திரமூர்த்தி-’கண்ணியம்’ ஆசிரியர் இம் மண்ணின் மைந்தர் ஆயுதக்களம் ஆ.கோ. குலோத்துங்கன் ‌எழுதிய மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாச் சிறப்பு வெளியீடான ‘கங்கை கொண்ட சோழபுரம்’ நூலைத் தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் கி.சிரீதரன் வெளியிட்டார். செம்மொழி முனைவர் க.இராமசாமி முதல் நூலை பெற்றுக் கொண்டார்.
கரந்தைச் செப்பேடுகள்
தொல்லியல் அலுவலராகப் பணியாற்றிய கிருட்டிணமூர்த்தி எழுதிய ‘கரந்தைச் செப்பேடுகள்’ நூலை அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் சா.சிற்றரசு வெளியிட, சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் கு.அரசேந்திரன் பெற்றுக் கொண்டார்.
 கங்கைகொண்டான் காதலி
   பா. மோகன் எழுதிய ‘கங்கை கொண்டான் காதலி’ என்ற வரலாற்றுப் புதினத்தை அரசு முன்னாள் செயலாளர் கவிஞர் கி, தனவேல் அவர்கள் வெளியிட்டார். செம்மொழி ஆய்வு மைய நிறுவன முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழி க.இராமசாமி பெற்றுக் கொண்டார்.அடுத்த நாள் 1000 இளைஞர்களின் ஆரவாரத்தோடு தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து தீச்சுடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கங்கை கொண்ட சோழபுரம் மாமன்னன் மாளிகையில் பொறிஞர் கோமகன் தீச்சுடரைப் பெற்றுக்கொள்ள. அங்கிருந்து வரிசையாக இளைஞர்கள், பின்னால் 3 யானைகள் என அணிவகுத்துச் சென்றனர். தாரை தம்பட்டக் கலைஞர்களுடன் அழகு செய்யப்பெற்ற ஊர்தியின் முன்னால் இவ்விழாவின் கதாநாயகன் பொறிஞர் கோமகன் வழிநடத்திச் செல்ல. ‘கண்ணியம்’ ஆசிரியர்ஆ.கோ. குலோத்துங்கன் தலைமையில் முன்னாள் துணைவேந்தர் தமிழ்வேந்தர் பொற்கோ, தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஊர்தியில் அமர்ந்தார்கள்.அருகே முன்னைய அரசுச் செயலாளர் கவிஞர் கி.தனவேல், மாநிலத்திட்டக்குழுத் துணைத் தலைவர் சாந்தா சீலா, நாகர்கோயில் ஒழுங்குமுறை ஆணையர் செந்தில்குமார், அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் இல.தியாகராசன் ஆகியோர் ஊர்தியில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கிடையே சோழன் கட்டிய பிரகதீசுவரர் கோயலின் முன்வாயில்வரை ஏறத்தாழ 2 புதுக்கல் தொலைவு அழைத்துவந்து மேடையில் அமரச் செய்தார்கள். மாமன்னன்இராசேந்திரசோழனை அழைத்துவருவது போன்றே மண்ணின் மைந்தர்களையும் அழைத்துவந்தது வரலாற்றுப் பதிவாகும்.
அடுத்துக் கோயிலின் கிழக்குப் பகுதியில் சென்னைப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் பொற்கோ தலைமையில் போற்றக்கூடிய விழா தொடங்கியது.இவ்விழாவை முறைப்படுத்தி, அறிஞர் பெருமக்கள் முன்னை அரசு செயலாளர் கவிஞர் கி. தனவேல் இ.ஆ.ப.,   மதுரை இராசேந்திரன் இ.ஆ.ப., தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம், இந்தியத் தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் கே.டி.நரசிம்மன், கவிஞர் அறிவுமதி.’கண்ணியம்’ ஆ.கோ. குலோத்துங்கன், பேராசிரியர் இல.தியாகராசன் ஆகியோர் இராசேந்திர சோழனின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைத்தனர்.
கங்கைகொண்ட சோழன் பற்றிய குறுந்தகட்டை கவிஞர் அறிவுமதி வெளியிடடார். ‘கண்ணியம்’ குலோத்துங்கன் பெற்றுக் கொண்டார்.
பொற்கோ நிறைவுடையோடு வாணவேடிக்கைகள், நாட்டியாஞ்சலி, தாரை தம்பட்டம் ஆகியன விழாவைச் சிறப்பித்தன.
கங்கை கொண்ட சோழபுர ஊராட்சி மன்றத் தலைவர் என்.பாண்டிய பல்லவராயன் நன்றிகூறக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்
ஆசிரியர் தெரு, கங்கைகொண்ட சோழபுரம்
அரியலூர் மாவட்டம்
பேசி 9443849692
மின்வரி gkcpuramtrust@gmail.com



அகரமுதல41

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக