வியாழன், 8 நவம்பர், 2012

ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு: மு.க. தாலின்

ஐ.நா. மேற்பார்வையில் ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு: இலண்டன் மாநாட்டில் மு.க. தாலின் வலியுறுத்தல்

First Published : 08 November 2012 02:39 AM IST
ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை மற்றும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் உலகத் தமிழர் பன்னாட்டு தமிழ் மாநாட்டில் அவர் பேசியது:
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி எங்களை அனுப்பியிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக திமுக குரல் கொடுத்து வருகிறது.
ஈழத்தமிழர் பிரச்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மனிதச்சங்கிலிகள், உண்ணாவிரதங்கள், வேலைநிறுத்தம் என பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். 1985-ம் ஆண்டு ஈழப்போர் நடைபெற்ற நேரத்தில் இந்தியாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழர் ஆதரவாளர் அமைப்பை (டெசோ) உருவாக்கினார்.
போருக்குப் பின்னர் ஈழத்தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்காக டெசோ அமைப்பை கருணாநிதி மீண்டும் தொடங்கியுள்ளார்.
12-8-2012-ல் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஈழத்தமிழர்களின் துயரங்கள், பிரச்னைகள் உள்ளடங்கிய 14 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 
இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான மனுவை நவம்பர் 1-ம் தேதி ஐ.நா.விலும், நவம்பர் 6-ம் தேதி ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் வழங்கியுள்ளோம்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தக்க தருணத்தில் நடைபெறும் இந்த மாநாடு ஈழத்தமிழர்களின் பிரச்னைகளின் மீது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க உதவியாக இருக்கும்.
இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களுக்கு சமத்துவம், கண்ணியம், சுயமரியாதை கிடைக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என ஐ.நா.வும், பல உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
ஈழத்தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழத்தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார் ஸ்டாலின்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

1 கருத்து: