வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

இலங்கை: போர்க்கொடுமை : ஆவணப்படம் தில்லியில் வெளியீடு

இலங்கை த் தமிழருக்கு நேர்ந்த போர்க்கொடுமை : ஆவணப்படம் தில்லியில் வெளியீடு
புதுடில்லி: இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை மற்றும் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான சானல் 4 தயாரித்த நோ பயர் ஷோன் என்ற ஆவணப்படம் இன்று டில்லியில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் திரையிட்டு காட்டப்பட்டது. இந்த படத்தில் பரபரப்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. ஆம்னெஸ்டி அமைப்பினரின் சார்பில் கெலம் மெக்ரே தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தில் பதைபதைக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. இதில் பிரபாகரன் உள்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து விடுதலைப்புலிகள் ஏராளமானோர் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். மேலும் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்தவர்களை கொடூரமாக சுட்டுக்கொன்றது இலங்கை ராணுவம்.

இது தொடர்பாக ஏற்கனவே சேனல் -4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக ஆணப்படங்களை வெளியிட்டது.கடந்த சில நாட்களுக்குமுன் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் (12), இலங்கை ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு , சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்படத்தினையும் வெளியிட்டு அதிர வைத்தது.


கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியது அம்பலம்

இந்நிலையில் இலங்கை போர் குற்றம் தொடர்பாக சேனல்-4 தயாரித்துள்ள மேலும் ஒரு ஆவணப்படம் இன்று டில்லியில் வெளியிடப்பட்டது. இலங்கையில் ராணுவம் நடத்திய இனப்படுகொலை குறித்த கொடூர காட்சிகள் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருந்தன. அந்த ஆவண காட்சியில் முதலில் ஆவணப்படத்தை எடுத்த இயக்குனர் கெலம்மெக்கரே போர்க்காட்சிகள் குறித்து விளக்கி பேசுகிறார். பின்னர் போரில் இடம் பெயர்ந்த தமிழர்கள் நிர்க்கதியாக திறந்த வெளியில் அவதியுறுவதாக அந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த உடல்களை அப்புறப்படுத்த முடியாமல் கிடந்தன. குண்டுமழை பொழிந்த இலங்கை ராணுவத்தினரால் பீதியடைந்த தமிழர்கள் , அங்கிருந்து கைக்குழந்தைகளுடன் வேறு இடத்திற்கு இடம் பெயர்கின்றனர்.

இன்னும் கண்ணீர் கதறல்கள், ரத்தக்களறிகள் உள்ளிட்ட கோரக்காட்சிகள் , விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்த கர்னல் ரமேஷை பிடித்த இலங்கை ராணுவத்தினர் ஏதோ வாக்குமூலம் வாங்குவதாக ஒரு காட்சி, பின்னர், அவர் முகம் சி‌தைந்த நிலையில் கொல்லப்படுகிறார். பின்னர் புலிகளின் அமைப்பில் இருந்த இசைப்ரியாவை இலங்கை ராணுவம் சீரழித்தத காட்சியும் காணமுடிந்தது. மேலும் இந்த போரில் சர்வதேசம் தடைசெய்துள்ள கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் பதை பதைக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக