புதன், 16 மே, 2012

சொல்கிறார்கள்

விண்வெளிச் சாதனை!

"ரிசாட் - 1' செயற்கைக்கோளின் திட்ட இயக்குனர் வளர்மதி: என் சொந்த ஊர் அரியலூர். அப்பா, பி.டி.ஓ., அலுவலகத்தில் மேலாளர், அம்மா இல்லத்தரசி. எங்கள் வீட்டில், நாங்கள் மூன்று பிள்ளைகள். தமிழ் மீடிய பள்ளியில் படித்துவிட்டு, கிராமத்துப் பெண்ணிற்கே உள்ள மிரட்சியுடன் தான், கோவை அரசுக் கல்லூரியில், பி.இ., எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் சேர்ந்தேன். தாழ்வு மனப்பான்மையை தகர்த்துவிட்டு, திறமையை படிப்பில் காட்டினேன். சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில், எம்.இ., கம்யூனிகேஷன் சிஸ்டம் படிக்கும் போது, என் ஆர்வத்தால், முயற்சியால், ஆங்கில ஆளுமை எனக்குள் வந்திருந்தது. அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றதால், இஸ்ரோவில் வேலை கிடைத்தது. கடந்த 1984ம் ஆண்டு, "சயின்ட்டிஸ்ட் சி' பிரிவில், இஸ்ரோவில் சேர்ந்தேன். அலுவலக வேலை மட்டும் பார்க்காமல், சாட்டிலைட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பயன்பாடுகள் பற்றி அறிந்து கொள்வேன். கடந்த 2002ல், ரிசாட் - 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக இருந்த, ஆர்.என். தியாகி ஓய்வு பெற்றுவிட, பொறுப்பு என்னிடம் வந்தது. சில நேரங்களில், இந்தியா முழுக்க இருந்து, 300 விஞ்ஞானிகள் வரை எங்களுடன் இணைந்து வேலை செய்வர். அவர்கள் அனைவரையும் அரவணைத்து, வேலை வாங்க வேண்டிய பொறுப்பு எனக்கு. ரிசாட் - 1 செயற்கைக்கோள், இயற்கை சேதங்கள், மற்றும் வனங்களில் காணாமல் போகும் விமானங்களைத் தேடும் பணிகளில், முக்கியப் பங்காற்றும். இதில், "மைக்ரோ ரிமோட் சென்ஸ் ஸ்கேனிங்' மற்றும் "மைக்ரோவேவ் சிந்தட்டிக்' எனும் புதிய தொழில்நுட்பம் உள்ளதால், மிக நுட்பமான பாதுகாப்பு வேலைகளுக்கும், இதன் மிக நுண்ணிய புகைப்படங்கள் பயன்படும். இது போன்ற படங்களுக்காக, கனடா போன்ற நாடுகளை நம்பி இருந்த இந்தியா, இனி, இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளுக்கும் உதவி செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக