செவ்வாய், 15 மே, 2012

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

வாழ்வு தந்த பிளாஸ்டிக் பூ மாலை: 


பிளாஸ்டிக் பூ மாலை வியாபாரம் செய்யும் சங்கீதா: என் அப்பா ஆட்டோ டிரைவர். வீட்டில் நான் நன்றாக படிப்பேன். ஆனால், குடும்ப வறுமைக்கு நடுவில் என் திறமை காணாமல் போய்விட்டது. பத்தாம் வகுப்புடன் படிப்பு நின்று போனது. என் அப்பாவின் திடீர் மரணத்திற்குப் பின், கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார் என் அம்மா. மூத்த பெண்ணான எனக்கு 18 வயதிலேயே திருமணம் முடித்தார். என் கணவர், பெயின்டிங் கான்ட்ராக்டராக இருந்தார். இரண்டு குழந்தைகள் பிறந்த பின், வறுமையுடன் வாழ்க்கை ஓடியது. என் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்க்கும் போது தான், எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். வறுமைக்கு, என் அம்மா மூலமாகவே ஒரு வழி கிடைத்தது. அவர் உறுப்பினராக இருந்த மகளிர் சுய உதவிக் குழுவில், பிளாஸ்டிக் பூ மாலை செய்வதற்கான ஒரு நாள் பயிற்சி கொடுத்தனர். அதை எனக்கு கற்றுக் கொடுத்தார். இரண்டே நாளில் கற்றுக் கொண்டதுடன், என் கற்பனையையும் சேர்த்து, பல விதங்களில் செய்ய ஆரம்பித்தேன். பிளாஸ்டிக் பூ மாலை செய்வதற்கான பொருட்களை தரம் மற்றும் டிசைனைப் பொறுத்து, 60 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரையிலான விலையில் வாங்கலாம். அதில், 25 சிறிய மாலைகள் அல்லது 10 பெரிய மாலைகள் செய்யலாம். ஒரு மாலை செய்ய அரைமணி நேரமாகும். சிறிய மாலை ஒன்று, 100 முதல் 500 ரூபாய் வரை விலை போகும். பெரிய மாலையாக இருந்தால், 2,500 ரூபாய் வரை விற்கலாம். இதற்கான மார்க்கெட்டிங்கும் சுலபம் தான். என் பேச்சுத் திறமையால், வாடிக்கையாளர்கள் வட்டம் சீக்கிரமே விரிவடைந்தது. தொழிலை ஆரம்பித்த நான்கு ஆண்டுகளில், இப்போது மாதம், 20 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதிக்கிறேன். என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறேன். ஒரு துயரமான நிலையில் இருந்து வந்த நானே வாழ்க்கையில் ஜெயிக்கும் போது, மற்றவர்களுக்கு இது சாதாரணம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக