வியாழன், 5 ஜூலை, 2012

இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளின் வினாத்தாட்கள் ஏன் தமிழில் வேண்டும்?இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளின் வினாத்தாட்கள் ஏன் தமிழில் வேண்டும்?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தரவு :  கீற்று
நடுவண் அரசு இந்தியக் குடியுரிமைப்பணிகளுக்கானத் தேர்வுகளை (Civil Services Examination, CSE) ஒன்றியப் பொதுப்பணித் தேர்வாணையத்தின் (Union Public Service Commission, UPSC) மூலம் நடத்தி வருகிறது.
இந்தியக் குடியுரிமைப் பணிகளின் கீழ் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வெளியுறவுப் பணி (Indian Foreign Service, IFS) போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் வருகின்றன.
இது, முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), பிரதானத்தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத்தேர்வு (Interview) என மூன்று கட்டங்களைக் கொண்டது.
முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam):
முதல்நிலைத்தேர்வில் இரண்டு Papers உண்டு. First Paper, General Studies என்கிற பொது அறிவுத் தாள்; Second Paper, Civil Services Aptitude Test (CSAT) என்கிற சிசேட் Paper. இவ்விருத் தாள்களும் கொள்குறி வினா (objective type with multiple choice questions) வடிவத்தில் அமைந்தவை. அதாவது, ஒரு வினாவுக்கு நான்கு விடைகளைக் கொடுத்திருப்பார்கள். அவற்றில், சரியான விடையைக் கண்டுபிடித்து, அதன் விடைக்குறியீடை, அனைவருக்கும் பொதுவான கணினியால் திருத்தப்படக்கூடிய OMR விடைத்தாளில் shade செய்ய வேண்டும்.
நம் பிரச்சினை என்னவென்றால், முதல்நிலைத்தேர்வின் வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் தமிழ் உட்பட இதர தாய்மொழி வழிக்கல்வி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழிலும் வினாத்தாட்களை வழங்க வேண்டும். இதை எளிதாக நடைமுறைப்படுத்தி விடலாம். விடைத்தாள் அனைவருக்கும் பொதுவானது. எனவே, UPSCக்கு வினாக்கள் மொழிமாற்றம் மட்டுமே தேவை.
தமிழிலும் வினாக்களை மொழிபெயர்த்து, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வினாத்தாளில் இணைத்தாலே இப்பிரச்சினை முடிந்து விடும்.http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3595439.ece
2011 ஆம் ஆண்டில் முதல்நிலைத் தேர்வில் தமிழ் மாணவர்களைத் தடுக்க UPSC செய்த சதி:
2010 ஆம் ஆண்டு வரை முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் தாள் optional paper ஆக இருந்தது. இந்த optional paper இல் பாடத்திறமை மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2011 ஆண்டிலிருந்து optional paperக்குப் பதிலாக சிசேட் என்ற தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாள், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட 9 இந்தி மாநிலத்தவர்களையும் எளிதாக உள்ளே கொண்டுவர அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, சிசேட் தாளின் மொத்தமுள்ள 80 வினாக்களில் 50 வினாக்கள் Comprehension வகையைச் சேர்ந்தவை. ஆங்கில மொழியிலும் இந்தி மொழியிலும் ஒரு கதை அல்லது கட்டுரை கொடுத்திருப்பார்கள். அதிலிருந்து கொள்குறி வினாக்களை (objective questions) எழுப்பியிருப்பார்கள். நாம் கதையைக் கவனமாக வாசித்து விடையைக் கண்டுபிடித்து குறியிட வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், இந்தியிலும் மொழிபெயர்த்து வழங்கப்பட்ட இக்கதை, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒன்பது மாநிலத்தவர்களுக்கும் மிக மிக எளிது. இதனுடை மொழிபெயர்ப்பு தமிழிலும் இருந்தால் எவ்வளவு எளிது ஆக இருக்கும் என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
இந்தியைத் தாய்மொழியாகக்கொண்ட 9 இந்தி மாநில மாணவர்களுடன் ஆங்கிலத்தையும் பிறத் தாய்மொழிகளையும் பயிற்று மொழியாகக்கொண்ட மாணவர்கள் போட்டிப் போடவே முடியாத நிலைமை, சதித்திட்டமிட்டு சென்ற ஆண்டு முதல் உருவாக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு வரை இரண்டாம் தாளில் optional paper ஆக ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து அப்ப்பாடத்தின் பாடத்திறமைச் சோதிக்கப்பட்டு வந்தது. தற்போது, optional paper, சிசேட் எனும் வெறும் ஆங்கில-இந்தி மொழித்தாளாக மாற்றப்பட்டு விட்டது. இது சுதந்திரத்திற்குப் பின் வேலைவாய்ப்பில் இந்தியைத் திணிக்கும் ஆதிக்கவாதிகளின் இரண்டாம் கட்டம். 
இதனால் தமிழ் மாணவர்கள் எவ்வாறு விழுந்துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
2010 இல் தமிழ்நாட்டில் தேர்வானவர்கள் - 122
2011 இல் தமிழ்நாட்டில் தேர்வானவர்கள் - 96
2012 இல் தமிழ்நாட்டில் தேர்வானவர்கள் - 72
அதாவது, சிசேட் அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு 122 லிருந்து 96 மற்றும் 72 ஆக குறைந்து வருகிறார்கள். இந்நிலை நீடித்தால் இன்னும் குறைவது திண்ணம். 
பிரதானத் தேர்வு (Main Examination):
பிரதானத் தேர்வில் 9 தாள்கள் உண்டு. அவையாவன,
General Studies Paper I & II, First Optional I & II, Second Optional I & II), Essay Paper, Tamil Language Paper and English Language Paper.
ஆங்கில மற்றும் தமிழ் மொழித்தாள்களைத் தவிர இதர 7 தாள்களின் வினாத்தாள்களும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த 7 தாள்களும் விரிவான விடை (Descriptive) வடிவத்தில் அமைந்தவை. மேலும், இவற்றுக்கான விடைகள் தமிழ் உட்பட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வினாக்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தான் இருக்கும்.
உதாரணமாக, Critically analyze the significance of Portuguese arrival in India? என்ற வினா கேட்கப்பட்டிருக்கிறது என்று வைப்போம். இது ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருக்கும். இதற்கான விரிவான விடையைத் தமிழில் எழுத விரும்பும் மாணவர்கள், ஆங்கிலத்தில் எழுப்பப்பட்ட வினாவிற்கு தமிழில் பொருள் புரிந்து, விடையைத் தமிழில் எழுத வேண்டும். இங்கேயும் தமிழில் எழுதுவோருக்கு முட்டுக்கட்டை இடப்பட்டுள்ளது. எனவே, தமிழிலும் வினாக்களை மொழிபெயர்த்து, நடைமுறையில் இருக்கும் இருமொழி வினாத்தாளில் இணைத்தாலே இப்பிரச்சினை முடிந்து விடும். அப்போதுதான் சம உரிமை கிடைக்கும்.
நேர்முகத்தேர்வு (Interview):
நேர்முகத்தேர்வை 22 மொழிகளிலும் அளிக்கலாம் என்று விதிமுறைகள் இருந்தாலும், இதுவும் திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் நேர்முகத்தேர்வு அளிக்கும் போது, ஒரு குழப்பமும் வருவதில்லை. மாறாக, தமிழில் ஒருவர் நேர்முகத்தேர்வை அளிக்க விரும்பினால், அவருக்கு தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை, UPSC நியமிக்கும். இவர் பெரும்பாலும் Group D ஊழியராக இருப்பார். மணிநேர ஒப்பந்த அளவில் (Time based contract employee) நியமிக்கப்படுவார். இவர் தவறுதலாக மாற்றி பதிலளித்து விட்டால் மதிப்பெண் குறையும். இதைக்கண்டு பயந்து, தமிழில் யாரும் நுழைவுத்தேர்வு கொடுப்பதில்லை. எனவே, தமிழக அரசு தமிழில் நுழைவுத்தேர்வு அளிக்கும் மாணவர்களைக் காக்கும் விதமாக, தமிழக Group I அதிகாரிகள் Panel-ஐ UPSC க்கு பரிந்துரைச் செய்ய வேண்டும். UPSC அவர்களில் ஒருவரை மொழிபெயர்ப்பாளராக நியமிக்கலாம். இதனைத் தமிழக அரசும் UPSC யும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரச்சினை சுருக்கம்:
I.முதல்நிலைத்தேர்வில் தமிழிலும் வினாக்கள் இரயில்வேத் தேர்வு வினாத்தாளைப் போல் வேண்டும்.
II.பிரதானத் தேர்விலும் தமிழிலும் வினாக்கள் இரயில்வேத் தேர்வு வினாத்தாளைப் போல் வேண்டும்.
III.நேர்முகத்தேர்வில், தமிழக அரசு, தமிழில் நுழைவுத்தேர்வு அளிக்கும் மாணவர்களை காக்கும் விதமாக, Group I அதிகாரி ஒருவரை மொழிபெயர்ப்பாளராக நியமித்து UPSC நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக