செவ்வாய், 3 ஜூலை, 2012

புறக்கணிக்கப்படும் உலகக் கோப்பை வட்டாட்ட வீரர்கள்கேரம் விளையாட்டில் உலக கோப்பை வென்ற வீரர்களுக்கு
, மாநில அரசு வழங்கும் பரிசுத்தொகை இன்னும் வழங்கப்படாததால், வீரர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். வெற்றிவாகை:சென்னையின் தெருவோர விளையாட்டு என, கேரம் பற்றி எல்லோரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதே கேரத்தை வைத்து, உலகப் கோப்பை வென்று திரும்பினர், தமிழகத்து இளைஞர்கள். சென்னையைச் சேர்ந்த இளவழகி, ரேவதி, ராதா கிருஷ்ணன் ஆகிய மூவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த, உலக கோப்பை கேரம் போட்டியில் பல பிரிவுகளில் கோப்பைகள் வென்று வந்தனர். இளவழகி இந்த முறையும், உலக கோப்பையின் நடப்பு வீரர் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டார். உடனடியாக விளையாட்டு வீரர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில், அவர்களுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படும் என, மொத்தமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை, இன்று வரை வீரர்களிடம் அளிக்கப்படவில்லை.
கண்ணீர் கதை:கோப்பை வென்று பரிசுக்காக காத்திருக்கும் வீரர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கண்ணீர் கதை ஒளிந்துள்ளது. வியாசர்பாடியைச் சேர்ந்த இளவழகி, நான்கு முறை கேரம் விளையாட்டில் உலக கோப்பை
வென்றிருக்கிறார். ஆனால் இன்று வரை வியாசர்பாடியில் உள்ள குடிசைப் பகுதியில் இவருடைய வீடு இருக்கிறது. அப்பா மீன்பாடி ஓட்டுநர். கேரம் போர்டு வைத்தால், வீடே அடைத்துக் கொள்ளும் அளவிற்கு உள்ளது, அதன் கொள்ளளவு. பழைய இரும்புக் கட்டிலின் கீழே உலக அளவில் வாங்கிய கோப்பைகளை வைத்திருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கேரத்தையே முழுநேர விளையாட்டாக கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருவதால், சாப்பாட்டு பிரச்னைக்கு கவலை இருப்பதில்லை. பெரியமேட்டைச் சேர்ந்த ரேவதிக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில்வங்கியில் வேலை கிடைத்ததால் நிம்மதியாக விளையாட முடிகிறது. மற்ற இருவரின் பாடு, படும் திண்டாட்டம்.
காரணம் தெரியவில்லை:கோப்பை வென்ற ராதாகிருஷ்ணன், ""கேரம் விளையாட்டு எனக்கு உயிர். எனவே சதா அதை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவும் மனைவியும் வேளைக்குச் செல்வதால் வீட்டின் பொருளாதார தேவை, ஓரளவிற்கு குறைந்துள்ளது. தமிழக அரசு, உலகக் கோப்பை வென்றதற்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை வழங்கினால் என் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்'' என்றார். வீராங்கணை இளவழகி, "" எங்களுக்கு வழங்க
வேண்டிய பரிசுத்தொகையை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று இன்று வரை தெரியவில்லை. அத்தொகை வழங்கப்பட்டால் விளையாட்டுத் துறையில் மேலும் சாதிப்பதற்கு உதவியாக இருக்கும்,"" என்றார்.

ஒரு கண்ணில் வெண்ணெய்: இது குறித்து கேரம் வீரர்களை தொடர்ந்து ஊக்குவிப்பவரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான கிறிஸ்துதாஸ் காந்தி கூறியதாவது:ஒலிம்பிக்கில் இல்லாத விளையாட்டான சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்த், உலகப் கோப்பை வென்ற போது தமிழக அரசின் சார்பில்2 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதுவும் மறுநாளே வழங்கப்பட்டது. ஆனால் இளவழகி, ராதாகிருஷ்ணன், ரேவதி ஆகிய மூவரும் பல பிரிவுகளில் உலகப் கோப்பை வென்ற போது பரிசுத்தொகை குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியானது. இரண்டு வருடங்களாகியும் இன்று வரை அதற்கான தொகை அவர்களை சென்று சேரவே இல்லை. இன்று வரை உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்காக அதிகாரிகள் அவர்களை அலைய வைக்கின்றனர். இதற்கு பின்னால், ஏதாவது "உள்' நோக்கம் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. உலகக் கோப்பை வென்ற மூவரும் எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டால் அது, அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரும் ஊக்கமாக அமையும்இவ்வாறு அவர் கூறினார்.

நமது நிருபர்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக