Editorial pages லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Editorial pages லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூலை, 2013

நிறம் என்ற திரை நீக்கி...

நிறம் என்ற திரை நீக்கி...

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவர் - 19 வயது - ஒரு பெரிய பென்சில் கம்பெனி மீது நுகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் வாங்கிய கிரேயான் பெட்டியில் தோல் நிறம் என்று குறிப்பிடப்பட்ட கிரேயான், இளஞ்சிவப்பு நிறமாக இருந்திருக்கிறது.
அவர் குறை என்னவென்றால் நம் நாட்டில் பெரும்பான்மை மக்களின் நிறம் இளஞ்சிவப்பு அல்ல. அதனால் அந்த வர்ணனை உண்மைக்குப் புறம்பாக உள்ளதென்றும், மேலும் இளஞ்சிவப்பு நிறத்தை தோல் அல்லது சருமத்தின் நிறம் என்று குறிப்பிடுவது இனத்தின் அடிப்படையில் புண்படுத்துவதாக உள்ளதென்றும், இழிவுபடுத்துவதாக உள்ளதென்றும் கூறி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் முன் அந்த நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி அந்த வர்ணனையை மாற்றி விடுங்களேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இசைவாகப் பதிலளிக்கவில்லை.
இதற்காக ஒரு வழக்கா? இது கவனம் ஈர்க்கும் நடவடிக்கை என்றெல்லாம் முணுமுணுப்புகள் காதில் விழுகின்றன. அவர் வழக்கு ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ தெரியாது. அவர் எழுப்பியிருக்கும் விவாதத்தில் ஆழம் இருக்கிறது என்பதைப் பலவித கோணங்களிலிருந்து பார்க்கலாம். நிறங்களில் உயர்வு எது, மட்டம் எது? இந்த உயர்வு, தாழ்வு அடிப்படையில் பார்த்தோமானால் எப்படி எல்லாம் அதிர்வலைகள் கிளம்புகின்றன.
அமெரிக்காவில் "நீக்ரோ' என்று கறுப்பு நிறம் கொண்டவர்களை அழைக்கக்கூடாது. அது இழிவுபடுத்துவதான சொல். இப்பொழுது அவர்களை "ஆப்ரோ அமெரிக்கர்கள்' என்று அழைக்கிறார்கள். நிறத்தின் அடிப்படையில் அந்த இனமே அடிமையாகிப் போனது. அதை எதிர்த்தவர் ஆபிரகாம் லிங்கன். அதுபோலவே நிறம் சார்ந்த பிரிவினைக் கொள்கையை (அபார்தெய்ட்) எதிர்த்தவர் நெல்சன் மண்டேலா. தன் இன மக்கள் இந்த இழிவிலிருந்து விடுபடப் போராடியவர்.
ஆனால், நம் நாட்டில் வெண்மை ஆள்வதும், கருமை ஒதுக்கப்படுவதும் கண்முன்னால் பல சூழ்நிலைகளில் நடைபெறுகிறது. குழந்தை பிறந்தவுடன் ஆணா, பெண்ணா, அடுத்தது நிறம். அதேபோல திருமணங்களிலும் சிவப்பு நிறத்தவர்களுக்கு மதிப்பெண்கள் கூடும். இந்த நிறம் சார்ந்த பாகுபாடு நம் மனதில் ஊறிப்போன ஒன்று.
மொழி என்பது வலுவான ஆயுதம். நேராக அப்பட்டமாகச் சொல்லாமல் ஒரே சொல்லினால் பல விஷயங்களை மனதில் ஏற்றிவிடலாம். பிறகு தகர்க்க முடியாத அபிப்ராயங்கள் நிரந்தரமாக வேரூன்றிவிடுகின்றன.
""வெளுத்த உள்ளம்'' ""வெள்ளை உடையணிந்த தேவதைபோல'' இவை ஒருபுறம். ""கருத்த அச்சமூட்டும் உருவம்'' மறுபுறம். இதுபோன்ற சொல் சேர்க்கைகள் மேலாக ஒன்று கூறுகின்றன. ஆனால், சொல்லாது அடியில் புதைந்த பொருள் என்ன? வெண்மை என்றால் தூய்மை, நல்லது, விரும்பத்தக்கது, கருமை என்றால் அச்சமூட்டுவது, தீமை. சரியா? நாம் எல்லோரும் சிவந்த நிறம் படைத்தவர்கள் அல்லர், பெரும்பாலும் பழுப்பு அல்லது கருமை சார்ந்த நிறம்தான். அப்பொழுது நாமெல்லோரும் நல்லவர்கள் இல்லையா?
முன்பு வரும் சிறுவர்களுக்கான கதைகள். அங்கே அமரசிம்மன் என்று ஒரு அரசனிருப்பார்,அவர் வெள்ளை நிறமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பார். அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி செய்யும் அமைச்சர் தந்திரசேனன் பழுப்பு நிறமாக இருப்பார். எந்த வயதிலிருந்து இந்த நிற வேற்றுமை விஷம் ஏறுகிறது பாருங்கள்.
அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஒரு பரீட்சை வைத்தார்கள். சின்னக் குழந்தைகள் படிக்கும் வகுப்பு, அவர்களுக்கு சில பொம்மைகளைக் கொடுத்து இதில் எது நல்ல பொம்மை, எது கெட்ட பொம்மை என்று தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். வெள்ளை நிற பொம்மைகளை நல்ல பொம்மைகள் என்றும், கறுப்பு நிற பொம்மைகளை கெட்ட பொம்மைகள் என்றும் குழந்தைகள் பிரித்தார்களாம்.
முதன்முதலாக டாக்டர் கென்னத் கிளார்க் என்பவர் 1939-ஆம் ஆண்டில் இந்தப் பரிசோதனையைச் செய்தார். 1950-ஆம் ஆண்டு மறுபடியும் அவரே இந்தப் பரிசோதனையைச் செய்து பார்த்தார். முடிவு மாறவில்லை.
2005-ஆம் ஆண்டில் கிரி டேவிஸ் என்பவர் திரும்பச் செய்து பார்த்தார். அதே குழந்தைகள் என்ன நிறமாக இருந்தாலும் அதே முடிவு. ஆண்டுகள் மாறலாம், பள்ளிக்கூடங்கள் மாறலாம், குழந்தைகள் மாறலாம். ஆனால், முடிவு மாறவில்லை. ஒபாமா அமெரிக்க அதிபராக இரண்டு முறைதான் வரட்டுமே, இந்த மூடத்தனமான வெறுப்பு இன்னும் போகவில்லை.
இங்கு மட்டும் என்ன, ""கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு'' எல்லாம் சும்மா. அதுவும் கதாநாயகர்களுக்கு மட்டும்தான். கதாநாயகிகள் வெள்ளையம்மாக்களாகத்தான் இருக்க வேண்டும். இது அடிப்படை இலக்கணம். இது மாறாது. திருமணம் நடக்க வேண்டிய வேளையில் சிவப்பு நிறத்திற்கு மதிப்பெண்கள் கூடும் என்றேன். வெள்ளையாக இருந்தால் வேலைகூட கிடைக்குமாம். தோலை வெளுக்க வைப்பேன் என்று உறுதி கூறும் களிம்பு விளம்பரங்களைப் பாருங்கள். இவ்வளவு விளம்பரங்கள் என்றால் எவ்வளவு விற்பனை ஆக வேண்டும். யாரும் தோற்கும் குதிரை மீது பணம் கட்ட மாட்டார்கள். ஒரு பெண் சோகமாக இருப்பாள். பின் அந்த அறிவுரைபெற்ற பின் டக் டக்கென்று மேனி சிவந்துவிடும். பிறகு எல்லாம் இன்பமயம். வேலை கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். எல்லாம் எதனால்? அவள் படித்த படிப்பிற்கல்ல, அவள் தகுதிக்கல்ல, அவள் குணங்களுக்குமல்ல, அவள் நிறத்திற்கு.
ஒரு பிரபல விளம்பரப் படத்தயாரிப்பாளர் இதுபோன்ற விளம்பரங்களை ஒப்புக்கொள்ள மாட்டாராம். பாராட்ட வேண்டிய விஷயம். இந்த நிற பாரபட்சத்திற்குப் பல முகங்கள் உள்ளன. கருப்பு-வெளுப்பு, தாழ்வு-உயர்வு இரண்டும் இரு பாலரிடையே மட்டும் வேற்றுமையை ஏற்படுத்துவதில்லை. இனங்களிடையே வேற்றுமை, ஜாதிகளிடையே வேற்றுமை. எல்லாவற்றிலும் மேலிடம் வெளுப்பிற்கு.
உலகில் எத்தனை நிற மக்கள்! கிழக்காசியாவில் மஞ்சள் தோய்ந்த நிறம், அதிலும் வித்தியாசங்கள். ஆப்பிரிக்காவில் நல்ல கறுப்பு, சற்று லேசான கறுப்பு என்ற மாறுபாடுகள், பிறகு கோதுமை நிறம், வெளுத்த வெள்ளை, சிவந்த வெள்ளை, தந்த நிறம் இப்படி பல நிறங்கள் எல்லாம் தோலளவு ஆழந்தானே! அமெரிக்காவில் கறுப்பர் இன சமத்துவத்திற்காகப் போராடி உயிரை இழந்த மாபெரும் தலைவர் மார்டின் லூதர் கிங் ""எனக்கு ஒரு கனவு'' என்று ஒருமுறை சொற்பொழிவாற்றினார். அதில் சொல்வார் ""எனக்கு ஒரு கனவு - என் நாலு குழந்தைகள் வாழும் இந்நாட்டில் ஒரு நாள் வரும், அன்று அவர்கள் தோலின் நிறத்தின் அடிப்படையில் அல்லாது அவர்களின் குணங்களின் சாரத்தை ஒட்டி மதிப்பிடப்படுவார்கள்'' என்று. அங்கு 17-ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக கறுப்பு நிறத்தவர்கள் அடிமைகளாக வந்திறங்கினார்கள்.
பிறகு பருத்தித் தோட்டங்களில் ஊழியம் புரிய மேலும் வரவழைக்கப்பட்டார்கள். அங்கு இனப்பிரிவுடன் ஆண்டான்-அடிமை என்ற வேறுபாடு இருந்தது. இதேதான் தென்னாப்பிரிக்காவிலும். நம் நாட்டில் நமக்குள்ளேயே இந்த அநீதி.
இங்குதான் ஒரு வயதானவர் தன் பெண்ணை அவள் கரிய திருமேனி கொண்ட மணாளன் அழைத்துச் சென்றதும் ""செங்கண்மால் தான் கொண்டு போனான்'' என்று தன்னைத் தேற்றிக்கொண்டார். அதுபோல மழை முகில்வண்ணம் கொண்ட அரசகுமாரனை ""அய்யோ இவன் வடிவென்பதை எப்படி வர்ணிப்பேன்'' என்று ஒரு கவி வியந்தார். இங்குதான் அமாவாசையை பௌர்ணமி என்று சொன்ன ஒரு பித்தர் பச்சை வண்ணமும் ஆகிய பெருமாட்டியே என்று பாடினார். அது... அது அவர்களுக்கு. நமக்கில்லையா?
எஸ்.பி. சொக்கலிங்கம் எழுதிய "மதுரை சுல்தான்' என்ற புத்தகத்தில் மார்கோபோலோவின் நாட்குறிப்பிலிருந்து பின்வரும் பதிவைப் பார்க்கலாம்.
""கருப்புத்தோல் உடையவர்கள் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார்கள். இதனால் அக்குழந்தை மேலும் கருப்பாக வளரும் என்று நம்புகிறார்கள்.
கடவுள் சிலைகள் அனைத்தும் கருப்பாகத் தோற்றம் அளிக்கச் செய்கிறார்கள். சாத்தான்களுக்கு பனிபோல வெண்மை நிறத்தை உருவமாக வைக்கிறார்கள்''.
வியப்பாக இல்லை? 13 - 14 நூற்றாண்டில் நம் நாட்டுக்கு வந்த ஒருவரின் பதிவு இது.
அப்படியென்றால் வெள்ளை நிறத்தவர்களுக்கு அடிமையான பின்தான் இந்த மாற்றமா? அரசு அங்கீகாரம் பெற்ற நிறம் இதுதான் என்று வெள்ளை முன்னுக்கும், கறுப்பும் பழுப்பும் பின்னுக்கும் தள்ளப்பட்டுவிட்டனவா?
சுதந்திரம்தான் வந்துவிட்டதே. பிறகு அரசு ஆதிக்கத்துடன் நிற ஆதிக்கம் முதலிய ஆதிக்கங்களை ஏன் களையவில்லை. அரசியலமைப்பு சாசனத்தில் ஷரத்து 16(2) மதம், இனம், ஜாதி, பால், பிறப்பு, பிறப்பிடம், உறைவிடம் காரணமாக யாரையும் குறைவுபடுத்தக்கூடாது என்று கூறுகிறது. மேலே கூறியவைகளுடன் நிறமும் சேர்க்க வேண்டும் என்று சில சமயம் தோன்றும். தோற்றம் முக்கிய அங்கம் வகிக்கும் துறைகளில் பணிபுரிபவர்கள் வெளுத்த நிறமாகவே பெரும்பாலும் இருப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள்.
""மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா''
அவர்..... கவி.
கட்டுரையாளர்:
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.

