(தோழர் தியாகு எழுதுகிறார் 250 : இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை – தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
மீண்டும் வெண்மணி!
கீழ்வெண்மணி வன்கொடுமை (1968) நிகழ்ந்து 55ஆண்டு முடிந்து விட்டன. என்ன நடந்தது? எப்படி நடந்தது? அதற்கு யார் பொறுப்பு? எந்த அளவுக்குப் பொறுப்பு? கீழ்வெண்மணிக்கான எதிர்வினைகள் என்ன? கீழ்வெண்மணியின் வரலாற்றுப் படிப்பினைகள் என்ன? இந்த வினாக்களுக்கு விடையளிக்கப் பலரும் முயன்றுள்ளனர்.
நான் எழுதியும் பேசியும் உள்ளேன். தோழர் ஏ.சி..கே. (அ.கோ. கத்தூரிரெங்கன்) எழுதியுள்ளார், செவ்வி கொடுத்துள்ளார். தோழர் கோ. வீரையன் எழுதியுள்ளார். இன்னும் பலரும் எழுதியிருக்கக் கூடும்.
கீழ்வெண்மணி நிகழ்வு பற்றிய பார்வைகள் ஒரு புறமிருக்க, அது தொடர்பான வழக்குகளும் விவாதத்துக்குரியவையாகவே இருந்து வருகின்றன. வழக்குகள் என்பவை:
1) சேரிக் குடிசையில் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்டது பற்றிய வழக்கு.
2) வெண்மணிக் கொடுமை நிகழ்வதற்குச் சற்று முன்பு இருக்கூர் பக்கிரிசாமி கொல்லபட்ட வழக்கு. இந்த வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற தேவூர் கோபாலும், ஐந்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்ற மேலவெண்மணி இராமையாவும் என்னுடன் சிறையில் இருந்தவர்கள்.
3) இரிஞ்சூர் கோபாலகிருட்டிண நாயுடு அழித்தொழிக்கப்பட்ட வழக்கு.
இவற்றில் முதல் வழக்கு உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றது. நெருக்கடிநிலைக் காலத்தில் 1975 – 76இல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி நீக்கப்படும் வரை கோபாலகிருட்டிண நாயுடுவும் பாலு நாயுடுவும் சிறைப்படுத்தப்பட்டிருந்தது பற்றி ‘விலங்கிற்குள் மனிதர்கள்’ நந்தன் தொடரில் எழுதியுள்ளேன்.
ஆனால் இந்த இரு குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டு, மீண்டும் சிறை செய்யப்பட்டு, மீண்டும் விடுவிக்கப்பட்டது எப்படி? என்பதில் நமக்குத் தெளிவில்லை. அண்மையில் தோழர் கொளத்தூர் மணி இது பற்றி என்னிடம் கேட்டார். எனக்குத் தெரிந்ததை நான் சொல்லி விட்டு, முழுமையான தகவல் திரட்ட முயல்வதாக உறுதியளித்தேன்.
சில ஆண்டுகள் முன்பு மேனாள் உயர் நீதிமன்ற நீதியர் அன்பர் கே. சந்துரு வெண்மணி பற்றி எழுதிய கட்டுரை இந்து தமிழ், தீக்கதிர் ஏடுகளில் வெளிவந்தது. அதன் முழு வடிவத்தையும் அவரிடமிருந்தே வரவழைத்து உரிமைத் தமிழ்த் தேசம் ஏட்டில் வெளியிட்டேன்.
இப்போது வெண்மணி வழக்கு பற்றி முழுத் தரவுகள் வேண்டி அவரை நாடினேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை ( Kilvenmani judgment requires a review -What happened in Kilvenmani 52 years before?) எனக்கு அனுப்பி வைத்துள்ளார். … நலங்கிள்ளி, சுதா காந்தி, இரவிச்சந்திரன்… யாராவது ஒரு தோழர் தமிழாக்கம் செய்து கொடுத்தால் தாழி அன்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 281
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக