புதிய அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 மே, 2025

காற்றின் வகைமை தெரியும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




    (அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! –தொடர்ச்சி)

    காற்று உலகெங்கும் பரவி இருந்தாலும் ஒரே தன்மையில் இல்லை. சில நேரங்களில் அல்லது சில இடங்களில் வலிமை குறைந்தும் வேறு சில நேரங்களில் அல்லது இடங்களில்  வலிமை மிகுந்தும் காணப்படுகின்றது.


    கப்பல் தளபதி பிரான்சிசு பியூஃபோருட்டு (Sir Francis Beaufort : 1774 –1857) என்னும் ஐரீசு நாட்டு நீர்ஆராய்வாளர் 1806ஆம் ஆண்டில் காற்று வீசும் வலிமைக்கேற்ப அதனை வகைப்படுத்தினார். அவ்வாறு காற்று வீசும் விரைவிற்கேறப்ப  வீச்சு எண்களையும் பின்வருமாறு வரையறுத்தார்.

    வீச்சு எண்காற்று வகைகாற்று வீசு விரைவு
    (ஒரு மணிக்கு…. புதுக்கல்/ கிலோ மீட்டர்)
    0அலைவற்ற காற்று (calm)               0 -1
    1மென் காற்று (Light air)                      1-5
    2மென் இளங்காற்று (Light breeze)6-11
    3நல் இளங்காற்று (Gentle breeze)12-19
    4மித இளங்காற்று (Moderate breeze)20-29
    5கிளர் இளங்காற்று (Fresh breeze)30-39
    6வல் இளங்காற்று (Strong breeze)40-50
    7தொடக்கப் பெருங்காற்று (Near Gale)51-61
    8பெருங்காற்று (Gale)62-74
    9வன் பெருங்காற்று (Strong Gale)75-87
    10புயல் (Storm)  88-101
    11வன் புயல் (Violent storm)102-117
    12சூறைப் புயல் (Hurricane)118 +

    ஆனால், இவ்வாறு காற்று வெவ்வேறு நிலைகளில் உலவுவதைப் பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். காற்று வீசக்கூடிய விரைவின் (வேகத்தின்) அளவைப் பற்றிய கணக்கு நமக்குத் தெரியாவிட்டாலும் அதன் தன்மைகளைப் புரிந்து தெளிவாக வரையறை செய்துள்ளனர் என்பது இலக்கியங்கள் மூலம் நன்கு தெரிய வருகின்றது.
    காற்றின் வகைகளாகப் பிங்கல நிகண்டு (23 & 24) , வங்கூழ், மருத்து, சலனன், வாடை, வளி, கோதை, வாதம், கூதை, வேற்றலம், கால், ஒலி, உயிர், காலிலி, விண்டு, நீளை, உலவை, கொண்டல், கோடை, நிழலி, உயிர்ப்பு எனப் பலச் சொற்களைக் குறிப்பிடுகின்றது.


    உயிரினங்களுக்கு உயிர்ப்பு அளிப்பதால் உயிர் அல்லது உயிர்ப்பு என்றும் ஓரிடத்தில் நிற்காமல் உலவிக் கொண்டு இருப்பதால் உலவி என்றும் கால் இல்லாமல் அலைவதால் காலிலி என்றும்  பொருத்தமாகக் கூறியுள்ளனர். தமிழ் விண்டு என்பதுதான் ஆங்கிலத்தில் wind என மாறியதோ? மேலும், தெற்கில் இருந்து வீசுவதைத் தென்றல் வடக்கில் இருந்து வீசும் வாடைக்காற்றை வாடை,  மேற்கில் இருந்து வீசும் வெப்பக் காற்றைக்  கோடை, கிழக்கில் இருந்து வீசுவதைக் கொண்டல் என்றும் வரையறுத்துள்ளனர்.

    குடக்காற்று என்பதும் மேற்கில் இருந்து வீசும் காற்றாகும். பனிக்காற்றானது கூதிர், ஊதை, குளிர் என மூவகைப்படும்.
    குளிர்ந்த காற்றானது சாளரங்கள் வாயிலாக வீட்டிற்குள் நுழைவதைச்
    சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில் என மதுரைக் காஞ்சி (358) குறிப்பிடுகிறது.
    கடுங்காற்றால் கப்பல் சிதைந்ததைக்
    கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ, என மதுரைக் காஞ்சி (378) கூறுகிறது.
    பெருமலையைப் புரட்டுவது போன்ற பெருங்காற்று வீசியதைப்
    பெருமலை மிளிர்ப்பன்ன காற்று எனக்  கலித்தொகை: (45: 4) கூறுகிறது.
    கப்பலைக் கவிழ்க்கும் சுழல் காற்றினைக்

    கால்ஏ முற்ற பைதரு காலை,
    கடல்மரம் கவிழ்ந்தென

    என்று நற்றிணை (30: 7-8) கூறுகிறது.


    அகன்ற கடற் பரப்பைக் கலங்கடிக்கும் காற்று குறித்துத் 
    துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர என்று பதிற்றுப்பத்து (51) கூறுகிறது.
    பெருமலையில் கடுங்காற்றுச் சுழன்றடிப்பதைக்
    கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து என  அகநானூறு (258 : 6) கூறுகிறது.
    நிலப்பரப்பில் சுழன்றடிக்கும் கடுங்காற்று குறித்துக்
    கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின் எனப் பதிற்றுப்பத்து ( 17 : 12) கூறுகிறது.
    கடற்கரை மணலை அள்ளித் தூவும் குளிர்ந்த காற்றை
    நெடுநீர் கூஉம் மணல்தண்கான் எனப்  புறநானூறு (396 : 5) கூறுகிறது.
    மேலும் பலவகைக் காற்று குறித்து நாம் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
    19 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்த காற்றின் வகைகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் உணர்ந்து வகைப்படுத்தியுள்ளனர் என்பது காற்றறிவியலில் சிறந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றது அன்றோ?

    வெள்ளி, 2 மே, 2025

    அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

     




    (அன்றே சொன்னார்கள் : சேம அச்சு – stepney – தொடர்ச்சி)

     

     வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19 ஆம்  நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard: 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம் உள்ளன என உணர்ந்து அவற்றிற்குப் பெயர்கள் இட்டார். என்ற போதிலும் முதல் முறையாக முகில்களின் வேறுபாடுகளை உணர்ந்து வகைப்பாடுகளை விளக்கியவர்  இலமார்க்கு (Jean-Baptiste Lamarck:1744-1829) என்னும் அறிவியலாளரே. ஆனாலும் இவ்வேறுபாடுகள் தோற்றத்தின் தன்மையில் கூறப்பட்டனவே தவிர தன்மையின் அடிப்படையில் விளக்கப்படவில்லை.
     யோவான் மேசன்  (Sir (Basil) John Mason), என்னும் அறிஞர்தான் முகில்களின் இயற்பியல்  (The Physics of Clouds)  என 1957 இல் நூலை வெளியிட்டு முகில்களின் வகைகளைச் சரியாக விளக்கினார்.  (1994 இல்தான் இதனை அட்டவணைப்படுத்தி விளக்கியுள்ளனர்.)


     மழையியல் பற்றி நன்கு அறிந்திருந்த பழந்தமிழர்கள் முகில் அறிவியல் குறித்தும் சிறப்பான அறிவுடையவராக விளங்கியுள்ளனர். முகில்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அவர்கள் சூட்டிய பெயர்களை எல்லாம் அவற்றின் அறிவியல் சிறப்பை உணராமல் முகிலைக் குறிக்கும்  வெவ்வேறு பெயர்கள் என நாம் எண்ணி விட்டோம். எனினும் அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

                                                                                          கடல்மட்டத்தில் இருந்து

       இன்றைய பெயர்கள்உயரம் பேரடி (மீட்டர்)
    1.உயர்முகில்Cirrus9000
    2.குவியடுக்குCirrostratus8000
    3.சுருள் குவிவுCirrocumulus7000
    4.இடை அடுக்குAltostratus6000
    5.இடைக் குவிப்புAltrocumulus5000
    6.அடுக்குக் குவிப்புStratocumulus4000
    7.குவி முகில்Cumulonimbus3000
    8.திரள் முகில்Cumulus2000
    9.பாவடி முகில்Stratus1000
    10.தாழ் முகில்Nimbostratus0

     என இன்றைய அறிவியல் அறிஞர்கள் வகைப்படுத்தி உள்ளனர். ஆனால், உயர அளவீடுகள் தெரியாவிடிலும் உயரத்திற்கும் முகிலின் தன்மைக்கும் ஏற்ப நம் முன்னோர் வகைப்படுத்தி உள்ளமை வியப்பாக உள்ளது.


    கடல் மட்டத்தில் இருந்து எழும் நிலையில் உள்ள முகிலை எழிலி என்றனர். ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலான பல சங்க இலக்கியங்களில் இச்சொல்லைக் காணலாம். தெய்வப்புலவர் திருவள்ளுவர்

         நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
         தான்நல்காது ஆகி விடின்  (குறள் 17)
     
    என்கிறார்.கடலில் இருந்து எழும் நிலையில் உருவாகும் முகிலை எழிலி எனச் சுருக்கமாகவும் அறிவியல் தன்மைக்கேற்பவும் அன்றே கூறியுள்ள சிறப்பு வேறு எங்கும் இல்லையே!


    அறிவியல் தன்மைக்கேற்ப முகில் வகைகளுக்குப் பழந்தமிழர்கள் சூட்டியுள்ள பெயர்களை மேலே உள்ள வரிசைக்கேற்பப் பொருத்திக் காண்க:  

    கொண்மூ, கணம், செல், மை, கார், விண்டு, முதிரம், மஞ்சு, விசும்பு, எழிலி.

          அறிவியல் மழையில் நனைந்தனர் நம் முன்னோர்!
          அறியாமை இருளில் மூழ்கியுள்ளோம் நாம்!

    – இலக்குவனார் திருவள்ளுவன்

    புதிய அறிவியல், நட்பு


    திங்கள், 28 ஏப்ரல், 2025

    விலங்கறிவியல் – இலக்குவனார் திருவள்ளுவன்

    விலங்கு என்பது குறுக்காக நடப்பவற்றைத்தான் குறிப்பிடும். கைகளில் குறுக்காக மாட்டப்படும் சங்கிலிக்காப்பை விலங்கு என்கிறோம் அல்லவா? வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் விலங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே! தமிழ்ப் பெருநிலப்பரப்பு, புவி அமைந்த தொடக்கக் காலத்தில் இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை இருந்தமையால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ஆராயும் நோக்கில் மாணாக்கர் அறிவு வளம் பெருக வேண்டும். பொதுவாக இப்புவியில் வாழ்ந்த, வாழ்கின்ற சில உயிரினங்களைப் பற்றி இங்கு அறிவோம்.


    தமிழில் ’மா என்றால், விலங்கு, பெரிய, மா மரம், குதிரை, மாவு, ஓர் அளவு முதலிய பல பொருள்கள் உண்டு. எனினும் ’மாப்பெயர் வகை என்னும் தலைப்பில் புள்வகை, விலங்கு வகை, பாம்பு வகை, நீர் வாழ்வன வகை முதலிய அனைத்து உயிரிகளையும் முன்னோர் குறித்தனர்.

    சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகளை அறிஞர் பி.எல்.சாமி குறிப்பிட்டுள்ளார்.(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்)

    அவற்றுள் குறிப்பிடத்தக்கன, குரங்குகள். வருடை, ஆமான், மான்கள், கேழல்,நரி, கோநாய், தீநாய், செந்நாய்,கரடி,வெருகு,புலி,யானை, நீர் நாய், எலி, அணில், முளவுமா, கவரிமா என்பனவாகும். கவரிமா என்பதை நாம் கவரிமான் எனக் குறிப்பிட்டு மான்வகையாக எண்ணுகிறோம். தெய்வப்புலவர் திருவள்ளுவர் ,


    மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

    உயிர்நீப்பர் மானம் வரின். 
    (969)

    என்கிறார். தன் மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால் அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள் எனத் தவறாகக் கருதுகிறோம். கவரிமா என்பது பனிமலைப்பகுதிகளில் குளிரைத் தாங்கும் வகையில் அடர்முடியுடன் வாழும் ஆட்டினமே ஆகும். இயற்கைச் சூழலுக்கேற்ப இதன் உடல் அமைந்துள்ளது. எனவே அச்சூழலில் முடியை இழப்பின் குளிரைத் தாங்க இயலாமல் அவை மாண்டு விடும். இதையே தெய்வப்புலவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனைத்துப் பகுதிகளிலும் அனைத்துச் சூழல்களிலும் வாழும் விலங்கின வகைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தமை அவர்களின் விலங்கியல் அறிவைப் புலப்படுத்துகின்றது.

    மேலும், மான், கழுதை ஆகியவற்றின் ஐந்தைந்து வகைகளையும்

    குரங்கு, நாய் ஆகியவற்றின் நன்னான்கு வகைகளையும்

    எலி, முதலை ஆகியவற்றின் மும்மூன்று வகைகளையும்

    புலி, அணில் ஆகியவற்றின் இரண்டிரண்டு வகைகளையும்

    பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன.


    உயிரினங்களின் ஆண்மரபு, பெண்மரபு ஆகியவற்றின் அறிவியல் உண்மைகளையும், இவற்றின் பிள்ளைத் தன்மைகளையும் முன்னைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

    விலங்குகளின் ஆண் இனமானது

    • உம்பல்,
    • ஏட்டை, 
    • ஏறு,
    • ஒருத்தல்,
    • ஓதி, 
    • கடுவன், 
    • கபடு, 
    • கலை, 
    • களிறு, 
    • சே, 
    • சேவல் 
    • தகர், 
    • போத்து, 
    • மா, 

    என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் விளக்கம் வருமாறு:-

    வரிசை எண்     உயிரிகள்ஆண்பால் பெயர்
    1.கரி (யானை), சுறவு, கேழல்(swine)  களிறு
    2.மரை, ஆன் (ox), காரான்(buffalo), காட்டா, புல்வாய், புலி, நீர்வாழ்வன(சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை)போத்து
    3.மான், முசுகலை
    4.குரங்கு, பூனைகடுவன்
    5.யானை, எருமை, பெற்றம்பகடு
    6.குதிரை, எருது, புல்வாய்சே
    7.கவரி, யானை, பன்றி, கரடிஒருத்தல்
    8.துருவாடு, வேழம், யாளி, சுறாதகர்
    9.புலி, உழை, மரை, ஆ, புல்வாய், எருமை, பன்றி, சுறா, சங்குஏறு
    10.யானை, யாடு(ஆடு)உம்பல்
    11.எருமை, வெருகுஏட்டை
    12.குதிரை, யானை, பன்றிமா
    13.முசு, நரிஓரி
    14.கோழி, அன்னம்சேவல்


    இவற்றுள் ஆண்யானையானது களிறு, பகடு, ஒருத்தல், உம்பல், மா என அழைக்கப்பெற்றுள்ளமை போல், ஒரே விலங்கிற்கு வெவ்வேறு பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன.

    ஒரே இனத்தின் வகைப்பாட்டிற்கு ஏற்ப இவை அமைந்து பின்னர்ப், பொதுப்பெயர்களாக மாறி இருக்கலாம். இது குறித்து ஆராய்ந்தால் நுண்ணிய வேறுபாடுகளைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது.

    பெண்விலங்கினங்கள்

    • பிணை
    • பாட்டி
    • பேட்டை
    • பிணா
    • ஆ
    • ஆன்
    • பிடி
    • நாகு
    • மந்தி
    • மூடு
    • கடமை


    என அழைக்கப்பெறும். இவற்றுள்ளும் ஒரே இனத்திற்கு வெவ்வேறு பெண்பால் பெயர்கள் உள்ளன.

    பெண் விலங்கினங்கள் எவ்வெவ்வாறு அழைக்கப்பெற வேண்டும் எனப் பார்ப்போம்.

    வரிசை எண்     உயிரிகள்பெண்பால் பெயர்
    1.உழை, நாய், பன்றி, புல்வாய்பிணை
    2.பன்றி, நாய், நரிபாட்டி
    3.ஒட்டகம், குதிரை, கழுதை, மரை(மான்), சிங்கம்பெட்டை
    4.பன்றி, புல்வாய், நாய்பிணை
    5.எருமை, பசு, மரைஆ
    6.ஆ,எருமை,மரைஆன்
    7.கவரி, ஊகம்(கருங்குரங்கு)பிடி
    8.மரை, பெற்றம், எருமை, நந்து, நீர்வாழ்வனநாகு
    9.குரங்கு, ஊகம, முசுமந்தி
    10.ஆடுமூடு, கடமை


    ஆண் பன்றி, பெண்பன்றி, ஆண் நாய், பெண் நாய், என்பன போன்று உயிரினங்கள் அனைத்தும் ஆண் அல்லது பெண் எனச் சேர்த்து அழைக்கப்பெறும். இவை போல் பெண் விலங்கினங்கள் அனைத்தும் பிணை மான் என்பது போன்று பிணை என்று சேர்த்தும்அழைக்கப் பெறும். 

    ஆண் பெண் வேறுபாடின்றி விலங்கின் பிள்ளைகள் குருளை, 

    • குட்டி,
    • பறழ்,
    • பிள்ளை,
    • மறி, 
    • கன்று, 
    • குழவி, 
    • பார்ப்பு, 
    • மகவு

    என அழைக்கப் பெறும்.

    வரிசை எண்     உயிரிகள்பிள்ளைமைப் பெயர்
    1.புலி, முயல், பன்றி, நரி, நாய்பறழ், குட்டி
    2.ஆடு, குதிரை, மான், அழுங்குமறி
    3.கலை, மான்,கழுதை, மரை, பசு, எருமை, கடமை, யானை, ஒட்டகம், கவரி, கராம்கன்று
    4.  குரங்கு போன்று மரக்கொம்புகளில் வாழ்வனவற்றின் பிள்ளைகள்குழவி, மகவு, குட்டி, பிள்ளை, பறழ், பார்ப்பு,
    5.வெருகு, நரி, முயல்பறழ், குட்டி
    6.தவழ்வனபிள்ளை, பறப்பு, பறழ்
    7.யானை, கடமை,மரை, எருமைகுழவி
    8.மான்குருளை, கன்று, குழவி,  பிள்ளை
    9.முசுகுழவி
    10.சங்கேறு, குருளைபிள்ளை
    11.பாக்கன்(பூனை), அணில்பறழ், குட்டி


    மரபியலும் அறிவியல்தான். அவ்வகையில் இலக்கண நூலாக மட்டும் அல்லாமல், வாழ்வியல் அறிவியல் நூலாகவும் உள்ள தொல்காப்பியத்தில் ஆசிரியர் தொல்காப்பியர், இவை பற்றி நன்கு விளக்கி உள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு நூற்பாவைப் பார்ப்போம்.

    குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
    மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
    செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
    வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்
    குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
    இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்
    எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
    முடிய வந்த அவ்வழக்கு உண்மையின்
    கடியல் ஆகாக் கடன்அறிந் தோர்க்கே.


    தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில்தான் மேலே பட்டியல்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுடன் இவற்றையும் சேர்த்துப்படித்துப் பார்த்தால் , இலக்கண நூல் உணர்த்தும் அறிவியலே சிறந்ததாக இருக்கும் பொழுது உரிய அறிவியல் நூல்களைப் படித்திராமல் இத்தகைய அறிவு வளம் வளர்ந்திருக்காது என நன்கு புரியும்.

    மிகச்சிறந்தஅறிவு வளப்பரப்பு உடைய தமிழறிவியலில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் முயன்று செம்மையாக்குவதையே நம் கடமையாகக் கொள்வோம்! அறிவியல் துறைகள் அனைத்திலும் தமிழை வளர்ப்போம்!

    http://www.newscience.in/articles/vilankariviyal