சனி, 1 அக்டோபர், 2011

மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது



சென்னை : முறிந்த மரத்தை வெட்டக் கோரி, முன்கூட்டியே மாநகராட்சிக்கு சொல்லியும், அலட்சியம் காட்டியதால் வந்தது விபரீதம். லாரி மோதி முறிந்த மரம், பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே விழுந்தது.

வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பெருமாள்; கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகள் கவிதா, 26. இவரது வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையின் மீது, குப்பை லாரி மோதியதில், மரத்தின் அடிப்பகுதி முறிந்து, மரம் கீழே விழத் துவங்கியது. உடனே அப்பகுதி மக்கள், அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும், மாநகராட்சிக்கும் தொடர்பு கொண்டு, முறிந்த மரத்தை முழுவதும் வெட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள், "இதெல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் வராது' என, அலட்சியம் காட்டினர்.

மரமும் கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டே வந்ததைக் கண்ட, பெருமாளின் மகள் கவிதா, அப்பகுதி வழியாக வந்த பொதுமக்களிடம்,"மரம் முறிந்து வருகிறது, அருகே வராதீர்கள்' என, எச்சரித்தபடி இருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மரம், கவிதா மேலேயே விழுந்தது. இதில் கவிதாவின் முகத்தில் அடிபட்டு, நான்கு பற்களும் உடைந்து கீழே விழுந்தன.உடனடியாக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கவிதாவை அழைத்துச் சென்றனர். அங்கு, "மரம் விழுந்து அடிபட்டுள்ளது. போலீசில் புகார் கொடுத்து விட்டு வந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும்' என, மருத்துவர்கள் கூறினர். கவிதாவின் உறவினர்கள், போலீசில் புகார் கொடுத்த பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முறிந்து கொண்டிருந்த மரத்தை, புகார் கொடுத்த போதே வெட்டி இருந்தால், இந்த அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருந்திருக்கும். சம்பந்தப்பட்ட துறையினரின் அலட்சியத்தால், இளம்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதுடன், முகமும் ஒரு பக்கம் வீங்கிக் கொண்டே வருகிறது. திருமண வயதில் உள்ள தனது மகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாவது, முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என, கவிதாவின் தந்தை, மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக