சென்னை : "முல்லைப் பெரியாறு அணை என்றும் இளமையானது. இந்த அணை பற்றி, கேரள அரசு பரப்பி வரும் கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை' என, மூத்த சிவில் இன்ஜினியர் ராமநாதன் கூறினார்.
இந்திய இன்ஜினியர்கள் அமைப்பின் தமிழக மையம், "முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு' எனும் தலைப்பில், விளக்கவுரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை, சேப்பாக்கத்தில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், மூத்த சிவில் இன்ஜினியரும், இந்திய இன்ஜினியர்கள் அமைப்பின் உறுப்பினருமான ராமநாதன், முல்லைப் பெரியாறு அணை உருவானதன் வரலாற்றை, வீடியோ படங்களுடன் விளக்கி பேசினார்.
அதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை, எரிமலை சாம்பல், மணல், நீர்த்த சுண்ணாம்பு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் கலவையில் உருவாக்கப்பட்ட, "ரோமன் கான்கிரீட்' எனும் கட்டுமான பொருளால் கட்டப்பட்டுள்ளது. ஸ்பெயினில், கார்னல்வோ எனும் இடத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன், ரோமன் கான்கிரீட்டை கொண்டு கட்டப்பட்ட அணை, இன்றும் பழுதடையாமல் உள்ளது.
"அணையில் வியர்வை போன்ற நீர் கசிவு இயல்பானது. இதனால், அணைக்கு பாதிப்பில்லை எனவும், இந்த அணை எவ்வித நில அதிர்வை தாங்கவல்லது' என்று,பென்னி குக்கே தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை என்றும் இளமையானது. இந்த அணை பற்றி, கேரள அரசு பரப்பிவரும் கருத்துக்களை, தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்க வேண்டும். இவ்வாறு, ராமநாதன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக