(தோழர் தியாகு எழுதுகிறார் 249 : தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி – தொடர்ச்சி)

இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை

இனிய அன்பர்களே!

ஆதிநாதன் குழு நோக்கம் என்ன? பயன் என்ன?

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுச் சிறைகளில் நீண்ட பல ஆண்டுகளாக அடைபட்டுள்ள இசுலாமியச் சிறைப்பட்டோரை விடுதலை செய்வோம்! இது சென்ற சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் மு.க. தாலின் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கொடுத்த வாக்குறுதி.

“அப்பாவி முசுலிம் கைதிகள்” என்றே அவர் சொன்னார். இருபதாண்டுக்கு மேல் சிறையில் கிடந்த பின் அப்பாவியா இல்லையா என்ற ஆராய்ச்சியே தேவையில்லை என்பது நம் நிலைப்பாடு. கோவை குண்டுவெடிப்பு வழக்கிலும், சமயச் சார்பான பிற குற்ற வழக்குகளிலும் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் அடைபட்டிருப்பவர்களின் தொகை 36 ஆக இருந்து வந்தது. இவர்களில் ஒருவரான அபு தாகிர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் உயரிழந்த பின் 35 பேரின் விடுதலைக் கோரிக்கைதான் முஸ்லிம் கைதிகள் (அல்லது இசுலாமியக் கைதிகள்) விடுதலைக் கோரிக்கை எனப்பட்டு வந்தது. குண்டு வெடிப்போ சமய முரண்பாடோ காரணமாக அமையாத தனிப்பட்ட வழக்குகளில் சிறைப்பட்ட முஸ்லிம்கள் இந்த வகையில் அடங்க மாட்டார்கள். இவர்களின் விடுதலைச் சிக்கல் என்பது மற்றெல்லா வாழ்நாள் சிறைப்பட்டோருக்கும் பொதுவான ஒன்றே. இவ்வகைச் சிறைப்பட்டோரின் விடுதலையிலும் கூட சிக்கல் இருப்பினும் அது முசுலிம் கைதிகளின் விடுதலைச் சிக்கல் என்ற தன்மையில் வராது.

எனவே தமிழ்நாட்டில் வழக்குகளைப் பொறுத்துப் பிரித்துக் காணப்படும் முசுலிம் கைதிகள் என்று 36 பேர் இருந்தனர், இப்போது 35 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவரைக் கூட மு.க. தாலின் தலைமையிலான திமுக அரசு விடுதலை செய்யவில்லை. அதாவது இவர்களைப் பொறுத்த வரை அவர் தன் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. எப்போது காப்பாற்றப் போகிறார் என்ற அறிகுறியும் இல்லை.

முதலமைச்சர் திறப்பு (சாவி) எடுத்துப் போய் சிறைக் கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. வாழ்நாள் சிறைப்பட்டோரின் விடுதலைக்கு இறுதியில் மாநில ஆளுநரின் ஒப்பம் தேவைப்படும் என்பதே உண்மை. ஆனால் நீண்ட பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் முசுலிம் கைதிகள் விடுதலைதான் முகதாலின் ஆட்சியின் கொள்கை முடிவு என்றால், தமிழக அமைச்சரவை கூடித் தீர்மானம் இயற்றி அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

குண்டுவெடிப்பில் தண்டிக்கப்பட்ட 15 பேருக்கும் குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளின் படி முன்விடுதலை வழங்கத் தீர்மானம் இயற்றி இந்திய அரசின் ஒப்புதலுக்காக மேலே அனுப்ப வேண்டும். (உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது, கலந்தாய்வு என்றாலும் ஒப்புதலொக்கும்! Consultation amounts to Concurrence!) குண்டுவெடிப்பு வழக்கு இந்திய நடுவணரசின் அதிகாரப் பொருள் தொடர்பானது என்பதால் இது தவிர்க்க முடியாதது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302 போன்ற எளிய பிரிவுகளில் தண்டிக்கப்பட்ட மற்ற 20 பேருக்கும் இந்தச் சிக்கல் இல்லை. அவர்களது முன்விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 பயன்படும். உறுப்பு 161இன் படி சிறைப்பட்டோர் விடுதலைக் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றினால் ஆளுநர் அதை ஏற்றுக் கொள்வது தவிர வேறு வழியில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர் எழுவர் விடுதலை இப்படித்தான் மெய்ப்பட்டது.  ஆளுநர் செய்த அழிச்சாட்டியத்தால் அவர்களின் விடுதலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதிலிருந்து ஆர்எசுஎசு ஆர்.என். இரவி பாடங்கற்கவில்லை, தமிழகத் திமுக அரசும் பாடங்கற்கவில்லையா? தமிழக அமைச்சரவையைக் கூட்டி முசுலிம் சிறைப்பட்டோரை விடுதலை செய்வதற்கு அரசமைப்புச் சட்ட 161ஆம் உறுப்பின் படித் தீர்மானம் இயற்றி ஆளுநரை ஏற்கச் செய்வதில் மாண்புமிகு மு.க. தாலினுக்கு என்ன தயக்கம்?

இதுதான் முசுலிம் கைதிகளின் விடுதலைக்கான சட்ட வழி. இந்த வழியில் தமிழக அரசு ஓரடி கூட எடுத்து வைக்கவில்லை. அல்லது சிறையிலிருக்கும் 35 முசுலிம் கைதிகளின் விடுதலைக்கான பரிந்துரைகளை மொத்தமாகவோ தனித் தனியாகவோ தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியிருந்தால் வெளிப்படையாக அறிவிக்கட்டும். அல்லது அனுப்பாமலே காலங்கடத்திக் கொண்டிருந்தால் அதற்கான நியாயத்தைச் சொல்லட்டும்.     

ஆளுநருக்குக் கோப்பே அனுப்பாமல் அவர் மீது பழிபோட்டுத் தப்ப முடியாது.

திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள் முசுலிம் கைதிகள் விடுதலை என்ற பேச்சை எடுக்கும் போதெல்லாம் முதல்வர் “குழு போட்டிருக்கிறோம்” என்று விடையளிக்கிறாராம். வாழ்நாள் சிறை உட்பட நீண்ட சிறைத் தண்டனை பெற்ற சிறைப்பட்டோரின் முன்விடுதலைக்காகச் சிறைச் சட்டங்கள், விதிமுறைகள், அரசாணைகள் எல்லாம் இருக்கும் போது, அறிவுரைக் கழகம் போன்ற முறைமைக் குழுக்களும் இருக்கும் போது, புதிதாக ஒரு குழு அமைக்க வேண்டிய தேவை என்ன? இந்தக் குழுவின் ஆய்பொருள் என்ன? அதிகாரம் என்ன?

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியர் என். ஆதிநாதன் தலைமையில் அறுவர் குழு ஒன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நாள் 2021 திசம்பர் 24. நன்னடத்தை அடிப்படையிலும் மனிதநேயக் காரணங்களை முன்னிட்டும் வாழ்நாள் சிறைப்பட்டோரை முன்விடுதலை செய்வது பற்றி அரசுக்குப் பரிந்துரை வழங்குவது இந்தக் குழுவிற்கு இடப்பட்ட பணி.

இத்தனை மாதக் காலத்தில் ஆதிநாதன் குழு எத்தனைப் பேரின் முன்விடுதலை பற்றிக் கருதிப் பார்த்தது? எத்தனைப் பேரின் முன்விடுதலைக்குப் பரிந்துரை செய்தது? அவர்களில் எத்தனைப் பேரை அரசு விடுதலை செய்தது? யாருக்கேனும் ஆதிநாதன் குழு பரிந்துரை செய்ய மறுத்திருந்தால் அவர் அந்த மறுப்பை எதிர்த்து எங்கு போய் மேல்முறையீடு செய்வது? அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. குடியாட்சியத்தில் வெளிப்படைத் தன்மை தேவையல்லவா?

திரு ஆதிநாதனுக்கு உடல்நலம் குன்றியிருப்பதாகவும், அதனால் குழுவின் பணிகள் தேக்கமடைந்திருப்பதாகவும் சிறிது காலம் செய்திகள் வந்தன. இந்தச் செய்திகளை உறுதி செய்து கொள்ள முடியவில்லை. எல்லாமே கமுக்கம் பூசிக் கிடப்பது போல் இருந்தது.

சென்ற சூலை 6ஆம் நாள்  தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (JAACT) சார்பில் நான் சிறைத் துறை அமைச்சர் மாண்புமிகு இரகுபதியைச் சந்தித்துக் காவல் நிலையங்களில் கண்காணிப்புப் படக் கருவி பொருத்துவது பற்றிப் பேசினேன். என்னுடன் ஆசீர், சீலு ஆகியோரும் சட்டப் பேரவை உறுப்பினர் (ம.ம.க.) அபுதுல் சமது, கரீம் (எசுடிபிஐ) ஆகியோரும் வந்திருந்தனர். அபுதுல் சமது முசுலிம் கைதிகள் விடுதலை தொடர்பாகக் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் இரகுபதி அவ்வப்போது ஆளுநரின் ஒப்புதல் பெற்றுக் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். இந்தப் பேச்சோடு ஆதிநாதன் குழு அறிக்கை பற்றியும் அமைச்சர் இரகுபதி குறிப்பிட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆதிநாதன் குழு அறிக்கை கொடுத்திருந்தால் அது வெளிப்படையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதன் மீது வெளிப்படையான விவாதம் நடந்திருக்க வேண்டும். இப்படி எதுவும் நிகழவில்லை. மாறாக ஆதிநாதன் குழு பரிந்துரைகளைத் தமிழக அரசு பாதிப்புற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் ஆளுநர் இரவியிடம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

திமுகவின் தோழமை ஆற்றல்கள் – இசுலாமிய அமைப்புகள் உட்பட – “ஆதிநாதன் குழு அறிக்கை”யை உடனே வெளியிடுமாறு கேட்க வேண்டும்.   

முசுலிம் கைதிகளின் முன்விடுதலைப் பொருட்பாட்டில் ஆர்எசுஎசு ஆளுநர் இரவியின் முடிவுகளை அட்டியின்றி ஏற்று நடப்பதுதான் தமிழக அரசின் பணி என்றால், இந்த அரசு நல்லது செய்யும் என்று நம்பிக் கிடப்பதில் பொருளில்லை.

கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் யாரையும் விடுதலை செய்ய ஆதிநாதன் குழு பரிந்துரை வழங்காததால் ஆளுநர் அவர்களை விடுதலை செய்ய ஒப்பமிட மாட்டார் என்றும் அமைச்சர் இரகுபதி சொல்லி விட்டார். ஒரு வழக்கில் யாரையுமே விடுதலை செய்ய மாட்டார்கள் என்றால் சிறைப்பட்டோரைத் தனித்தனியாகக் கருதிப் பார்க்காமல் ஒரு வழக்கின் தன்மையை மொத்தமாகப் பார்த்து முடிவு செய்வதாகப் பொருள். இது நீண்ட தண்டனைச் சிறைப்பட்டோரின் விடுதலைத் தகுதியைக் கணிக்கும் வழிமுறையே அல்ல.

ஆதிநாதன் குழுவின் அணுகுமுறை இதுதான் என்றால் தமிழக அரசு இதனை மறுதலிக்க வேண்டும். ஆதிநாதன் குழுவிற்குத் தன் அணுகுமுறைக்கான மெய்யியல் அடிபப்டை என்னவென்ற தெளிவு இருக்க வேண்டும். அரசுக்காவது இந்தத் தெளிவு இருக்க வேண்டும். ஆதிநாதன் குழு பற்றிப் பேசும் பலருக்கும் அந்தக் குழு பற்றிய தெளிவே இருப்பதாகத் தெரியவில்லை.

சென்ற ஆகத்து 5ஆம் நாள் கடலூரில் மனிதநேய சனநாயகக் கட்சி சார்பில் நடைபெற்ற சிறை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டேன். அந்தப் போராட்டத்தில் பலரும் ஏந்திய முழக்க அட்டைகளில் ‘ஆதிநாதன் ஆணையம்’ என்றே குறிப்பிட்டிருந்தார்கள். முழக்கங்களிலும் தலைவர்தம் உரைகளிலும் ‘ஆதிநாதன் ஆணையம்’ என்றே ஒலித்தது. எனக்குத் தெரிந்த வரை அஃது ஆணையம் அல்ல. ஆணையம் என்றால் விசாரணை ஆணையச் சட்டப்படி அமைத்திருக்க வேண்டும். அதன் அறிக்கையைச் சட்டப் பேரவையில் முன்வைக்க வேண்டும். ஆதிநாதன் குழு வெறும் குழுதானே தவிர ஆணையம் அல்ல என்று நினைக்கிறேன்.

ஆதிநாதன் குழுவை முதல்வர் மு.க.தாலின் அமைத்தது இசுலாமியச் சிறைப்பட்டோரின் விடுதலையை எளிதாக்கவா? அல்லது மேலும் சிக்கலாக்கவா? என்ற கேள்விக்கும் விடை தேட வேண்டியுள்ளது.    

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 280