புதன், 12 ஜூன், 2013

வழக்கொழிந்துவிடுமோ நம் நற்றாய்மொழி?

வழக்கொழிந்துவிடுமோ நம் நற்றாய்மொழி?

தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்று வளர்த்த தாய்க்கு இணையானது. அது ஓர் இனத்தின் அடையாளம்; ஒரு தேசத்தின் நாகரிகக் குறியீடு; மக்களின் அறிவுசார்ந்த ஓர் ஒப்பற்ற போர்க்கருவி; மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாக்கும் கவசம்; இதனால்தான் "தாய்மொழி தினம்' உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்லாயிரம் மொழிகள் பயன்படுத்தப்பட்டாலும் உயர்தனிச் செம்மொழிகள் மிகச்சிலவே; கால்டுவெல் போன்ற மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் இலக்கண, இலக்கியங்களை ஆய்ந்து பார்த்து தமிழையும் "உயர்தனிச் செம்மொழி' என்று அறிவித்தனர்; பரிதிமாற் கலைஞர் முதலிய தமிழறிஞர்களும், தமிழ்ச்சங்கங்களும் இடைவிடாமல் பரப்புரையும், தீர்மானங்களும் நிறைவேற்றின. இப்போது இந்திய அரசும் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டுவிட்டது.
செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிகளில் சீனமும், தமிழும்தான் இப்போதும் மக்களிடம் வழங்கிக் கொண்டிருக்கின்றன. "அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத பல மொழிகள் நாள்தோறும் மறைந்து கொண்டிருக்கின்றன' என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ எச்சரிக்கை செய்துள்ளது. "அதில் தமிழ் மொழியும் ஒன்றாகிவிடக் கூடாது' என்பதில் தமிழ் கூறு நல்லுலகம் கவலை கொண்டுள்ளது.
""மெல்லத் தமிழ்இனிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்''
என்றந்த பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசைஎனக் கெய்திட லாமோ?
என்று பாரதி, "தமிழ்த் தாய்' குரலில் பாடினார்.
அன்று ஒரு பேதை உரைத்தது கேட்டு பாரதி ஆத்திரம் கொண்டார். "இன்று அது உண்மையாகிவிடக் கூடாது' என்று அக்கறையோடு உரைப்பவர்களையும் உழைப்பவர்களையும் பாராட்ட வேண்டும். உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்று கூட்டி, தமிழ் வளர்க்கும் பெரியோர்களை ஊக்குவிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு "தமிழ்' தொடர்பாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த இரண்டு அறிவிப்புகளுமே இப்போது பரபரப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கின்றன. தமிழ் ஆர்வலர்கள் இடையே இருவித மனநிலையை உருவாக்கியுள்ளன.
தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1, 6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப்பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது.
மொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றபோது, இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கடந்த மே 10 அன்று வெளியிடப்பட்டது.
அண்மைக்காலமாகக் கல்வி வணிகமயமாகிவிட்டது. இந்த நிலையில் தனியார் மெட்ரிகுலேஷன் என்னும் ஆங்கில வழிப் பள்ளிகள் புற்றீசல்கள்போல புறப்பட்டுவிட்டன. அப்போதும் அரசுப் பள்ளிகள் மட்டுமே அன்று முதல் இன்றுவரை ஆரவாரமின்றி அமைதியாக தமிழ் வழியில் நடத்தி தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.
இன்று மேல்நிலையில் இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் / அறிவியல் மேதை அப்துல் கலாம் முதல், பல்கலைக்கழக வேந்தர்கள் வரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள். இதை அவர்களே வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழை வளர்க்க வேண்டிய தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்ற எண்ணமே தமிழ் ஆர்வலர் இடையே ஏற்பட்டுள்ளது. இது தமிழுக்குள்ள கொஞ்சநஞ்ச இடத்தையும் பறித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தமிழுக்கு மறுபடியும் ஒரு தடங்கல் ஏற்படுவதை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழியைப் புகுத்துவதன் மூலமே இந்தியர்களை அடிமைகளாக்க முடியும் என்று அவர்கள் திட்டமிட்டனர். மெக்காலே அந்தக் கல்வித் திட்டத்தை முன்மொழிந்தார். அதை அக்கால விடுதலைப் போராட்ட வீரர்கள் கடுமையாக எதிர்த்தனர். "பள்ளிகளில் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத்தரல் வேண்டும்' என்ற கருத்தை விடுதலை வீரர் சத்தியமூர்த்தி 1920-ஆம் ஆண்டிலேயே வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"மெக்காலே' போட்ட திட்டமே இறுதியில் வெற்றிபெற்றது. அக்காலத்தில் ஆங்கிலம் படித்த பலர் உடல் நிறத்தால் கறுப்பராகவும், உள்ளத்தின் நிறத்தால் வெள்ளையராகவும் மாறிப் போனார்கள். விடுதலை பெற்ற பின்னரும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றுவரை அரசுப் பொறுப்புகளில் தமிழ்மொழி அமரவும் இல்லை; ஆட்சி செய்யவும் இல்லை. "ஓரடி முன்னால் ஈரடி பின்னால்' என்பதுதான் இதுவரை இருந்துவரும் நிலை; மற்ற இடங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
""தமிழன் காது தோல் காது இல்லை; இரும்புக் காது. எனவேதான் பிறமொழி இசையை இன்னும் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறான்...'' என்று பாரதி மனம் வெதும்பிக் குமுறிய அவல நிலை இன்னும் இங்கே மாறவில்லை.
""மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை'' என்று பாரதிதாசன் புலம்பிய நிலை இன்னும் போகவில்லை.
ஆலயங்களில், "இங்கு தமிழிலும் அருச்சனை செய்யப்படும்' என்ற பெயர்ப்பலகைகள் மட்டுமே ஒட்டடை படிந்து, தூசியோடு காணப்படுகின்றன. செயல்பாடுகள் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. இவற்றை மாற்றியமைக்க ஆன்மிக தமிழ் இயக்கங்கள் எடுத்த நடவடிக்கைகளும் தீவிரமாக இல்லை.
இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ் இருக்கும் நிலையில் தமிழக அரசின் மற்றுமொரு அறிவிப்புதான், மதுரையில் ரூ. 100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை வைக்கப்படும் என்பதாகும். ஒரு பக்கம் தமிழ் இருந்த இடத்தில் ஆங்கிலத்தை அமர்த்திவிட்டு, மறுபக்கம் தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பது என்பது தமிழ் ஆர்வலர்களுக்கு நெருடலாகவே இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் பெருமையையும், புகழையும் உலக அளவில் பரப்பும் வகையில், சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. அதேபோன்று தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத்திறன் ஆகியவற்றை உலகுக்குக் காட்டும் வகையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும்.
மேலும் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த்தாய் பூங்கா உருவாக்கப்படும்.
இத்துடன் அயல்நாட்டுத் தமிழறிஞரான ஜி.யு. போப், இஸ்லாமியப் பெரும்புலவர் உமறுப்புலவர் மற்றும் கணினித் தமிழ் விருது எனப் புதிய விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அத்துடன் திருப்பதி திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை பொன்விழா காண்பதை முன்னிட்டு மூன்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படுவதையும், தில்லி தமிழ்ச்சங்க கோரிக்கையை ஏற்று தோரணவாயில் கட்டுவதற்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படுவதையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியத்தின் பெயரால் ஆய்விருக்கை ஏற்படுத்திட ரூ. 50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும் என்ற அறிவிப்புகளை தமிழ் அமைப்புகள் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைக்க வேண்டுமானால் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆங்கில வழி அறிவிப்பினை அகற்றி, எப்போதும்போல தமிழ் வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
உயர்நிலைக் கல்வி என்பது இன்று ஏழை நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. யாரோ சிலருக்காக எல்லோரும் இந்த ஆங்கிலத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டுமா? அதை ஒரு பாடமாகப் படிக்கட்டும்.
தமிழ்நாட்டில் சமத்துவ சமுதாயம் அமைவதற்கு உண்மையான சமச்சீர் கல்வியே தேவை என்றும், அந்த உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதே இந்த அரசின் நோக்கம் என்றும் தமிழக முதல்வர் பலமுறை அறிவித்துள்ளார். சிறந்த தனியார் பள்ளிகளைப்போல அரசுப் பள்ளிகளிலும் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
எங்கெங்கு தமிழ் வளர்ச்சிக்குத் தடைகள் இருக்கின்றனவோ அவற்றைக் கண்டு களைய வேண்டும். உலகம் எங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குத் தமிழை எடுத்துச்செல்ல வழிவகை காண வேண்டும். அதற்குமுன் நமது நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகச் செயல்படுவதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால் இதுபற்றிக் கடிதம் எழுதி விரைவாக அனுமதி பெற வேண்டும்.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி செலுத்தும்படி சட்டம் இருந்தும் செயல்படவில்லை. அரசுத்துறையில் பணிபுரியும் அனைவரும் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று அண்ணா முதல்வராக இருந்தபோதே ஆணையிடப்பட்டது; இன்றுவரை இது செயல்படுத்தப்படாததற்குக் காரணம் கேட்க வேண்டாமா?
எச்.ஜி. வெல்ஸ், "நான் எதிர்நோக்குவன' என்ற நூல் எழுதியபோது, பிரெஞ்சு மொழியே உலக மொழியாக விளங்கும் என்று எழுதினார். அவர் காலத்திலேயே அது பொய்யாகி விட்டது. ஐரோப்பிய அரசியலில் பிரெஞ்சுக்காரர் செல்வாக்கு பெறக் கூடும் என்றும், அதன் வாயிலாக உலக அரசியலிலும் செல்வாக்கு பெறக் கூடும் என்றும் அவர் எதிர்பார்த்தார். அதற்கு மாறாக உலகில் பல நாடுகளைக் கட்டியாண்ட ஆங்கிலேயரின் ஆங்கில மொழியே உலக மொழியாக விளங்குகிறது.
எனவே அரசாங்கத்தின் துணையில்லாமல் ஒரு மொழி வாழவும் முடியாது, வளர்ச்சியடையவும் முடியாது; தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய்க்குச் சிலை வைக்கட்டும்; விருதுகள் வழங்கட்டும்; உதவித் தொகைகள் அளிக்கட்டும்; அத்துடன் அரசுப் பள்ளிகளில் தாய்த் தமிழே கல்வி மொழியாகத் தொடரட்டும்.

கட்டுரையாளர்:
பணி நிறைவுபெற்ற தமிழாசிரியர்.

சனி, 17 நவம்பர், 2012

புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி!

புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி!

2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உலகளாவிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் அந்நாட்டின் குழு கலந்துகொண்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா மற்றும் நார்வே நாட்டுப் பிரதிநிதிகள், மஹிந்த ராஜபட்ச அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். ஐ.நா-விற்கான அமெரிக்கத் தூதர் எலின் சேம்பர்லைன் டொனாஹோ பேசும்போது, ஐ.நா. மனித உரிமைக் குழு செய்த பரிந்துரைகளை ராஜபட்ச அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது எனச் சாடினார்.
ராஜபட்ச அரசு அமைத்த நீதி விசாரணை நல்லிணக்க ஆணைக்குழு போர்க் குற்றங்களையும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களையும் அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்வதாகவும் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் குற்றம் சாட்டின.
சீனா, ரஷியா, கியூபா ஆகியவை ஐ.நா. மனித உரிமைக் குழுவிற்குள் பிளவு ஏற்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் முயற்சி செய்வதாகக் கூறின. இந்தியா, ஸ்பெயின், ஆகியவை இலங்கை அரசின் மீது மென்மையான விமர்சனங்களை வைத்தன. மேலும், இலங்கையில் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து வெளிப்படையாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்த முன்வருமாறு இலங்கை அரசை வற்புறுத்தின. ஆனால், போரின்போது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளையும் போர்க் குற்றங்களையும் குறித்து இந்தியா வாயைத் திறக்கவேயில்லை.
அதே வேளையில் 1987-ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி 13-வது திருத்தச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தும்படி இந்தியா வேண்டிக்கொண்டது. இலங்கையில் உள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இதன் மூலம் திருப்திப்படுத்தலாம் என்பது இந்தியாவின் கனவு.
ஆனால், இலங்கையில் சிங்களத் தீவிரவாதக் கட்சிகள் 13-வது சட்டத் திருத்தத்தை அடியோடு ரத்து செய்யவேண்டுமென்று வற்புறுத்துகின்றன. இக்கட்சிகள் ராஜபட்ச அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது இந்தியாவுக்குத் தெரியாதா என்ன? கூட்டணிக் கட்சிகளை மீறி ராஜபட்ச ஒருபோதும் செயல்படமாட்டார் என்பது இந்தியாவுக்குத் தெரியும். உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால், இந்த நாடகம் பயன்படுமே தவிர, அதை யாரும் நம்பப் போவதில்லை.
சுதந்திரமான அமைப்பும் இந்தியா உட்பட பல நாடுகளின் நீதிபதிகளைக் கொண்டதுமான டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முற்பட்டபோதும், ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த முயன்றபோதும் அவற்றைத் தனது நாட்டிற்குள் நுழையவோ, விசாரணை நடத்தவோ அனுமதிக்க ராஜபட்ச பிடிவாதமாக மறுத்துவிட்டார். மேற்கண்ட இரு அமைப்புகளும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலைகளும் இழைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தன.
2010-ஆம் ஆண்டு டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்குப் பிறகு அணை உடைந்த வெள்ளம்போல ஏராளமான ஆதாரங்கள் அதனிடம் வந்து குவிந்தன. மிகக் கொடுமையாக நடைபெற்ற அட்டூழியங்கள் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இனப்படுகொலைகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றை விசாரணை செய்ய 2013-ஆம் ஆண்டு ஏப்ரலில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் மீண்டும் கூட இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் சர்வதேச சட்ட நிபுணர்களும் பங்கேற்கிறார்கள்.
போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அறவே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி விவாதித்துப் பல சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளன. அவற்றைக் கீழே சுருக்கமாகத் தந்துள்ளோம்.
போரில் இழைக்கப்படுகிற குற்றங்களைத் தடுப்பதற்காக பல சர்வதேச மாநாடுகள் கூடி இதற்கான சர்வதேசச் சட்ட விதிமுறைகளை வகுத்துள்ளனர். 1899, 1907-ஆம் ஆண்டுகளில் ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி லண்டன் பட்டயத்தை வெளியிட்டன. போர்க் குற்றங்களுடன் அமைதிக்கு எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையும் இந்தப் பட்டயத்தில் இணைக்கப்பட்டன.
இந்த சர்வதேச சட்டவிதிமுறைகளின்படி 2-ஆம் உலகப் போரில் மேற்கண்ட குற்றங்களை இழைத்த ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், படைத்தளபதிகள் ஆகியோர் மீது விசாரணை நடத்த சிறப்புப் போர்க் குற்ற நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
பிற்காலத்தில் யூகோஸ்லாவியா அதிபரான மிலோசேவிக் தனது நாட்டைச் சேர்ந்த கொசவோ மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தார் என்பதற்காக அவருக்கு எதிரான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டது.
1998-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்புக் குழு இப்பிரச்னையில் தலையிட்டு யூகோஸ்லாவியாவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டனம் செய்ததோடு அதற்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதே ஆண்டு செப்டம்பரில் பாதுகாப்புக் குழு கூடி கொசவோ பகுதியிலிருந்து வெளியேறும்படி செர்பிய ராணுவத்திற்கு ஆணையிட்டது. அது மறுக்கப்பட்ட காரணத்தினால் ஐ.நா. சார்பில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் புகுந்தன.
இதன் விளைவாக செர்பிய இராணுவம் பின்வாங்கியது. கொசவோவிலிருந்து அகதிகளாக வெளியேறிய அல்பேனிய முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினார்கள். கொசவோ தனி நாடானது.
யூகோஸ்லாவிய அதிபர் மிலோசோவிக், நேட்டோ படைகளால் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டார். போர்க் குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை நடைபெற்றுவரும் வேளையிலேயே சிறையிலேயே அவர் மரணம் அடைந்தார்.
போஸ்னியோ முன்னாள் அதிபர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
மேலே கண்ட போர்க் குற்றவாளிகளைவிட மிகக்கொடிய போர்க் குற்றவாளி ராஜபட்ச ஆவார். மனித குலத்திற்கு எதிராக மன்னிக்க முடியாத மாபெரும் குற்றங்களைக் கூச்சமின்றி இழைத்தவர் அவர். ஆனால், அவர் இப்போது ஐ.நா. உட்பட உலக நாடுகளை அவமதிக்கத் துணிந்திருக்கிறார். இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்களும் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் அப்பட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அவர் கருதுகிறார். அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவும் சீனாவும் தனக்குத் துணையாக இருக்கும்வரை எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனத் துணிந்திருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல இலங்கையில் ஜனநாயக, மனித உரிமை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒழித்துக் கட்டுகிறார். அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் விட்டுவைப்பதில்லை. ஏராளமான சிங்களப் பத்திரிகையாளர்களும் சிங்களக் கட்சித் தலைவர்களும் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் ஜனநாயகத்தை வேரோடு பறித்து எறிந்துவிட்டு சர்வாதிகார நச்சு மரத்தை ஊன்றி நிறுத்தியிருக்கிறார்.
எடுத்துக் காட்டாக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்புத் துறை உட்பட
79 துறைகளை வைத்திருக்கிறார். அவருடைய சகோதரர்களும் நெருங்கிய உறவினர்களும் மட்டும்தான் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சிங்கள ராணுவத்தின் வெற்றிக்குக் காரணமான தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா போர் முடிந்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். இன்றைக்கும் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமையிலும் அங்கிருந்து வெளியே தப்பிச்செல்ல முடியாமலும் தவிக்கிறார்.
அண்மையில் பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தினைக் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜபட்ச கட்சிக்கு உள்ள பெரும்பான்மையின் காரணமாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி. அரசு நிர்வாகமும் ராணுவம் ஆகியவற்றை முழுமையாக தனது சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டுவந்த ராஜபட்ச இப்போது அந்நாட்டின் நீதித் துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்.
மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், ஊழல் ஒழிப்பு குழு, அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் ஆகியவற்றின் தலைவர்கள் சுயேச்சையாகச் செயல்பட வழி செய்யும் 17ஆவது சட்டத் திருத்தத்தை அடியோடு திருத்தி இந்த அமைப்புகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் அதிபராக யாராக இருந்தாலும் இருமுறைக்கு மேல் வர முடியாது என்ற அரசியல் சட்டப் பிரிவைத் திருத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியில் தொடரலாம் என்ற நிலையை ஏற்படுத்தி நிரந்தர சர்வாதிகாரியாக உருவாக வழிவகுத்துக் கொண்டுள்ளார்.
அவரது சொந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் சந்திரிகாவே கூட உள்நாட்டில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என அஞ்சி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். எதிர்க்கட்சிகள் மிரட்டப்பட்டுச் செயலற்றுக் கிடக்கின்றன. மொத்தத்தில் இலங்கையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.
மொத்தத்தில் ராஜபட்ச தென்னாசியாவின் இட்லருக்கு மேலான இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார்.
ஜெர்மானிய இட்லர் தனது நாட்டிலிருந்த யூதர்களை முதலில் இனப்படுகொலை செய்தான். இதில் தப்பியவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி ஓடினார்கள். பிறகு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினான். இறுதியாக தன்னை எதிர்க்க யாரும் இல்லாமல் செய்து அந்நாட்டின் சர்வதிகாரியானான். மனித குலத்திற்கு எதிராக இட்லர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா உட்பட வேடிக்கை பார்த்தன.
சர்வதேச சங்கம் ஊமை சாட்சியாக நின்றது. இதன் விளைவாக ஐரோப்பாவில் இருந்த மற்ற நாடுகளின்மீது படையெடுத்து ஒவ்வொன்றாகக் கைப்பற்றினான். வேடிக்கை பார்த்த வல்லரசுகள் அதிர்ச்சியடைந்தன. இட்லருக்கு எதிராக அணி சேர்ந்தன. 2-ஆம் உலகப் போர் மூண்டது. இதன் விளைவாக ஐரோப்பா சுடுகாடானது. ஐரோப்பிய மக்கள் சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆளாயினர்.
வரலாற்றில் அழியாமல் பதிந்துவிட்ட இந்த உண்மையை மறந்து இன்றைக்குப் புதிய இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிற ராஜபட்சவுக்கு எல்லா வகையிலும் தோள்கொடுத்து துணை நிற்கும் நாடுகள், தங்கள் தவறை உணரப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.
ஆனால், மகாத்மா காந்தியின் நாடு புதிய இட்லரின் பிறப்புக்கு மகப்பேற்றுத் தாதியாக இருக்கிறதே என்பதுதான் சோகத்திலும் சோகமாகும்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

பொன்விழாக் காணும் சீனத் தமிழ் வானொலி

பொன்விழாக் காணும் சீனத் தமிழ் வானொலி

First Published : 31 Jul 2012 01:05:18 AM IST


சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி 2012 ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் 50 வருடங்கள் ஆகின்றன. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சீனர்கள்தான்.  தமிழ் மொழியில் தேர்ச்சிபெற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்புகளை முறையாகக் கற்றபின் சீன வானொலியில் சேவையாற்றி வருகின்றனர்.  "சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' 1941-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் தொடங்கப்பட்டாலும், தமிழ் ஒலிபரப்பானது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது.  சீனப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு 1960-ல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன் பின் 1963-ல் 20 மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்.  அந்தச் சமயத்தில் அவர்களுக்கு தமிழைக் கற்றுத்தர இலங்கையில் இருந்து மாகறல் கந்தசாமி என்ற தமிழறிஞர் சென்றார். இவரை அடுத்து சின்னத்தம்பி, சாரதா சர்மா, முனைவர் ந. கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர் வல்லுநர்களாகச் சீன வானொலியில் சேவையாற்றினர்.  முதலில் தமிழ் கற்ற அந்த மாணவர்களைக் கொண்டே அந்த முதல் தமிழ் ஒலிபரப்பு 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் அதன் பெயர் "பீகிங் வானொலி' என்று இருந்தது. அதன் பின் "பெய்ஜிங் வானொலி' எனப் பெயர் மாற்றம்பெற்று இன்று "சீன வானொலி' என்று தமிழிலும் "சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.  சீன வானொலி நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமானவை. தொடக்க காலத்தில் அரை மணி நேரமே ஒலிபரப்பி வந்த தமிழ் சேவை 2004 முதல் ஒரு மணி நேரச் சேவையாக உலா வந்தது.  தினமும் இந்திய நேரம் இரவு 7.30 முதல் 8.30 வரையும், மீண்டும் 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.  மீண்டும் அதே நிகழ்ச்சிகள் மறுநாள் காலையும் 7.30 முதல் 8.30 வரையும், 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.  சிற்றலையில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிற்றலை வானொலிப் பெட்டியில் மட்டுமே கேட்க முடியும்.  இவர்கள் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம், சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை மற்றும் கலாசாரத்தினை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.  "தமிழ் மூலம் சீனம்' என்ற பெயரில் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது. மிகவும் எளிதாக, மெதுவாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர்.  அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாடத்திட்டங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எவரும் எளிதாக இந்த நூல்களைக் கொண்டு சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.  நேயர்களையும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் நேருக்கு நேர், நேயர் நேரம், நட்புப் பாலம், உங்கள் குரல், கேள்வியும் பதிலும், நேயர் கடிதம் மற்றும் நேயர் விருப்பம் ஆகிய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகி வருகிறது.  இதுதவிர சீன வானொலி நிலையம் நேயர்களுக்கு ஒவ்வோராண்டும் பொது அறிவுப் போட்டியை வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏராளமான பரிசுகளை வழங்குவதோடு பம்பர் பரிசாக ஒரு நேயரை சீனாவுக்கு இலவசப் பயணமாக அழைத்துச் செல்கின்றனர்.  இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தமிழக நேயர்கள் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  சீன வானொலி தமிழ்ப் பிரிவினில் பணியாற்றும் சீனர்கள் அனைவரும் தங்களது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொண்டு ஒலிபரப்பி வருகின்றனர். சுந்தரம், கலையரசி, மலர்விழி, வாணி, கலைமகள், கலைமணி போன்ற அறிவிப்பாளர்கள் சீன வானொலியின் நேயர்கள் மனதினில் இன்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும் பெயர்கள்.  சீன வானொலிக்கு நேயர்கள் கடிதம் எழுதச் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக, நேயர்களுக்கு இலவச வான் அஞ்சல் கடித உரைகளை அனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம் நேயர்கள் விமர்சனக் கருத்துகளை பைசா செலவில்லாமல் அனுப்பி வருகின்றனர்.  தமிழகத்தில் இந்த வானொலிக்காக "அகில இந்திய சீன வானொலி நேயர் மன்றம்' செயல்பட்டு வருகிறது. இவர்கள் ஒவ்வோராண்டும் நேயர்கள் கூடும் நிகழ்வாக கருத்தரங்கங்களை நடத்துகின்றனர்.  இணையம் மற்றும் கைப்பேசியிலும் சீன வானொலியைக் கேட்கலாம். சீன வானொலி தமிழ்ப் பிரிவை மின் அஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.   
கருத்துகள்

சுந்தரம், வாணி ஆகிய பெயர்கள் தமிழ்ப் பெயர்களா கட்டுரை ஆசிரியரே?
By முத்துக்குமார்
7/31/2012 2:59:00 PM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


முத்துக்குமார் அருமையாகக் கேட்டுள்ளார். கிரந்த எழுத்துகளுடன் உள்ள பெயர்களையே நல்ல தமிழ்ப்பெயர் எனத் தமிழறியாப் பலர் சொல்லிக் கேட்டுள்ளேன்.
 வாழ்நன் வாணன் ஆனது. பெண்பாலாக வாணி ஆனது.  வாணி தமிழ்ச் சொல்லே.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


புதன், 27 ஜூன், 2012

நெருக்கடி நிலை அறிவிப்பு நினைவுகள் - ?? வேடதாரிகள் உணரட்டும்

  எமர்ஜென்சி தின! நினைவுகள்



இந்த ஆண்டு ஜூன் மாத நாளேட்டைப் பார்த்ததும் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் என் நினைவுக்கு வந்தது. 1975 ஜூன் 25-26 நள்ளிரவில்தான், உள்நாட்டு நெருக்கடிகால அறிவிப்பு அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியால் வெளியிடப்பட்டது. அது ஜனநாயக அடிப்படையில் நம்பிக்கை உள்ள எந்த இந்தியனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாத - வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எவராலும் இன்னமும் முழுமையாக ஆராயப்படாத, சுதந்திர இந்தியாவில் அதற்கு முன் ஏற்பட்டிராத இருண்ட கால ஆட்சியின் ஆரம்பம்.
அடிப்படை மனித உரிமைகளுக்கான ஜனநாயகம் - தூய்மையான பொதுவாழ்வு நேர்மையான அரசாங்கம், சுயநலமற்ற தனி வாழ்வு ஆகியவை மகாத்மா காந்தி - ஜவாஹர்லால் நேரு காலத்திய காங்கிரஸ் இயக்கத்தின் இன்றியமையாத நடைமுறைக் கோட்பாடுகளாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் அந்தக் கோட்பாடுகள் இந்திய அரசியலில் மறக்கப்பட்டுவிட்டன அல்லது மறைந்துவிட்டன, 1966 ஜனவரியில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் இறந்ததும் காங்கிரஸ் தலைவர் காமராஜரின் பெரு முயற்சியால் இந்திரா காந்தி பிரதமராக ஆக்கப்பட்டார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் இந்திரா காந்தி பிரதமராக ஆனார். 1969-இல் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவ ரெட்டி நிறுத்தப்பட்டார். ஆயினும், கட்சி முடிவை ஏற்றுக் கொள்ளாமல் பிரதமர் இந்திரா காந்தி, வி.வி.கிரியை ஆதரித்து ""அவரவர் மனசாட்சிப்படி உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்'' என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்து சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தார். இவ்வளவுக்கும் சஞ்சீவ ரெட்டி பெயரை முன்மொழிந்தவரே இந்திரா காந்திதான் என்பதுதான் வேடிக்கை. அதன்பின் 1969 ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு அமைப்புகள் உருவாயின. "கரீபி ஹட்டாவ்' (ஏழ்மையை விரட்டுவோம்) என்ற கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதியை வைத்து, 1971 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி அமைத்தார். 1971 டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ஆதிக்கத்தை எதிர்த்து கிழக்கு வங்காளத்தில் மக்கள் ஆதரவில் பிரமாண்டமான எழுச்சி ஏற்பட்டது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பங்களாதேஷ் சுதந்திர நாடாக ஆனது. அதனால் இந்திரா காந்தியின் தனிப்பட்ட பெருமையும் ஆட்சி அதிகாரமும் மேலும் பலமடைந்தன. அதிகார பலம் மிகவும் அதிகமானால்,, அது தலைக்கேறி எதேச்சதிகாரம் தலையெடுக்கும் என்பார்கள். ஏழ்மை விரட்டப்படுவதற்குப் பதிலாக, ஏழை மக்கள் விரட்டப்பட்டனர். விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சம் - பட்டினி, ஊழல் -ஊதாரித்தனம் - ஆட்சியின் அடக்குமுறை ஆகியவை ஏழை மக்களை வாட்டி வதைத்தன. இந்திரா காந்தியின் அதிகாரத்தைவிட அதிகமான அளவுக்கு எதற்கும் துணிந்த இளவரசர் சஞ்சய் காந்தியின் ஆதிக்கம் சட்டம் - அரசாங்கம் - நீதி ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு கொடிகட்டிப் பறந்து அதற்கு முன் இந்தியா காணாத தனிப்பட்ட ஒரு எதேச்சதிகார ஆட்சியாக மாறியது. சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செயலற்று இருந்த நிலைமையில், இந்தியாவின் நற்காலமாக, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, ஈடு இணையற்ற போராட்ட வீரர், தன்னலமற்ற தியாகி, தூய்மையான மாமனிதர் என்று மகாத்மா காந்தியாரால் பாராட்டப்பட்ட ஜெயப்பிரகாசர் - அதுவரை அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தவர் - இந்திரா காந்தியின் அலங்கோல ஆட்சியையும், ஊழல் கடலில் மிதந்துகொண்டிருந்த அதிகார கும்பலையும் எதிர்த்து நிற்க, மக்கள் கவனத்தையும், மக்கள் சக்தியையும் திரட்டினார். மக்களையும் எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட ஜெயப்பிரகாசர் (ஜே.பி.) எதிர்த்தரப்பு அணியை அமைத்தார். அதில் மூத்த அரசியல் தலைவர்களான ஆச்சார்ய கிருபளானி, மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, சரண்சிங், என்.ஜி.கோரே, எஸ்.எம். ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, மது லிமாயி, வாஜ்பாயி, அத்வானி போன்ற பலர் இருந்தனர். அந்த அணியில் என்னையும் ஜே.பி. சேர்த்து அவ்வப்பொழுது முக்கிய பொறுப்புகளைத் தந்தார். பொதுமக்களின் அவல நிலைமைகளை நாட்டுக்கும் நாடாளுமன்றத்துக்கும் உணர்த்தும் வகையில் 1975 மே 6, தில்லி மாநகரில் செங்கோட்டையிலிருந்து நாடாளுமன்றம் வரை ஒரு மாபெரும் பேரணியை ஜெயப்பிரகாசர் தலைமையேற்று நடத்தினார். அரசாங்கம் போட்ட பல்வேறு தடைகளையும் மீறி, ஐந்து லட்சம் மக்கள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆட்சியின் அரசியல் - பொருளாதார -சமுதாயச் சீர்குலைவுகளைச் சுட்டிக்காட்டி, மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை நிலைநாட்டும் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் ஒரு மனுவைத் தந்தார் ஜே.பி. இந்தியாவில் ஜே.பி. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் மக்களின் வரவேற்பும் எழுச்சியும் வேகமாக வளர்ந்தன. அலைமோதும் மக்கள் கூட்டம் ஆட்சியாளர்களை ஆட்டி வைத்தது. எதிர்பாராத வகையில், 1975 ஜூன் 25}இல் இந்திரா காந்தியின் ஆர்ப்பாட்டத்தை அடக்கிடும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்தது. 1971 பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை சாந்திபூஷண் நடத்தினார். நான்கு ஆண்டுகள் ஆமை நடைபோட்ட அந்த வழக்கில், 1975 ஜூன் 12}ஆம் தேதியன்று, நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அத்துடன் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அலகாபாத் தேர்தல் முடிவு இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பேரிடியாக வந்தது. "பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்பதையொட்டி, அதே ஜூன் 12-ஆம் நாளன்று குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன, அவற்றில், இந்திரா காங்கிரஸ் தோல்வி அடைந்ததுடன், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. இருப்பினும் அதிகார பலத்தையே நம்பி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆளவந்தார்களுக்கு எதையும் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற பிடிவாதம் ஏற்பட்டுவிடும். "இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா' என்ற முழக்கத்துடன், இந்திரா காந்திதான் பிரதம மந்திரியாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆரவாரத்துடன் ஆர்ப்பாட்டங்களை காங்கிரஸ் தலைவர்கள் நடத்தினார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்த 1975 ஜூன் 25-ஆம் தேதி மாலை தில்லி ராம்லீலா மைதானத்தில் ஜே.பி. தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 1975 ஜூன் 25-ஆம் தேதி காலை பத்து மணிக்கு ஜே.பி. இருக்குமிடத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நான் சென்றபொழுது அங்கு மொரார்ஜி தேசாய், சரண்சிங், அசோக் மேத்தா, பிலு மோடி மேலும் சிலர் இருந்தனர். வாஜ்பாய், அத்வானி ஆகியோர் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்துக்காக பெங்களூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அலகாபாத் தீர்ப்பின்படி இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதிலும் கண்டனக் கூட்டங்களை ஜூன் மாத இறுதி சனி-ஞாயிறு நாட்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிலும் பயன் இல்லை என்றால், ஓர் ஒத்துழையாமைப் போராட்டத்தை நடத்தத் தயாராக வேண்டும் என்று ஜே.பி. கருதினார். கடைசியில் கூட்டம் கலையும்பொழுது அசோக் மேத்தா, மாலையில் கூட்டத்துக்குப் போகும்பொழுது செழியனை நான் அழைத்து வருகிறேன் என்றார். அருகிலிருந்த ஜே.பி. இடைமறித்து, "வேண்டாம், செழியனுக்கு நான் ஒரு வேலை வைத்திருக்கிறேன். அலகாபாத் தீர்மானத்தை இன்று இரவு செழியன் படித்துப் பார்த்து குறிப்புகளுடன் வந்தால், நாளை காலை நாம் ஒரு இறுதியான முடிவை எடுக்கலாம்' என்றார். இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தந்த தீர்ப்பு ஐநூறு பக்கங்கள் இருக்கும். இரவு சாப்பிட்டுவிட்டு அந்தத் தீர்ப்பைப் படிக்க ஆரம்பித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. இரவு 3-30 மணி அளவில் என்னிடம் பிலு மோடி பேசினார். ஜே.பி., மொரார்ஜி கைது செய்யப்பட்டனர் என்றார். எந்தக் குற்றங்களுக்காக என்று நான் கேட்டேன். பேச ஆரம்பித்த பிலு மோடி சற்று நிதானித்துக் கொண்டு ""என் வீட்டருகில் ஒரு வேன் - போலீஸ் வேன்தான். எனக்கும் அழைப்பு வந்துவிட்டது, குட்பை'' என்று டெலிபோனை வைத்தார். எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அந்த நிலைமையில் திகைப்பூட்டும் வகையில் என் வீட்டின் வெளியில் ஒரு கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தால் நெருங்கிய நண்பர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நின்று கொண்டிருந்தார். மிகவும் அவசரமாக "ஜே.பி. மற்றும் பலர் கைது செய்யப்படுகின்றனர். உனக்கும் அரஸ்ட் வாரண்ட் வரலாம். உடனே கிளம்பு' என்றார். என் மனைவி பிரேமா எழுந்து வந்தாள். கட்டிய வேட்டி போட்டிருந்த சட்டையுடன், என் உதவியாளர் அன்புமணியையும் அழைத்துக்கொண்டு நான் புறப்பட்டேன். காரில் போகும்பொழுது சோம்நாத் சொன்னார்: இரவு 12 மணிக்கு எமர்ஜென்சி ஆர்டர் போடப்பட்டுள்ளது. 3.30 மணிக்கு ஜே.பி. கைது செய்யப்பட்டார், மேலும் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் கைது ஆகின்றனர். முழுவிவரங்கள் காலையில்தான் தெரியும் என்றார். அப்பொழுது நள்ளிரவுக்குப் பிறகு மணி 3.45. அவருடைய நண்பர் வீட்டுக்கு சோம்நாத் எங்களை அழைத்துச் சென்றார். விடிந்ததும் - ஜூன் 26-ஆம் தேதி காலையில் முதலாவதாகக் கிடைத்த செய்தி: அன்றாடம் வெளிவரும் செய்தித்தாள்கள் எதுவும் கிடைக்காது என்பதுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள், அவைகளை அச்சிட முடியாதபடி, முதல் நாள் இரவில் அவைகளுக்கான மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாம். இந்த மாபெரும் காரியத்துக்கு உத்தரவிட்டவர் சஞ்சய் காந்தி என்று பிறகு தெரியவந்தது. பிறகு இரவுதான் போடப்பட்ட உள்நாட்டு நெருக்கடி கால அறிவிப்பின் விவரங்கள் கிடைத்தன. 1971 டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷ் போரையொட்டி வெளிநாட்டு நெருக்கடி காரணத்தினால் போடப்பட்ட ஒரு பிரகடனம் - அது அமலில் இருக்கும் பொழுதே அதற்கு மேல் உள்நாட்டு விவகாரத்துக்கான மற்றொரு நெருக்கடி உத்தரவு போடப்பட்டுள்ளது. ஒரே காலத்தில் இரண்டு நெருக்கடி உத்தரவுகள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். என் உதவியாளர் அன்புமணி எம்.பி. என்ற முறையில் எனக்குத் தரப்பட்டிருந்த பிஷாம்பர்தாஸ் மார்க், 12 நம்பர் வீட்டுக்குச் சென்று விசாரித்து வந்தார். ஜூன் 25 இரவில் 4 மணிக்குமேல் ஒரு போலீஸ் அதிகாரி வந்து கதவைத் தட்டினாராம். என் மனைவி பிரேமா கதவைத் திறந்தாள். வீட்டுக்கு முன்னால் பத்து காவல்காரர்கள் தாங்கிய ஒரு போலீஸ் வேன் இருந்ததாம். பிறகு தெரிந்த விஷயம் அதேபோல் வீட்டுக்குப் பின்னாலும் காவல்காரர்கள் அடங்கிய மற்றொரு வேன் நிறுத்தப்பட்டிருந்தது என்று. நான் தப்பி ஓடிவிடாமல் கைது செய்யத்தான் அத்துணை ஏற்பாடுகள். போலீஸ் அதிகாரி கையிலிருந்த அரஸ்ட் வாரண்டைக் காட்டி, எம்.பி. செரியனைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார். பிரேமா: செரியன் என்று யாரும் இங்கு இல்லையே!'' ""இது பிஷாம்பர்தாஸ் 12 நம்பர் வீடுதானே?'' ""ஆமாம். ஆனால் செரியன் என்று யாரும் இங்கு இல்லை.'' போலீஸ் அதிகாரி போய் பங்களா முன்னுள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தாராம். திரும்ப வந்து வாரண்ட் சரியாக எழுதவில்லை என்று பையிலிருந்து மற்றொரு காகிதத்தை எடுத்து. ஆங்கிலத்தில் திருத்தமாக என் பெயரை எழுதி ""சரி எங்கே அவர்?'' என்று அதட்டிக் கேட்டாராம். கைது செய்யப்படுபவர் பெயர் எழுதாமல், மாஜிஸ்ட்ரேட் தமது கையெழுத்தைத் தாராளமாகப் பல அரஸ்ட் வாரண்ட்களில் போட்டுத் தந்திருந்தார்.. யாரை வேண்டுமென்றாலும், எப்பொழுது வேண்டும் என்றாலும் ஆட்சியில் இருந்த நெருக்கடி கால அதிகாரிகள் உத்தரவிட, சுலபமாகத் தேவைப்பட்டவர்களை போலீஸôர் கைது செய்துவிடலாம். மீண்டும் கேட்டபொழுது பிரேமா சொன்னது, ""எம்.பி. சென்னைக்குப் போய்விட்டார்'' என்று. போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் புகுந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்தாராம். யாரும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த பழனி என்ற நாய் நிரம்பக் குரைத்ததாம். போலீஸ் அதிகாரிக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. கடைசியாகத் தன் தொப்பியைப் போட்டுக்கொண்டு, மீசையை முறுக்கிவிட்டு போலீஸ் அதிகாரி எச்சரித்தாராம்: இருக்கட்டும் இன்று இந்த எம்.பி. சிக்கவில்லை. நாளை மாலைக்குள் அவரை நீங்கள் திகார் சிறையில்தான் பார்க்கவேண்டும். அன்றைக்கு சோம்நாத் சட்டர்ஜியின் சாமர்த்தியத்தால், நான் தப்பினேன். மறைவாக இருந்த நான் மறுநாள் இரவு விமானத்தில் சென்னை சேர்ந்தேன். அரசமைப்புச் சட்டப்படி நெருக்கடி கால உத்தரவுக்கு அது வெளியிடப்பட்ட ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றாக வேண்டும். அதன்படி 1975 ஜூன் 25 போடப்பட்ட உத்தரவை அங்கீகரிக்க ஜூலை 21 நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அழைக்கப்பட்டது. என்னைக் கைது செய்வதற்கான தில்லி போலீஸôரின் உத்தரவு இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள நான் தில்லி சென்றால், என்னை அங்கு கைது செய்துவிடக்கூடும் என்ற நிலைமை இருந்தது. அதையும் மீறி, நான் ஜூலை 20-ஆம் தேதி இரவு தில்லி சென்று என் வீட்டுக்குச் செல்லாமல் ஒரு சாதாரண ஓட்டலில் தங்கி மறுநாள் காலை 8 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் என் அடையாளச் சீட்டைக் காண்பித்து நுழைந்து, அங்குள்ள நூல் நிலையத்தில் காத்திருந்தேன். 11 மணிக்கு மக்கள் சபைக்குள் நான் சென்று என் இடத்தில் அமர்ந்தேன். நெருக்கடிநிலை உத்தரவைக் கண்டித்து கடுமையாக ஒரு மணி நேரம் பேசி விட்டு, மறுபடியும் மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு, அன்று இரவே சென்னை திரும்பிவிட்டேன். அப்பொழுது இருந்த கடுமையான சென்சார் முறையில் எனது பேச்சுபற்றி எதுவும் இந்திய செய்தித்தாள்களில் வெளியிடப்படவில்லை. ஆனால், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் சிறப்பாக அது வெளியிடப்பட்டதுடன் அதைப் பாராட்டி பிரபல செய்தியாளர்கள் எழுதியதாகவும் எனக்குத் தகவல் வந்தது. எதிர்ப்பு அடங்கிவிட்டதாக ஒருவகை நினைப்பு அரசாங்கத்துக்கு இருந்தது என்றும் என்னைக் கைது செய்தால் வெளிநாட்டுப் பத்திரிகைகள் அதற்கு அதிகமான பாராட்டுதலைத் தரக்கூடும் என்றும் அரசாங்கம் என்னைக் கைது செய்யாமல்விட்டது என்று அப்பொழுது அமைச்சராக இருந்த ஒருவர் நெருக்கடி காலம் தீர்ந்ததும் என்னிடம் சொன்னார். 1977 மார்ச் பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டதும், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சி அமைந்ததும், பதவி ஆசையில் இந்திரா காந்தியுடன் இணைந்த ஜனதா எம்.பி.க்கள் மக்களாட்சியைக் கவிழ்த்ததும், பலரும் அறிந்த நிகழ்ச்சிகளாகும். அதேசமயம் தனிப்பட்டவர்க்கு ஏற்பட்ட நீதிபூர்வமான நெருக்கடியை நாட்டுக்கு ஒரு நெருக்கடியாக மாற்றி, மக்களை அடக்கியாண்ட எதேச்சாதிகாரம், அதையொட்டி எழுந்த ஜெயப்பிரகாசரின் போராட்டம், மக்கள் தந்த பேராதரவின் வெற்றி ஆகியவைகளும் இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. மக்களை அடக்கி எதேச்சாதிகாரம் இடையிடையே வெற்றிபெறலாம், ஆனால், எழுச்சிபெற்ற மக்கள் மீண்டும் வெற்றிபெறுவார்கள் என்பது உலக வரலாற்றில் காணப்படும் உண்மையாகும். 1975 செப்டம்பர் 25-ஆம் தேதி நள்ளிரவில் போடப்பட்ட நெருக்கடி காலம் 1977 மார்ச் 21 வரை நீடித்தது. 37 ஆண்டுகள் கழித்து இப்பொழுது இவற்றை நான் எழுதுவதற்குக் காரணம் எனக்குப் போடப்பட்ட போலீஸ் உத்தரவுகளைவிட நான் பட்ட சோதனைகளைவிட, அபாயங்களைவிட, அதிகமான அளவுக்குப் பல்வேறு அநீதிகள், கொடுமைகளைப் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுதியுடன், நெருக்கடி காலத்தின் கோரதாண்டவத்தை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். 1975-77 நெருக்கடி காலத்தில் அரசாங்கம் இழைத்த அநீதிகளை விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஜே.சி.ஷா விசாரணைக் குழு தந்த அறிக்கையில், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்கள் - சிறைச்சாலைகள் - நீதிமன்றங்கள் ஆகியவைகளிடமிருந்து திரட்டப்பட்ட விவரங்களின்படி, விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர்களின் எண்ணிக்கை 1,10,806. அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன், இந்த ஜூன் 25-ஆம் தேதி நினைவு நாளன்று. அவர்களில் மறைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அஞ்சலி. வாழ்பவர்களுக்கு என் வாழ்த்துகள்! "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்' என்பதற்கு அவசரநிலைச் சட்டத்தையும், நெருக்கடி நிலையையும் மீறி வெகுண்டெழுந்த மக்களின் விடுதலை உணர்வும், மக்களாட்சியும், தனிநபர் சுதந்திரமும் நிலைநாட்டப்பட்ட சம்பவமும் மறக்கவே முடியாத நினைவுகள். எத்தனையோ சீர்கேடுகளுக்கு இடையிலும், இந்தியாவின் வருங்காலம் பற்றிய நம்பிக்கை முற்றிலுமாக அழிந்துவிடாமல் இருப்பதற்கு ஜே.பி. இயக்கத்தின் வெற்றிதான் காரணம். நெருக்கடி காலத்தில் செய்தியாளர்களின் குரல்வளைகளை அடக்கிக் கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் போட்டது. ஆனால், அவற்றை எதிர்த்துப் பத்திரிகையாளர்கள் சிலர் தலை நிமிர்ந்து நின்றனர். அதில் முதன்மையான இடத்தில் ராம்நாத் கோயங்கா இருந்தார்; எக்ஸ்பிரஸ்-தினமணி இதழ்கள் இருந்தன. அப்படி இன்றும் தனித்து நிலை நிற்கும் தினமணி இதழில் இதை எழுதும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  
கருத்துகள்

எமர்ஜன்சி கால கட்டத்தில் இந்திராவையும் ,காங் கட்சியின் நிலை பாட்டையும் வெறுத்தவர்களில் நானும் ஒருவன்.ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதுவே இந்நாட்டிற்கு சிறந்தது என்ற எண்ணம் தோன்றுகிறது. இப்போது உள்ள அரசியல் கட்சிகளும்,அதன் தலைவர்களும், சிறிதும் விட்டுக்கொடுக்காத மாநிலங்களும் அதன் முதல்வர்களும் , பொறுப்பில்லாத ஊடகங்களும் மக்கள் மத்தியில் கலவரம் உண்டாக்கும் போக்கும் , தொட்டதற்கெல்லாம் கலவரம்,மறியல் என்ற போக்கும்,பிரிவினை வாதம் பேசும் கட்சி தலைவர்களையும்(?) இன்று பார்க்கும் போது கடுமையான எமர்ஜென்சி நாட்டிற்கு இன்று அவசியம் தேவைதான் என்றே தோன்றுகிறது. இல்லையேல் நாடு துண்டாடப்படும் என்று தோன்றுகிறது.
By Tamilian
6/26/2012 11:10:00 AM
சுதந்திர போராட்டத்தை நினைவு கூறுவது போல், அவசர கால ஆட்சியையும் நினைக்க வேண்டும். அரசியல் கட்சிகளும், தனி மனிதர்களும் சொந்த லாபங்களுக்கு அரசியல் நடத்துவது வாடிக்கை ஆகி விட்டது. ஜன நாயகம் என்ற பெயரில், உணர்வில்லாத இயக்கத்தை காண்கிறோம். இயற்க்கை வளங்களையும், இதமான காலநிலையும், பழைய கட்டிடங்களும், கோவில்களும் தவிர பெருமையாக பேசி கொள்ள நம் நாட்டில் ஒன்றுமே இல்லை.நாடு என்பதின் தரம் அதன் மக்களை பொருத்தது. சுதந்திரம் வாங்க துணையாக இருந்த கட்சியின் ஆட்சியாளர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பது சிறிய காரியம் அல்ல.
By gopalan
6/26/2012 8:28:00 AM
இன்று கூட அதன் அடிப்படை தத்துவம் மாற வில்லையோ ? எங்கே போகிறோம் என இலக்கு இல்லாத ஜனநாயக பயணம்! ஜெய் ஹிந்த் .
By K .Balasubramanian
6/26/2012 7:51:00 AM


செவ்வாய், 28 டிசம்பர், 2010

raghul gandhi and intellectuals: article in dinamani

எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத கல்வியாளராகவோ  மக்கள் நலத் தொண்டராகவோ இல்லாத இராகுல் வருகை அவர் கட்சிக்கு முதன்மையாகஇருக்கலாம். ஆனால் கல்விச்சாலைகளும் அரசு இயந்திரங்களும் அதற்காகப்பயன்படுத்தப்படுவது தவறல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ராகுல் காந்தியும் தமிழக அறிவு ஜீவிகளும்


இளைஞர் காங்கிரஸôரிடமிருந்து ஓர் அலைபேசி கோரிக்கை வந்தது. தமிழகத்துக்கு இரண்டு நாள் சூறாவளிப்பயணமாக வரும் ராகுல் காந்தி, தமிழக அறிவுஜீவிகளுடன் கலந்துரையாட விரும்புகிறார்; இக் கூட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தலைக்குப்பின் உடனடியாக ஒரு ஒளிவட்டம் ஏற்பட்டது போலத் தோன்றியது. மார்கழி குளிரையும் மீறி உடலில் சுகமான வெப்பம். அண்ணா சாலையில் உள்ள கன்னிமாரா ஐந்து நட்சத்திர விடுதியில், அறிவுஜீவிகள் குவிந்தனர். ஊடகங்களுக்கு அனுமதி இல்லாத கூட்டமாயிருந்தாலும், கணிசமாக மூத்த பத்திரிகையாளர்கள், பல்வேறு சமூக  ஆர்வலர்கள், ஓவியர்கள், காந்தியவாதிகள் என்று சுமார் எழுபது எண்பது பேர் வந்தனர். ராகுல் 55 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், இரண்டு மணி நேர நிகழ்வு, ஒரு மணிநேரக் கலந்துரையாடலாகச் சுருங்கியது. ஒரு மணிநேரமும் நின்றபடியே  எளிமையுடனும், மிகுந்த மரியாதையுடனும் ராகுல் நடந்து கொண்டார். கலந்துரையாடல் நடக்கும் அறையில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால், முன் வரிசைகளில் கிட்டத்தட்ட 30 திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர், நடிகைகள். இவர்கள் நாட்டின் அடிப்படைப் பிரச்னைகள் பற்றி ராகுலுடன் அளவளாவ வந்திருப்பார்களோ என்ற நினைப்பு சற்று மகிழ்ச்சியளித்தது.அறிமுகவுரை முடிந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே, இந்தியாவில் விஸ்வரூபமாகி விட்ட சாராய சுனாமி பற்றி விவாதிக்கப்பட்டது. காங்கிரஸில் லட்சக்கணக்கான இளைஞர்களைச்   சேர்ப்பதில் அதிக ஆர்வம் எடுத்துக்கொண்டுவரும் வேளையில், இந்திய இளைஞர்களின் எதிர்காலம் சாராயத்தில் கரைந்துவிடும் ஆபத்து உள்ளது. 1947-ல் உள்ள நிலை வேறு, 21-ம்  நூற்றாண்டில், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் வேறு. மலேரியா, காசநோய், ஊட்டச்சத்துக் குறைபாடு என்று காலங்காலமாக உள்ள ஆரோக்கியப் பிரச்னைகள் சிறிதும் குறையாத நிலையில் வாழ்க்கைமுறை நோய்கள் பெரிய அளவில் இந்திய இளைஞர்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் வரைமுறையில்லாமல் அதிகரித்து வரும் மதுநுகர்வு மிகமுக்கிய பங்காற்றுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதனால் மிகப்பெரிய  பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்று எடுத்துச் சொல்லப்பட்டது.யாருடைய தீவிரவாதம் மிக அபாயகரமானது என்று பேசி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நீங்கள், மது வியாபாரிகள் தான் இன்றைக்கு இந்திய மக்களுக்கு எதிரான உண்மையான  தீவிரவாதிகள். இவர்களது பிடி, சட்டமன்றங்கள் முதல் நாடாளுமன்றம் வரை இறுகியுள்ளது, இந்தச் சாராய தீவிரவாதத்தை வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுடன், மாநில அரசுகளும் இணைந்து கட்டவிழ்த்து விட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் மாநில அரசே நேரடியாக இலக்குவைத்து சாராய வியாபாரம் செய்வதை ஆதரிக்கிறீர்களா என்று ராகுல் காந்தியிடம் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, ""ஆதரிக்கவில்லை'' என்று தெளிவாகவே பதில் கூறினார். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்து கொள்ளும்போது, அது சாராய வியாபாரிகளுக்கு நல்ல வேட்டைக்களமாக அமைகிறது. ஆனால், மக்களுக்கோ, நோயும், உடல் முடக்கமும், சாவும்தான் பிரதிபலனாகக் கிடைக்கிறது. இன்றைக்கு மதுநுகர்வை ஒழுக்க ரீதியாகப் பார்க்காமல், மிகப்பெரிய  சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும். அதனால், எய்ட்ஸ், புகையிலை போன்றவற்றுக்கு எதிராகப் போர் தொடுத்திருப்பது போன்று, மத்திய, மாநில சுகாதாரத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த மதுக்கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கொண்டுவந்து, மதுவுக்கு எதிராகத் தீவிரமாகப் போர் தொடுக்க வேண்டும் என்று விளக்கியபோது, சொல்வதைக் கூர்ந்து கவனித்தார் ராகுல். மதுவை ஒரு சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும் என்பதை ஆமோதித்த ராகுல், அதே வேளையில் தனிமனிதரைக் குடிக்காதே என்று அறிவுரை கூற முடியாது, இது அவரவர் விருப்பம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இது எனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என எடுத்துக்கொண்டாலும், குழந்தைத் திருமணத்தை மாவட்ட ஆட்சியரே முன்னின்று தடுத்து நிறுத்துகிறாரே, அப்படியிருக்க, தமிழகமெங்கும் பள்ளிகளுக்கு அருகிலேயே இருக்கும்  டாஸ்மாக் கடைகளில், 13 வயது மாணவர்கள்கூட சரக்கு அடிக்கும் நிலையில், இதை  அவரவர் விருப்பம் என்று விட்டுவிடலாமா என்று ராகுவிடம் விவாதிக்க நேரம் இடம் கொடுக்கவில்லை. 1993-ம் ஆண்டிலேயே  மனிதக்கழிவை மனிதன் அகற்றுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வந்திருந்தாலும், நடைமுறையில் பல்பிடுங்கிய பாம்பாகவே கடந்த 17 ஆண்டுகளாக இச்சட்டம் காட்சியளிக்கிறது. பாதாளச் சாக்கடை வேலை போன்ற அவலங்கள் அதிகரித்துள்ள நிலையில், 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு ஏற்ற, நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய சட்டம் ஒன்றை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர ராகுல் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று, மத்திய அரசு நிதி ஒதுக்கி, மாநில அரசால் நடைமுறைப் படுத்தப்படும்  ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என்பது இன்றைக்கு நகர்ப்புறத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் உதவும் வகையில் அமல்படுத்தப்படாமல், சேரி மக்களின் தலைக்கு மேலே தொங்கும் கூரிய கத்தியாகிவிட்டது. காண்ட்ராக்டர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய ஆதாயமாகவும், நகர்ப்புற ஏழைகள், நகருக்கு வெளியே  உள்நாட்டு அகதிகளாய் தனிமைப்படுத்தப்பட்டு அழிந்தொழியும் திட்டமாகவும் மாறிவிட்டது. ஒரு பக்கம் கல்வி அடிப்படை உரிமை என்று பேசிக்கொண்டு, மறுபுறம் ஏழை தலித் குழந்தைகளுக்குக் கல்வி அறவே மறுக்கப்படும் நிலையை, இந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கி வருகின்றன. ஆதலால், மத்திய அரசு, மாநில அரசுடன் இதுபற்றிக் கலந்து பேசி, இதை நன்மை பயக்கும் திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. மாற்றுப்பாலினத்தார், திருநங்கைகள் ஆகியோருக்காக, தமிழக அரசு வாரியம் ஒன்று அமைத்துள்ளது. இதனால் உடனடியாகப் பெரிய நன்மை விளையவில்லை என்றாலும், ஒரு நல்ல துவக்கம் ஏற்பட்டுள்ளது. அரசின் அங்கீகாரம் இந்த மக்களுக்குக் கிடைத்துள்ளது. இதைப்போன்று இந்தியா முழுவதுமே மற்ற மாநிலங்களிலும், கொண்டு வர வேண்டும் என்று ராகுலிடம் கூறப்பட்டது. மாற்றுப் பாலினத்தாரின் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் முற்போக்காக நடந்து கொள்ள வேண்டும். இளம்வயதுடைய மாற்றுப் பாலினத்தாரின் முன்னேற்றத்திலும், உரிமைகளிலும், ராகுல் அதிக  ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாற்றுப்பாலினப் பிரதிநிதி கேட்டுக்கொண்டபோது, அதை ஏற்றுக்கொண்டார் ராகுல்.இந்தியா முழுவதும் விளைநிலங்கள், வேகமாக வீட்டுமனைகளாவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 20 ஆண்டுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால், விளைநிலங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கும் வகையில்  சட்டம் இயற்றி, அவற்றைச் சீரழியாமல் பாதுகாப்பது மிக அவசர அவசியம். இல்லையென்றால், மாவோயிஸ்டுகள் போன்ற ஆயுதப்  போராளிகள் இந்தியா முழுவதும் பரவி விடுவார்கள் என்று ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.விடுதலைப்புலிகளுக்காக நான் பரிந்து பேசவில்லை என்றாலும், இலங்கையில் போர்  உச்சகட்டத்தை நெருங்கிவிட்டிருந்த நிலையில், இந்திய அரசு, அப்பாவி இலங்கைத் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று ஒரு பெண்மணி மிக அழுத்தமாகக் கூறினார்.ஆனால், தானும், காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய அரசும் போரின் போது இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல்களைப் பலமுறை கண்டனம் தெரிவித்துப் பேசியிருக்கிறோம். போருக்குப் பின்னர், தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வதற்கும், வீடுகள், ரயில்பாதைகள்  போன்றவற்றை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு தாராளமாக நிதிஉதவி செய்துள்ளது என்றும் ராகுல்காந்தி கூறினார்.இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்  விதமாக, பலர் தங்கள் கருத்துகளை சரமாரியாகப் பதிவு செய்தனர். இலங்கையில் நடந்தவற்றை மனித உரிமை மீறல்கள் என்று கருதுவது சிறிதும் நியாயமற்ற கூற்று. அங்கு நடந்து முடிந்தது மிகப்பெரிய இனப்படுகொலை. அதற்கான பல ஆதாரங்கள் வெளி வந்துள்ளன என்று ஒருவர் குரலெழுப்பினார். குழுமியிருந்தவர்களின் உண்மையான உணர்வுகள் அழுத்தம் திருத்தமாகவே அவருக்குப் புரியவைக்கப்பட்டிருந்த நிலையில், இனிமேல், இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதாக உறுதியளித்துச் சென்றார் ராகுல். அவரது எளிமையான மனம் திறந்த நடவடிக்கைகளை உண்மையான ஒன்று என்று ஒரு சாராரும், நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தும் முயற்சி அவ்வளவுதான் என்று மற்றொரு சாராரும் கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.மக்கள் பிரச்னைகளைப் பேசப் போகிறார்கள்  என்று எண்ணியிருந்த நிலையில், திருட்டு விசிடி தொந்தரவாலும், காப்பிரைட் தொடர்பான பிரச்னையாலும், திரைப்படத் தொழிலுக்கு முழுக்குப் போடவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறித் தங்கள் கல்லாப்பெட்டிப் பிரச்னைக்கு மனுப்போடத் தொடங்கினர் திரைப்படத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும். மனு அளித்தால், உரிய அமைச்சரிடம் கொண்டு சேர்க்கிறேன் என்று சமாதானம் கூறிய ராகுலிடம், மேலும் மேலும் திரைப்படத் துறையினர் அழுத்தம் கொடுத்ததால், சரி, தில்லியில் வந்து சந்தியுங்கள் என்று கூறினார் ராகுல்.இப்படியாக, விவாதத்துக்கான நேரம் ஒரு மணிநேரமாகக் குறைந்ததாலும், திரைப்படத்துறையினரின் குறுக்கீடுகளாலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பெரும்பாலான அறிவுஜீவிகள்  ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது. மாலை நேரம் வீட்டுக்கு வந்து, தொலைக்காட்சியைப் பார்க்க நகர்ந்தபோது, அண்மைச் செய்தி ஒன்று மீண்டும் மீண்டும் வந்து போனது.கோலிவுட்டுடன்  ராகுல் காந்தி  சந்திப்பு. திரைப்படத்துறையினர் மகிழ்ச்சி. அதுவரை, தலைக்குப் பின்னால் இருந்ததுபோலத் தோன்றிய ஒளிவட்டம், திடீரென்று மறையத் தொடங்கியது. அதோடு, ஜன்னலுக்கு வெளியே மக்கள் முகம் அலைமோதும் பொதுவெளியில் இருளும் வேகமாகக்  கவ்வத் தொடங்கியது.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

இதுவா உண்ணாவிரதம்?

காந்தி  வழியில் உண்ணா நோன்பு இருந்த திலீபனுக்கு நேர்ந்த கதியை அறிந்தவர்கள் உண்மையான உண்ணா நோன்பை மேற்கொள்வார்களா? உண்ணா நோன்பை மதிக்காத அரசிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். உண்ணா நோன்பு என்ற பெயரில் ஏதோ வேடிக்கை நிகழ்ச்சியாகக் கூட்டம் கூடினால் போதும் என்பதே இவர்களின் எண்ணம். எனவே கட்டுரையாளர் கவலைப்பட்டுப் பயனில்லை. காந்தியக் கொள்கைகளை முதலில் அரசு மதிக்கட்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இதுவா உண்ணாவிரதம்?

First Published : 27 Nov 2010 04:37:04 AM IST


சுதந்திரப் போராட்டக் காலத்தில் சர்வ வல்லமை படைத்த ஆங்கில அரசாங்கத்தையே கதிகலங்க வைத்தது காந்தியின் உண்ணாவிரத அறப்போராட்டங்கள்தான். அவர் ஒருநாள், இருநாள் அல்ல, கோரிக்கை நிறைவேறும்நாள் வரை அஹிம்சை வழியில் தன் உடலை வருத்தி, உண்ணாநோன்பு இருந்து பலமுறை வெற்றி கண்டுள்ளார்.  அவரின் சக்திமிக்க அறப்போராட்டமாம் உண்ணாவிரதப் போராட்டத்தை, நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிற சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் இப்போது கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.  அந்தவகையில், அண்மையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜேக் சார்பில், ஒருநபர் குழுவில் கைவிடப்பட்டுள்ள மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் தர ஊதியத்தை வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். அதில், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் நடந்த ஆசிரியர்களின் உண்ணாவிரதம் கேலிக்கூத்தின் உச்சவடிவமாக இருந்தது.பொதுவாக உண்ணாவிரதம்  என்பது, காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிவரை உண்ணாநோன்பிருந்து போராடுவது வழக்கம். ஆனால், இங்கு நடந்த உண்ணாவிரதம் தொடங்கியதே காலை 11 மணிக்குத்தான். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் போராட்டப் பந்தலில் இருந்து ஆசிரியர்கள், கும்பல் கும்பலாக வெளியேறி, அருகில் இருந்த கடைகளில் தேநீர் குடிக்கத் தொடங்கினர். உண்ணாவிரதத்தில் இருந்த தலைவர்கள் போராட்டப் பந்தலுக்குள் வந்து அமருமாறு  பலமுறை ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்துக்கொண்டே இருந்தனர். ஆனால், அதை ஆசிரியர்கள் பொருள்படுத்தவே இல்லை.   பகல் ஒரு மணி அளவில் போராட்டப் பந்தலுக்குள் இருந்த பெண் ஆசிரியர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் புறப்பட்டுச் சென்று விட்டனர். அதேநேரம் அப்போதுதான் உண்ணாவிரதம் தொடங்குவதுபோல, மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வந்த ஆசிரியர்கள் வேன் போன்ற வாகனங்களில் வந்து இறங்கிப் போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, ஆசிரியர்கள் பந்தலுக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அரசியல்வாதிகளைவிட ஆசிரியர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்களே எனப் பேசிக்கொண்டனர். மேலும், எந்த ஓர் அரசியல் மேடையானாலும் ஏதாவது ஒருவகையில் போலீஸôரைத்  தரக்குறைவாகப் பேசுவது வழக்கம். ஆலங்குளம் காவல்நிலையம் அருகில் நடந்த இந்த உண்ணாவிரதத்தில் பேசிய மாநிலப் பொறுப்பில் உள்ள ஒரு தலைவர், போலீஸôரை ஒருமையில் பேசினார். இதைக் கண்டு அங்கிருந்த போலீஸôர், சமுதாயத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிவர்களே இவ்வாறு பேசுகின்றனரே என மனம் வெதும்பினர். ஆசிரியர்கள் தங்களது ஊதியஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்குத்  தெரிவிக்க விரும்புவது அவர்களது உரிமை. ஆனால், அரசியல்வாதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்களில் எந்தவித நடைமுறையும் எப்படி கடைப்பிடிக்கப்படுவதில்லையோ, அதேபோல ஆசிரியர்கள் நடத்திய இந்தப் போராட்டத்திலும் அவர்கள் நடந்து கொண்டவிதம் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அறவழியில் தேசப்பிதா காந்திஜி கையாண்ட சக்திவாய்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கேலிக்கூத்தாக்கி, கொச்சைப்படுத்தியது நியாயமா?
கருத்துகள்

"தன்மானத் தமிழன்" என்பதுபோய் "மானம் கெட்ட தமிழர்கள்" என்று மாறியதற்கு காரணமே இதுபோன்ற உதவாக்கரை ஆசிரியர்கள்தான்! தன்மானம், நாட்டுப்பற்று,பரோபகாரம்,மதநல்லிணக்கம், அரசியல் அறிவு, சுய சிந்தனை என்று எத்துனையோ நல்ல விசயங்களை மாணவர்களிடம் கற்பிப்பதை விடுத்து, எட்டுசுரைக்காயை மட்டுமே போதிப்பதல்ல கல்வி! கல்லூரியை முடிதவர்களிடம் கூட மேற்சொன்ன விஷயங்கள் இல்லாதபோது வேறென்ன சொல்வது!
By வருத்ததுடன் ஒரு தமிழன்!
11/27/2010 5:19:00 PM
இந்த ஆசிரியர்கள் முதல்வரின் லேடஸ்ட் உண்ணாவிரதத்திளிருந்து "சிற்றுண்டிக்கு பின் ,மதிய உணவு வேளைக்கு முன்" என்ற உண்ணாவிரதப் போராட்ட நிலையை எடுத்துள்ளார்கள் போலும்!! நல்ல காமெடி!
By S Raj
11/27/2010 9:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 16 நவம்பர், 2010

கதை திருட்டுக்குத் தேவை கடிவாளம்!

கதை திருட்டுக்குத் தேவை கடிவாளம்!


அண்மையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தின் கதை தன்னுடையது என இரு எழுத்தாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  தமிழ்த் திரையுலகில் இதுபோன்ற விஷயங்கள் இன்று நேற்றல்ல. தொடர்ந்து நடைபெற்றுவருவதுதான். பொதுவாக திருட்டு அல்லது தழுவலில்தான் பல படங்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. கதைத் திருட்டு குறித்த நிறைய வழக்குகள் நடைபெற்றுள்ளன. ஆனாலும், இதில் முடிவு எதுவும் எட்டப்படாது என்பதே உண்மை.  இந்தத் தொல்லைக்குப் பயந்துதான் அந்தக் காலத்தில் புராணம் மற்றும் வங்கம், மராத்தி போன்ற பிற மொழிகளிலிருந்து கதைகளை வாங்கிப் படம் எடுத்தார்களோ என்னவோ? ஆனால் இன்று நிலைமை நேர்மாறாகிவிட்டது. காரணம், கற்பனை வறட்சி. அதுமட்டுமல்ல, ஒரே மாதிரியான கதைகளைத் தொடர்ந்து ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற தவறான கணிப்பு.  பத்திரிகைகளில் முதன்முதலில் விஷயதானத்தை மதித்து அவர்களுக்குச் சன்மானம் வழங்கியது மகாகவி பாரதியார் என்பார்கள். ஏனென்றால் ஒரு படைப்பாளன் மிகக் கஷ்டப்பட்டு தனது படைப்பை உருவாக்குகிறான். அவனது படைப்பை மதித்து இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று அதைப் பலர் மறந்தேவிட்டனர்.   சினிமாவில் கேட்கவே வேண்டாம். தானாகவே எடுத்துக் கொள்வார்கள். தப்பித் தவறி யாரும் வழக்குத் தொடர்ந்தால் போதும். அந்த நபரை அலையவைத்து, கடைசியில் ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுவார்கள். இதுவரை வழக்குத் தொடர்ந்தவர்கள் யாராவது நஷ்டஈடோ அல்லது உரிய தொகையோ வாங்கியிருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான். படைப்பைத் திருடுவது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் சிலர் காப்பி அடிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். அந்தக்கால படங்களில் பெரும்பாலும் கதை பிரச்னை வருவது இல்லை. காரணம் இதற்காகவே கதை இலாகா ஒன்றை உருவாக்கிவிடுவார்கள். இது பலர் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் கதையாகவே இருக்கும். எம்.ஜி.ஆர். படங்களில் இந்த பார்முலா பெரும் வெற்றியை ஏற்படுத்தியது. இன்று அப்படி யாரும் செய்வது இல்லை. புதிய படங்களுக்குக் கதை எழுதுபவர்கள் உதவி இயக்குநர்களாகவே இருப்பார்கள். தயாரிப்பாளர் மனதுவைத்தால் அவரே இயக்குநராகிவிடுவதுமுண்டு. இன்னும் சில இயக்குநர்கள் எழுத்தாளர்களின் கதைகளை வாங்கி சில மாற்றங்களைச் செய்வர்.   வி.சி. குகநாதனின் "சட்டம் ஒரு இருட்டறை'யில் தொடங்கி, இதுபோல கதைத்திருட்டு சர்ச்சைகள் தமிழ்த் திரைப்படங்களில் ஏராளம் ஏராளம் பரபரப்பை ஏற்படுத்தி  வந்திருக்கிறது. சிவாஜி நடித்த "தீர்ப்பு' என்ற படம் பரபரப்பாக ஓடியபோது, ஒரு நாடக ஆசிரியர் அது "கடமையா? பாசமா?' என்ற தனது நாடகத்தின் கதை என்று கூறினார். கடைசியில்  பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. அண்மையில் கமல்ஹாசன் நடித்த "தசாவதாரம்' தனது கதை என உதவி இயக்குநர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அதுவும் புஸ்வாணம்தான். இப்படி நிறையச் சம்பவங்களைக் கூறலாம்.  இயக்குநர் அகத்தியனின் "காதல்கோட்டை' பெரும் வெற்றிபெற்றது. இதுகுறித்து அவர் கூறும்போது பிசிராந்தையாரை மனதில் வைத்து கதையை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.  திரையுலகைப் பொறுத்தவரை கதையை முழுவதும் காப்பி அடிப்பது ஒரு ரகம். ஒரு சில சம்பவங்களை மட்டுமே காப்பி அடிப்பது மற்றொரு ரகம். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. சிவாஜி நடித்த "பாவமன்னிப்பு' படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றை "முதல் மரியாதை' படத்தில் அப்படியே அமைத்திருந்தார்கள். இதேபோல "அண்ணாமலை'யில்  வரும் நேசமணி பொன்னையா நகைச்சுவைக் காட்சி பழைய படத்தின் அப்பட்டமான காப்பி. மேலும் கதையில் மட்டும்தான் காப்பி என்றில்லை. பாடல்களிலும் நிறைய காப்பி சமாசாரங்கள் உள்ளன. எந்திரனைப் பொறுத்தவரை இயக்குநர் ஷங்கர் அது தன் கதை என்று கூறியுள்ளார். உண்மையில் கமல் நடிப்பதற்காக பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதைதான் அது என்கிறார்கள். இப்போது புகார் அளித்தவர்கள் கூறுவதைப் பார்த்தால் இவர்களது கதைகள் அந்தக் காலத்திலேயே எழுதப்பட்டது என்கிறார்கள். எது உண்மையோ? தமிழ் சினிமாவில் ஒரு எழுதப்படாத விதி உள்ளது. அது படமாக்கும்போதெல்லாம் சும்மாயிருப்பார்கள். படம் ரிலீஸôகி ஒரு மாதம் வரை யாரும் வாய் திறப்பதில்லை. வெற்றிகரமாக ஓடுகிறது என்று செய்தி வந்துவிட்டால்தான் எழுத்தாளர்களே வாயைத் திறக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே செய்தால் படம் எடுக்கும்போதே தடுக்கலாம் அல்லவா?  என்னவோ பத்திரிகைகளில் கதைகளைக் காப்பி அடிப்பவர்கள் இருப்பது போய் சினிமாக்காரர்கள் காப்பி அடிக்கும் காலம் வந்துவிட்டது. வழக்கமாக ஆங்கில, இந்திப்படங்களைத் தழுவியவர்களுக்குப் போரடித்து விட்டது என்பதால் இப்போது துணிச்சலாக நாவல், சிறுகதை என தழுவிப் படம் எடுக்கிறார்கள். மொத்தத்தில் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளுக்குக் காப்புரிமை வைத்துக்கொள்வது நல்லது. தக்க ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற வழக்குகளில் வெற்றிபெற முடியும். யாரோ கஷ்டப்பட்டு  எழுதியதை காப்பி அடித்து விலா நோகாமல் சிரித்து, பணம் சம்பாதிப்பவர்களை ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
கருத்துகள்

படப்பிடிப்பு நடைபெறும் பொழுது கதை தெரிய வாய்ப்பில்லை. கதை பற்றி ஒரு வரி கூடத் தெரியக் கூடாது என்று எடுப்பதுதான் பெருமை என்று சிலர் செயல்படுகிறார்கள். படம் வந்த பின்னும் ஒவ்வொரு படடமாகப் படைப்பாளி பார்த்துத் தன் கதை திருடப்பட்டுள்ளதா என ஆராய முடியாது. படம் பார்க்கும் பொழுதோ தன் கதையைப்படித்தவர்கள படம் பார்க்கும்பொழுதோதான் உண்மை தெரிய வரும்.அப்படியே வழக்கு போட்டாலும் அதை விளம்பரமாக்கிப் படம் உருவாக்குநர்கள் பணம் குவித்து விடுகிறார்கள். எனவே படைப்பாளிகள் நலனு்க்காகக் கதைத் திருட்டாளர்கள் மீது கூட்டோடு நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் தேவை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 6:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

புதன், 13 அக்டோபர், 2010

நேர்மை உறங்கும் நேரம்...


மாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகிய இரு பதவிகள் மிக உயர்ந்த பதவிகள் ஆகும். நிர்வாகத்துக்குத் தலைமைச் செயலரும்,  சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் காவல்துறைத் தலைமை இயக்குநரும் பொறுப்பாளர்கள் ஆவார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்த இரு உயர் பதவிகளின் நியமனத்தை ஒட்டிய பிரச்னை எதுவும் எழுந்ததில்லை. முறைப்படி  மூத்த அதிகாரிகள் இப்பதவியில் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது  இந்தப் பிரச்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு,   காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவியில் லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:1. தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநராக லத்திகா சரணை நியமித்ததில் உச்ச நீதிமன்ற ஆணை பின்பற்றப்படவில்லை. இந்தப் பதவிக்கு முறையான தேர்வு நடைபெற்றது என்பதையோ, மற்ற மூத்த அதிகாரிகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன என்பதையோ அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.2. மூத்த அதிகாரிகளான நடராஜ், விஜயகுமார், பாலச்சந்திரன் ஆகியோரைப் புறக்கணித்துவிட்டு, லத்திகா சரணை தலைமை இயக்குநராக நியமித்ததற்கான காரணம் எதையும் அரசு குறிப்பிடவில்லை. 3. தமிழக அரசின் நிலைப்பாடு நீதிமன்றத்துக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த தமிழக அரசின் தலைமைச் செயலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.4. மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநரை நியமிப்பதற்கு முன்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து மூன்று மூத்த அதிகாரிகளைக் கொண்ட பட்டியலைக் கேட்டுப் பெறவேண்டும். அந்தப் பட்டியலிலிருந்து ஒருவரையே தலைமை இயக்குநராக நியமிக்க வேண்டும். அவரை இரண்டாண்டுகளுக்குத் தொடர்ந்து அப்பதவியில் நீடித்திருக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், லத்திகா சரண் நியமனத்தில் இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.5. லத்திகா சரண் நியமனத்தை எதிர்க்கும் மனுவை உச்ச நீதிமன்ற உத்தரவைக் கருத்தில் கொள்ளாமல் பணியாளர் மத்திய தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.6. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குத் தலைமை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் பெயர்களையும் மாநில அரசு அக்டோபர் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அப்பட்டியலில் இருந்து மூத்த அதிகாரிகள் மூன்று பேர் அடங்கிய பட்டியலை மாநில அரசுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.7. அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரை தலைமை இயக்குநராக (சட்டம்-ஒழுங்கு) டிசம்பர் 7-ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். அதுவரை லத்திகா சரண் தனது பணியில் தொடரலாம்.8. டிசம்பர் 14-ம் தேதி இது தொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். எனவே லத்திகா சரண் நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறிப்பிடத்தக்க மிக முக்கியமான தீர்ப்பாகும். பணி மூப்பு, நடைமுறை, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறி போன்ற எதையுமே சிறிதும் மதிக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் மிக உயர்ந்த பதவிக்கு அதிகாரிகளை நியமிக்கும் தமிழக அரசின் போக்குக்கு உயர் நீதிமன்றம் சாட்டையடி கொடுத்துள்ளது.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இரு கழகங்களின் ஆட்சியில் எப்படியெல்லாம் பந்தாடப்பட்டார்கள், பந்தாடப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தங்கள் நோக்கத்துக்கு இணங்கி வராத அதிகாரிகளைப் பதவிகளில் இருந்து திடீரென இடைநீக்கம் செய்வது, புதிய பதவி எதிலும் நியமிக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது,  ஓய்வுபெறும் நிலையில் உள்ள அதிகாரிகளை திடீரென இடைநீக்கம் செய்து ஓய்வூதிய சலுகைகளைப் பெறவிடாமல் இழுத்தடிப்பது போன்ற சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்து கையாண்டே வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். சுருக்கமாகக் கூறினால், நேர்மையான அதிகாரிகளை இந்த அரசுக்கு ஒருபோதும் பிடிக்காது.ஆளும்கட்சியினர் நடத்தும் லஞ்ச ஊழலுக்குத் துணையாக இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த அரசில் மரியாதை. சில நாள்களுக்கு முன்னால் நேர்மையான அதிகாரியான உமாசங்கர் இடைநீக்கம் செய்யப்பட்டுப் பழிவாங்கப்பட்டார். இச்செயலுக்கு எதிராகக் கடும் கண்டனம் எழுந்தபோது முதலமைச்சர் பல்டி அடித்து மீண்டும் அவருக்குப் பதவி அளிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார். காவல்துறையின் தயவு இல்லாமல் ஆட்சிக்கு வருவதும் ஆட்சியை நடத்துவதும் தனது கட்சிக்கு இயலாத ஒன்று என்பதை முதலமைச்சர் கருணாநிதி நன்கு உணர்ந்திருக்கிறார். எனவேதான் காவல்துறையின் தலைமை இயக்குநர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையையே புறக்கணித்துச் செயல்பட்டிருக்கிறார். இதுவரை தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசு செய்த மிகஉயர்ந்த பதவிக்கான நியமனத்தை ரத்து செய்ததாக வரலாறு கிடையாது. உயர் நீதிமன்றத்துக்கு தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவிலும் முற்றிலும் பொய்யான தகவல்களை அளித்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். பணிமூப்புப் பட்டியலில் நடராஜுக்கு அடுத்த நிலையிலுள்ள விஜயகுமார் மத்திய அரசுப் பணிக்குச் சென்றுவிட்டதால் அவர் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று அரசு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.உடனடியாக இதுகுறித்து விஜயகுமாரிடம் நீதிபதிகள் கருத்துக் கேட்டனர். அவர் தாக்கல் செய்த மனுவில், ""தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநர் பொறுப்பை ஏற்க முடியாது என நான் ஒருபோதும் கூறவில்லை. எனது பெயரும் தலைமை இயக்குநர் பதவிக்கு ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். மிக உயர்ந்த பதவிக்குரிய நியமனத்தில் இத்தகைய கபடமான வழிமுறைகளைப் பின்பற்றியது முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, தமிழக அரசு இயங்கும் முறைக்கே மாறாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது அரசு தலைமைச் செயலர் பதவிக்கு இரு மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இருவரும் ஒன்றாக ஐ.ஏ.எஸ். தேறியவர்கள்; ஒரே நாளில் பதவி ஏற்றவர்கள். ஒருவர் ஒரு மணி நேரத்துக்கு முன்பு பதவி ஏற்றார். இருவருக்கும் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு காலம் இருந்தது. இருவரில் ஒருவருக்குத்தான் இந்தப் பதவியை அளிக்க முடியும். அவ்வாறு செய்தால் மற்றவர் தலைமைச் செயலர் ஆகாமலே ஓய்வுபெறவேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்தப் பிரச்னை முதலமைச்சரின் முடிவுக்கு விடப்பட்டது. இருவர் சம்பந்தமான கோப்புகளை காமராஜ் மிகக்கவனமாக ஆராய்ந்தார். பிறகு அவருக்கே உரிய பாணியில் இருவரையும் அழைத்தார். இருவரும் அவருக்கு முன்னால் வந்து நின்றார்கள். இருவரையும் அமரச் செய்தார். பிறகு நான் சொல்லுகிறபடி செய்வீர்களா என்று கேட்டார். இருவரும் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள். அப்போது காமராஜ் பின்வருமாறு கூறினார்: ""இருவருக்கும் இந்தப் பதவி வகிப்பதற்குரிய தகுதி உள்ளது. ஆனால், ஒருவரைத்தான் நியமிக்க முடியும். அப்படி நியமித்தால் மற்றொருவருக்கு அது ஏமாற்றமாக இருக்கும். எனவே ஒரு மணி நேரத்துக்கு முன்னால் பதவியேற்றவர் ஆறு மாதம் இந்தப் பதவியில் இருக்கட்டும். அதற்குப் பிறகு அவர் ஆறுமாதகால நீண்ட விடுப்பில் சென்று அப்படியே ஓய்வுபெற வேண்டும். மற்றொருவர் இந்தப் பதவியை ஏற்று 6 மாத காலத்துக்குப்பின் அவரும் ஓய்வுபெற வேண்டும். இருவருக்கும் சமவாய்ப்புக் கிடைக்கும். இருவருக்கும் தலைமைச் செயலர் பதவியில் இருந்தததற்கான அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும்'' என கூறியபோது இருவருக்குமே நன்றிப் பெருக்கால் விழிகளில் ஈரம் கசிந்தது. அவ்வாறே இருவரும் தலா ஆறு மாதம் பதவி வகித்து மகிழ்ச்சியுடன் ஓய்வுபெற்றனர்.தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகிய பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் மிக்க பொறுப்புணர்வோடும், நிர்வாகத் திறமையோடும்,  நேர்மையோடும் செயல்பட வேண்டும். அத்தகைய மூத்த அதிகாரிகளையே இப்பதவிகளில் நியமித்தால் அரசுக்கும் பெருமை, மக்களுக்கும் நன்மை. ஆனால், உயர் நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகள் முன்னிலையில் முதலமைச்சர் கருணாநிதி பேசும்போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்த சில வழக்கறிஞர்களை தி.மு.க. குண்டர்களும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் கடுமையாகத் தாக்கியபோது, அங்கிருந்த லத்திகா சரண் அதைத் தடுக்காமல் ஊமை சாட்சியாக இருந்தார் என்பதுதான் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதற்கான தகுதியா? நாடெங்கும் அதிகாரிகளை ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குகிறார்கள். அதிகாரிகள் மீது லாரிகளை ஏற்றிக் கொல்லவும் மணல் கொள்ளையர்கள் அஞ்சவில்லை. பல்கலைக்கழகத் துணைவேந்தர், பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டார். நாள்தோறும் இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதிகாரிகள் மட்டுமல்ல, ஆளுங்கட்சியைச் சேர்ந்த குண்டர்களுக்குக் கப்பம் கட்ட மறுக்கும் வணிகர்களின் கடைகள் சூறையாடப்படுகின்றன. அரசுப் பேருந்துகளை ஓட்டுபவர்களும் வழிமறித்துத் தாக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் நிலை இன்னும் மோசம். வீடு புகுந்து தாக்குபவர்கள், வீட்டைச் சூறையாடுபவர்கள்,  நிலக்கொள்ளையர்கள் மீதெல்லாம் புகார் கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. காவல்துறையின் தலைமை இயக்குநராக இருப்பவரே குண்டர்களின் அட்டகாசத்தை வேடிக்கை பார்க்கும்போது, அவரின் கீழே இருப்பவர்கள் மட்டும் எப்படி ஒழுங்காகச் செயல்பட முடியும்? முதலமைச்சரின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அமைச்சர்களின் குடும்பத்தினர்களும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களும் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இவர்களின் விருப்பப்படியே அதிகாரிகள் பந்தாடப்படுகிறார்கள். இதற்கு அஞ்சிய அதிகாரிகள் இவர்களுக்குத் துணைபோகிறார்கள். பணியாத அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். கருணாநிதி முதலமைச்சர் மட்டுமல்ல, காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சரும் ஆவார். எனவே பிற அமைச்சர்கள் யார் மீதேனும் பழியைப் போட்டு அவர் தப்ப முடியாது.  உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். இதுவரை எந்த மாநில முதலமைச்சரும் இத்தகைய அவமானத்துக்கு உள்ளானதில்லை. உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் எந்த அழகில் நடைபெறுகிறது என்பதற்கு அழிக்க முடியாத சாட்சியமாக விளங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் பொய்யான தகவல்கள் அடங்கிய மனுவைத் தாக்கல் செய்ததற்கும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறியதற்கும் முதலமைச்சர் கருணாநிதி மக்கள் தனக்களித்திருக்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கும் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படியெல்லாம் அவர் செய்துவிடமாட்டார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம். தனது தவறுகளை நியாயப்படுத்துவதில் தமிழக முதல்வருக்கு நிகர் அவர் மட்டுமாகத்தான் இருக்க முடியும். அமைச்சர்களுக்குக் கார் கதவைத் திறந்துவிடுவதுதான் மாவட்ட ஆட்சியர் பதவியின் மரியாதை என்று ஒரு அமைச்சர் எள்ளிநகையாடுகிறார். உயர் நீதிமன்றத்திலேயே முதல்வர் சார்பில் பொய்யான தகவல் தரப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இவர்களுக்கு எடுபிடிவேலை செய்யும் ஏவலர்கள் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள் என்பதைத்தான் இவர்களது பேச்சுகளும் நடவடிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன.
கருத்துக்கள்

ஒருவர் புறக்கணிக்கப்படுவதாலேயே அவர் நேர்மையான அலுவலர் என்றும் கருத வாய்ப்பு இல்லை. அவர் முந்தைய கட்சியின் எடுபிடியாக இருந்து ஏவல் செய்தவாராகத்தான் இருப்பார். எனவே, அலுவலர்கள் தத்தம் சொந்த நலன்களுக்காக ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக மாறாமல் நடுநிலையுடன் நடந்து கொண்டால் இத்தகைய நேர்வு வராது. ஆட்சியாளர்களுக்கு யார் நெருக்கம் என்பதிலேயே போட்டி போடுவதில் அலுவலர்கள் கருத்து செலுத்தினால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை ஏற்படாது. எனவே, அலுவலர்கள் அடிமைத்தனத்துடன் இருக்கும பொழுது ஆட்சியாளர்கள் அவர்களை ஏவலர்களாகத்தான் கருதுவார்கள். கட்டுரை பொதுவாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:08:00 AM
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்த இரு உயர் பதவிகளின் நியமனத்தை ஒட்டிய பிரச்னை எதுவும் எழுந்ததில்லை எனக் குறிப்பிட்டுள்ளது தவறாகும். எல்லா மாநிலங்களிலும் கண்மூடி ஒத்துழைக்கும் அதிகாரிகளுக்குப் பதவியும் பிறருக்குப் புறக்கணிப்பும் வழங்குவது நடைபெற்றே வருகிறது. தமிழ் நாட்டிலும் ஆளுங் கட்சிக்கு வேண்டியவர்களை நியமிப்பதற்காக அவர் ஆறாம் இடத்தில் இருக்கிறார் எனில் அறுவருக்கும் பதவி உயர்வு வழங்கிவிட்டுப் பிற ஐவரை அப்பதவிநிலையில் பொம்மைப் பதவியில் அமர்த்தி விட்டு ஆறாமவரை நியமிக்கும் வழக்கம் உள்ளதைப் பழ.நெடு. மறந்து விட்டாரா? பழிவாங்குவதற்காக துறைஅலுவலர்களை நியமிக் க வேண்டிய இடங்களிலும் இ.ஆ.ப. அலுவலர்களை நியமிக்க வேண்டிய இடங்களிலும் இ.கா.ப. அலுவலர்களை நியமித்ததையும் மறந்து விட்டாரா? ஆனால், அப்பொழுதெல்லாம நீதிமன்றப் பார்வைக்குச் செல்லவி்ல்லை.இப்பொழுது சென்றதால் கண்டனம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் ஒருவர் புறக்கணிக்கப்படுவதாலேயே அவர் நேர்மையான அலுவலர் என்றும் கருத வாய்ப்பு இல்லை. அவர் முந்தைய கட்சியின் எடுபிடியாக இருந்து ஏவல் செய்தவாராகத்தான் இருப்பார். எனவே, அலுவலர்கள் தத்தம் சொந்த நலன்க
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *