வியாழன், 20 மார்ச், 2014

மதத்தலங்கள் இடித்து அழிக்கப்படுவதாக அக்கீம் அறிக்கை

மதத்தலங்கள் இடித்து அழிக்கப்படுவதாக  அக்கீம் அனுப்பிய அறிக்கை  பன்னாட்டுஏற்பைப் பெற்றுள்ளது : விசேதாச இராசபட்ச

Submitted by ceditor on Wed, 03/19/2014 - 10:30
அமைச்சரவை  தகுதியில் உள்ள நீதி அமைச்சர் இரவூப் அக்கீம் இலங்கையில் சிறுபான்மை மதத்தலங்கள் இடித்து அழிக்கப்படுவதாக  செனீவாவுக்கு அனுப்பி வைத்த அறிக்கையானது இலங்கை அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட  அலுவல்சார்வ அறிக்கையாக உலகநாடுகளின் ஏற்பைப் பெற்றிருப்பதாக நேற்று  அவையில் தெரிவித்த ஐ.தே.கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர் விசேதாச இராசபட்ச,  இலங்கைக்கு எதிராக  செனீவாவில் மனித உரிமை மீறல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள  முன்மொழிவு தொடர்பில் அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருக்கான எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்கும்  முன்மொழிவு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே ஐ.தே.க.  நா.உ. விசேதாச இராசபட்ச இதனைத் தெரிவித்தார். 
 அவையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் உண்மையிலேயே இடம்பெற்றுள்ளதா அல்லது இல்லையா என்பதைவிட இலங்கையின் இந்த மீறல்கள் இடம்பெற்றதாகவே உலகில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற முன்னணி நாடாக இலங்கை திகழ்கிறது.

ஆனால், நாம் யாரும் இதற்கு முன்னர்  செனிவா சென்று இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்ததில்லை, பேசியதில்லை.

தற்போதைய  அதிபர்  மகிந்த இராசபக்ச அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, எசு.பி திசாநாயக்க என்பவர்கள் என, அன்று  செனிவா சென்று பேசியவர்கள் அனைவரும் தற்போது அரசாங்கத்துடனேயே இருக்கின்றனர்.

இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குற்றச் சாட்டுகளுக்கு தருசுமன் அறிக்கை ஒரு காரணமாக இருக்கும் அதேவேளை இலங்கையில் கோவில்கள், முசுலிம் பள்ளிவாசல்கள், கிறித்துவ தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படுவதாக அமைச்சரவை  தகுதியுள்ள நீதியமைச்சர் இரவூப் அக்கீம் அனுப்பி வைத்த அறிக்கை இன்னுமொரு காரணமாக இருக்கின்றது.

இதனை அக்கீமே வழங்கியுள்ளதாக அதிபரே அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.

எனவே இவற்றுக்கெல்லாம் ஒருபோதும் ஐ.தே.க பொறுப்பாக முடியாது. விரும்பியோ, விரும்பாமலோ இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் தான் ஏற்க வேண்டும்.

அது மட்டுமல்லாது , 18 ஆவது அரசியலைமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றிக்கொள்ள தாம் கொடுத்த ஆதாரத்தினாலேயே அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்ததாகவும் இரவூப் அக்கீம் கூறியுள்ளார்.

தவறான வழியில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக செயற்பட்டமைக்காக அரசு இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

இந்த தவறான போக்குக்கு ஆதரவளித்தவர்கள் முன்னிலையில் அரசாங்கம் தலைகுனிந்துதான் செல்ல வேண்டியிருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக