புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஆகஸ்ட், 2013

இராசபாளையம் நாய்கள் குறித்துப் புத்தகம்

இராசபாளையம் நாய்கள் குறித்து ப்  புத்தகம்: விஞ்ஞானி தகவல்

இராசபாளையம் : "" ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்களை ஆராய்ச்சி செய்து, இவற்றின் உடலமைப்பு, குணம் குறித்து, புத்தகம் வெளியிட உள்ளதாக, தேசிய விலங்கின மரபியல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி பி.கே.சிங் கூறினார். தேசிய விலங்கின மரபியல் ஆராய்ச்சி நிலைய, முதன்மை விஞ்ஞானிகளான பி.கே.சிங், ஏ.கே.மிஸ்ரா, முதன்மை ஆராய்ச்சியாளர் ராஜா, ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் வந்தனர். இவர்களுடன், வந்திருந்த ராஜபாளையம் கால்நடை பல்கலை ஆராய்ச்சி மைய தலைவர் கதிர்வேல், டாக்டர் சீனிவாசன், ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் தேவேந்திரன் ஆகியோர், நாய் பண்ணைகளை பார்வையிட்டனர். நாய் மற்றும் குட்டிகளின் செயல்பாடுகள், குணம், பண்பு, காவல் காக்கும் தன்மை குறித்து, குறிப்பு எடுத்து கொண்டனர். பின்னர், ராஜபாளையம் பல்கலை மையத்தில் நடந்த கூட்டத்தில், பி.கே. சிங் பேசியதாவது: நாய்கள் குறித்த ஆராய்ச்சிக்காக, இங்கு வந்தோம். முதன்முறையாக ராஜபாளையம் வகை, சிப்பிப்பாறை வகை நாய்களை ஆராய்ச்சிக்கு எடுத்து, இவற்றின் உடலமைப்பு, குணம் குறித்து சிறிய புத்தகம் வெளியிட உள்ளோம். இப்புத்தகம் நூலங்களுக்கு செல்லும்போது, தேசிய அளவில் பலரும், இந்த வகை நாய்கள் பற்றி அறிந்து கொள்வர். நாய் பண்ணையாளர்கள், தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டு, சந்தைப்படுத்துதலில் இறங்க வேண்டும். விஞ்ஞான முறைப்படி, பராமரித்தலை கற்று கொள்ள வேண்டும். நாய் கண்காட்சி போன்றவற்றை நடத்தவேண்டும். 6 மாதங்கள் பின், மீண்டும் இங்கு ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்,'' என்றார்.


வியாழன், 23 மே, 2013

வீடு தேடி வரும் புத்தகம்!

வீடு தேடி வரும் புத்தகம்!

வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க, புத்தகங்களை இலவசமாக வீட்டிற்கு வீடு தரும், சேதுராமன்: நான், சென்னை, அம்பத்தூரில் வசிக்கிறேன். இளம் தலைமுறையினரிடம், புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஓய்வு நேரத்தில், புத்தகங்கள் வாசிக்காமல், "டிவி' பார்ப்பது, கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதிலேயே, நேரங்களை செலவிடுவதால், தாய் மொழியான தமிழை கூட, மாணவர்கள் சிரமப்பட்டே படித்ததால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க முயற்சித்தேன். இன்றைய சூழலில், பலருக்கு போதிய நேரம் இல்லாததால், நூலகத்திற்கு நேரடியாகச் சென்று படிக்க முடியாது. குழந்தைகளுக்கு நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதில், பெற்றோருக்கும் பல சிரமங்கள் உள்ளதை கண்டறிந்து, அவற்றை சரிசெய்ய எண்ணி, டி.சி.எஸ்., நிறுவனத்தில், 60 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பள வேலையை, ராஜினாமா செய்து, "பேன்யன் ட்ரீ' என்ற நூலகத்தை, நண்பர்கள் உதவியுடன், 2010ம் ஆண்டு, புழுதிவாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஆரம்பித்தேன். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ப, புத்தகங்களின் விவரங்கள் பற்றிய குறிப்பை, "ரீடர்ஸ் கிளப்' என்ற, எங்களின் இணையதளத்தில் வெளியிட்டோம். வேலைச் சுமை காரணமாக, நூலகத்திற்கு நேரடியாக வர முடியாதவர்களுக்குத் தேவையான புத்தகத்தை, நாங்களே அவர்களின் வீடு தேடிச் சென்று இலவசமாக, "டோர் டெலிவரி' செய்கிறோம். தேவையான புத்தகத்தை, தொலைபேசி அல்லது இணையதளம் மூலம், எங்களுக்கு தகவல் தந்தால் மட்டும் போதும். லாப நோக்கத்தை தவிர்த்து, ஒரு சேவையாக, இந்நூலகத்தை நடத்தி வந்தாலும், புத்தகங்களின் விலை உயர்வு, புத்தகத்தை, "டோர் டெலிவரி' செய்வதற்கான, ஆட்களின் மாத ஊதியம் மற்றும் வாகனங்களுக் கான பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை சமாளிக்க, ஒரு நபருக்கு, மாத சந்தாவாக, 60 ரூபாய் வசூலிக்கிறேன். தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், எங்களிடம் சந்தாதாரர்களாக உள்ளனர். தொடர்புக்கு: 99621 00032.