ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

எளிதில் கணக்காயர் ஆகலாம்!

1,000 ரூபாய் மட்டுமே!

உப்பளத் தொழிலாளர்
களின் கஷ்டத்தை நீக்க, குறைந்த விலையில் நீர் இறைக்கும், "சோலார் மோட்டார் பம்ப்' தயாரித்த, ஜெயராஜ்: வேதாரண்யத்தில், கடல் நீரைப் பயன்படுத்தி, உப்பு தயாரிப்பதே, முக்கிய தொழில். மின் வெட்டாலும், எரிபொருளுக்கான விலை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து செல்வதாலும், பெரிய உப்பள உரிமையாளர்கள் மட்டுமே, மின்சாரத்தில் இயங்கும், "மோட்டார் பம்ப் செட்' மற்றும் டீசலில் இயங்கும், "பம்ப் செட்' மூலம், கடல் நீரை இறைப்பர்.வசதியற்றவர்கள், தினமும் கைகளால் நீர் இறைக்க வேண்டும். அதனால், கைகளில் தோல் உறிந்து, ரத்தம் வழிந்து புண்ணாகி, தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையை தவிர்க்க, குறைந்த விலையில் நீர் இறைக்கும், கருவி உருவாக்க எண்ணம் தோன்றியது.ஒரு ஆராய்ச்சி மைய உதவியுடன், 150 வாட்ஸ் திறனுள்ள சோலார் பேனல், 12 வாட்ஸ் திறனுடன், கார்களில் பயன்படுத்தப்படும், "வைப்பர் மோட்டார்' ஆகியவற்றை ஒருங்கிணைத்து, "சோலார் மோட்டார் பம்ப்'பை தயாரித்தேன். சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால், மோட்டார் நேரடியாக இயக்குவதால், 1,000 ரூபாய்க்கே தயாரிக்க முடிகிறது.உப்பளத் தொழில், பெரும்பாலும் வெயில் காலத்தில் நடைபெறுவதால், சோலார் மோட்டார் பம்ப் பயன்படுத்துவதில், பிரச்னை இருக்காது. நாற்றங்காலுக்கு நீர் இறைத்தல், தொட்டியில் இருக்கும் நீரை நிலத்திற்கு பாய்ச்சுதல் என, விவசாய வேலைகளையும் செய்யலாம். சரியான அளவில், பயிர்களுக்கு நீர் வழங்கும் வகையில் சுழலும் கருவி இருப்பதால், நீர் வீணாவது தடுக்கப்படுகிறது.இந்த மோட்டார், 10 அடி ஆழம் வரை, நீரை இறைக்கும். அதிக ஆழத்தில் நீர் இறைக்க, சோலார் பேனல் மற்றும் மோட்டார்களின் வாட்ஸ் திறனை, அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பது, இதன் கூடுதல் சிறப்பு. விலை குறைந்த சோலார் மோட்டார், உப்பளத் தொழிலாளர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்புக்கு: 95666 68066.

எளிதில் கணக்காயர் ஆகலாம்!

"சார்ட்டட் அக்கவுன்ட்ஸ்' எனும், கணக்காயர் படிப்பு பற்றி, மாணவர்களுக்கு கவுன்சிலிங் தந்து, தேர்வு எழுத வழிகாட்டும், பேச்சி: என், சொந்த ஊர் மதுரை. அப்பா, ஒரு நடைபாதை காய்கறி வியாபாரி. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், குறைந்த மதிப்பெண்களே எடுத்தேன். பிளஸ் 2 வில், குறைந்த மதிப்பெண் எடுத்ததால், கல்லூரியில் அறிவியல் பாடப் பிரிவுகள் கிடைக்காமல், பி.காம்., படித்தேன். எனக்கு, இந்நிகழ்வு திருப்பு முனையாக மாறியதால், நன்கு படித்து, கல்லூரி தேர்வில் முதலிடம் பெற்றேன். கடந்த, 2004ம் ஆண்டு, நாக்பூரில் நடைபெற்ற, அகில இந்திய கணக்காயர் மாணவ கூட்டமைப்பு, என் கணக்கு தணிக்கை பற்றிய ஆய்வு கட்டுரைக்கு, "பெஸ்ட் பேப்பர் பிரெசன்டர்' விருது வழங்கி சிறப்பித்தது.கடந்த, 2007ம் ஆண்டு நடைபெற்ற, கணக்காயர் தேர்வில் கலந்துகொண்டு, முதல் தேர்விலேயே வெற்றி பெற்றேன். தற்போது, சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கிடைக்கும் ஓய்வு நேரங்களில், கல்வி நிலையங்களுக்கு சென்று, கணக்கு தணிக்கை பற்றி நேரடியாக, மாணவர்களுக்கு கவுன்சிலிங் தருகிறேன். கணக்காயராக விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டுவது மட்டுமின்றி, கணக்காயர் தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகளையும், கற்று தருகிறேன்.முதலில், கடினமான படிப்பு என்பதை தூக்கி எறிந்து, மனதளவில் வெற்றி பெறுவோம் என்கிற, உறுதியான தயாரிப்பு வேண்டும். பிளஸ் 2வில், மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற என் தோழியால், கடைசி வரை, இத்தேர்வில் வெற்றிபெற முடியவில்லை.அனைத்து பாடத்தையும் மனப்பாடம் செய்வதை விட, ஒரு பாடத்தை புரிந்து படிப்பதே சிறந்தது. எப்போதும் நேர்மறை சிந்தனையோடு உழைத்தாலே, எளிதில் வெற்றி பெறலாம். வேலை கிடைத்தால் குறைந்தது மாதம், 60 ஆயிரம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக