ஞாயிறு, 25 ஜூலை, 2010

தமிழுக்கு செளராஷ்டிரர்களின் பங்களிப்பு


ஸ்ரீமந் நட​ன​கோ​பால நாயகி சுவா​மி​கள்
இலக்கியப் படைப்பாளர்கள் தங்கள் தாய்மொழியில் இலக்கியம் படைப்பது ஒரு சாதாரண விஷயமாகக் கருதப்படும். தங்கள் தாய்மொழியல்லாத வேற்றுமொழியில் இலக்கியம் படைத்திருப்பது சிறப்பானதாகப் போற்றப்படும். மேலும், இவ்வாறு செய்வது அந்த மொழிகளுக்கிடையே இலக்கிய பரிமாற்றம் ஏற்படவும் அந்த இருமொழி பேசுவோரிடையே நல்லுறவு ஏற்படவும் வழிவகுக்கும்.தங்கள் தாய்மொழியல்லாத ஒரு மொழியில் இலக்கியத்தைச் சுவைத்து மகிழும் இலக்கியவாதிகள் அம்மொழியில் இலக்கியம் படைக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகின்றனர்.தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினர், வெளிநாட்டினர் என்று பற்பலர் தமிழில் இலக்கியப் படைப்பை நல்கியுள்ளனர். அந்த வகையில், மொழி சிறுபான்மையினரான செüராஷ்டிர மொழியினரும் தமிழ் இலக்கியத்துக்கு சிறிய பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆம்! அவர்களின் பங்களிப்பு மிகச் சிறியதுதான், ஆனால் பெரிதும் போற்றத்தக்கது.சில நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைத் தங்கள் தாயகமாகக்கொண்டு வாழ்ந்துவரும் செüராஷ்டிரர்கள், தமிழ் இலக்கியத்துக்குத் தங்களது பங்களிப்பைத் தொடங்கி ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. செüராஷ்டிரர் வரலாற்றை எழுதிய பெரும் எழுத்தாளர் கே.ஆர்.சேதுராமன் தமது "நமனை வென்ற நாயகி' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்."தமிழுக்கு அந்தஸ்து இல்லாத அடிமைத்தனமாக வாழ்க்கையை மக்கள் நடத்திய காலத்தில் 1887-இல் சென்னையில், மதுரையின் ஜோதி ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் (1843-1914) தமது தமிழ்ப் பாடல்களை தமிழுணர்வுடன் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பரிசீலித்து அச்சிட்டாரென்றால், அவருடைய தமிழ்ப் பற்றை எப்படிப் புகழ்வது'. ஆதலால் தமிழ் இலக்கியத்தில் செüராஷ்டிரர்களின் பங்கு துவங்கி நூற்றாண்டுகாலம் ஆகிவிட்டது. நாயகி சுவாமிகள் செüராஷ்டிர மகாகவி. இவர் தமிழில் நாமாவளிகள், கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவரைத் தொடர்ந்து கோவிந்ததாசர், விட்டலதாசர், தொ.ரா.பத்மநாபய்யர், கொண்டிய பாகவதர் உள்ளிட்ட பலர் தமிழ் பக்தி இலக்கியத்துக்கு தங்களது பங்களிப்பை நல்கியுள்ளனர்."இனிமை, பழமை, எழில் யாவும் கொண்ட தனிமொழி தண்டமிழே' என, தமிழ் ஆண்டுகள் அறுபதை தமது சிந்தனையில் கண்டு தமிழை அறுபது அடிகளில் 15 வெண்பாக்கள் கொண்டு போற்றிப்பாடிய "கீதா அஷ்டாவதானி' தொ.ரா.பத்மநாபய்யர் (1899-1963) தமிழ்த் தொண்டு விரிவானது. கீதையின் 700 வடமொழி சுலோகங்களை தமிழில் 700 வெண்பாக்களாகப் பாடியுள்ளார். இது தவிர திருவள்ளுவர் நாடகம், வேந்தன் துறவு, தேசிய கீதங்கள் முதலான இவரது இலக்கியப் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது தமிழ்ப்பணி குறித்து பெருமிதம் அடைந்த குன்றக்குடி பெரிய பெருமாள் இவரைப் பற்றிய கட்டுரை ஒன்றில் இவரை வித்தகப் பெரும்புலவர் என்றே குறிப்பிடுகிறார்.கீர்த்தனைகள் படைத்ததன் மூலம் ஸ்ரீநாயகி சுவாமிகள் தமிழ் இசைக்கு தன் பங்களிப்பைப் பெரிதும் நல்கியுள்ளார். இன்று ஏழிசை வேந்தர் என்று புகழப்படும் டாக்டர் டி.எம்.செüந்தரராஜன் என்றும் நிலைத்திருக்கும் முருகன் பாடல்களை தமிழில் பாடியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். தமிழ்த் திரை இசையில் இவர் ஒரு சகாப்தம். இவர் பாடிய திரைஇசைப் பாடல்கள் காலத்தால் அழியாதவை. தமிழ்த்தாய் வாழ்த்தை முதன் முதலில் பாடியது இவரே. தமிழ்த் திரை இசையில் ஏ.எல்.ராகவன் பங்கும் பாராட்டத்தக்கது.மதுரையில் 1901-இல் பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன்  பங்கு கொண்டு தமிழ் வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டவர், மதுரை நகராட்சித் தலைவராக விளங்கிய "ராஷ்டிர பந்து' எல்.கே.துளசிராம். 1928-இல் சட்டசபையில் தீரர் சத்தியமூர்த்தியுடன் பிரிட்டிஷ் அரசால் தடைவிதிக்கப்பட்ட பாரதியார் பாடல்களைத் தமிழ்ப்பற்றுடன் உரத்த குரலில்  பாடினார். தமிழ்ச் சான்றோர்கள் மறைமலையடிகள், திரு.வி.க., சுத்தானந்த பாரதி, பி.ஸ்ரீ.ஆசார்யா இவரது நண்பர்கள். தமது 90 வயதில் அருளிச் செயல் மாலை (திவ்யப் பிரபந்தம்) நூலைப் பதிப்பித்தார். இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி சேதுபதி தங்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சாகித்ய அகாதெமி விருது பெற்ற மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமின் தமிழ் இலக்கியப்பணி மகத்தானது. ஆக, 1887-இல் நாயகி சுவாமிகள் தொடங்கிய செüராஷ்டிரர்களின் தமிழ் இலக்கியப் பணி பரிணாம வளர்ச்சியில் வெங்கட்ராம் மூலம் சாகித்ய அகாதெமி விருது பெறும் வரை வளர்ந்திருக்கிறது.இன்று தமிழ்த் தொண்டு புரிந்துவருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் இரா.மோகன். தமிழில் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.நாயகி சுவாமிகளின் புகழைப் பரப்பும் பணியில் கட்டுரைகள், நூல்கள் எழுதிவரும் இக்கட்டுரை ஆசிரியர் கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி. "சொல்லின் செல்வர்  தா.கு.சுப்பிரமணியன், செüராஷ்டிர சாகித்ய உரையாசிரியர்களான வித்வான் கே.ராமநாதன், நாயகி சுவாமிகள் பாடல்களைத் தமிழில் பெயர்த்த அமரர் ஆர்.வி.சுந்தர்ராவ் கவிஞர் தாடா. சுப்பிரமணியன், தமிழ்க் கவிதை பயிற்சி வகுப்பு நடத்தும் கவிஞர் சுப்பு விசுவநாதன் முதலிய இன்னும் பலரின் பங்கு உள்ளது.தமிழிலிருந்து திருக்குறளையும் பாரதியார் பாடல்களையும் மொழிபெயர்த்த வகையில் முறையே கவிஞர் சங்கு ராம், சுந்தர பாரதி இவர்களது பணி பாராட்டுக்குரியது. செüராஷ்டிர திருக்குறளை உலகளாவிய அளவில் பதிப்பித்த மதுரை சித்தாச்ரம ஆசார்யர் பூஜ்ய ஸ்ரீசித்தநரஹரி குருஜி போற்றுதலுக்குரியவர்.நூற்றாண்டு காலமாக செüராஷ்டிரர்கள் தமிழ்த் தொண்டு புரிந்துவரினும் வெளியுலகம் அறியவில்லை. இத்தனைக்கும் மேலாக தங்கள் குருகுலமாக விளங்கும் "செüராஷ்டிர ஆழ்வார்' ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் வடமொழி அஷ்டோத்திரத்திற்கு இணையாக தமிழில் 108 போற்றிகளை உருவாக்கி அவற்றைச் சொல்லி வழிபடுகிறார்கள் என்றால் இம்மக்களின் தமிழ்ப் பற்றிறைப் பார்த்துக்கொள்ளுங்கள்!
கருத்துக்கள்

சௌராட்டிரர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பொழுது தங்கள் தாய்மொழியிலேயே பேசிக் கொள்ளும் தாய்மொழிப் பற்றும் பாராட்டிற்குரியது. தங்கள் தமிழ்த் தொண்டினால் தமிழர்களாகவே மதிக்கும வகையில் செயல்படுவதும் போற்றற்குரியது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/25/2010 2:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக