புதன், 22 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : மூலதனம் தமிழாக்கம் – தொடர்ச்சி)

மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும்: தியாகு

கீற்று நேர்காணல் (3)(அ) : மினர்வா & நந்தன்

சிறையில் இருந்து வெளியே வந்ததும் மா.பொ.க.(சி.பி.எம்)-இல் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்?

நானும் தோழர் இலெனினும் சிறையில் இருந்த படி கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடிநிலை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மா.பொ.க.(சி.பி.எம்.) தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்குசியக் கட்சியின் சோதிபாசு, ஈ.எம்.எசு, பி.இராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்ய முற்பட்டது. அவர்களில் பலர் தலைமறைவாகிச் செயல்பட்டனர்.

கேரளத்தில் நெருக்கடிநிலையைக் கண்டித்து மார்க்குசியக் கட்சி முழு அடைப்புப் போராட்டமே நடத்தியது. தலைவர்களைக் கைது செய்த இந்திரா காந்தி அரசு அவர்களை மிசாவில் அடைக்கவில்லை. வலதுசாரி வல்லிய(பாசிச)க் கட்சிகளை அடக்கத்தான் இந்த நெருக்கடிநிலை என உலகிற்கு இந்திராகாந்தி அறிவித்தார். இதற்கு இ.பொ.க.(சி.பி.ஐ.) ஆதரவு தெரிவித்தது. சோவியத்து அரசும் இதை நியாயப்படுத்தியது. நெருக்கடி நிலை இடதுசாரிகளுக்கு எதிரானதல்ல என்று காட்டிக்கொள்ளத்தான் இ.பொ.க.(சிபிஎம்) உயர்மட்டத் தலைவர்களை அரசு கைது செய்யவில்லை.

ஆனால் அந்தத் தலைவர்களாலும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவர்கள் நடத்திய பத்திரிகைகளும் முன்தணிக்கை செய்யப்பட்டே வந்தன. இந்த நடவடிக்கைகளால் எங்களுக்கு மா.பொ.க.(சி.பி.எம்.) மேல் பெரிய மரியாதை இருந்தது. இந்திய ஆளும் வருக்கம் பற்றிய பார்வை, இந்திய முதலாளிகளின் ஆதிக்கம், விவசாயம் பற்றிய தெளிவு போன்றவற்றில் மார்க்குசியக் கட்சிக்கு அறிவியல் வழிப்பட்ட பார்வை இருந்தது.

அதேபோல்’ சீனத்தின் பாதையே எங்கள் பாதை’ என்று சொல்லும் மா.இலெ.(எம்.எல்) கட்சிக்கும், சோவியத்து என்ன செய்தாலும் சரி என்று சொல்லும் இ.பொ.க.(சி.பி.ஐ.) கட்சிக்கும் இடையே சுதந்திரமான ஒரு கட்சியாக மா.பொ.க.(சி.பி.எம்.) தான் இருந்தது. இதனால் உலகக்ப் பொதுவுடைமை இயக்கங்கள் எதுவும் மா.பொ. கட்சியை ஆதரிக்கவில்லை. பெய்சிங்கு வானொலியில் இவர்களைப் ‘பன்னாட்டு அனாதைகள்’ என்றே கூறினார்கள்.

சீனாவின் ஒரே நிரந்தரத் தலைவர் மாசேதுங்குதான் என அவர்கள் (கட்சியின் ஒன்பதாம் பேராயத்தில்) அறிவித்த போது இங்குள்ள மார்க்குசியர்கள் அதைக் குறையாய்வு செய்தார்கள். ‘உரோமன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பு தவறே செய்ய மாட்டார், எனவே அவரையே பின்பற்ற வேண்டும் என கத்தோலிக்கர்கள் கூறுவது போல் இருக்கிறது’ எனக் குறையாய்வு செய்தார்கள். ஏ.பாலசுப்பிரமணியமும் ‘சோவியத்தோ, சீனாவோ எந்த ஓர் இடமும் குருபீடம் போல் செயல்பட முடியாது’ என எழுதினார். இவ்வாறு அவர்கள் ஒவ்வொன்றிலும் மாறுபட்டு நின்றது எங்களை ஈர்த்தது. இதனால் சிறையிலிருந்த போதே மா.பொ.க.வில்(சி.பி.எம்மில்) சேர்ந்தோம்.

அமைப்பு கட்டுவது, பத்திரிகை நடத்துவது, போராடுவது எனச் சிறைக்குள் வழக்கம் போல் எங்களது செயல்பாடுகள் தொடர்ந்தன. அந்த நேரத்தில்தான் ஈழப்போராட்டம் வலுப்பெறுகிறது. அதில் மா.பொ.க.(சி.பி.எம்.) எடுத்த நிலைப்பாட்டில் கொஞ்சமும் நியாயம் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை. அவர்கள் முற்றிலும் இந்திய அரசின் நிலையை ஆதரித்தார்கள். ஈழப்போராட்டம் நியாயமானது என்ற கருத்து எங்களுக்கு இருந்தது.

ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகச் சிறைக்குள்ளேயே பெரிய எழுச்சி ஏற்பட்டது. மதுரை சிறைச்சாலையில் செயவர்த்தனே கொடும்பாவி எரிக்கப்பட்டது. நான் அப்போது திருச்சி சிறையில் இருந்தேன். அங்கு 1,500 கைதிகளையும் திரட்டி சிறைக்குள் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினோம். அதில் ஈழச் சிக்கல்களை விளக்கி நான் பேசினேன்.

1983இல் சிறையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடங்கினோம். அதில் முதல் கோரிக்கையாக ஈழப் போராட்டத்தை நியாயப்படுத்தினோம். அதைத் தவிரவும் பத்தாண்டுகள் ஆன ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக அந்தப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக ஒருநாள் உண்ணாவிரதமிருந்து அந்தப் பணத்தை ஈழ அகதிகள் நிதிக்காக அரசுக்கு அனுப்பினோம். சிறையில் இருந்து பதினைந்து நாட்கள் விடுப்பில் வெளியே போய் சிறைப் போராட்டத்துக்குப் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினேன்.

அதற்கு முன்னதாக 1979ல் சிறைக்குள் ஒரு கைதியைக் காவலர் அடித்துக் கொன்று விட்டு தற்கொலை செய்து விட்டதாகக் கூறினார்கள். இதை எதிர்த்துக் கைதிகள் சிறைக்குள் போராட்டம் நடத்தினார்கள். காவலருக்கும் கைதிகளுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. தேவாரம்தான் அபோது கா.து.த.(டி.ஐ.சி.)ஆக இருந்தார். கைதிகள் மீது துப்பாக்கிச்சூடும், பிரம்படியும் (இலத்தி சார்சும்) நடைபெற்றது. அதன் பிறகுதான் சிறைக் கைதிகளுக்காக ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் உருவாவதற்கு வெளியிலிருந்த மா.பொ.க.(சி.பி.எம்.) தோழர்கள்தான் கடுமையாகப் போராடினார்கள்.

1983 சிறைப் போராட்டத்திற்கு பிறகு எனக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே ஈழப் போராட்டத்தை முன்னிறுத்திக் கருத்து வேறுபாடுகள் உருவாயின. தேசியத் தன்வரையறை உரிமையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தை மார்க்குசியக் கட்சி மறுதலித்தது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

1985இல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன். வெளியே வந்ததும் ம.பொ. கட்சியின் முழுநேர ஊழியராகச் சேர கட்சி அழைத்தது. மூலதனம் பதிப்பு வேலைகள் காரணமாக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதே நேரத்தில் கட்சியுடனான என்னுடைய முரண்பாடும் அப்படியேதான் இருந்தது. சிறையில் இருக்கும் போது, மார்க்சியக் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.பரமேசுவரன், இலெனின் கூறியதாக ஒரு கருத்தை வெளியிட, அதை நான் மறுத்தேன். இதனால் அவருக்கும் எனக்கும் கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. அதனால் நான் சிறையில் இருந்து விடுப்பில் வெளியே வரும் போது எனக்கு எந்த உதவிகளும் செய்யக் கூடாது எனத் தோழர்கள் சிலருக்கு அவர் கூறியிருந்தார்.

செம்மலர் பத்திரிகையில் பாரதிதாசன் குறித்து கட்டுரை ஒன்று வெளியானது. அதில் பாரதியின் வழித்தோன்றல்தான் பாரதிதாசன் எனவும், அவரைப் போலவே இவரும் தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தினார், இடையில் திராவிடம் என்று போனாலும் இறுதியில் மீண்டும் அவர் பாரதியின் கருத்துக்கு வந்து விட்டார் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதை மறுத்து நான் எழுதினேன்.

‘பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இருந்த தனிப்பட்ட உறவு என்பது வேறு. பாரதியார் அடிப்படையில் இந்திய தேசியக் கவி. பாரதிதாசன் தமிழ்த் தேசியக் கவி. பாரதிதாசன் பெரியாரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டதில் இருந்து இறுதிக் காலம் வரை அந்த நிலைப்பாட்டில்தான் இருந்தார். இந்திய-சீன எல்லைப் போரின் போது, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும், நேருதான் இந்தியாவின் தலைவராக இருக்க வேண்டும் என்ற கருத்துதான் பெரியாருக்கு இருந்தது. அதைத்தான் பாரதிதாசனும் எதிரொலித்தார். அதை வைத்துக்கொண்டுதான் இவர்கள் அவரை இந்திய தேசியக்கவி என்று கூறுகிறார்கள்.

பின்னாட்களில் சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சியுடனும், சி.பா.ஆதித்தனாருடைய நாம் தமிழர் கட்சியுடனும் அவருக்கு நெருக்கம் அதிகமானது. அந்த நாட்களில் பெரியாரையே அவர் திட்டிக் கொண்டிருந்ததாக அவருடைய மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் கடைசி வரை தமிழ்த்தேசியம் பக்கம்தான் நின்றார். எனவே அவரை இந்தியத் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தினார் என்று எழுதுவது சரியல்ல’ என்று எழுதினேன்.

இந்தக் கட்டுரையை வெளியிட செம்மலர் பத்திரிகை மறுத்து விட்டது; கட்டுரை பாலம் இதழில் வெளிவந்தது. இப்படித் தொடர்ச்சியாகக் கட்சியுடன் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டன. 1987இல் இந்திய-இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதை மா.பொ.க. ஆதரித்தது. இதற்கு மேல் சகித்துக் கொள்ள எதுவும் இல்லை என்ற நிலை அப்போதுதான் ஏற்பட்டது. இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள சந்துரு அப்போது வழக்கறிஞராக இருந்தார். அவர் மா.பொ.கட்சியைச் சேர்ந்தவர். இந்தியா இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவதைக் கண்டித்து நடைபெற்ற மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டார்.

கட்சி அவரை அழைத்து ‘ஏன் கலந்து கொண்டீர்கள்’ என விளக்கம் கேட்டது. “நான் மனிதன், அதனால் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டேன்” என அவர் விளக்கம் சொன்னார். அதனையடுத்து சந்துரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் நான் இனி கட்சியில் நீடிக்க முடியாது என்பதை உணர்த்தின. நான் அப்போது மூலதன வேலைகள் காரணமாக அம்பத்தூரில் தங்கியிருந்தேன். அம்பத்தூரை விட்டு வெளியே சென்று நான் பேசக் கூடாது என்று கட்சி என்னை முடக்கியது.

தேசிய இனச்சிக்கல்கள், ஈழச்சிக்கல்கள் தொடர்பாகக் கட்சிக்குள் ஒரு விவாதம் நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அதைத் தொடர்ந்து மறுதலித்தார்கள். எம்ஞ்சியார் இறந்த தினத்தன்று பகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தடைபட்டிருந்ததால், திரும்பிச் செல்ல முடியாமல் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தோம்.

‘பேசுவதற்கு ஒன்றுமில்லை, இன்றாவது ஈழச்சிக்கல் குறித்துப் பேசுவோம்’ என வலியுறுத்தி நான் பேச வைத்தேன். அன்று உறுப்பினர்களுக்குள் கடுமையான மனக் கசப்பு ஏற்பட்டது. சோதிபாசு பேசியது இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையில் ஒன்றாகவும், தீக்கதிரில் வேறாகவும் வெளிவந்திருந்தது. அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு தீக்கதிர் பத்திரிகை பொய்ச் செய்தி வெளியிடுகிறது என வாதிட்டேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 299

செவ்வாய், 21 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : மூலதனம் தமிழாக்கம்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் : நாம் வந்த பாதை தவறு – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (2)(இ) : மினர்வா & நந்தன்


மூலதனம் தமிழாக்கம்


சிறையில் இருக்கும் போது நீங்கள் செய்த மிக முக்கியமான பணி மூலதனத்தை மொழிபெயர்த்தது. அந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சிறைக்குச் செல்லும் வரை மார்க்குசு, இலெனினின் எழுத்துகளை அதிகம் படித்தது இல்லை. படித்திருந்தால் சாரு மசூம்தாரின் எழுத்துகள் என்னை ஈர்த்திருக்காது. சிறைக்குள் நான் முதலில் படித்தது இலெனினின் புத்தகங்கள். அதுதான் எல்லாப் புத்தகங்களையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மார்க்குசின் கூலியுழைப்பும மூலதனமும் போன்ற சிறுசிறு புத்தகங்களைப் படிக்கும் போதுதான் இதற்கெல்லாம் அடிப்படை மார்க்குசின் ‘மூலதனம்’ என்பது தெரிந்தது. என்னுடைய மாமாதான் அக்கா வழியாக மூலதனம் ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.

சிறையில் இருந்த தோழர் இலெனினும், ஏ.சி..கே.வும் நான் மூலதனத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
(அப்போது நாங்கள் தூக்குக் கைதிகள். 1974 ஏப்பிரலில் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் கைதிகளாகி விட்டோம். அந்த ஆண்டு மே மாதம்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க சிறைப் போராட்டம்.)
1975இல் மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தேன். 76 நடுவில் மூலதனத்தின் முதல் பகுதியை மொழிபெயர்த்து முடித்து விட்டேன். 77இல் என்னை மதுரை சிறைக்கு மாற்றினார்கள். அங்கிருந்து மொழிபெயர்த்த பகுதிகளைத் தோழர் ஏ. பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பினேன். அவர் என்.சி.பி.எச்.-இடம் ஒப்படைத்தார். அவர்கள் இரா. கிருட்டிணையாவிடம் கொடுத்து கருத்துக் கேட்டார்கள். அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். சோவியத்தில் 12 வருடங்கள் தங்கி இருந்து பல புத்தகங்களை மொழிபெயர்த்தவர். பல மூலதன மொழிபெயர்ப்புகளை மறுதலித்தவர். ஆனால் அவர் என்னுடைய புத்தகத்தை வெளியிடலாம் எனக் கருத்து தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பை மாசுகோவிற்கு அனுப்பினார்கள். அவர்கள் மூன்று பகுதிகளையும் சேர்த்து வெளியிடலாம் எனக் கருத்து தெரிவித்தார்கள். 79 கடைசியில் மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் மொழிபெயர்த்துத் தருமாறு தோழர் பாலசுப்பிரமணியம் என்னிடம் கேட்டார். அப்போது நான் சென்னை சிறையில் இருந்தேன். 80 சனவரி இறுதியில் தொடங்கி ஏப்பிரல் 22ஆ ம் தேதி இரண்டாம் தொகுதியை மொழிபெயர்த்தேன். தினமும் இவ்வளவு நேரம் எனத் திட்டமிட்டு இந்த வேலையைச் செய்தேன். ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் இரவு இரண்டு மணி வரை கூட எழுதியிருக்கிறேன்.

மே முதல் நாள் மூன்றாம் தொகுதியை ஆரம்பித்து நவம்பர் 7ஆம் நாள் மொழிபெயர்த்து முடித்தேன். என்னுடைய புத்தகங்களோடு கலந்து அதை வெளியே அனுப்பினேன். அதன் பிறகு அடுத்தடுத்த வருடங்களில் திருச்சி, கடலூர் எனப் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய மொழிபெயர்ப்பு மாசுகோவில் அச்சாகிக் கொண்டிருந்தது. அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்குத் தமிழ் தெரியாததால் ஒவ்வொரு எழுத்தையும் பெரிதாக வடிவமைத்து வைத்துக்கொண்டு உருவத்தைப் பார்த்து ஒவ்வொரு எழுத்தாக அச்சேற்றிக் கொண்டிருந்தார்களாம்.

அந்த நேரத்தில் சோவியத்து வீழ்ந்தது. இதில் என்னுடைய மொழிபெயர்ப்பும் காணாமல் போனது. ஆனால் என்.சி.பி.எச்.-இடம் அதனுடைய தட்டச்சு வடிவம் இருந்தது. அதை அவர்கள் ஒரு காப்பிரைட்டரிடம் கொடுக்க அவர் அதை் தப்பும் தவறுமாகத் திருத்தி வைத்திருந்தார். அதை மீண்டும் திருத்தி வடிவமைப்பதற்காக, ‘மூன்று வருடங்கள் தொடர்ந்து மாசுகோவில் தங்கியிருக்க மொழிபெயர்ப்பாளரை அனுப்ப முடியுமா? என்று மாசுகோவில் இருந்து கேட்டார்கள். நான் அப்போது சிறையில் இருக்கிறேன். விடுமுறையில் இரண்டு மூன்று நாட்கள்தான் வெளியில் வந்து போக முடியும். இதற்கு முன்னரே என்னுடைய தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதைக் குறிப்பிட வேண்டும்.

எனவே புத்தக வடிவமைப்பைச் சென்னையிலே செய்யலாம் என முடிவெடுத்து நான் சென்னை சிறைக்கு மாற்றல் வாங்கி வந்தேன். சிறையில் இருந்து கொண்டே அதன் திருத்த வேலைகளில் ஈடுபட்டேன். 85 நவம்பர் கடைசியில் விடுதலையானேன். மொழிபெயர்ப்புக்குத் தேவைப்பட்டது இரண்டு ஆண்டுகள்தான். ஆனால் அதைத் திருத்தி அமைப்பதற்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டன. அத்தனை உழைப்பையும் கொடுத்து எல்லா வேலைகளையும் முடித்த பிறகு புத்தகம் வெளிவர வேண்டா என என்.சி.பி.எச். முடிவெடுத்து விட்டார்கள்.

கலைஞர் ஆட்சிக்கு வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு நாகநாதன் சமதக்கினியின் மூலதன மொழிபெயர்ப்பைக் கொண்டுவர முயன்றார். கலைஞரின் முன்னுரையோடும் ஐந்து இலட்ச உரூபாய் நிதிஒதுக்கீட்டோடும் அது வெளிவந்தது. மூலதனம் என்ற பெயரில் அது மிக அபத்தமாக வந்த புத்தகம்.

அப்போதும் ‘செலவு அதிகமாகும்’ எனக் கூறி என்னுடைய புத்தகத்தை வெளியிட என்.சி.பி.எச். யோசித்தது. ‘முன்வெளியீட்டுத் திட்ட அறிவிப்பு வெளியிடலாம்’ என்ற யோசனையைக் கூறினேன். அதன்படி பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார்கள். ஊர் ஊராகப் போய்ப் பேசினேன். நல்ல வரவேற்பு இருந்தது. புத்தகமும் வெளிவந்தது.

என்னுடைய மொழிபெயர்ப்பில் முதல் புத்தகம் மட்டும்தான் சரியாக வந்திருப்பதாகக் கருதுகிறேன். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் புரிந்து கொள்ளக் கடினமானவை. மார்க்குசு முதல் தொகுதிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் செலவிட்டார். பிரெடெரிக்கு எங்கெல்சு இரண்டாம் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளும், மூன்றாம் தொகுதிக்கு 9 ஆண்டுகளும் எடுத்துக்கொண்டார். முதல் தொகுதி இலக்கியத் தரத்தோடு இருக்கும். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் வெறும் ஆய்வுக் குறிப்புகளாக இருக்கும். இன்னமும் யாராவது தமிழில் அதை எளிமையாக மொழிபெயர்க்க முன்வந்தால் அவர்களுக்கு குறிப்புகள் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் இன்னொரு முறை மூலதனத்தை எளிமையாக மொழிபெயர்ப்பது சாத்தியமா என்று தெரியவில்லை.

சிறையில் இருந்து வெளி வந்தபிறகு மா.பொ.க.(சிபிஎம்) கட்சியில் சேர்ந்தீர்கள். அதற்கு என்ன காரணம்?

நான் காங்கிரசில் இருந்த போதே மா.பொ.க.(சி.பி.எம்.) செயலாளராக இருந்த தோழர் ஏ.பி. (ஏ. பாலசுப்பிரமணியம்) அவர்களுடன் நல்ல பழக்கம் இருந்தது. சிறையில் இருந்த போது மீண்டும் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. நெருக்கடிக் காலக்கட்டத்தின் போது மா.பொ.க.(சி.பி.எம்.), “நாடு ஒரு சருவாதிகார அரசியலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் வல்லிய(பாசிச)த் தன்மையுடையவை” என்ற கருத்தை வெளியிட்டது. இது எங்களை ஈர்த்தது. இ.பொ.க.(சி.பி.ஐ.) இந்திய அரசின் அடக்குமுறைக்கு ஆதரவாக இருந்தது. மா.பொ.க.(சி.பி.எம்.)தான் அதை உறுதியோடு எதிர்த்தது.

‘சீனா போன்று ஒரே மொழி பேசக் கூடிய நாடாக இந்தியா இருந்தால், மா.பொ.க.(சி.பி.எம்.)தான் சரியான வழி காட்டக் கூடியதாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. ஆனால் இந்தியா பலமொழிகளைப் பேசுகின்ற, பல சாதிகளைக் கொண்ட நாடாக இருப்பதால்தான் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. சாதி, மொழி இரண்டு சிக்கல்களும் இல்லாத இந்தியாவிற்கு அறிவியல்பூர்வமான வேலைத் திட்டம் என்பது மா.பொ.க.(சி.பி.எம்.)உடையதுதான். ஆனால் அவை இரண்டும் இந்தியாவில் சிக்கல்களாக இருப்பதும், அவை குறித்து மா.பொ.க.(சி.பி.எம்.) கவனம் கொள்ளாமல் இருப்பதும்தான் இன்றளவுக்கும் அந்தக் கட்சிக்கு இருக்கும் பெரிய பலவீனம். நக்குசலைட்டுகளும் அப்படித்தான் இருந்தார்கள். சாதியை ஓர் உணர்ச்சி அடிப்படையில்தான் நாங்கள் அணுகினோம்.

தேசிய இன தன்வரையறை உரிமையையும் தோழர்கள் பாலசுப்பிரமணியம், சுந்தரய்யா போன்றவர்கள் ஆதரித்தார்கள். இராமமூர்த்தி, இ.எம்.எசு. போன்றவர்கள் எதிர்த்தார்கள். இந்த ஒரு நிலைப்பாட்டைத் தவிர மற்றக் கொள்கைகளில் எங்களுக்கு மா.பொ.க.(சி.பி.எம்.)உடன் வேறுபாடு இருக்கவில்லை. எனவே மா.பொ.க.(சி.பி.எம்.-இல் சேருவது என முடிவெடுத்தோம். 75இல் இதுகுறித்து ஏ. பாலசுப்பிரமணியத்துக்குக் கடிதம் எழுதினோம். அவர் எங்களைச் சிறையில் வந்து சந்தித்தார். அதிலிருந்து நாங்கள் சி.பி.எம். உறுப்பினர்கள்தான். சிறையிலிருந்து விடுதலையாகி, பின்பு கட்சியிலிருந்து நான் நீக்கப்படும் வரை மா.பொ.க.(சி.பி.எம்.) உறுப்பினராக இருந்தேன்.

(மா.பொ.க.)சி.பி.எம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள், தமிழ்த் தேசியத்திற்கான சாத்தியங்கள், தமிழ்த் தேசியவாதிகள் தனித்தனியாக செயல்படுவது, பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கியது, சல்லிக்கட்டு தமிழரின் அடையாளமா உள்ளிட்ட கேள்விகளுக்கு தியாகுவின் பதில்கள் நிறைவுப் பகுதியாக – அடுத்து…)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 298

திங்கள், 20 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : நாம் வந்த பாதை தவறு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : சிறை வாழ்க்கை – தொடர்ச்சி)

நாம் வந்த பாதை தவறு

அப்போதிருந்த மனநிலைப்படி ‘இந்தியப் புரட்சி என்பது சாத்தியம். ஆனால் அதற்கு மொழி தடையாக இருக்கிறது. அதைக் கடப்பதற்கு இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற கருத்தே எனக்கு இருந்தது. இதேபோல் தொடர்ந்து ஐந்தாறு நாட்களுக்கு எங்களுக்குள் கடுமையான விவாதம் நடைபெற்றது.

உங்களுடன் கைதான மற்றத் தோழர்கள் இந்த விவாதத்தை எப்படி எதிர்கொண்டார்கள்?

அப்போது நக்குசலைட்டு கைதிகள் பலருக்கு ‘இன்னும் சில ஆண்டுகளில் புரட்சி வெற்றிபெற்று விடும்’ என்ற தீர்க்கமான நம்பிக்கை இருந்தது.

‘எழுபதுகளைப் புரட்சிகளின் பத்தாண்டுகளாக்குவோம்’ என்று சாரு மசூம்தார் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அஃதாவது எண்பதுக்குள் புரட்சி வெற்றி பெற்று விடும் என்பதுதான் அதன் சாரம். அதை நாங்களும் நம்பினோம். 70ம் ஆண்டு இறுதியில் கைதாகி நான் சிறைக்கு வந்தேன். 71இல் புலவர் கலியபெருமாள் கைதாகிச் சிறைக்கு வந்தார். நீதிமன்றம் செல்வதைப் புறக்கணிப்பது, சிறையில் இருந்து தப்பிக்க முயல்வது போன்ற வேலைகளில் நாங்கள் ஈடுபடுவதை அவர் மிகவும் பாராட்டினார்.

அவர் சொல்வார், ‘இதுதான் சரி. ஏன்னா புரட்சி ரொம்ப சீக்கிரமா வந்துட்டிருக்கு. 80 எல்லாம் ஆகாது, 75ம் ஆண்டிற்குள் புரட்சி நடந்து முடிந்து விடும், அதான் சாரு சொல்லிட்டார்ல’ என்று சொல்வார்.

புலவரின் மனைவி அவரைச் சந்திக்க வருவார். அவர் சொல்வார், ‘நீங்க ஒரு நாலுபேர் இங்க, வள்ளுவன் இன்னும் நாலு பேர் வேலூர் சிறையிலே. இவ்வளவு பேருதான் சொல்லிட்டிருக்கீங்க. நாட்டுலே ஒரு புரட்சியும் காணோம்’ என்பார். புலவர் ‘அதெல்லாம் உனக்கு விளங்காது’ என்று சொல்லி விடுவார். அந்தளவுக்குப், புரட்சி மீதான தவறான நம்பிக்கை எங்களிடம் இருந்தது.

அந்த நேரத்தில்தான் இலெனினின் “புரட்சிகர வாய்ச்சொல்” என்ற புத்தகத்தைப் படித்தேன். அது என்னுள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற வெற்று நம்பிக்கைகளைத் தாக்கி எழுதப்பட்ட புத்தகம் அது. இரசியாவில் ஏற்பட்ட சனநாயகப் புரட்சிக்குப் பின், மக்கள் அமைதியை விரும்பினார்கள். ஆனால் கெரன்சுகி அரசு போரைத் தொடர்ந்து நடத்தியது. அதனாலேயே அது வீழ்ந்து நவம்பர் சோசலிசப் புரட்சி வென்றது. ‘உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும்’ என்று இலெனின் விரும்பினார். அப்போது இரசியாவின் சில பகுதிகளைச் செருமனி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதைப் போரின் மூலம் மீட்கும் வல்லமை இரசியாவிடம் இல்லை.

அந்த நேரத்தில் செருமனி இரசியாவைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. திராட்சுகிதான் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர். அவரிடம் ‘போரின் மூலம் இரசியாவையே இழந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து போரை நடத்த வேண்டும்’ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. கட்சிக்குள் மூன்று பிரிவுகள் உருவானது. இலெனினின் கருத்து கட்சிக்குள் சிறுபான்மையாகி விட்டது. சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு செருமனி என்ன மோசமான நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்றுக் கொண்டு போரை நிறுத்த வேண்டும் என்பதே இலெனினின் கருத்தாக இருந்தது.

‘நம்முடைய நாட்டின் சில பகுதிகளைச் செருமனி தன்னோடு இணைத்துக் கொள்ளப் போகிறது, எனவே தொடர்ந்து போரிடுவோம். தோற்றாலும் பரவாயில்லை, அது புரட்சிக்கு உதவும். மேலும் செருமனியில் பாட்டாளி வருக்கப் புரட்சி நடைபெறப் போகிறது. அந்தப் புரட்சி வெற்றி பெற்றால் செருமனி இரசியாவின் பகுதிகளை தன்னோடு இணைத்துக் கொள்ளாது. அதன் பிறகு நமக்கும் அவர்களுக்கும் பகை இருக்காது. அந்தப் புரட்சி வெற்றி பெறும் வரை நாம் தொடர்ந்து போரிடுவதுதான் சரி’ என்பது திராட்சுகியின் கருத்தாக இருந்தது.

மூன்றாவது தரப்பு, ‘இப்போது போரும் வேண்டா, சமாதானப் பேச்சுவார்த்தையும் வேண்டா, செருமனி புரட்சி விரைவில் வெற்றி பெறும், அதன்பின் எல்லாச் சிக்கல்களும் தீர்ந்து விடும்’ என்றது. ஆனால் இலெனின் இவை எல்லாவற்றையும் மறுத்தார். ‘போரினால் நிறைய இழந்து விட்டோம். எனவே எவ்வளவு அவமானம் வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும்’ என்றார். அதில் முக்கியமான கருத்தாக, ‘செருமானியப் புரட்சி எப்போது வெற்றி பெறும்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்குப் பதிலாக அவரே, ‘செருமனியில் மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதிகளிலும் புரட்சி நடைபெறப் போகிறது, அது வெற்றிபெறப் போகிறது என்பதை நம்புவது வேறு. இந்தக் கோடைக் காலத்திற்குள் முடிந்து விடும், இந்தக் குளிர் காலத்திற்குள் நடந்து விடும் என்ற நம்புவது வேறு. இது வெறும் வாய்ச்சொல்’ என்று சொன்னார். அதன் பிறகு இலெனினுக்குக் கட்சிக்குள் ஆதரவு பெருகியது. அமைதி தான் சரி என்று பெரும்பாலானோர் ஒத்துக் கொண்டனர்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திராட்சுகி சென்றார். லெனினும், திராட்சுகியும் புரட்சியாளர்கள். மேடை நாகரிகமோ, உடை நாகரிகமோ, சரியான அலங்காரமோ அறியாதவர்கள். அதனால் அங்கிருந்து அவர் இலெனினுக்குத் தொலைவரி கொடுத்தார். ‘குறிப்பிட்ட உடையில் தான் வரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ என்று கேட்டிருந்தார். பதிலுக்கு இலெனின், ‘ஒருவேளை பெண்அங்கியில்(கவுனில்) வரச் சொன்னால் பெண்ணங்கி(கவுன்) அணிந்து கொண்டு போ. நமக்கு அமைதிதான் முக்கியம்’ என்று பதில் அனுப்பினார். நாட்டின் அமைதிக்காக அவமானகரமான அந்த ஒப்பந்தம் நிறைவேறியது.

‘புரட்சிக்கு நாள் குறிப்பது வெறும் வாய்ச்சொல்’ என்பதைப் படித்தவுடன் இந்தியாவில் புரட்சி 80க்குள் வரப்போகிறது என்ற வார்த்தைகளின் மீதே நம்பிக்கை போய்விட்டது. உருசியப் புரட்சியை மற்றத் தோழர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் ஆங்கிலத்தில் இருந்த புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தேன். புரட்சி குறித்த இலெனினின் கருத்துகள் எங்களுக்கு மிகப் புதியனவாக இருந்தன. அதைப் படிக்கப் படிக்க நம் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பெரிய தவறு நடந்து விட்டது புரிந்தது. ‘சீனத்தின் பாதை நமது பாதை’ என்பதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்பது புரிந்தது.

இலெனின் மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்துவார், ‘எவை புறநிலை உண்மைகளோ அவற்றிலிருந்துதான் முடிவுகளுக்குச் செல்ல வேண்டும். ஏற்கெனவே முடிவு செய்த கருத்தை வைத்துக் கொண்டு பேசக் கூடாது’ என்று. என்னுடன் இருக்கும் தோழர்கள் ஏற்கெனவே பல முடிவுகளை வைத்துக் கொண்டு நடக்கும் சம்பவங்களை அதில் பொருத்திப் பார்ப்பவர்களாக இருந்தார்கள். ‘இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீதே எனக்கு ஐயம் இருப்பதாக’ நான் கூறிய போது அவர்களுக்குக் கடுமையான கோபம் உண்டானது. எனவே நான் அவர்களுடன் விவாதிப்பதை நிறுத்தி விட்டுப் படிக்க ஆரம்பித்தேன்.

1973 அட்டோபர் 1 சீனப்புரட்சி நாளன்று ‘மா.இலெ.(எம்-எல்) கட்சிக்கு மறுப்பு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதில், கட்சியின் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கி ஆராய வேண்டும் என்று விவாதித்திருந்தேன். ‘இப்போது மா.இல.(எம்-எல்) கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை ஆராய்கிற போது அத்திவாரம் இல்லாத கட்டடமாக அது எழுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பு எவ்வளவு அழகாக, ஈர்ப்புடையதாக, ஈகங்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருந்தாலும் அது உடைந்து சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று எழுதியிருந்தேன்.

தோழர்கள் கொதித்துப் போனார்கள். மீண்டும் நான் தெளிவாக ‘நீங்கள் கோபப்படுவதில் எந்த அருத்தமுமில்லை. இது சுக்குநூறாக உடையத்தான் போகிறது. ஓர் அமைப்பாகக் கூட இது நீடிக்காது. ஏனெனில் இதன் அடிப்படையே தவறு’ என்று கூறினேன். இதைக் கேட்டதும் அடுத்த சிற்றறையில்(செல்லில்) இருந்த தோழர் குருமூர்த்தி கதறி அழுதார். இன்னுமொரு தோழர், சுவரில் படிந்த இரத்தக் கறைகளை நினைவுபடுத்தி ‘போன வருடம் இதே இடத்தில்தானே போராட்டம் நடத்தி, இரத்தம் வருமளவுக்கு அடிபட்டுத் துன்பப்பட்டோம். எதற்காக இத்தனைத் துயரங்களையும் தாங்கினோமோ அதுவே தவறா?’ என்று திக்கித் திணறிப் பேசியவர் கலங்கி நின்று விட்டார். அவரால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவருக்கு நான் அலெக்குசாண்டரைப் பற்றிக் கூறினேன்.

இலெனினின் தமையனார் அலெக்குசாண்டர்(Alexander) ஒரு குமுக உணர்வமைப்பர்(Narodnik). சார் மன்னரைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டார். இது இலெனினை மிகவும் பாதித்தது. இந்த நிகழ்ச்சி இலெனினின் வாழ்க்கை வரலாற்று நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இலெனின் வீட்டிற்கு வருகிறார். பக்கத்து வீட்டில் அவரிடம் ஒரு செய்தித்தாளைக் காண்பிக்கிறார்கள். அதில் ‘Alexander Hanged’ என்று இருக்கிறது. அடுத்த நொடி இலெனின் சொல்வார், ‘இதற்கான விலையை அவர்கள் செலுத்தியே ஆகவேண்டும்’ என்று. அலெக்குசாண்டர்தான் இலெனினுக்குப் புரட்சிப் பாதையைக் காண்பித்தவர். ஆனாலும் அண்ணனின் பாதையை இலெனின் மறுதலித்தார். விலை பெறுவதற்காகச் சார் மன்னரையோ, நீதிபதியையோ, அதிகாரிகளையோ தேடிச் சென்று கொலை செய்யவில்லை. மாறாக மன்னராட்சியை ஒழிப்பதற்காக இரசிய மக்களைத்தான் திரட்டினார். எது நடைமுறைக்குச் சரியான தத்துவமோ அதை எடுத்துக்கொண்டார்.

அதேபோல் மாவோவின் மேற்கோளையும் உதாரணமாகக் காட்டினேன். ‘தனிமனிதனா அமைப்பா என்று வரும் போது அமைப்பு தான் முக்கியம். அமைப்பா, அரசியலா என்று வரும்போது அரசியல்தான் சரி. கடந்த காலத்தில் தனிமனிதனா அமைப்பா என்ற கேள்வி வந்த போது அமைப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் சிறையில் இருக்கிறோம். இப்போது அமைப்பா, அரசியலா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அமைப்பு என்பதே அரசியலுக்காகத்தான். அரசியல் தவறாகப் போன பிறகு அமைப்பைத் தூக்கிப் பிடிக்க முடியாது’ என்று சொன்னேன்.

‘சரியான ஒன்றுக்காகத் தூக்கில் தொங்கப் போகிறோம் என்ற நிறைவில் தூக்குக் கயிற்றின் அடியில் நிற்கும்போது தான் செய்தது தவறு என்று தெரிந்தால் எப்படித் தாங்கிக் கொள்வது’ என்று கேட்டார் தோழர். உண்மையில் அவருக்கு மட்டுமல்ல அந்தக் கணம் எனக்கும் சீரணிக்க முடியாததாகவே இருந்தது. ‘தூக்கில் போனாலும் பரவாயில்லை, இனி வரும் தலைமுறைக்கு நாம் வந்த பாதை தவறு என்பதை சொல்லிவிட்டுத்தான் சாக வேண்டும்’ என்று கூறினேன்.

(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 297

ஞாயிறு, 19 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : சிறை வாழ்க்கை

 








(தோழர் தியாகு எழுதுகிறார் : கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (2)(ஆ) : மினர்வா & நந்தன்

தோழர் தியாகு எழுதுகிறார் : சிறை வாழ்க்கை

சிறை வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது?

இந்திய நாட்டின் சட்டப்படி அரசியல் கைதி என்ற வகைப் பிரிவே கிடையாது. தாக்குதல் என்றல்ல, அரசியல் காரணங்களுக்காக ஓர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் கூட அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்குதான் பதிவு செய்யப்படும். மறியல் செய்தால் ‘அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தார்’ என்றுதான் வழக்குப் பதிவு செய்யப்படும்.

எங்களை நக்குசலைட்டு விசாரணைக் கைதி என்று சொல்லி தனியாக அடைத்து வைத்து விட்டார்கள். சாதாரணக் கைதிகளாக இருந்தால் அவர்களுக்கு சில சுதந்திரங்கள் இருக்கும். அரசியல் கைதி என்றால் படிக்க, எழுத, நண்பர்களைச் சந்திக்க என்று சில வசதிகள் இருக்க வேண்டும். அதனால் எங்களை அரசியல் கைதியாக நடத்த வேண்டும் என்று போராடினோம். ‘புத்தகங்கள்ப் படிக்க, வெளியிலிருந்து வரும் புத்தகங்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இருபத்து நான்கு மணி நேரமும் கொட்டடியில் பூட்டியே வைக்கக் கூடாது. நாங்கள் இருந்த சிறையில் கழிப்பறை வெளியே கிடையாது. கொட்டடிக்குள் ஒரு மண் சட்டியை கொடுப்பார்கள், அதில்தான் மலசலம் கழிக்க வேண்டும். உள்ளேயே துணி துவைத்து, குளித்து உள்ளேயே இருக்க வேண்டும். எனவே வெளியே கழிப்பறை கட்டித் தர வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வைத்துப் போராடினோம். போராட்டம் என்றால் உண்ணாவிரதம்தான். இந்தப் போராட்டங்கள் சிறையில் எங்களுக்கு ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தன. நெருக்கடிநிலைக் காலத்தில் சிறைகளில் மிசா கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறை அடக்குமுறைகளை மிசா கைதிகளால் தாங்கவும் முடியவில்லை, எங்கள் அளவுக்கு அதை எதிர்த்துப் போராடவும் முடியவில்லை.

மிசா காலத்தில் அரசியல் தலைவர், எம்.பி, எம்.எல்.ஏ. யாருக்கும் ஒரு மரியாதையும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் நக்குசலைட்டு என்றால் சிறையில் தனி மரியாதை இருந்தது. அவர்கள்தான் ‘அடித்தால் திருப்பி அடி’ என்ற முழக்கத்தை சிறைக்குள்ளேயே எழுப்பியவர்கள். கொண்ட கொள்கைக்காகக் கைதாகி, சிறைக்கு வந்திருந்ததால் நக்குசலைட்டு கைதிகள் சிறைக்குள்ளும் தங்களது கொள்கை எதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தோம். மிசா கைதிகளிடம் அந்தளவுக்கு கொள்கையும் கிடையாது; போராட்டக் குணமும் கிடையாது.

சென்னை சிறை மிசா கைதிகளில் ஆற்காடு வீராசாமியும் ஒருவர். அவர் ஏற்கெனவே நிறைய அடி வாங்கியிருந்தார். அதேநேரத்தில் அவர் அடிக்குப் பயந்தவர். உபயத்துல்லா என்ற சிறைக் காவலர் மேசையில் உட்கார்ந்திருப்பார். இவர் அவரது காலுக்குக் கீழே சென்று அமர்ந்து தன்னை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டிருப்பார். அதற்குப் பதிலாக தனது வீட்டில் சென்று பணம் வாங்கிக் கொள்ளச் சொல்வார்.

அதே நேரத்தில் சிட்டிபாபு, முரசொலி மாறன், சி.பி.எம்.கட்சியைச் சேர்ந்த சிவாசி போன்றோர் சிறை நிருவாகத்தை எதிர்த்து தைரியமாகப் போராடினார்கள். இவர்களால்தான் சிறையில் பல மாற்றங்கள் வந்தன. தாலினை முதலில் கடுமையாக அடித்ததோடு தனித் தொகுதிக்குக் கொண்டுசென்று தனிமைப்படுத்தி விட்டார்கள்.


சிறையில் நக்குசலைட்டுகளின் போராட்டம் எப்படி இருந்தது?

முதலில் எங்களது கோரிக்கைகளுக்காகப் போராடினோம். அடுத்தக்கட்டமாக சிறைக்குள் இருப்பவர்களோடு கலந்து அவர்களை இணைத்துக் கொண்டு ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.

அப்போது சிபிஎம் கட்சித் தோழர் ஏ.சி.கே. எங்களுடன் இருந்தார். அவர் எங்களுக்குப் பெரிய உந்துதலாக இருந்தார். அவர் சிறைக்குள் இருந்து கொண்டே காவலர்கள் இருபத்தைந்து பேரைத் திரட்டி அவர்களது கோரிக்கைகள் நிறைவேற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். சிறைப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு, விண்ணப்பங்களை அவர்தான் எழுதிக் கொடுப்பார். ‘எங்களை நாகை கிளைச் சிறைக்கு மாற்றும் போது அங்கிருந்து தப்பித்து விடுவது’ என்று நாங்கள் திட்டம் தீட்டியபோது, ஏ.சி.கே.தான் உள்ளேயிருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். ஆனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
‘சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம்’ என்ற சங்கத்தையும் தோழர் ஏ.சி..கே.தான் ஏற்படுத்தினார். உரிமைக் குரல் என்ற பத்திரிகை (கையேடு) நடத்தினார். நானும் அதில் எழுதினேன். அவரது உந்துதலின் பேரில் எழுத்தறிவு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தினோம். எழுதப் படிக்கத் தெரியாத தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தோம். அதே நேரத்தில் அரசியல் நிலையில் அழித்தொழிப்பு, ஆயுதப் போராட்டம் என்கிற எங்களுடைய பழைய கருத்திலிருந்து விடுபட்டோம். எல்லாப் போராட்ட வடிவங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தது.
(தோழர் ஏசி தலைமையிலான சிறைப் போராட்டங்கள் பற்றியறிய சுவருக்குள் சித்திரங்கள் படிக்க வேண்டும்.)

நீங்கள் ஒரு கொள்கையை நம்பி வீட்டை விட்டு வெளியேறுகிறீர்கள். பல இழப்புகளுக்குப் பின் கைதாகி, தூக்குத் தண்டனையும் கிடைக்கிறது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கை தவறு என்று பட்ட போது எப்படி இருந்தது?

புரட்சி, அதன் மீதான நம்பிக்கை என்பது புனிதமானது. அந்த நம்பிக்கையை என்றுமே மாற்றிக் கொள்ள முடியாது. அதில் உறுதியாகப் பிடிப்பு வைத்து விட்டேன். அந்தப் புரட்சிக்கு இதுதான் சரியான அமைப்பு என்பதிலும் அதே அளவு நம்பிக்கை வைத்தாகி விட்டது. இதில் ஏதோ தவறு என்கிற போது சில வழிமுறைகளில் ஏற்பட்ட தவறு என்றுதான் இயல்பாகவே முதலில் தோன்றும்.

சிறையில் இருக்கும் போது வழக்கம் போல் மே நாள் கொண்டாடுவது, நவம்பர் புரட்சி நாள் கொண்டாடுவது, அன்று எங்களுக்குள் கூட்டங்கள் நடத்துவது என்று ஏதாவது நடக்கும். அந்த நேரத்தில் அழித்தொழிப்பு மீதான நம்பிக்கை முழுவதுமாகப் போய் விட்டது. முதன்முதலில் ஏ.எம்.கே.வை சந்தித்த போதே ‘அவர் அழித்தொழிப்பு தனிமனித பயங்கரவாதமாக மாறிவிடுமோ’ என்ற தன்னுடைய அச்சத்தைத் தெரிவித்திருந்தார்.
(individual terrorism எனபதைத் தனிமனித பயங்கரவாதம் என்றுதான் அப்போது சொல்லிக் கொண்டிருந்தேன். அது சரியன்று. individual terrorism என்பதற்கு எதிர்நிலை state terrorism. அதாவது அரசப் பயங்கரவாதம். இங்கே தனிமனிதரா? அல்லது கூட்டு மனிதரா? என்பதல்ல, அரசா? அல்லது குடிமகனா / குடிமகளா? என்பதுதான் எதிர்நிலை. பயங்கரவாதம் தமிழ்ச் சொல் அன்று, terrorism என்பதைத் திகிலியம் எனக் கொண்டால், state terrorism = அரசத் திகிலியம்; individual terrorism = குடித் திகிலியம்)

‘அழித்தொழிப்பில் மக்களுக்கு என்ன பங்கு’ என்பதுதான் எங்கள் முன் இருந்த பெரிய கேள்வியாக இருந்தது. மக்களின் பங்கு இல்லாத எந்தப் போராட்டமும் மக்களைத் திரட்ட உதவாது என்பதில் தீர்மானமாக இருந்தோம். “சீனத்தின் பாதை நமது பாதை, சீனத்தின் தலைவர் நமது தலைவர்” என்பதுதான் அப்போது நாங்கள் (நீதிமன்றத்தில் கூட) எழுப்பிய முழக்கம். சீனத்தின் பாதை எது என்பதை ஆராய்ந்த போது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வெகுமக்கள் போராட்டம்தான் சரி என்பது சீனத்தின் கொள்கை. ‘நாங்கள் பாராளுமன்றில் பங்கேற்கவில்லை என்று யாரும் எங்கள் மீது குறைசொல்ல முடியாது. ஏனெனில் இங்குப் பாராளுமன்றே கிடையாது’ என்று மாவோ சொல்கிறார். ‘நாங்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இங்குத் தேர்தலே நடைபெறவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். தொடர்ந்து சீன வரலாற்றைப் படிக்கும் போது வெகுமக்கள் போராட்டத்திற்கு எப்படி அவர்கள் தயாராகிறார்கள், அமைதிப் போராட்டத்திற்கு வாய்ப்பிருந்தால் அதையும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.

அன்று சூலை 1 சீனப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன நாள். அன்று சிறைக்குள் எங்களுக்கிடையே பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்தன. சீனப் புரட்சிக்கும் இந்தியப் புரட்சிக்குமான வேறுபாட்டை நான் அறிக்கையாக முன்வைத்தேன். அதில் முக்கியமான வேறுபாடாக நான் குறிப்பிட்டது ‘சீனா ஒரே மொழி பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடு. இந்தியா பல மொழிகளைப் பேசக்கூடிய ஒரு நாடு. அங்கு மொழி என்பது புரட்சிக்கு ஒரு தடையாக இல்லை, இங்கு மொழி புரட்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது. இதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று பேசினேன்.

72ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். சாரு மசூம்தார் கைதாவதற்கு முன்பு பீகாரில் தலைமறைவாக இருந்து கொண்டு ஒரு பேட்டி கொடுத்தார். கேள்வியில், ‘சீனப் பாதைதான் உங்கள் பாதை என்றால் அங்கு நடந்தது போல் ஒரு நீண்ட பயணம் நடக்குமா?’ என்று கேட்கப்படுகிறது. சாரு பதிலில், “நிச்சயம் நடக்கும். ஆந்திராவில் சிறிகாகுளத்திலிருந்து இருந்து வங்கத்தின் பீர்பூம் வரை இந்த நீண்ட பயணம் நடக்கும்” என்று சொல்கிறார். அப்போது ஆந்திராவிலும், வங்கத்திலும் பெரிய அளவில் அழித்தொழிப்பு நடந்து கொண்டு இருந்தது.

சிறை நண்பர்கள் இதுகுறித்து என்னிடம் கேட்டனர். ‘சீனாவின் நீண்ட பயணம் கேண்டண் தொடங்கி ஏனான் வரை நடைபெற்றது. அங்கு அனைவரும் சீனமொழி பேசுபவர்கள். இங்கு ஆந்திராவில் தெலுங்கு பேசும் மக்களோடு புறப்படும் நாம் ஆந்திர எல்லையைக் கடந்து மத்தியப் பிரதேசம் அல்லது ஒரிசாவிற்குள் நுழைந்ததுமே வேறு மொழி பேசும் மக்களை எதிர்கொள்ள வேண்டும். எனவே இங்கு நீண்ட பயணம் சாத்தியமில்லை’ என்று சொன்னேன்.

(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 297

தோழர் தியாகு எழுதுகிறார் : கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள் – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (2)(அ.2.)

கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு


இஃது எல்லாராலும் முடிவதில்லை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இந்த நடவடிக்கைகளால் பொறியியல் தோழருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்னால் எங்களிடம், ‘ஒவ்வொருவரையாக அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலைக்குள் ஒரு பகுதி நிலச்சுவான்தார்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும்’ என்பார். கபித்தலம் மூப்பனாரில் தொடங்கி பூண்டி வாண்டையார் வரை இருபதுக்கும் மேற்பட்ட நிலச்சுவான்தார்கள் பெயரையும் ஒரே இரவில் அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதற்கான திட்டத்தையும் சொல்வார் அவர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பின்பு எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு தீக்குச்சியாகக் கிழித்து, ‘பூண்டி வாண்டையார் அவுட், மூப்பனார் அவுட். எல்லோரையும் குளோசு பண்ணிட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரைத் திரும்பவும் வீட்டிற்கே கொண்டுபோய் விட்டுவிட்டோம். நன்றாகப் படிக்கும் மாணவர் என்பதால் கல்லூரி நிருவாகமும் அவரைச் சேர்த்துக் கொண்டது. அவர் படிப்பு முடிந்ததும் அவரது குடும்பம் அவரை வேறு மாநிலத்திற்கு அனுப்பி விட்டது. உண்மைநிலைக்குப் பொருத்தமில்லாத, புறச்சூழலை உள்வாங்காத கொள்கைகளால் இதுபோல் மனநிலை பாதிக்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இதுபோன்ற நிலையை நீங்கள் இயக்கத் தலைமையிடம் எடுத்துச் சொல்லவில்லையா?

இயக்கத் தலைமையெல்லாம் எதுவும் கிடையாது. சீனாவில் எப்படி மாசேதுங்கு தலைமையை யாரும் கேள்வி கேட்காமல் எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முழக்கம் எழுப்பப்பட்டதோ, அதேபோல் சாரு மசூம்தாரின் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கட்டத்தில் முழக்கம் கூட எழுப்பப்பட்டது. சாரு மசூம்தார் ஒரு சருவாதிகாரியாகத்தான் செயல்பட்டார். மிகச் சாதாரணக் காரணங்களுக்காக இயக்கத்தில் பலரை அவர் வெளியேற்றினார். தொழிற்சங்கமே கூடாது என்றார். ‘வருக்க எதிரியின் இரத்தத்தில் கை நனைப்பவனே உண்மையான பொதுவுடைமைவாதி(கம்யூனிசுட்டு’), ‘பத்து அழித்தொழிப்புக்களை மேற்கொண்டவன் இந்த உலகத்தில் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை’ என எந்நேரமும் அழித்தொழிப்பு பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார் அவர்.

உங்கள் கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு பற்றிக் கூற முடியுமா?

சோழகர் கொலை முயற்சிக்குப் பிறகு, சிலநாட்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டோம். பிறகு இரண்டாவது அழித்தொழிப்புக்குத் திட்டமிட்டோம். அப்போது தோழர் ஏ.எம்.கே.வும் இன்னும் சில தோழர்களும் தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் அழித்தொழிப்புக்கு ஆள்சேர்க்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம். எனக்கு அப்போது பத்தொன்பது வயது. என்னுடன் வேலை செய்தவர்கள் இருபத்தெட்டு, முப்பது வயதுடையவர்களாக இருந்தார்கள்.

அடுத்த அழித்தொழிப்பாகத் திருவோணம் முத்து தங்கப்பாவைத் தேர்வு செய்தோம். அவர் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்து அந்தத் தேர்தலில் தோற்றுப் போயிருந்தார். சாதி ஆதிக்கம் உடையவர். சொந்தச் சாதி ஆட்களைத் தவிர மற்றவர்களிடம் வெறுப்பைச் சம்பாதித்திருந்தார். காவல்நிலையத்தில் கூட அவர் சொல்வதைத்தான் கேட்கும் நிலை இருந்தது.

அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அருகில் நெருங்க முடியாத அளவுக்கு சுற்றிலும் ஆட்களுடனே வலம் வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து கண்காணித்த போது விடியற்காலையில் குளக்கரைக்குத் தனியாக வருவார் என்பதை அறிந்தோம்.

தோழர் இலெனின் தலைமையில் நாங்கள் அங்கே அவருக்காக காத்திருந்தோம். வெகுநேரம் கழித்து வந்த அவர் எங்களைப் பார்த்ததும், ‘யாருடா, திருட்டுப் பயல்களா?’ என்று கேட்டவாறே எங்களை நெருங்கினார். நாங்கள் மெதுவாக நகர ஆரம்பித்ததும், ஓடப் போகிறோம் என நினைத்த அவர் சுற்றி வயல்களில் வேலை செய்தவர்களைச் சத்தம் போட்டு அழைத்தார். தூரத்தில் ஆட்கள் ஓடிவர, அவரும் கீழே கிடந்த கற்களை எடுத்து எங்களை நோக்கி வீச ஆரம்பித்தார். உடனடியாகக் கையில் இருந்த அரிவாளால் தோழர் இலெனின் அவரை வெட்ட, மீதமுள்ள நான்கு பேரும் சரமாரியாக வெட்டினோம், குத்தினோம்.

ஓடிவந்த அந்த ஊர் ஆட்களில் ஒருவர் எங்களில் ஒருவரைப் பிடித்துவிட, தோழரை மீட்பதற்காக அவரது கழுத்திலும் அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பி ஓடினோம். அந்த ஊரின் அமைப்பு தெரிந்தவர்கள் தப்பித்து விட, நான் மாட்டிக் கொண்டேன். அந்த ஊர் மக்களுக்கு நான் நக்சலைட்டு என்றோ, நடந்தது அழித்தொழிப்பு என்றோ சொன்னால் எதுவும் புரியாது, நம்பவும் மாட்டார்கள். அந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் அப்பு செட்டியார்தான் ஆள்வைத்துக் கொலை செய்து விட்டதாக அவர்கள் நம்பினார்கள்.

என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டும் நான் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். என்னை முத்து தங்கப்பா இறந்து கிடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று அவர் தலை மீது என் தலையை வைத்து வெட்ட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து அவர்களைச் சமாதானப்படுத்தி என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அங்கு யாதவராசு என்ற விசாரணை அதிகாரியிடம், நான் யார் என்பதையும் எங்கள் நோக்கத்தையும் கூறினேன்.

கொலை நடந்த இடத்தில் ‘உனக்கு ஏன் மரணத்தண்டனை’ என்று கொலைக்கான காரணத்தை எழுதி உறையில் வைத்து போட்டிருந்தோம். கூடவே கொடி, மாவோ சிலை ஆகியவற்றை விட்டு வைத்திருந்தோம். கொலையை முடித்த பிறகு அங்கு நின்று முழக்கங்கள் எழுப்பி விட்டுத்தான் தப்பி ஓடினோம். இதையெல்லாம் அதிகாரியிடம் கூறினேன். அவர் அதையெல்லாம் கைப்பற்றி வந்தார். அவருக்கு இந்தக் கொலைக்கான காரணம் புரிந்து விட்டது. அவர் நக்சலைட்டு பிரிவுக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அழித்தொழிப்பில் ஈடுபட்ட இன்னும் இரண்டு தோழர்களை இரண்டு நாட்களில் கைது செய்தார்கள். கீழ்நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனையும், மறுவிசாரணையின் போது நாகை நீதிமன்றத்தில் எனக்கு மரணத் தண்டனையும் கொடுக்கப்பட்டது.

எங்களது அழித்தொழிப்பின் நோக்கம் ‘ஒரு பகுதியில் அழித்தொழிப்பு நடைபெற்றால் அங்கு மக்களிடையே மனமாற்றம் ஏற்படும், நிலச்சுவான்தார்கள் பயந்து ஓடி விடுவார்கள், அங்கு நிலச்சீர்திருத்தம் நடைபெறும், அந்த இடத்தைப் புரட்சிக்கான தளமாக மாற்றி விடலாம்’ என்பதுதான். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. முத்து தங்கப்பா கொலையைப் பொறுத்த வரை அந்தப் பகுதியில் அது கடுமையான சாதிப் பிரச்சனையாகத்தான் பார்க்கப்பட்டது.

அவர் கொலை நடந்த அன்று தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் என்றும், எங்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது அவரது சாதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் என்றும் கேள்விப்பட்டோம். ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மனத்தில் இந்தச் சம்பவம் கொஞ்சம் தைரியத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் அது மட்டுமே எங்கள் நோக்கமாக இருக்கவில்லை.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 296