(தோழர் தியாகு எழுதுகிறார் : மூலதனம் தமிழாக்கம் – தொடர்ச்சி)
மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும்: தியாகு
கீற்று நேர்காணல் (3)(அ) : மினர்வா & நந்தன்
சிறையில் இருந்து வெளியே வந்ததும் மா.பொ.க.(சி.பி.எம்)-இல் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்?
நானும் தோழர் இலெனினும் சிறையில் இருந்த படி கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடிநிலை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மா.பொ.க.(சி.பி.எம்.) தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்குசியக் கட்சியின் சோதிபாசு, ஈ.எம்.எசு, பி.இராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்ய முற்பட்டது. அவர்களில் பலர் தலைமறைவாகிச் செயல்பட்டனர்.
கேரளத்தில் நெருக்கடிநிலையைக் கண்டித்து மார்க்குசியக் கட்சி முழு அடைப்புப் போராட்டமே நடத்தியது. தலைவர்களைக் கைது செய்த இந்திரா காந்தி அரசு அவர்களை மிசாவில் அடைக்கவில்லை. வலதுசாரி வல்லிய(பாசிச)க் கட்சிகளை அடக்கத்தான் இந்த நெருக்கடிநிலை என உலகிற்கு இந்திராகாந்தி அறிவித்தார். இதற்கு இ.பொ.க.(சி.பி.ஐ.) ஆதரவு தெரிவித்தது. சோவியத்து அரசும் இதை நியாயப்படுத்தியது. நெருக்கடி நிலை இடதுசாரிகளுக்கு எதிரானதல்ல என்று காட்டிக்கொள்ளத்தான் இ.பொ.க.(சிபிஎம்) உயர்மட்டத் தலைவர்களை அரசு கைது செய்யவில்லை.
ஆனால் அந்தத் தலைவர்களாலும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவர்கள் நடத்திய பத்திரிகைகளும் முன்தணிக்கை செய்யப்பட்டே வந்தன. இந்த நடவடிக்கைகளால் எங்களுக்கு மா.பொ.க.(சி.பி.எம்.) மேல் பெரிய மரியாதை இருந்தது. இந்திய ஆளும் வருக்கம் பற்றிய பார்வை, இந்திய முதலாளிகளின் ஆதிக்கம், விவசாயம் பற்றிய தெளிவு போன்றவற்றில் மார்க்குசியக் கட்சிக்கு அறிவியல் வழிப்பட்ட பார்வை இருந்தது.
அதேபோல்’ சீனத்தின் பாதையே எங்கள் பாதை’ என்று சொல்லும் மா.இலெ.(எம்.எல்) கட்சிக்கும், சோவியத்து என்ன செய்தாலும் சரி என்று சொல்லும் இ.பொ.க.(சி.பி.ஐ.) கட்சிக்கும் இடையே சுதந்திரமான ஒரு கட்சியாக மா.பொ.க.(சி.பி.எம்.) தான் இருந்தது. இதனால் உலகக்ப் பொதுவுடைமை இயக்கங்கள் எதுவும் மா.பொ. கட்சியை ஆதரிக்கவில்லை. பெய்சிங்கு வானொலியில் இவர்களைப் ‘பன்னாட்டு அனாதைகள்’ என்றே கூறினார்கள்.
சீனாவின் ஒரே நிரந்தரத் தலைவர் மாசேதுங்குதான் என அவர்கள் (கட்சியின் ஒன்பதாம் பேராயத்தில்) அறிவித்த போது இங்குள்ள மார்க்குசியர்கள் அதைக் குறையாய்வு செய்தார்கள். ‘உரோமன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பு தவறே செய்ய மாட்டார், எனவே அவரையே பின்பற்ற வேண்டும் என கத்தோலிக்கர்கள் கூறுவது போல் இருக்கிறது’ எனக் குறையாய்வு செய்தார்கள். ஏ.பாலசுப்பிரமணியமும் ‘சோவியத்தோ, சீனாவோ எந்த ஓர் இடமும் குருபீடம் போல் செயல்பட முடியாது’ என எழுதினார். இவ்வாறு அவர்கள் ஒவ்வொன்றிலும் மாறுபட்டு நின்றது எங்களை ஈர்த்தது. இதனால் சிறையிலிருந்த போதே மா.பொ.க.வில்(சி.பி.எம்மில்) சேர்ந்தோம்.
அமைப்பு கட்டுவது, பத்திரிகை நடத்துவது, போராடுவது எனச் சிறைக்குள் வழக்கம் போல் எங்களது செயல்பாடுகள் தொடர்ந்தன. அந்த நேரத்தில்தான் ஈழப்போராட்டம் வலுப்பெறுகிறது. அதில் மா.பொ.க.(சி.பி.எம்.) எடுத்த நிலைப்பாட்டில் கொஞ்சமும் நியாயம் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை. அவர்கள் முற்றிலும் இந்திய அரசின் நிலையை ஆதரித்தார்கள். ஈழப்போராட்டம் நியாயமானது என்ற கருத்து எங்களுக்கு இருந்தது.
ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகச் சிறைக்குள்ளேயே பெரிய எழுச்சி ஏற்பட்டது. மதுரை சிறைச்சாலையில் செயவர்த்தனே கொடும்பாவி எரிக்கப்பட்டது. நான் அப்போது திருச்சி சிறையில் இருந்தேன். அங்கு 1,500 கைதிகளையும் திரட்டி சிறைக்குள் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினோம். அதில் ஈழச் சிக்கல்களை விளக்கி நான் பேசினேன்.
1983இல் சிறையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடங்கினோம். அதில் முதல் கோரிக்கையாக ஈழப் போராட்டத்தை நியாயப்படுத்தினோம். அதைத் தவிரவும் பத்தாண்டுகள் ஆன ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக அந்தப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக ஒருநாள் உண்ணாவிரதமிருந்து அந்தப் பணத்தை ஈழ அகதிகள் நிதிக்காக அரசுக்கு அனுப்பினோம். சிறையில் இருந்து பதினைந்து நாட்கள் விடுப்பில் வெளியே போய் சிறைப் போராட்டத்துக்குப் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினேன்.
அதற்கு முன்னதாக 1979ல் சிறைக்குள் ஒரு கைதியைக் காவலர் அடித்துக் கொன்று விட்டு தற்கொலை செய்து விட்டதாகக் கூறினார்கள். இதை எதிர்த்துக் கைதிகள் சிறைக்குள் போராட்டம் நடத்தினார்கள். காவலருக்கும் கைதிகளுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. தேவாரம்தான் அபோது கா.து.த.(டி.ஐ.சி.)ஆக இருந்தார். கைதிகள் மீது துப்பாக்கிச்சூடும், பிரம்படியும் (இலத்தி சார்சும்) நடைபெற்றது. அதன் பிறகுதான் சிறைக் கைதிகளுக்காக ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் உருவாவதற்கு வெளியிலிருந்த மா.பொ.க.(சி.பி.எம்.) தோழர்கள்தான் கடுமையாகப் போராடினார்கள்.
1983 சிறைப் போராட்டத்திற்கு பிறகு எனக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே ஈழப் போராட்டத்தை முன்னிறுத்திக் கருத்து வேறுபாடுகள் உருவாயின. தேசியத் தன்வரையறை உரிமையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தை மார்க்குசியக் கட்சி மறுதலித்தது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
1985இல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன். வெளியே வந்ததும் ம.பொ. கட்சியின் முழுநேர ஊழியராகச் சேர கட்சி அழைத்தது. மூலதனம் பதிப்பு வேலைகள் காரணமாக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதே நேரத்தில் கட்சியுடனான என்னுடைய முரண்பாடும் அப்படியேதான் இருந்தது. சிறையில் இருக்கும் போது, மார்க்சியக் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.பரமேசுவரன், இலெனின் கூறியதாக ஒரு கருத்தை வெளியிட, அதை நான் மறுத்தேன். இதனால் அவருக்கும் எனக்கும் கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. அதனால் நான் சிறையில் இருந்து விடுப்பில் வெளியே வரும் போது எனக்கு எந்த உதவிகளும் செய்யக் கூடாது எனத் தோழர்கள் சிலருக்கு அவர் கூறியிருந்தார்.
செம்மலர் பத்திரிகையில் பாரதிதாசன் குறித்து கட்டுரை ஒன்று வெளியானது. அதில் பாரதியின் வழித்தோன்றல்தான் பாரதிதாசன் எனவும், அவரைப் போலவே இவரும் தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தினார், இடையில் திராவிடம் என்று போனாலும் இறுதியில் மீண்டும் அவர் பாரதியின் கருத்துக்கு வந்து விட்டார் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதை மறுத்து நான் எழுதினேன்.
‘பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இருந்த தனிப்பட்ட உறவு என்பது வேறு. பாரதியார் அடிப்படையில் இந்திய தேசியக் கவி. பாரதிதாசன் தமிழ்த் தேசியக் கவி. பாரதிதாசன் பெரியாரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டதில் இருந்து இறுதிக் காலம் வரை அந்த நிலைப்பாட்டில்தான் இருந்தார். இந்திய-சீன எல்லைப் போரின் போது, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும், நேருதான் இந்தியாவின் தலைவராக இருக்க வேண்டும் என்ற கருத்துதான் பெரியாருக்கு இருந்தது. அதைத்தான் பாரதிதாசனும் எதிரொலித்தார். அதை வைத்துக்கொண்டுதான் இவர்கள் அவரை இந்திய தேசியக்கவி என்று கூறுகிறார்கள்.
பின்னாட்களில் சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சியுடனும், சி.பா.ஆதித்தனாருடைய நாம் தமிழர் கட்சியுடனும் அவருக்கு நெருக்கம் அதிகமானது. அந்த நாட்களில் பெரியாரையே அவர் திட்டிக் கொண்டிருந்ததாக அவருடைய மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் கடைசி வரை தமிழ்த்தேசியம் பக்கம்தான் நின்றார். எனவே அவரை இந்தியத் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தினார் என்று எழுதுவது சரியல்ல’ என்று எழுதினேன்.
இந்தக் கட்டுரையை வெளியிட செம்மலர் பத்திரிகை மறுத்து விட்டது; கட்டுரை பாலம் இதழில் வெளிவந்தது. இப்படித் தொடர்ச்சியாகக் கட்சியுடன் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டன. 1987இல் இந்திய-இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதை மா.பொ.க. ஆதரித்தது. இதற்கு மேல் சகித்துக் கொள்ள எதுவும் இல்லை என்ற நிலை அப்போதுதான் ஏற்பட்டது. இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள சந்துரு அப்போது வழக்கறிஞராக இருந்தார். அவர் மா.பொ.கட்சியைச் சேர்ந்தவர். இந்தியா இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவதைக் கண்டித்து நடைபெற்ற மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டார்.
கட்சி அவரை அழைத்து ‘ஏன் கலந்து கொண்டீர்கள்’ என விளக்கம் கேட்டது. “நான் மனிதன், அதனால் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டேன்” என அவர் விளக்கம் சொன்னார். அதனையடுத்து சந்துரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் நான் இனி கட்சியில் நீடிக்க முடியாது என்பதை உணர்த்தின. நான் அப்போது மூலதன வேலைகள் காரணமாக அம்பத்தூரில் தங்கியிருந்தேன். அம்பத்தூரை விட்டு வெளியே சென்று நான் பேசக் கூடாது என்று கட்சி என்னை முடக்கியது.
தேசிய இனச்சிக்கல்கள், ஈழச்சிக்கல்கள் தொடர்பாகக் கட்சிக்குள் ஒரு விவாதம் நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அதைத் தொடர்ந்து மறுதலித்தார்கள். எம்ஞ்சியார் இறந்த தினத்தன்று பகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தடைபட்டிருந்ததால், திரும்பிச் செல்ல முடியாமல் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தோம்.
‘பேசுவதற்கு ஒன்றுமில்லை, இன்றாவது ஈழச்சிக்கல் குறித்துப் பேசுவோம்’ என வலியுறுத்தி நான் பேச வைத்தேன். அன்று உறுப்பினர்களுக்குள் கடுமையான மனக் கசப்பு ஏற்பட்டது. சோதிபாசு பேசியது இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையில் ஒன்றாகவும், தீக்கதிரில் வேறாகவும் வெளிவந்திருந்தது. அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு தீக்கதிர் பத்திரிகை பொய்ச் செய்தி வெளியிடுகிறது என வாதிட்டேன்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 299
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக