(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 4/4 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம்

நேற்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர் அன்பர் கே. சந்துரு அவர்களின் கீழ்வெண்மணி பற்றிய கட்டுரையை அன்பர் நலங்கிள்ளியின் தமிழாக்கத்தில் பகிர்ந்தேன். ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலும் திரும்பப் திரும்பப் படித்த போதும் சீர்மை செய்த போதும் இந்தக் கட்டுரையின் அருமையையும் சந்துரு அவர்களின் பெருமையையும் மீண்டும் புதிதாய் உணர்ந்தேன்.

தாழி அன்பர்கள் எதைப் படித்தாலும் படிக்கா விட்டாலும் சந்துருவின் இந்தக் கட்டுரையை ஆங்கிலம் அல்லது தமிழில் அல்லது இரு மொழிகளிலும் படிக்க வேண்டும் என்று அழுத்தமாக வேண்டிக் கொள்கிறேன். படித்து விட்டு உங்கள் பார்வைகளையும் வினாக்களையும் எழுதுங்கள். சந்துரு அவர்களின் கட்டுரை சட்ட நோக்கிலும் சமூகநீதி நோக்கிலும் மிகச் சிறந்த ஒளிவிளக்கம் என உறுதியாக நம்புகிறேன். இந்தக் கட்டுரையின் செய்திகளைப் பரவலாகக் கொண்டுசென்று, இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒரு நாள் சென்னை உயர்நீதி மன்றமும் இந்திய உச்ச நீதிமன்றமும் வெண்மணி ஈகியரிடம் மன்னிப்புக் கோரும் அழுத்தத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படி நடந்தால் அது சந்துருவின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். சந்துரு அவர்களது கட்டுரையின் முகன்மைக் கூறுகளை எளிமையாக விளக்கி எழுதித் தாழியும் அந்த வெற்றியில் கொஞ்சத்தை ‘சுரண்டிக் கொள்ள’ வாய்ப்பளிபீர்களா?

இராம் புணியானி எழுதுகிறார்(Demanding a New Constitution: Why?)

(தமிழாக்கம்: சுதா காந்தி)

ஏன் வேண்டுமாம் புதிய அரசமைப்பு?

முனைவர் விவேக்கு தேவராய் இந்தியத் தலையமைச்சரின் பொருளியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார். பல வகையிலும் அதிகார மையங்களுக்கு மிக நெருக்கமானவர் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அவர் அண்மையில் (ஆகட்டு 15) முக்கியமான ஒரு செய்தித்தாளில் எழுதிய கட்டுரையில் இப்போதைய அரசமைப்பின் தொடர்ச்சி குறித்துக் கேள்வி எழுப்பினார். பல முறை திருத்தப்பட்டது எனபதால், அவரைப் பொறுத்த வரை இது சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட அதே அரசமைப்பு அல்ல, அவரது கருத்துப்படி, நிருவாகத் துறை இதன் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாலும், அது தன் காலத்தைக் கடந்து விட்டதாலும், புதிய அரசமைப்பிற்கு நாம் அணியமாக வேண்டுமாம். மிக முக்கியமாக, இந்த அரசமைப்பு ஒரு குடியேற்ற(காலனிய) மரபாம்! அவர் அதன் பல்வேறு வழிவகைகளையும், குறிப்பாக குமுகியம் (சோசலிசம்), உலகியம் (மதச்சார்பின்மை), நீதி, நிகர்மை, தன்னுரிமை (சுதந்திரம்) ஆகிய விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார். தேவராய் வெளிப்படுத்திய கருத்துகளிலிருந்து அதிகாரமுறைப்படி தலைமையமைச்சர் அலுவலகம் விலகி நிற்பதாகக் கூறியுள்ளது. ஆனால் இந்திய அரசமைப்பு குறித்து ஐயங்களும் எதிர்ப்பும் கிளப்பும் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

ஏற்கெனவே இந்து வலதுசாரிக் கருத்தியலர்களும் தலைவர்களும் இந்த அரசமைப்பு ஆங்கிலேயர்தம் 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் அடிப்படையில் குடியேற்ற வழிவந்தது என்றும், இது இந்திய விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் வலியுறுத்தி வருகின்றனர். வலதுசாரி இந்துத் தேசியவாதிகள் இந்த அரசமைப்பில் ஒருபோதும் ஆறுதலாக இருக்கவில்லை. உண்மையில் இது 1935 இந்திய அரசாங்கச் சட்டத்தின் தொடர்ச்சி அன்று, ஆனால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடினமான விவாதங்களுக்குப் பிறகு ஆக்கப்பெற்று, இந்திய அரசமைப்பின் வரைவுக் குழுத் தலைவர் முனைவர் அம்பேத்துகரால் செப்பமுற முன்வைக்கப்பட்டதாகும். அரசமைப்புப் பேரவையின் தலைவர் முனைவர் இராசேந்திர பிரசாதும், அரசமைப்புப் பேரவையின் (CA) பெரும்பாலான உறுப்பினர்களும் இந்திய மக்களின் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டத்தில் இனங்காணப்பட்டவர்கள். ‘இந்தியா ஒரு தேசமாக’உருப்பெறுவதிலும் இந்தப் போராட்டம்தான் முகன்மைப் பங்காற்றியது.

பன்மைத் தன்மையும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையும் கொண்ட இந்தியத் தேசியத்திற்காக நின்றவர்களுக்கு மாறாக, மதவாதத் தேசியவாதிகள் இந்த மாபெரும் போராட்டத்திலிருந்து விலகி நின்றதோடு, இந்த வெகுமக்கள் இயக்கத்தில் மலர்ந்த விழுமியங்களையும் எதிர்த்தனர். அரசமைப்புப் பேரவை இந்த அரசமைப்புச் சட்டத்தை இயற்றி மூன்று நாள் கழித்து, 1949 நவம்பர் 30ஆம் நாள், அதிகாரமுறையல்லாத ஆர்எசுஎசு ஊதுகுழலாகிய ஆர்கனைசர் தனது ஆசிரியவுரையில் அரசமைப்புச் சட்டத்தை மறுதலித்து, மனுசுமிருதியை அரசமைப்பாக்குமாறு கோரியது. அது கூறியது: “ஆனால் நமது அரசமைப்பில், பண்டைய பாரதத்தின் தனித்துவமான அரசமைப்புசார் வளர்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனுவின் சட்டங்கள் சுபார்டாவின் லைகர்கசு அல்லது பாரசீகத்தின் சோலோனுக்கு முன்பே எழுதப்பட்டவை. மனுசுமிருதியில் கூறப்பட்டுள்ள அவரது சட்டங்களை இன்று வரை உலகம் வியந்து போற்றுகிறது. அவற்றுக்கு விரும்பியே கீழ்ப்படிவதையும் ஏற்று நடப்பதையும் காணலாம். ஆனால் நம் அரசமைப்புப் பண்டிதர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டன்று.“

இந்து வலதுசாரியின் எழுச்சியுடன் அரசமைப்பிற்கான எதிர்ப்பு மிகவும் கடுமையாக வெளிப்படத் தொடங்கியது. 1998இல் அடல் பிகாரி வாசுபாய் அரசு பதவிக்கு வந்ததும், அரசமைப்பை மீளாய்வு செய்ய வெங்கடாசலையா ஆணையத்தை அமர்த்தியது. ஆணையத்துக்குக் கிளம்பிய வலுவான எதிர்ப்பு பாஜக தலைமையிலான கூட்டணி அதைச் செயலாக்குவதற்கு ஊறாயிற்று.

அரசமைப்புச் சட்டத்துக்கு இந்த எதிர்ப்பு என்பது பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. கே. சுதர்சன் ஆர்எசுஎசுஇன் சற்சங்கச்சலக்கு (உச்ச சர்வாதிகாரி) ஆன போது, இந்திய அரசமைப்பு மேற்கத்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், மனுசுருதியைக் குறிக்கும் இந்தியப் புனித நூல்களின் அடிப்படையில் அதனை மாற்ற வேண்டும் என்றும் வெளிப்படையாக அறிவித்தார். “அரசமைப்புச் சட்டத்தை அடியோடு மாற்றுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதில்லை, ஏற்கெனவே நூறு முறை திருத்தம் செய்துள்ளோம்,” என்று அவர் வலியுறுத்தினார், மேலும் பிரான்சு நான்கு முறை திருத்தம் செய்துள்ளது. இதில் புனிதம் எனக் கருத எதுவும் இல்லை. உண்மையில், நாட்டின் பெரும்பாலான நலிவுகளுக்கு இதுவே வேர்க் காரணம்.”

மீண்டும் மீண்டும் இதே கதைதான். பாசக-ஆர்எசுஎசு தரப்பிலிருந்து யாராவது ஒரு பிரமுகர் இப்படிப் பேசுவது வாடிக்கை ஆகி விட்டது. அண்மையில் ஐ.என்.டி.ஐ.ஏ. (இந்தியா) என்ற எதிர்க்கட்சிக் கூட்டணி உருவான போது, இந்த அரசியலிலிருந்து பலரும் ஆங்கிலேயர் கொடுத்த சொல் என்ற அடிப்படையில் அதை எதிர்த்து வந்தனர். பாசக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நரேசு பன்சால், அரசமைப்பில் இந்தியா என்ற சொல் இடம்பெறுவதையே அடிமைத்தனத்தின் அடையாளம் என்று சொல்லிக் கேள்விக்குள்ளாக்கினார்.

ஆர்எசுஎசு பொதுச் செயலாளர் தத்தத்துரேயா ஃகொசாபலே சொல்வது போல், இது மனங்களைக் குடியேற்ற நீக்கம் செய்வது என்ற அவர்களின் கருத்தோடும் தொடர்புடையதாகுமாம்! “ஐரோப்பிய மையச் சிந்தனைகளும், கருத்தியல்களும், நடைமுறைகளும், மேற்கத்திய உலகக் கண்ணோட்டமும் பல பத்தண்டுகளாக நம்மை ஆண்டு வந்தன. சுதந்திர தேசம் அவற்றை முற்றாகக் கைவிடவில்லை.

தேவராயும் ஆர்எசுஎசு கும்பலும் அரசமைப்பை எதிர்க்கும் புள்ளியில் இணைந்தனர். ஆர்எசுஎசு கூட்டம் அரசமைப்பின் மேற்கத்தியத் தன்மையில் கூடுதலாகக் கவனம் குவிக்கும் அதே நேரத்தில், தேவராய் தன்னுரிமை (சுதந்திரம்), நிகர்மை (சமத்துவம்), உலகியம் (மதச்சார்பின்மை) போன்ற விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கும் போது, குட்டு வெளிப்பட்டு விடுகிறது. குடியேற்ற வழிவந்த மரபு என்ற வாதுரை மேற்கு ஆசிய நாடுகளின் ‘முசுலிம் சகோதரத்துவம்’ போன்ற அமைப்புகளின் கருத்தை ஒத்ததாகும். இந்தக் கருத்து தன்னுரிமை, நிகர்மை ஆகிய விழுமியங்களை அவை மேற்கத்திய விழுமியங்கள் என்று சொல்லி எதிர்க்கிறது. இப்போதுள்ள ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் தேவராய் போனறவர்கள் நிகர்மை எனும் கருத்தால், பல்வேறு மதங்கள், சாதிகள், பாலினங்களைச் சேர்ந்த மக்களிடையே நிகர்மை எனும் கருத்தால் கருத்தாக்கத்தால் கலக்கமடைந்துள்ளனர்.

மனுசுமிருதியின் ஊழியைக் கடந்து போன பொற்காலம் என்று ஆர்.எசு.எசு கூட்டம் படம்பிடித்துக் காட்டுகிறது. ஏனெனில் அக்காலத்தில் சாதி, பாலினப் படிநிலையமைப்பு சமூகத்தின் மையமாக இருந்தது. மெய்தான், குடியேற்றம் சமூகக் கட்டமைப்பை மிக ஆழமாக மாற்றுவதற்கான பாதையைத் திறந்து விட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் சாதி, பாலினப் படிநிலையமைப்பின் பிடி தளரத் தொடங்கியது, இந்தக் காலகட்டத்தில்தான் தொழிலாளர்கள் தங்கள் அமைப்புகளை உருவாக்கிக் கொள்ள முடிந்தது (நாராயண் மேகாசி லோகண்டே, தோழர் சிங்கர்வேலர்). இந்தக் காலக்கட்டத்தில்தான் பகத்து சிங்கு போன்றவர்கள் ஆளும் வருக்கத்தின் சுரண்டலை வெளிப்படுத்தி அதனை ஒழிக்க வேண்டும் என்றார்கள்.

குடியேற்றக் காலத்தைக் கருப்பு வெள்ளையாகப் பார்க்க முடியாது. அது சாம்பல் நிறச் சாயல்களையும் கொண்டிருந்தது. குடியேற்ற ஆற்றல்கள் நமது செல்வத்தைச் சூறையாடிய போதே, அவர்கள் திறந்து விட்ட நிறுவனங்கள் “மனித (ஆண் பெண்)” நிகர்மையைத் தெளிவாக முன்வைத்தன. ஆனால் ஆர்எசுஎசு கூட்டத்தாரும் தலைமையமைச்ச்சரின் ஆலோசகரும் இந்த அரசமைப்பை ஒழித்துக் கட்டுவதற்கு வெவ்வேறான வாதங்களை முன்வைத்து வருகின்றனர்; அடிப்படையில் அவர்கள் நிகர்மையை எதிர்க்கிறார்கள், பகத்து சிங்கு போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட விழுமியங்களும், அம்பேத்துகரும் பொதுவான தேசிய இயக்கமும் தொடுத்த போராட்டங்களும் இலட்சியச் சின்னமாகப் பொறித்துக் கொண்ட நிகர்மையை எதிர்க்கின்றார்கள்.

1990கள் வரை நாடு நிகர்மைக்கான போராட்டப் பாதையைத் தொடர முயன்றது. இந்திய அரசமைப்பை அச்சாணியாகக் கொண்டு நேருவின் புதுமக்காலக் கொள்கைகள் செயல்புரிந்தன. இப்போது நாம் பின்னோக்கி நகர்வது போல் தெரிகிறது. கோயிலும் பசுவும் அரங்கை ஆளும் நிலையில், பழங்கால விழுமியங்களையும் (நாகரிக விழுமியங்கள் என்ற முத்திரையோடு) கடந்த காலம் பற்றிய பிராமணிய விளக்கங்களையும் துணைக்கொண்டு ஏற்றத்தாழ்வு நோக்கிய பாதை பாவப்படுகிறது. உலகின் ஆகப்பெரும் வெகுமக்கள் இயக்கமான ‘இந்திய விடுதலைப் போராட்டத்தின்’ ஊடாக நாம் சாதித்ததைக் குலைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது.

இந்திய அரசமைப்புக்கு எதிராகக் கிளப்பப்படும் எல்லா எதிர்ப்புகளுமே ஏற்றத்தாழ்வினை (சாதி, வர்க்க, பாலின ஏற்றத்தாழ்வினை) மதம் (பிராமணியம்) புனிதப்படுத்திய காலத்திற்கு நாட்டைப் பின்னுக்குத் தள்ளும் சூழ்ச்சியே தவிர வேறன்று.

(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 294