வியாழன், 8 நவம்பர், 2012

சிற்றூர்களுக்கும் வேண்டும் நவீன மருத்துவக் கருவி

சிற்றூர்களுக்கும் வேண்டும் நவீன மருத்துவக் கருவி
 
மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வேலு: என் அப்பா, நூலகராகப் பணி யாற்றினார். எனக்கு, மருத்துவராக வேண் டும் என்று ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மருத்துவத் துறை சார்ந்த படிப்பையாவது, படிக்க வேண்டும் என, நினைத்து, "பார்மசி அண்ட் பயோமெடிக்கல்' படிப்பை டில்லியில் படித்தேன். பயிற்சிக்காக, சென்னை புற்று நோய் மருத்துவமனைக்கு வந்தேன். அப்போது தான், மருத்துவத் துறையில் நவீன கருவிகளின் தேவை, பயன்பாடு குறித்து, நுட்பமாகப் புரிந்து கொண்டேன்.
நவீன மருத்துவ வசதிகளுக்காக, அதிகளவில் மக்கள், சென்னைக்கு வருவதை கண்டேன். எனவே, நவீன மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்வதை தொழிலாகவும், சேவை யாகவும் செய்ய வேண்டும் என, முடிவெடுத்தேன். இதற்கான அனுபவத்தைப் பெற, மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்து, வினியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக் குச் சேர்ந்தேன்.அதற்குப் பின், மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், ஏழு ஆண்டுகள் பணியாற்றி, இத்தொழில் குறித்த விவரங்களை, தெளிவாக அறிந்து கொண்டேன். அதன் பிறகே, தனியாக நிறுவனத்தைத் துவங்கினேன்.
என் இலக்கு, மாநகரங்களைத் தாண்டி, இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளாகத் தான் இருந்தன. அவர்களுக்கு நவீன மருத்துவக் கருவிகள் குறித்த தேவையை உணர்த்தினேன்.அடுத்த சில ஆண்டுகளில், நான் ஒப்பந்தம் செய்து வைத்திருந்த சில நிறுவனங்கள் விலகியதால், திடீர் நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும், அதை உந்து சக்தியாகக் கொண்டு, சொந்தமாக கருவிகளைத் தயாரிக்கத் துவங்கினேன். படிப்படியான வளர்ச்சியால், இப்போது, மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில், இந்திய நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறோம். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறோம். நவீன மருத்துவக் கருவிகளின் பயன்பாடு, கிராமப்புறங்களுக்கும் செல்ல வேண்டும் என்பது தான் என் ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக