புதன், 4 ஜூலை, 2012

சாப்பிட த் தூண்டும் மீன் ஊறுகாய்


"சாப்பிட த் தூண்டும் மீன் ஊறுகாய்!'

கடல் உயிரினங்களில் இருந்து, ஊறுகாய், நூடுல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, தூத்துக்குடி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு செயலர் தொம்மை இன்னாசி: நாங்கள் மீன்பிடி தொழில் சார்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவே, நல்ல மீன்களை கண்டுபிடித்து, விலை குறைத்து வாங்குவோம். வாங்கிய மீன்களை சுத்தம் செய்து, தண்ணீரில் வேக வைத்து விடுவோம். மீனின் தலை மற்றும் முட்களை அகற்றிவிட்டு, சதைப் பகுதிகளை மட்டும், ஊறுகாய்க்கு பயன்படுத்துவோம்.மீன் ஊறுகாய்க்கு, முக்கியமாக தேவைப்படும் பொருள், இஞ்சியும், பூண்டும் தான். இவற்றுடன், காய்ந்த மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி மற்றும் கறி மசாலா பொடிகளையும் சேர்த்து, ஊறுகாய் செய்கிறோம்.இதே போலத் தான், இறால் ஊறுகாய், கணவாய் ஊறுகாய், நண்டு ஊறுகாய் தயாரிக்கிறோம். மீன் ஊறுகாய் செய்வதற்கு தயார் செய்த பொருட்களை, அப்படியே நூடுல்ஸ் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். மீன் ஊறுகாய் கலவையை, இடியாப்பம் செய்யும் குழலில் வைத்துப் பிழிந்து எடுத்தால், அது நூடுல்ஸ்.தற்போது, நாள் ஒன்றிற்கு, 50 கிலோ வரை ஊறுகாய் தயாரிக்கிறோம். இந்த அளவை, விரைவில் உயர்த்தி விடுவோம். எங்கள் குழுவில் உள்ள, 20 பேருக்கும், மாதம், 3,000 ரூபாய்க்கு குறையாமல், வருமானம் கிடைக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் சென்னையில் உள்ள சில சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், சப்ளை செய்கிறோம். இப்போது, சென்னையில் இருந்து, புதிய ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, சில தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடியிருக்கிறோம். ஒப்புதல் கிடைத்து விட்டால், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, தயாராக இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக